ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
வணக்க வழிபாடுகளை அனுமதித்தல், தடுத்தல், கடமையாக்குதல் போன்ற விதிகள் வழங்குவதில் நபிகளைப்பற்றி ஒரு ஸஹாபி ஒரு அபிப்பிராயத்தை கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அபிப்பிராயத்துக்கு ஏனைய ஸஹாபிகள் ஒப்புதல் வழங்கவும் இல்லை. நபிகளைப்பற்றி வந்திருக்கும் மற்ற சான்றுகள் மிகுதியான ஸஹாபிகளின் அபிப்பிராயங்களுக்கும் ஒத்திருக்கின்றன என்றால் மிகுதியானவர்களின் அபிப்பிராயங்களை வைத்தே விதிகள் நிர்ணயிக்க வேண்டும். இங்கு தனித்து நின்று அபிப்பிராயம் கூறிய ஒரு ஸஹாபியை பின்பற்றுதல் முஸ்லிம்களுக்கு கூடாது. ஆனால் அந்த ஸஹாபியைப் பொறுத்தவரையில் அப்படி தனித்து நின்று அபிப்பிராயம் சொல்வதில் குற்றமொன்றும் இல்லை. ஏனெனில் இஜ்திஹாத் (குர்ஆன், ஹதீஸின் வெளிச்சத்தில் மார்க்கச் சட்டங்களை ஆராய்தல்) என்றும் விரும்பத்தக்க ஒரு அமலாகும். ஆனால் சட்டங்கள் ஆராய்ச்சிக்குத் தகுந்த மஸ்அலாவாக இருத்தல் வேண்டும் என்பது கவனத்திற்குரியது.

ஒரேஒரு ஸஹாபியின் அபிப்பிராயத்தை மட்டும் வைத்து சட்டம் தீட்டப்பட மாட்டாது என்பதற்கு பற்பல ஆதாரங்கள் காண முடிகிறது. ஒளு செய்யும்போது உமர் (ரலி) அவர்கள் இரு கண் குழிகளிலும் தண்ணீரைச் செலுத்துவார்கள். செவிகளை தடவுவதற்கு புதுத் தண்ணீரை எடுப்பார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒளுவின் போது கைகளின் மேல்பகுதி வரையிலும் நீட்டிக் கழுவிவிட்டு, நாளை மறுமையில் ஒளுவின் காரணத்தினால் முகத்தின் வெண்மை அதிகப்படுத்திக் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கைகளை நீட்டிக் கழுவ வேண்டுமென்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒளுவின்போது பிடரியையும் தடவிவிட்டு இதுவே மறுமையில் விலங்குகள் மாட்டப்படுமிடம் என்று கூறுவார்களாம்.

