அத்தியாயம்-3 இதரத் தொழுகைகள், துஆக்கள், குறிப்புகள்

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்படும் தொழுகைகள்

மேலே கூறப்பட்ட தொழுகைகளைத் தவிர, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுவதற்கான தொழுகைகளும் இருக்கின்றன. இவைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றார்கள். அச்சந்தர்ப்பங்கள்:

1. அளவுக்கதிகமாக மழை பெய்யும் காலங்கள்.

2. மழை போதிய அளவு இல்லாத காலங்கள் – வரட்சியான காலங்கள்.

3. சூரிய கிரகண நேரம்.

மேலே சொன்ன சந்தர்ப்பங்களில் எத்தனை ரக்அத்துகள் வேண்டுமானாலும் தொழலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொழலாம்.

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஓத வேண்டிய “துஆக்கள்” (பிரார்த்தனைகள்)

பின்வரும் சந்தர்ப்பங்களில் முறைப்படித் தொழுவதற்குப் பதிலாக இறைவனிடம் இறைஞ்சிட வேண்டும் அல்லது துஆச் செய்திட வேண்டும். இந்தத் துஆக்கள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்ற விதத்தில் அமைந்துள்ளன. இறைவனுடைய அருளைப் பெற்றுத் தருகின்றன. நாம் இறைவனை மட்டுமே நம்பியிருப்பதை வெளிப்படுத்துகின்றன. நாம் அவனிடம் உதவி தேடுவதைத் தெரியப்படுத்துகின்றன. நாம் அவனை நினைவு கூர்வதைக் காட்டுகின்றன. அந்த இறைவனுடைய அளப்பரிய கருணையை நாம் பெற்றிட வகை செய்கின்றன. இந்த துஆவை ஓதிட வேண்டிய நேரங்கள்.

1. குழந்தை பெறும் சமயம்.

2. வாழ்க்கை ஒப்பந்தம் (திருமணம்) நிறைவேறும் சமயம்.

3. தூங்கிடப் போகும் சமயம், தூக்கத்திலிருந்து எழும் சமயம்.

4. வீட்டிலிருந்து வெளியே செல்லும் சமயம், வீட்டிற்கு திரும்பும் சமயம்.

5. கழிவறைக்குப் போகும் சமயம், வெளியே வரும் சமயம்.

6. பயணத்தைத் தொடங்கும் சமயம், ஒரு ஊருக்குள் நுழையும் சமயம்.

7. பயணம் செய்யும் சமயம்.

8. வாகனங்களில் ஏறும் சமயம்.

9. துன்ப காலம்.

10. கண்ணாடியில் நம்மை பார்க்கும் சமயம்.

11. குளித்த பிறகு அல்லது ஒளு செய்த பிறகு.

12. முதலாவதாக அறுவடை செய்யும்போது.

13. அடக்குமிடத்தை (கப்ரை) பார்க்கச் சொல்லும்பொழுது.

இந்தச் சந்தர்ப்பங்களில், ஓத வேண்டிய சில குறிப்பிட்ட துஆக்கள் உள்ளன. ஆனால் இறைவனைப் புகழ்ந்து அவனை நினைவு கூறக்கூடிய சில வாக்கியங்களை மொழிந்தாலும் போதுமானதாகும்.

கீழே சில துஆக்கள் தரப்பட்டுள்ளன.

1. உண்ணுவதற்கும், பருகுவதற்கும் முன்பு: ”பிஸ்மில்லாஹி வஅலா பரகத்தில்லாஹி”

பொருள்: இறைவனது திருநாமத்தைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டும்.

உண்பதற்கு முன்பு பாத்திஹா ஸூராவை ஓதுவது சிறந்ததாகும்.

2. சாப்பிட்டு முடித்த பிறகு: ”அல்ஹம்துலில்லாஹிதீ அத்அமனா வஸக்கானா வஜஅலனா முஸ்லிமீன்”

பொருள்: நாம் உண்ணவும், பருகவும் அருள் செய்து, நம்மை முஸ்லிம்களாக ஆக்கியிருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.

நோயுற்றோரைப் பார்க்கப்போகும் பொழுது ஓத வேண்டிய துஆ:

”அத்ஹிபில் பஃஸ ரப்பின்னாஸ். வஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி லா ஷிஃ(F)பாஅ இல்லா ஷிஃ(F)பாஉக்க ஷிஃ(F)பாஅன் ஸகமா.”

பொருள்: இறைவா! நோயை நீக்கி ஆரோக்கியத்தை அளிப்பாயாக! நீயே குணப்படுத்துபவன். நீ அளிக்கும் சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை இல்லை. முழுமையான சுகத்தை அருளுவாயாக!.

