அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் நித்திய வாழ்க்கையை எவ்வாறு நடத்திட வேண்டும் என்பதற்கான நிகழ்முறையை வகுத்துத் தந்துள்ளது. அவன் தனது அழகையும், அலங்காரத்தையும் எவ்வாறு கவர்ச்சிப் பொருளாக ஆக்கிடாமல் காத்திட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவைகளை பின்வருமாறு பிரித்து ஆராயலாம்.

1. தூய்மை

2. உணவு

3. ஆடையும் அலங்காரமும்

4. விளையாட்டும் பொழுதுபோக்கும்

1. தூய்மை.

முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வை தொழுதாக வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் உடல் தூய்மை செய்திட வேண்டியது அவசியமாகும். இது முஸ்லிம்கள் மீது இஸ்லாம் பணித்துள்ள கடமையுமாகும். இதை ‘ஒளு’ என்று கூறுவர். ஒருசில நேரங்களில் முழுமையானதாகவும் சில நேரங்களில் பகுதியானதாகவும் இருக்கும். இது ஒளுச் செய்பவரின் நிலமையை பொறுத்தே அமையும். தொழுகையை நிறைவேற்றிடும் போதெல்லாம் அவர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்திட வேண்டும். தொழுகின்ற இடமும், தொழுபவர்களின் ஆடையும் சுத்தமாக இருந்திட வேண்டும்.

இப்படி தொழுகின்றபோது மனிதன் எல்லா விதத்திலேயும் தூய்மையாக இருந்திட வேண்டும் என்பதிலிருந்து தொழுகை என்ற கடமையின் மூலம் மனிதன் எந்த அளவுக்குத் தூய்மையடைகின்றான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த அகத்தூய்மையும் புறத்தூய்மையும் அவன் தொடுமிடமெல்லாம் தூய்மையானதாக்கும் என்பது திண்ணம்.  (சான்றாக திருமறையின் 4:43 வசனத்தைக் காணவும்)

2. உணவு

மனிதன் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. இதயத்தைத் தூய்மையாக வைத்திடவும், ஆன்மாவை அழகு படுத்திடவும், ஆரோக்கியத்தைப் பேணிடவும் உணவு மிகவும் முக்கியமானதாகும். ஆகவே மனிதன் உணவுக்குரிய முக்கியத்துவத்தைத் தந்திட வேண்டும். இந்த அடிப்படையில் இஸ்லாம் உணவுக்கு சிறப்பானதொரு இடத்தைத் தருகின்றது.

சில ‘அதிகப்பிரசங்கி’களும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ‘மேதாவிகளும்’ உணவு மனிதனுக்கு அத்துணை முக்கியமானதல்ல எனக் கூறுகின்றனர். ‘தினமும் தனது தொப்பையை நிறைத்துக் கொள்ளும் பாவியே மனிதன்’ என அவர்கள் உணவுக்குத் தரப்படும் சிறப்பை பழித்துறைக்கின்றனர். உணவைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் கண்ணோட்டம் நிச்சயமாக இதுவல்ல.

இஸ்லாம் வழங்கும் நல்லுரைகளின்படி தூய்மையானவைகளும், மனிதனின் ஆரோக்கியத்திற்கு சிறந்தவைகளும் உணவாகப் பயன்படுத்தலாம். ஆனால் அவைகள் நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டே உட்கொள்ளப்பட வேண்டும். தூய்மையற்றவைகளும் மனிதனின் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பவைகளும் எல்லாச் சாதாரண சூழ்நிலைகளிலேயும் தடை செய்யப்பட்டவைகளாகும். இது உணவைப் பொறுத்தவரை இஸ்லாம் தரும் அடிப்படைக் கொள்கையாகும்.

தேவைகள் நிர்பந்தித்திடும்போதும், சூழ்நிலைகள் கட்டாயப் படுத்திடும்போதும் இதில் சில விதிவிலக்குகளுமுண்டு.