உமர் (ரலி) அவர்கள், மற்றும் அபூஹுரைராவை பின்பற்றிய சில அறிஞர்கள் இத்தகைய செயல்களை ஒளுவின் சுன்னத்துகள் எனக் கூறினாலும் மிகுதியான அறிஞர்கள் இதற்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். இவ்விரு ஸஹாபிகளைத் தவிர மற்ற ஸஹாபிகள் இப்படி ஒளுச் செய்ததில்லை என்று கூறுகின்றனர். மாபெரும் ஹதீஸ் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரியிலும், முஸ்லிமிலும், மற்றும் ஹதீஸ்களிலும் பெருமானாரைப் பற்றி அறிவிக்கப்பட்ட ஒளுவின் அமைப்பிலும் அவர்கள் செவிகளுக்காகக் புதுத் தண்ணீரை எடுத்ததாக காணப்படவில்லை. இரு முட்டுக்கைகளுக்கும், கரண்டைக் கால்களுக்கும் மேலாக கழுவினார்கள் என்றும் காணப்படவில்லை. பிடரியைத் தடவியதாகவும் இல்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதுபோல் முகத்தில் வெண்மையை அதிகமாகப் பெறுவதற்கு கைகளை ஏற்றிக் கழுவ வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் காணப்படவில்லை. கையை மேலே ஏற்றி கழுவுவதனால் மறுமையில் முகத்தின் வெண்மை அதிகமாகுமென்பது சில ஹதீஸ்களில் புகுத்தப்பட்ட அபூஹுரைராவின் சொல்லாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘நீங்கள் மறுமை நாளன்று ஒளுவின் அடையாளங்களினால் முகமும், கைகால்களும் வெண்மையுள்ளவர்களாக வருவீர்கள்’ என்றாகும். மேலும் நபிகள் ஒளுச் செய்யும்போது முழங்கையிலும், முழங்காலிலும் தண்ணீர் சேரும்வரையில் கழுவினார்கள். இன்னும் நபியவர்கள் கூறிய ‘குர்ரத்’ என்ற சொல் முகத்துக்கே உரியது. முக வெண்மை மறுமையில் அதிகமாக உண்டாவதற்கு முகத்தைத்தான் ஏற்றிக் கழுவ வேண்டுமே தவிர கைகளையோ, கால்களையோ ஏற்றிக் கழுவுவதால் முகத்தின் வெண்மை அதிகப்பட மாட்டாது. கைகால்களுக்குரிய வெண்மைக்கு அரபியில் ‘ஹுஜ்லத்’ என்று கூறப்படும். ‘குர்ரத்’ என்று சொல்லப்பட மாட்டாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் முகத்தை நீட்டமாகக் கழுவ முடிகிறவன் அப்படி செய்ய வேண்டுமென்று கூறியதை தவறாக விளங்கிய சிலர் முழங்கையை கழுவுவது முகத்தின் வெண்மை நீட்டமாகக் கிடைப்பதற்குக் காரணம் என்று விளங்கிக் கொண்டார்கள்.

மறுமையில் முகத்திற்கு அளிக்கப்படும் வெண்மை முகத்தில் தான் வழங்கப்படும். முகத்தை விட அதிகமாக ஏற்றி வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் முகம் மனிதனுடைய வரையறுக்கப்பட்ட ஒரு உறுப்பாகும். அதை நிரப்பமாக அவசியம் கழுவ வேண்டும். அப்படியானால் தான் ஒளுவும் நிறைவேறும். அதனால் அப்பகுதி வெண்மைக்குரியதாகவும் ஆகிவிடும். வெண்மை அதிகமாகக் கிடைப்பதற்காக தலையைக் கழுவுதல் தவறான வேலையாகும். தலையில் வெண்மை நிறம் அதிகமாக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. கைகால்களும், வரையறுக்கப்பட்டுள்ள இடங்களை விட நீட்டமாகக் கழுவுதல் சுன்னத்தாகக் கருதப்பட மாட்டாது. கைகால்களை நீட்டிக் கழுவுவதற்கு அரபியில் ‘முஸ்லா’ என்று சொல்லப்படும்.

இன்னுமொரு சம்பவத்திற்கு வருவோம். இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெருமானாரை அப்படியே முழுக்கப் பின்பற்றி ஒழுக வேண்டுமென்று நினைத்தார்கள். எந்த அளவுக்கென்றால் நடைப்பாதையில் கூட நபிகளின் சுவட்டடியில் தாமும் கால்வைத்து நடந்துச் செல்ல வேண்டுமென்பது அவர்களின் அவா. பிரயாணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் இறங்கித் தங்கினார்களோ அங்கெல்லாம் இப்னு உமர் அவர்களும் இறங்கித் தங்குவார்கள். நபியவர்கள் ஒளுவெடுத்த அதே இடத்தில் நின்று ஒளுச் செய்வார்கள். ஒளுவின் மீதித் தண்ணீர் இருந்தால் நபிகள் ஊற்றிய சில செடி, கொடிகள், மரங்களின் மீது ஊற்றுவார்கள். இப்படியே பற்பல செயல்களை இப்னு உமர் செய்து வந்தார்கள்.

