அத்தியாயம்-3 உடல் தூய்மை செய்தல். (ஒளு)

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல் வேண்டும். அழுக்கு தூசு படக்கூடிய அளவில் வெளியில் தெரியக்கூடிய பகுதிகளை கழுவி சுத்தப்படுத்துவது அவசியமாகும். இதனைத்தான் ஒளுச்செய்தல் என நாம் சொல்லுகிறோம். அதன் செயல்முறை பின்வருமாறு:

1. தொழுவதற்கு ஒளுச் செய்கிறேன் என்ற எண்ணத்தைக் கொண்டு அதனை வெளிப்படுத்த வேண்டும்.

2. மணிக்கட்டு வரையில் கரங்களை மூன்று முறை கழுவ வேண்டும்.

3. மூன்று முறை நீரினால் வாய் கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் பல்குச்சியினால் பல் துலக்குதல் நலம்.

4. நாசித் துளைகளில் நீர் செலுத்தி மூன்று முறை கழுவ வேண்டும்.

5. முகம் முழுவதையும், இரு கரங்களால் மூன்று முறை கழுவ வேண்டும். நெற்றியிலிருந்து தாடையின் அடிவரையிலும், ஒரு காதிலிருந்து மறு காதுவரையிலும் கழுவுதல் சிறப்பு.

6. வலது கரத்தை முழங்கை வரையிலும் மூன்று முறை கழுவுதல் வேண்டும். பின்னர் அதுபோலவே இடது கரத்தையும் கழுவுதல் வேண்டும்.

7. தலை முழுவதையும் அல்லது தலையின் ஒரு பகுதியை நீரில் நனைந்த கையினால் ஒருமுறை துடைத்தல் வேண்டும்.

8. நீரில் நனைந்த ஆட்காட்டி விரல்களால் செவியின் உட்பாகங்களையும், கட்டை விரல்களால் செவியின் வெளிப்பாகங்களையும் துடைத்தல் வேண்டும்.

9. நீரில் நனைந்த கைகளால் கழுத்தைச் சுற்றி துடைத்தல் வேண்டும்.

10. வலது பாதத்தைக் கணுக்கால் வரை மும்முறை கழுவ வேண்டும். பின்னர் இடது பாதத்தை அவ்வாறே செய்தல் வேண்டும்.

இத்துடன் ஒளுச் செய்வது நிறைவு பெறுகின்றது. ஒளுச் செய்தவர் இப்பொழுது தொழுகைக்கு ஆயத்தமாகி விட்டார். ஒளு முறிந்து போகாதவரை அதனை எவ்வளை நேரத்திற்கும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு தொழுகைக்கும் அதனைப் புதுப்பித்தல் விரும்பத்தக்கதாகும். மேற்சொன்ன வரிசையில் ஒளுவின் பல்வேறு செயல்களையும் நிறைவேற்றுவதும் விரும்பத்தக்கதாகும். ஆனால் மேற்சொன்ன ஒளுவில் வரிசை மாறி விட்டால்கூட ஒளு நிறைவேறிவிடும்.

ஒளுவை முறிப்பவை.

பின்வரும் செயல்கள் ஒளுவை முறித்து விடும்.

1. உடலிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளிப்பட்டால்: சிறுநீர், மலம், வாயு முதலியன.

2. உடலின் எந்த பகுதியிலிருந்தும் இரத்தம், சீழ் மற்றும் அது போன்றவை வெளிப்படுதல்.

3. வாந்தி.

4. ஆழ்ந்த நித்திரை.

5. போதையூட்டும் பொருட்களை உட்கொண்டு மதிமயங்குதல்.

ஒளு முறிந்து விட்டால் அதனை தொழுகைக்காக மீண்டும் புதுப்பித்தல் வேண்டும். உடலிலிருந்து கழிவு பொருள்கள் வெளியான பிறகு நீரினால் துப்புரவு செய்தல் வேண்டும். ஏனெனில் தாள்களினால் (பேப்பர் வகைகள்) சுத்தம் செய்வது தொழுகைக்கான தூயமையைத் தராது.

(தயம்மும்) மண்ணினால் செய்யப்படும் ‘ஒளு’

இது பின்வரும் சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படுகின்றது.

(ஒளு, முழுக்கு இவ்விரண்டிற்கும் பதிலாக செய்யலாம்.)

1. ஒருவர் நோயால் பீடிக்கப்பட்டு, நீரை பயன்படுத்த முடியாத நிலையில் தயம்மும் செய்து கொள்ளலாம்.

2. போதிய அளவு நீர் கிடைக்காதபோது தயம்மும் செய்யலாம்.