இந்தப் பொதுவிதியைத் தவிர வேறு சில உணவுகளையும், பானங்களையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. அவைகளில் சில (தானாகவே) இறந்த பிராணிகள், பறவைகள். அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்டவைகள். (அல்குர்ஆன்: 2:173, 5:4) மனிதனின் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பவை என இஸ்லாம் கருதுபவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. சூதாட்டம் போன்றவற்றைத் தடை செய்திருக்கும் திருமறை வசனங்களே இவைகளையும் தடை செய்திருக்கின்றன. (திருக்குர்ஆன்: 5:93-94)

இப்படி இஸ்லாம் சில பானங்களையும், உணவுகளையும் தடை செய்திருப்பது முழுக்க முழுக்க மனிதனின் நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதேயாகும். அல்லாமல் அது இறைவனால் எதேச்சையாக ஆக்கப்பட்ட சட்டமல்ல. மனிதனின் ஒழுக்கம், மனநிலை, அறிவு, ஆரோக்கியம், இறையுணர்வு ஆகியவற்றிற்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகின்றது. ஆகவேதான் இஸ்லாம் சில பொருட்களைத் தீமை பயப்பது, தூய்மையற்றவைகள், கேடு பயப்பவைகள் எனக் கூறுகின்றது. இதனால் அந்தப் பொருட்களை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இறைவன் பல பொருட்களை அனுமதிருப்பதற்கும், சில பொருட்களை தடை செய்திருப்பதற்கும் காரணங்கள் ஏராளம் உண்டு. இந்தக் காரணங்கள் மனிதனின் அறிவு, ஆரோக்கியம், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவைகளே! மனிதன் மாண்புமிக்கவனாக திகழ்ந்திடவும், அவன் சமுதாயத்தில் பலன் பயக்கும் ஒரு அங்கமாகப் பிரகாசித்திடவும் உரிய சூழலை அமைத்துத்தரவே  இஸ்லாம் உணவில் சில கட்டுப்பாடுகளையும் பல அனுமதிகளையும் தந்துள்ளது.

மார்க்க அறிவு நிறைந்த மருத்துவர்களாலும் மனித இயல் வல்லுனர்களாலும் இன்னும் பயனுள்ள பல விளக்கங்களைத் தந்திட முடியும். இதனினும் ஆணித்தரமான வாதங்களை அவர்களால் எடுத்து வைத்திட முடியும்.

மனிதன் ஆன்மீகத்தில் உயர்வடைய வேண்டும், அவன் அறிவில் வளர்ச்சி பெற்றிட வேண்டும் என்பனவற்றில் இஸ்லாம் எத்துணைக் கண்டிப்புடன் நடந்துக் கொள்கின்றதோ அத்துணைக் கண்டிப்புடன் ‘உணவு’ விஷயத்திலும் நடந்து கொள்ளுகின்றது. இஸ்லாம் உணவில் சில வகைகளையும் சில வகைகளில் அளவையும் தடை செய்திருப்பது மனிதனின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் காட்டும் அக்கறையையே எடுத்துக் காட்டுகின்றது.

இஸ்லாம் அனுமதித்திருக்கும் உணவுகளில் மனிதன் நியாயமான அளவே பருகிட வேண்டும். அவன் ஒருபோதும் பெருக்க உண்ணக்கூடாது. (அல்குர்ஆன்: 7:31)

எவை எவை தடுக்கப்பட்டவைகள் என்பதையும் எவையெல்லம் அனுமதிக்கப்பட்டவைகள் என்பதையும் தெளிவு படுத்தியபின், மனிதனை, இறைவன் தான் வழங்கி இருக்கும் அருட்கொடைகளை அள்ளிப்பருகிட  – அனுபவித்திட அழைக்கின்றான். அத்துடன் கருணை நிறைந்த அந்தக் காருண்ணியனுக்கு நன்றி செலுத்திடும்படியும் மனிதனை அழைக்கின்றான். (அல்குர்ஆன்: 2:168, 172; 5:90, 91) *

(* இந்த முழு விவாதத்தையும் பொறுத்தவரை, இஸ்லாம் வழங்கும் ஒழுக்க விதிகள் என்றத் தலைப்பை பார்த்திடவும். இன்னும் ஜனாப். இப்ராஹீம் காசீம் M.D. அவர்கள் எழுதிய ‘Medical Aspects Of Forbiedden Foods in Islam’ (இஸ்லாம் தடை செய்துள்ள உணவுகளின் மருத்துவ அம்சங்கள்) என்ற கட்டுரையை காணவும். இந்தக்கட்டுரை அல் இஸ்திகாத் (Al Ittihad) என்ற பத்திரிக்கையில் இடம் பெற்றது. (The Muslim Students Association of U.S.A. and Canada) 1391/1971. Vol.8. No.1 PP. 4-6.)