இத்தகைய பின்பற்றுதலை அறிஞர்களின் ஒரு சாரார் மட்டும் ஆதரிக்கின்றனர். முஸ்தஹப் என்றும் கருதுகின்றனர். ஆனால் அதிகமான அறிஞர்கள் இதை முஸ்தஹப்பாக (ஸுன்னத்தாகக்) கருதவில்லை. ஸஹாபாக்களின் மிகப்பெரிய பதவிக்குரிய அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ, இப்னு மஸ்வூத், முஆத் பின் ஜபல், மற்றும் பெரும் ஸஹாபிகள் இப்னு உமரைப் போன்று செய்யவில்லை. இப்படிச் செய்யப்படுவதை ஸுன்னத் என்று கணிக்கவுமில்லை. உண்மையில் இவற்றை நல்லவையென கருதியிருந்தால் தாமும் செய்திருப்பார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்களை முழுக்க முழுக்கப் பின்பற்றி அவர்களை அப்படியே முன்மாதிரியாக வாழ்க்கையில் அமைத்துக் கொண்டவர்கள்தானே இவர்களும்.

பெருமானாரைப் பின்பற்றுதல் என்பது அவர்கள் என்னென்னவற்றை என்னென்ன முறையில் வேண்டுமென்று கருதிச் செய்தார்களோ அவற்றை அப்படியே நாமும் செய்ய வேண்டும். வணக்க வழிபாடுகள் என்ற அமைப்பில் ஒரு செய்கையை அவர்கள் புரிந்திருந்தால் நாமும் அந்த வழிபாட்டை அப்படியே செய்ய வேண்டுமென்று விதிக்கப்படுவோம். குறிப்பிட்ட சில இடங்களையோ, நேரங்களையோ வணத்திற்கென்று அவர்கள் ஒதுக்கியிருந்தால் நாமும் அவற்றை வணக்கத்திற்கென்று ஒதுக்க வேண்டும். கஃபாவைச் சுற்றிலும் தவாஃப் செய்வதை நாடி செயல் பட்டார்கள். ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று தொழுதார்கள். மதினா பள்ளிவாசலில் ஒரு தூணுக்குப் பின்னால் நின்று தொழுவதை விரும்பியிருந்தார்கள். ஸஃபா, மர்வா மலைமீது ஏறி நின்று இறைவனை தியானித்து, அவனிடம் பிரார்த்திப்பதை விரும்பியிருந்தார்கள். முஸ்தலிபா, அரஃபாவில் ஹஜ்ஜின் போது துஆ வேண்டினார்கள். இவை அனைத்துமே நபி அவர்கள் வேண்டுமென்று கருதிச் செயல்பட்ட வணக்கங்களாகும். இவற்றை நாமும் செய்ய வேண்டும். நபியவர்களை இவற்றில் முழுக்க பின்பற்ற வேண்டும்.

ஆனால் எதிர்பாராத விதம் ஒரு செயலை கருதாமல் நபியவர்கள் செய்தால், உதாரணமாக பிரயாணம் போய்க்கொண்டே இருந்த வழியில் இறங்கித் தங்கினார்கள். அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் தொழுகை நேரம் வந்து விட்டதனால் தொழுதார்கள். இப்பொழுது நபியவர்கள் இறங்கியதும், ஓய்வெடுத்ததும் தொழுகை நேரம் வந்தவுடனே தொழுததும் எல்லாம் வேண்டுமென்றே கருதிச் செய்யவில்லை. பிரயாணத்தின் போது அசதிகள் ஏற்படும். கொஞ்சம் இறங்கி ஓய்வெடுத்துப் போகலாம் என்று நினைத்தார்கள். நேரம் வந்ததும் தொழுது விட்டுப் போகலாம் என்று கருதினார்கள். இத்தகைய செயல்களை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. இப்படி இருக்க நாம் வேண்டுமென்றே கருதி அந்த இடங்கள் வந்ததும் ஏன் இறங்க வேண்டும். அந்த இடத்தில் தொழ வேண்டுமென்றெல்லாம் கருதி குறிப்பிட்ட சில இடங்களையும், காலத்தையும் வணக்கத்திற்கென்று ஒதுக்கி வைத்து நாம் செயல்பட்டால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றியவர்கள் ஆக முடியாது. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இவற்றை வன்மையாக கண்டித்து நூதனமான அனுஷ்டானம் என்றும் விலக்கினார்கள். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஸஹீஹான ஹதீஸில் கீழ்வரும் சம்பவம் ஒன்று இதை உறுதிப்படுத்துகிறது.

