நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் ஏசினாலும் அப்படி ஏசுபவன் காஃபிராகி விடுவதுடன் முர்தத்தான (மதம் மாறிய)வனுடைய சட்டம் இவன் மீது அமுல் படுத்தப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாவான்.

நபிமார்களுக்கும், மற்றும் எந்த சிருஷ்டிகளுக்கும் அருகதை இல்லாத, பொருந்தாத எத்தனையெத்தனையோ தனித்தன்மைகளுக்கும், லட்சணங்களுக்கும் அல்லாஹ் அருகதை உள்ளவனாக இருக்கிறான். ஆகவே சிருஷ்டிகளின் குணங்கள் அல்லாஹ்வுடன் சேர்க்கப்பட மாட்டாது. இந்த சிருஷ்டிகளின் மீது தவக்குல் (மனிதன் தன்னுடையக் காரியங்களை பாரம் சாட்டி ஒப்படைத்தல்) வைக்கப்பட மாட்டாது. இவற்றைக் கொண்டு உதவி தேடப்பட மாட்டாது. சத்தியம் செய்யப்பட மாட்டது. வஸீலாவும் தேடப்பட மாட்டாது. இவையெல்லாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. நபிமார்களைக் கொண்டு வஸீலா தேடுவதிலும் பயனில்லை. நபிமார்களை நம்பி, நேசித்து, வழிபட்டு வாழ்க்கையில் இவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும். இவர்களுடன் சேர்ந்து உதவி ஒத்தாசைகள் புரிய வேண்டும். இவர்களை மதித்து, இவர்களுடைய் எதிரிகளுடன் போராட வேண்டும். இவர்களின் சொற்களை முழுக்க ஏற்று நடக்க வேண்டும். இவர்கள் ஹராமாக்கியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஹலாலாக்கியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் வஸீலா (சமீபிப்பதை) தேட வேண்டும்.

இத்தகைய அமல்களைப் புரிந்து விட்டு அதன் பொருட்டால் ‘இறைவா! எங்கள் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!’ என்று கேட்க வேண்டும். குகையில் அகப்பட்ட மூவரும் இப்படிச் செய்துதானே தப்பித்துக் கொண்டார்கள். நல்ல அமல்கள் புரிந்து நாளைய ஆகிரத்தில் அதிகமான பலாபலன்கள், இறைதிருப்தி, சுவர்க்கம் இவற்றை அல்லாஹ் அருள்புரிய அவனிடமே கேட்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பணித்துள்ள அனைத்து அனுஷ்டானங்களும் அவை இம்மை, மறுமையின் அனைத்து முழு ஈடேற்றத்திற்குரிய முக்கிய வஸீலாவாகும். கீழ்வரும் ஆயத்தின் விளக்கத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “எங்கள் இறைவா! உங்கள் இறைவனைக் கொண்டு நம்புங்கள் என்று கூறி ஈமானின் பால் எங்களை அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்து அவ்வாறே விசுவாசம் கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவா! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!” (3:193). இந்த ஆயத்தில் அவர்கள் தம் பிரார்த்தனைக்கு முன்னர் ஈமானை முதலில் எடுத்துக் கூறினார்கள். அமல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மூமின்களைப்பற்றி இன்னுமோர் ஆயத்தை அல்லாஹ் இதுபற்றி அருள் செய்திருக்கின்றான். “நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார், எங்கள் இறைவா! நாங்கள் உன்னை நம்பி விசுவாசம் கொண்டுள்ளோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக. அருள் புரிவோர்களில் எல்லாம் நீ மிக்க மேலானவன் என்று கூறிக் கொண்டிருந்தனர்” (23:109)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.