3. ஆடையும் அலங்காரமும்.

மனிதர்கள் இன்னின்ன ஆடைகளைத்தான் அணிந்திட வேண்டும் எனப் பணித்திடும்போது, இஸ்லாம், நல்லொழுக்கம், அழகு, கற்பு, ஆண், பெண் ஆகியோரது அகத்தன்மைகள் என்பனவற்றிற்கே முக்கியத்துவம் தந்திருக்கின்றது. இந்தத் தனித்தன்மைகளுக்குத் தடையாக அமைகின்ற ஆடைகளையும், இந்தத் தனித்தன்மைகளைப் பேணிடுவதில் தடையாக அமைகின்ற ஆடைகளையும், இந்தத் தனித்தன்மைகளை வளர்த்திடுவதற்குத் தடையாக அமைகின்ற அலங்காரங்களையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

அகந்தை, அகம்பாவம், வீண்பெருமை ஆகியவைகளை ஏற்படுத்துகின்ற ஆடைகளை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்துள்ளது.

மனிதன் தனது மனிதத்தன்மைகளை மதித்து நடந்திட வேண்டும் என எதிர்பார்க்கின்றது இஸ்லாம். ஏனெனில் மனிதத்தன்மை என்பது மனிதனுக்கு இறைவனால் அருளப்பட்ட சிறப்புத் தகுதியாகும். அத்துடன் மனிதன் இந்த மனிததன்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற அத்தனை அனாச்சாரங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதும் இறைவனின் விருப்பமாகும். இதனால்தான் இஸ்லாம் சில வகையான ஆடைகளுக்கும் சிலவகைக்கச்சாப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கும் தடை விதித்துள்ளது. (உதாரணம்) முழுக்க முழுக்கப் பட்டால் தயாரான ஆடைகள். இந்த அடிப்படையில்தான் சில வகையான அலங்காரப் பொருட்களையும் தடை செய்துள்ளது இஸ்லாம். (உதாரணம்) தங்கத்தை ஆண்கள் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்தப் பொருட்கள் அனைத்தும் பெண் தன்மைகளுக்கே பொருந்தும்.

ஆண்களின் அழகு விலையுயர்ந்த மாணிக்கப்பரல்களை அணிவதிலோ, மின்னிடும் பட்டாடைகளை உடுத்துவதிலோ இல்லை. ஆண்களின் அழகு உயர்ந்த ஒழுக்கங்களிலே, நன்னடத்தைகளிலே, இனிமையான இயல்புகளிலேதான் இருக்கின்றது. எளிமைதான் ஆண்களின் ஏற்றம். ஆண்மையே அவர்களின் அழகு. ஆண்தன்மைகளை காத்திடுவதிலேதான் அவர்களின் அகஅழகு அமைந்திருக்கின்றது.

ஆண்கள் அணியக்கூடாது என்று தடை செய்துள்ளவைகளுள் சிலவற்றை பெண்கள் அணியலாம் என அனுமதித்துள்ளது இஸ்லாம். இதனால் பெண்கள் இந்தப் பொருட்களை தங்கள் விருப்பம்போல் உபயோகப்படுத்தி மிடுக்கோடு நடந்திடலாம் என்பதல்ல. பெண்களின் பெண் தன்மைகளுக்கு ஏற்றப் பொருட்களை அனுமதித்திடும் அதே நேரத்தில் பெண் தன்மைகளுக்கு ஒத்துவராதவைகளை தடை செய்துள்ளது இஸ்லாம்.

பெண்கள் ஆடை அணிந்திடும் விதம், அவர்கள் தங்களை அழகு படுத்திடும் விதம், நடந்திடும் விதம், அவர்களின் பார்வை இவைகளெல்லாம் மிகவும் நுற்பமானவைகளாகும். ஆதலால் இஸ்லாம் இவைகளுக்கு அதிக கவனம் செலுத்துகின்றது. இதில் இஸ்லாம் மேற்கொள்ளும் அணுகுமுறைப் பெண்களின் பொதுவானத் தன்மைகளைக் கருத்தில் கொண்டதேயாகும்.