தொழுகையில் ஓத வேண்டியவை!

1. பாத்திஹா ஸூரா.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தக்கீம். ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலல்லாலீன். (ஆமீன்)

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்து உலகங்களுக்கும் படைப்புகளுக்கும் ரப்பு (இறைவன்) ஆவான்.

அவன் அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். (அவன்) இறுதி தீர்ப்பு நாளின் அதிபதி.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உண்ணிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம்.

எங்களுக்கு நீ நேரான வழியை காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளாகாத, நெறி தவறிப் போகாதவர்களின் வழி.

2. தஷஹ்ஹுத் (அ) முதற்பகுதி:

அத்தஹியாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலீஹீன். அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு.

பொருள்: கண்ணியங்கள் அனைத்தும், எல்லா வணக்கங்களும், எல்லா புனிதங்களும் இறைவனுக்கே உரியன.

நபியே! உங்கள் மீது இறைவனின் கருணையும் அவனுடைய ஆசிகளும் உண்டாவதாக!

நம் அனைவரின் மீதும், இறைவனின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!

ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சான்று பகர்கின்றேன். முஹம்மத் அவனுடைய அடியார் என்றும் தூதர் என்றும் சான்று பகர்கின்றேன்.

மூன்று அல்லது நான்கு ரக்அத்துகளைக் கொண்ட ஒவ்வொரு தொழுகையிலும் இரண்டு ரக்அத்துக்குப்பின் மேற்கண்ட பகுதியை ஓதிட வேண்டும். அதன் பிறகு மூன்றாவது ரக்அத்துக்காக தொழுபவர் எழுந்து நிற்க வேண்டும்.

தஷஹ்ஹுத் (ஆ) இரண்டாவது பகுதி:

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

பொருள்: இறைவனே! எங்கள் தலைவர் இப்ராஹீமையும், அவரைப் பின்பற்றியோர்களையும் நீ மேன்மையுறச் செய்ததுபோல, எங்கள் தலைவர் முஹம்மதையும், அவரைப் பின்பற்றியோர்களையும் மேன்மையுறச் செய்வாயாக!

எங்கள் தலைவர் இப்ராஹீமையும் அவரை பின்பற்றியோர்களையும் நீ ஆசீர்வதித்தது போல, எங்கள் தலைவர் முஹம்மதையும் அவரை பின்பற்றியோரையும் நீ ஆசீர்வதிப்பாயாக!

இறைவனே! நீ புகழுக்குரியவன், மகிமை மிக்கவன்.

ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும் தஷஹ்ஹுதின் இரண்டு பகுதிகளையும் ஓத வேண்டும். இதன் பிறகு ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்க வேண்டும். ஜனாஸா தொழுகையின் மூன்றாவது தக்பீருக்குப் பிறகு இரண்டாவது பகுதியை மட்டும் ஓத வேண்டும்.

3. தொழுகையின்போது ஓதக்கூடிய திருக்குர்ஆனின் சில சிறிய அத்தியாயங்கள்:

ஸூரத்துல் இஃக்லாஸ் (அத்தியாயம்:112)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

குல் ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம்யலித், வலம் யூலத். வலம் யகுன்லஹு குஃபு(F)வன் அஹத்.

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். (ஆரம்பம்)

சொல்வீராக! இறைவன் ஒருவனே! யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன. (அல்லாஹ் எத்தேவையுமற்றவன்). அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை.

ஸூரா அல்அஸ்ர் (அத்தியாயம்:103)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

வல் அஸ்ர் இன்னல் இன்ஸான லஃபிகுஸ்ரின் இல்லல்லதீன ஆமனூ வ அமிலுஸ்ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்.

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். (ஆரம்பம்)

காலத்தின் மீது ஆணையாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். (ஆயினும்) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லனவற்றைச் செய்து, உண்மையை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வருவார்களோ, அவர்களைத் தவிர.

முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் பாத்திஹா ஸூராவுக்குப் பிறகு குர்ஆனின் ஏதாவதொரு பகுதியை ஓத வேண்டும். மூன்றாவது, நான்காவது ரக்அத்துகளில் பாத்திஹா ஸூராவை மட்டும் ஓத வேண்டும்.

திருக்குர்ஆனின் எளிமையான பல அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் எத்தனை அத்தியாயங்கள் மனனம் செய்ய முடியுமோ அத்தனை அத்தியாயங்களையும் மனனம் செய்திட வேண்டும். அதோடு திருக்குர்ஆனை ஓதி அதிலுள்ள போதனைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆனை ஓதுவது பலனளிக்கும் பக்தி நிறைந்த செயலாகும். திருக்குர்ஆனை ஓதுவதே ஒரு வணக்கமாகும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.