மஃரூர் பின் ஸுவைத் ஒரு பிரயாணத்தின் போது உமர் (ரலி) அவர்கள் ளுஹர் தொழுகையைத் தொழுது விட்டு பக்கத்திலிருந்த ஓர் இடத்திற்குச் சென்றார்கள். இதைக் கண்ட உடனிருந்த ஸஹாபிகளும் அந்த இடத்திற்குச் சென்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்விடத்தில் தொழுதிருப்பதாகவும் தமக்குள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் ‘வேதம் வழங்கப்பட்ட சமூகங்கள் தம் நபிமார்களின் கால் சுவட்டைக் கூடப் பின்பற்றினார்கள். அச்சுவட்டின் அடிகளில் ஆலயங்களையும், கோயில்களையும் கட்டியதனால் அழிந்தொழிந்தார்கள்’ என்று கூறிவிட்டு, ‘எவருக்குத் தொழுகையின் நேரம் வந்ததோ அவர் உடனே தொழுது கொள்ள வேண்டும். அப்படியில்லையானால் தம் பிரயாணத்தை தொடர வேண்டும்’ என்று கூறினார்கள்.

ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரயாணத்தின் போது வேண்டுமென்றே இதை இலக்காக வைத்து இந்த இடத்தில் இறங்கவில்லை. தொழுகைகென்று இவ்விடத்தைக் குறிப்பாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. ஆனால் அந்த இடத்தில் இறங்கித் தொழுதிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இது உமர் (ரலி) அவர்களுக்கும் நன்கு தெரிந்தது. இருப்பினும் அத்தகைய இடங்களை வரையறுத்துக் குறிப்பிட்டு தொழுகைகென்று ஒதுக்கி விடுவதை வேதம் அருளப்பட்டவர்கள் செய்ததனால் அழிந்தொழிந்தார்கள். இதைப்போன்ற நூதன அனுஷ்டானங்களை விட்டும் முஸ்லிம்களைத் தடுத்தார்கள். முஸ்லிம் யூதர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் வழிபாடுகளில் ஒத்திருப்பதை விட்டு விலக்கினார்கள். இப்படிப்பட்ட அமல்கள் புரிகிறவன் வெளிப்படையில் மட்டும் நபிக்கு ஒத்திருக்கிறான். இலட்சியத்தில் யூதர்களுடையவும், கிறிஸ்தவர்களுடையவும் போக்குக்கு ஒப்பாகிறான். இலட்சியமே உள்ளத்தின் செயலாகும். மற்றவை உடலின் செயல்தானே. இதைக் கவனத்தில் ஆழப்பதித்து முஸ்லிம்கள் செயல்பட வேண்டும். வெளிப்படையான அமல்களில் மட்டும் பெருமானாரைப் பின்பற்றுவதை விட இலட்சிய அமலில் அவர்களைத் தொடருவதில் தான் மேன்மை இருக்கிறது.