பெண்கள் தங்களது தனித்தன்மைகளைக் காத்திடும் விதத்திலேயும், அவர்கள் தங்களது கற்பையும், கண்ணியத்தையும் காத்திடும் விதத்திலேயும், அவர்கள் வீணான சந்தேகங்களுக்கும், வதந்திகளுக்கும் ஆளாகமலிருக்கின்ற விதத்திலேயும் அறிவுரைகளைத் தந்துள்ளது இஸ்லாம். அந்த அறிவுரைகள் திருக்குர்ஆனிலேயே இருக்கின்றன.

(நபியே!) நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்கவும். தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். இது அவர்களைத் தூய்மையாக்கிவைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்துக் கொள்கிறான்.

(நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும்: அவர்களும் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். (அன்றி தங்கள் தேகத்தில் பெரும்பாலும்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளிகாட்டாது மறைத்துக் கொள்ளட்டும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளட்டும்.

பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய குமாரர்கள், தங்களுடைய கணவர்களின் குமாரர்கள், தங்களுடைய சகோதரிகளின் குமாரர்கள், அல்லது (முஸ்லிமாகிய தங்களுடன் தொடர்பு)டைய பெண்கள், தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது பெண்களின் விருப்பமற்று தங்களை அண்டி ஜீவிக்கும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுபிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர, (மற்றெவருக்கும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் போன்ற) தங்களுடைய அலங்காரத்தையும் அழகையும் காட்ட வேண்டும். அன்றி தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்க (பூமியில்) தங்களுடைய கால்களைத் தட்டித் தட்டி நடக்க வேண்டாம். (அல்குர்ஆன்: 24:30-31)

ஆண்களும் பெண்களும் அழகாகத் தோன்றிடவும் ஒழுக்கத்தில் உயர்ந்தவராக ஆகிடவும் அவர்கள் தங்களுக்கேயுரிய தனித்தன்மைகளுக்குள் இருந்திட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக்குகின்றது. ஆண்கள் பெண்களைப் போன்ற தோற்றத்தில் தோன்றுவதையும், ஆண்கள் பெண்களைப்போல் நடப்பதையும், பெண்கள் ஆண்களைப்போன்ற தோற்றத்தில் தோன்றுவதையும் பெண்கள் ஆண்களைப்பொல் நடப்பதையும் பெருமானார் (ஸல்) அவர்கள் கடிந்துள்ளார்கள்.

தீமைகள் எதையும் தராத, முறையான ஆடைகள் அணிந்து கொள்வதற்கு இஸ்லாம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்பதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் இந்த ஆடைகளை இறைவன் வழங்கிய அருட்கொடைகள் எனக் கூறுகின்றது. (அனுமதிக்கப்பட்ட) ஆடைகளை (துறவு நோக்கில் பார்த்து வெறுப்பவர்களை இஸ்லாம் கண்டிக்கின்றது. (சான்றாகத் திருமறையின் 7:32-33 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

4. விளையாட்டும் பொழுதுபோக்கும்.

இஸ்லாம் பணித்திருக்கும் கடமைகளான தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றை நோக்கிலும், அமைப்பிலும் ஆன்மீக உயர்வுகளை இலக்காகக் கொண்டவைகளே என்றாலும் அவற்றிலும் சில உடற்பயிற்சிகளும் அமிழ்ந்திருப்பதைக் காணலாம். மனிதனின் ஆன்மாவிற்கும், உடலுக்கும் இருக்கும் பந்தத்தை யார்தான் மறுப்பர். விளையாட்டுப் பொழுதுபோக்கு இவைகள் குறித்து இஸ்லாம் சொல்வது இவ்வளவுதான் என்றில்லை.