3. தண்ணீரைப் பயன்படுத்தினால் நோய் ஏற்படும் என்ற நிலை இருந்தால் தயம்மும் செய்து கொள்ளலாம்.

4. ஒளு செய்வதனால் மய்யித்து தொழுகையையோ (இறந்தவருக்காக நிறைவேற்றப்படும் தொழுகை) பெருநாள் தொழுகையையோ இழக்க நேரிடும் என்ற நிலையில் தயம்மும் செய்து கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டு தொழுகைகளையும் ஈடுசெய்ய முடியாது.

தயம்மும் பின்வரும் முறையில் செய்யப்பட வேண்டும்:

(1) இரண்டு கைகளையும் தூய்மையான மண்ணில் அல்லது பூமியில், அல்லது கல்லில் இலேசாக அடிக்க வேண்டும். (2) பிறகு கைகளை உதறி, நீரினால் ஒளுச் செய்வதைப்போல் முகத்தை ஒருமுறை கைகளால் துடைத்திட வேண்டும். (3) மீண்டும் முன் சொன்னவாறு கைகளை பூமியில் இலேசாக அடித்து இடது கரத்தினால் வலது கரத்தை முழங்கை வரையிலும் துடைத்தல் வேண்டும். அதுபோலவே இடது கரத்தை வலது கரத்தினால் துடைத்திட வேண்டும்.

தயம்மும் என்பது ஒளுவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கான ஒரு அடையாளச் செயலாகும். அது தொழுகைக்கு இன்றியமையாததாகும். இந்தப் பரிசுத்தமான ஒளு எனும் முறையை அரிமுகப்படுத்தியதின் மூலம் இஸ்லாம் ஒரு உன்னதமான சுகாதார முறையை நிலைநாட்டியிருக்கின்றது. இத்தகையதொரு முறையை வேறெந்த ஆன்மீக கோட்பாடுகளும் தந்ததில்லை. எந்த மருத்துவ முறையும் கண்டதில்லை.

ஒளு செய்வதில் அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள்:

சில சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒளு செய்வதில் சில சலுகைகளை இஸ்லாம் அளித்துள்ளது. ஒளு செய்தபின் காலுறைகள் அணிந்தால் மீண்டும் ஒளு செய்யும்போது காலுறைகளைக் கழற்ற வேண்டிய கட்டாயமில்லை. அதற்கு பதிலாக நீரில் கைகளை நனைத்து அவற்றை துடைத்துக் கொள்ளலாம். ஆனால் 24 மணி நேரத்தில் ஒரு முறையாவது அவற்றைக் கழற்றி பாதங்களை கழுவிட வேண்டும். உடலில் புண் இருந்து அதில் நீர் பட்டால் கெடுதல் ஏற்படும் என்ற நிலையிருந்தால், அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. அதை மூடியுள்ள மருந்துத் துணியின் மீது ஈரக்கையினால் தடவினால் போதுமானது.

முழுக்கு:

நாசித்துவாரங்கள், வாய், தலை உட்பட உடல் முழுவதையும் தண்ணீரால் நனைதலே முழுக்கு எனப்படும்.

இதனைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் நிறைவேற்றிட வேண்டும்.

1. வீடுகூடியபின்,

2. இந்திரியம் வெளியானால்,

3. மாதவிடாய் காலம் முடிந்த பிறகு,

4. பிள்ளைபேற்றுத் தீட்டு முடிந்த பிறகு. இது அதிகப்பட்சம் நாற்பது நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தீட்டு நின்று விட்டால் உடன் குளித்து விட வேண்டும்.

இங்கு ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். குளிப்பதற்கு முன்பு, அல்லது ஒளு செய்வதற்கு முன்பு அது தொழுகைக்காகவும், தூய்மைக்காகவும் செய்யப்படுகின்றது என்ற எண்ணத்தை இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். ஒளுவை அல்லது முழுக்கை நிறைவேற்றுபவர்கள் இறைவனைப் புகழும் சில வார்த்தைகளை மொழிந்து, அவனுடைய வழிகாட்டுதலுக்காக இறைஞ்சிட வேண்டும். இத்தகைய வார்த்தைகளை மொழியும் முறைகள் விரிவான மார்க்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சரியான வாக்கியங்கள் முழுமையாகத் தெரியாவிட்டால், நமக்குத் தெரிந்த சில வாக்கியங்களை சொல்லிக் கொள்ளலாம். அவ்வாக்கியங்கள் இறைவனைத் துதிப்பவையாகவும், மனப்பூர்வமாய் மொழியப்படுபவையாகவும் இருந்தாலே போதுமானது.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.