இதனால்தான் தொழுகையில் உள்ள ‘ஜல்ஸதுல் இஸ்திராஹா’ பற்றியும் அறிஞர்கள் அபிப்பிராய வித்தியாசங்களைக் கூறியுள்ளனர். ஜல்ஸதுல் இஸ்திராஹா என்றால் இரண்டாவது ஸுஜூது முடிந்து எழுந்து நிலைக்கு (கியாமுக்கு)ப் போவதற்கு முன்னர் கொஞ்சம் அமர்ந்து விட்டு செல்லுதல். நபியவர்கள் இப்படிக் கொஞ்சம் அமர்ந்து விட்டுத்தான் எழுந்தார்கள். ஆனால் அமர்ந்தது எதனால்? வேண்டுமென்றே குறிப்பாக அதைச் செய்தார்களா, அல்லது வேறு ஏதேனும் தேவையினால் செய்தார்களா என்பதில் அறிஞர்கள் அபிப்பிராயம் சொல்லி இருக்கின்றனர். நபியவர்கள் வேண்டுமென்றேதான் சற்று அமர்ந்து விட்டு பின் எழுந்தார்கள் என்று சொல்கிறவர்கள் இந்த ஜல்ஸதுல் இஸ்திராஹாவை ஸுன்னத்தாக்கினார்கள். மாறாக நபியவர்கள் ஒன்றும் இலட்சியமாகக் கருதாமல் ஏதேதோ தேவையினால் அமர்ந்து எழுந்தார்கள் என்று சொல்கிறவர்கள் ஜல்ஸதுல் இஸ்திராஹாவை சுன்னத் இல்லை என்றார்கள்.

இதே அபிப்பிராய வித்தியாசங்களை பற்பல விஷயங்களில் காண முடிகிறது. உதாரணமாக நபியவர்கள் ஹஜ்ஜின்போது மினாவில் இருந்து திரும்பும்போது ‘வாதி முஹஸ்ஸப்’ என்ற இடத்தில் ஏன் இறங்கினார்கள். தம் உம்மத்துகளுக்கு அதை ஸுன்னத் என்று போதிப்பதற்காக இறங்கினார்களா அல்லது பிரயாணத்தினால் ஏற்படும் தேவைவை முன்னிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்தார்களா? இதிலும் அறிஞர்கள் முன்னர் நாம் குறிப்பிட்டது போன்ற கருத்து வேற்றுமைகளைத் தெரிவித்துள்ளனர். இன்னும் சில உதாரணங்கள் அபூதல்ஹா என்ற ஸஹாபி மட்டும் நோன்பாளிக்கு ஆலங்கட்டியைச் சாப்பிட அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இப்னு உமர் தமது கையை நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்த இடத்தில் வைத்ததைப் பற்றியும் இப்படித்தான் கருதல் வேண்டும். பஸராவில் இப்னு அப்பாஸும், கூஃபாவில் அம்ர் பின் ஹாரிஸும் ஈதுல் அல்ஹா இரவில் தக்பீர் கூறியதும் இப்படித்தான். இது விஷயத்தில் எல்லா ஸஹாபிகளும் செயல்படாமல் இருந்ததினாலும், மேலும் நபி (ஸல்) அவர்கள் தம் உம்மத்துக்கு ஷரீஆவாக விதிக்காததினாலும் இவற்றை முஸ்தஹப்பான ஸுன்னத் என்று கூற முடியாமலாகி விட்டது.