ஆரோக்கியமான சிந்தனையைத் தூண்டிவிடும் பொழுதுபோக்குகள், மனதை உற்சாகத்தோடு வைத்துக் கொள்பவைகள், உடல் வலிவுக்குத் துணை செய்பவைகள் இவை அனைத்தையும் இஸ்லாம் வரவேற்கின்றது. ஆனால் இவைகள் பாவங்களை வளர்ப்பவைகளாக இருந்திடக் கூடாது. அதுபோலவே கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்குக் குறுக்கே நிற்பவைகளாகவும் இருந்திடக் கூடாது.

நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர்களே! ஆனால் ஆரோக்கியமான தேகக்கட்டைப் பெற்றவர்கள் ஆரோக்கியத்தில் குறைந்தவர்களைவிட சிறந்தவர்களாவர். அதைத்தான் நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆரோக்கியத்தைத் தருகின்ற விளையாட்டுகளையும், பொழுதுபோக்குகளையும் அனுமதித்து அவைகளுக்கு ஊக்கம் தந்தார்கள் என ஹதீஸ் அறிவிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

விளையாட்டுகளென்ற வறையறைக்குள் வராதவைகளையும் உண்மையிலேயே மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவாதவைகளையும் விளையாட்டுகள் என்றும், பொழுதுபோக்குகள் என்றும் கொண்டாடப்படுவது மிகவும் வருந்தத்தக்கத் தவறுகளாகும். சூதாடுவதும், குடிப்பதும் பொழுதுபோக்குகள் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாத்தின் கருத்து இதுவல்ல.

வாழ்க்கை என்பது பயனுள்ள பண்பான வகையில் வாழ்ந்திடுவதேயன்றி விரையம் செய்வதற்கல்ல. நிச்சயமாக வாழ்க்கைக்கென ஒரு சிறந்த நோக்கமுண்டு. அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் மனிதன் வாழ்ந்திட வேண்டுமேயன்றி, சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களின் சாதகம் ஆகியவற்றின் கைகளில் வாழ்க்கையை ஒப்படைத்திடக் கூடாது.

இஸ்லாம் வாழ்க்கைக்கு வனப்பானதொரு இலட்சியத்தை அமைத்துத் தருகின்றது. வாழ்க்கையின் எல்லாப் பிரிவுகளையும் இந்த இலட்சியத்தை நிறைவேற்றுகின்ற வகையிலேயே அமைத்து தந்துள்ளது. இதை வைத்துக்கொண்டு இஸ்லாம் தனிமனிதனின் சுதந்திரத்திற்குத் தடை விதித்துள்ளது எனத் தவறாகப் பொருள் கொண்டிடக் கூடாது.

இதைப்போலவே இஸ்லாம் மனிதனின் வாழ்க்கை முற்றாக உயரிய ஒழுக்கங்களின் அடிப்படையில் அமைந்திட வேண்டும் என விழைகின்றது. இதை வைத்துக்கொண்டு இஸ்லாம் தனிமனிதனின் உரிமையில் கை வைத்தது எனக் கூறிடக்கூடாது.

இந்த வகையில் இஸ்லாம் சூதாட்டத்தைத் தடை செய்தது தனிமனிதனின் உரிமையில் கை வைத்ததாகாது. அதுபோலவே ‘குடிப்பதைக்’ கூடாதென விதித்தது தனிமனிதனின் சுதந்திரத்தைத் தடை செய்ததாகாது.

இந்த உலக வாழ்க்கை மனிதனுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்தாகும். அது உயர்ந்த சில நோக்கங்களுக்காக தரப்பட்டதாகும். மனிதன் வாழ்க்கையை முறையாகவும், நிறைவாகவும், மகிழ்வாகவும் எவ்வாறு வாழ்ந்திடுவது என்பதற்கான சீரிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றது இஸ்லாம். இதற்காக இஸ்லாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுள் ஒன்று சூதாட்டத்திற்குத் தடை விதித்ததாகும். ஏனெனில் சூதாட்டம் மனிதனுக்குள் பல ஏக்கங்களையும் , ஏமாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது.

நமது முயற்சிகளையும் திறமைகளையும் புறக்கணித்துவிட்டு நமது வாழ்க்கையை ஏமாற்று வித்தைகளின் கைகளில் ஒப்படைப்பது வாழ்க்கையை விரையம் செய்வதேயாகும். விண்ணிலே உயர்ந்து பறந்து மதியிலே மிதித்திடும் மதியினைப் படைத்த மனிதன் தனது திறமைகளை சூதாட்ட மேஜைகளில் சுற்றிவரும் ஏமாற்று வித்தைகளின் கைகளில் ஒப்படைத்திடுவது முட்டாள்தனத்தின் முதிர்ந்த செயலேயாகும். இது வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்திற்கு எதிரானதாகும்.

மனிதனைத் தேவையற்ற ஏக்கங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆட்படுத்தி அவனது மனதிலும், மூளையிலும் அவசியமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் விளையாட்டுகளிலிருந்து திருப்பி வாழ்க்கை எதற்காக வழங்கப்பட்டதோ அதற்காகவே வாழ வேண்டும் எனப் பணித்திடுவதற்கே இஸ்லாம் சூதாட்டம் போன்றவைகளைத் தடை செய்துள்ளது.

மனிதன் மதுவின் பிடியில் சிக்குண்டு மயங்கிக் கிடந்திடுவதும் மிகத்ததொரு அவமானச் செயலாகும். மது, அதுதரும் மதிமயக்கம், அதனால் ஏற்படும் இழப்புகள் இவைகளை நாம் நன்றாக அறிவோம். போதையில் விஷத்தை மதுவென அருந்தி, அந்த மயக்கமும் திரும்பாமலே உயிரை மாய்த்தவர்கள் ஏராளம். இந்த உயிர்ச் சேதங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மதுவரக்கன் குடும்பங்களுக்குள் புகுந்து உருக்குலைத்த குடும்பங்கள் எண்ணிக்கையில் அடங்காது. இந்தப் பழக்கத்தினால் மூடப்பட்ட வியாபாரக் கேந்திரங்கள், ஆண்டியாகிவிட்ட பணக்காரர்கள் ஏராளம்! ஏராளம்!! விளையாட்டாக இந்தப் பழக்கத்திற்குள் வந்து பின்னர் இதையே முழுநேர விளையாட்டாகக் கொண்டு தங்களது ஆரோக்கியங்களை அழித்துக் கொண்டவர்கள் அனேகர்.

மதுவால் மதியிழந்து ஆன்மாவின் ஈடேற்றத்தை இழந்தவர்கள், சிந்தனைச் சக்தியை இழந்தவர்கள், செயல்திறனை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம்.

மனிதனின் மனிதத் தன்மைகளை குழிதோண்டிப் புதைத்திடும் மதுவை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கத் தயாராக இல்லை. மனிதன் தனது வாழ்க்கைகையை இதுபோன்ற பழக்கவழக்கங்களில் விரையம் செய்திடுவதை பொறுத்துப்பார்க்க இஸ்லாம் தயாராக இல்லை. இதனால் தான் இஸ்லாம் சூதையும், மதுவையும் விளையாட்டுகளாகவோ, பொழுதுபோக்குகளாகவோ கருதவில்லை. மாறாக அவற்றை ஒட்டுமொத்தமாகத் தடை செய்தது.

இன்று உலகிலிருக்கும் சமுதாயப் பிரச்சனைகள் பெரும்பாலானவைகளுக்குக் காரணம் மதுவேயாகும். இருக்கும் சமுதாயத் தீங்குகளிலெல்லாம் மிகவும் பரவலாகவும், பயங்கரமாகவும் இருப்பது மதுவேயாகும். இந்த உண்மையை புரிந்துக்கொள்ள, நாளிதழ்கள், மருத்துவ அறிக்கைகள், நீதிமன்றங்களிலே நடக்கும் வழக்குகள் இவற்றை சற்று உன்னிப்பாகக் கவனித்தாலே போதுமானது. ஒவ்வொரு ஆண்டும் அரைமில்லியன் அமெரிக்கர்கள், மதுப்பழக்கத்தினுள் புதிதாகப் பிரவேசிக்கின்றனர். இவர்களில் பத்து நபருக்கு ஒருவர்வீதம் இந்தப் பழக்கத்தில் முழுக்க முழுக்க மூழ்கி விடுகின்றனர். இப்படி மனித சக்தியில் ஏற்படும் இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவையாகும்.

Leave a Reply