ஹுதைஃபா என்ற ஸஹாபி சூரியன் உதிப்பதற்கு முன்னர் உள்ள பகல் வெளிச்சம் வந்த பிறகு நோன்பு நோற்கிறவனுக்கு பகல் உணவு அருந்தலாமென்று அனுமதித்திருக்கிறார்கள். கஃபாவில் தவாஃப் செய்வதற்கு முன்னர் சுகந்த பொருட்களை பயன்படுத்துவது கராஹத் (வெறுக்கத்தக்கது) என்று உமர் (ரலி) அவர்களும் இப்னு உமரும் கூறியிருக்கின்றனர். சில ஸஹாபிகள் பிரயாணத்தின்போது நோன்பு நோற்கவே கூடாது என்று தடுத்துள்ளனர். ஸல்மான் என்பவர்கள் உமிழ் நீரை அசுத்தம் (நஜீஸ்) என்று கூறியிருக்கிறார்கள். வேதம் அருளப்பட்ட சமூகத்தில் உள்ள பெண்ணை மணம் புரிதல் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு மஸ்வூதும், இப்னு உமரும் பெருந்துடக்குடையவன் (ஜனாபத்காரன்) தயம்மும் செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். இஹ்ராம் கட்டியவன் மரணமடைந்து விட்டால் அவனுடைய இஹ்ராம் வீணாகி (பாத்திலாகி) விடும். எனவே இஹ்ராம் இல்லாத சாதாரண மனிதனுடைய சட்டமேதான் இவனுக்குப் பொருந்தும் என இப்னு உமரும், மற்ற சில ஸஹாபிகளும் கூறியிருக்கின்றனர். முஆதும், முஆவியாவும் காஃபிருடைய சொத்துக்கு முஸ்லிம் வாரிசாக முடியும் என்றார்கள். அலியும், இப்னு அப்பாஸும் கணவன் இறந்தப் பெண்ணைப் பற்றி இவள் கர்ப்பமாக இருக்கையில் கணவன் இறந்தால் இரு தவணைகளில் நீட்டமான தவணை முடியும் வரையிலும் இத்தா இருக்க வேண்டும் என்று கூறினார்கள். கணவன் இறந்தப் பெண்ணைப் பற்றி இப்னு அப்பாஸும் மற்றவர்களும், அவர்கள் வீட்டிலேயே தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு பற்பல மஸ்அலாக்களில் ஸஹாபிகள் பற்பல அபிப்பிராய பேதங்களை கூறியிருக்கின்றனர். ஒரு மஸ்அலாவில் ஒருவர் மட்டும் தனி அபிப்பிராயம் சொல்வார். ஏனைய ஸஹாபிகள் அவருடைய அபிப்பிராயத்துக்கு நேர்மாறாகவும் இருப்பார்கள். ஏனெனில் பெருமானாரிடம் இருந்து வந்த ஆதாரங்களில் எதுவுமே தனித்து நின்று அபிப்பிராயம் கூறிய அந்த ஸஹாபிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே அவர் மட்டும் அபிப்பிராயத்தில் தனிமையானார். அவர் ஒருவர் மட்டும் தனித்து நின்று கூறிய சட்டத்தை நபியவர்கள் உம்மத்தினர் மீது விதித்தும் இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் இந்த ஒரே ஸஹாபியின் சொல்லை வைத்து அந்த மஸ்அலா மக்ரூஹ் என்றோ, ஹராம் என்றோ தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது. அத்தகைய மஸ்அலாக்களை திருமறை, நபிமொழியின் வெளிச்சத்தில் வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஸுன்னத், வாஜிப், மக்ரூஹ், ஹராம் என்று தனிப்பட்ட முறையில் அபிப்பிராயம் கூறிய ஸஹாபியைப் பற்றி அவர் இஜ்திஹாத் செய்ததின் விளைவாக அப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று கூற வேண்டும். இஜ்திஹாதில் தவறினால் கூட நன்மைகள் வழங்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லவா?

மத்ஹபுடைய இமாம்களும், மற்ற அறிஞர்கள் எல்லோரும் இப்படித்தான் கூறியிருக்கின்றனர். இவர்களும் எவருக்கும் ஸுன்னத், வாஜிப், ஹராம் என்று ஷரீஅத்தின் தீர்ப்புகளைத் தாமாக விதிப்பதற்கு உரிமையில்லை. குலஃபாவுர் ராஸிதீன்கள் ஸுன்னத் என விதித்த சில விஷயங்களைப் பற்றியும், உண்மையில் அவற்றை நபியவர்களின் ஏவலின் படியே விதித்திருக்கிறார்கள் என்று விளங்குதல் வேண்டும். நபியவர்கள் வாஜிபாக்கிய விஷயங்கள் மட்டுமே தீனில் வாஜிப் எனக் கூறப்படும். வாஜிப், முஸ்தஹப், ஹராம், மக்ரூஹ், ஹலால் போன்ற விதிகளை விதிப்பதற்கு உரிமையாளர்கள் நபியவர்கள் மட்டுமே ஆவார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply