அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்:

1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும்.

2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும்.

குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

3. கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களும், மாதவிடாய் காலத்திலிருக்கும் பெண்கள், (அதிகமாகப் பத்து நாட்கள்) மகப்பேறு காலத்திலிருக்கும் பெண்களும் (அதிகமாக நாற்பது நாட்கள்) தொழுகையை நிறைவேற்ற வேண்டாம்.

தொழுகை நிறைவேற்ற பின்வரும் நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும்:

1. ஒளுச் செய்தல் வேண்டும். (தொழுகைக்கு முன் தண்ணீரால் செய்யப்படும் உடல் சுத்தம். இது பற்றி பின்னர் விரிவாக விளக்கப்படும்.)

2. எல்லாவிதமான அழுக்கிலிருந்தும், அசுத்தங்களிலிருந்தும், உடல், ஆடை, தொழுமிடம் ஆகியவை தூய்மையாக இருத்தல் வேண்டும்.

3. உடலின் அந்தரங்க உறுப்புக்களை மறைப்பதற்கான ஒழுக்க விதிகளுக்கு உகந்த வகையில் முறையாக உடையணிதல் வேண்டும். ஆண்கள் குறைந்த பட்சம் தொப்புழ் முதல் முழங்கால் வரை உடலை மறைத்தல் வேண்டும். பெண்கள் முகம், கைகால்கள், பாதங்கள் ஆகியவை தவிர ஏனைய அம்சங்கள் அனைத்தையும் மறைத்தல் வேண்டும். இருபாலாருமே உடல் தெரியும்படியான ஆடைகளை அணிதல் கூடாது.

4. தொழுவதற்கான எண்ணத்தை (நிய்யத்) மனதில் கொண்டு, அதனை வெளிப்படுத்திட வேண்டும்.

5. மக்காவிலுள்ள கஃபாவின் திசையை முன்னோக்கி (கிப்லாவை நோக்கி) தொழ வேண்டும். கிப்லாவின் திசையை நிர்ணயிப்பதற்கு பல வழிகள் உள்ளன. கிப்லாவின் திசையை நிர்ணயிக்க முடியாத சூழ்நிலையில் தனது அறிவுக்கு எட்டிய வரையில் எது சரியான திசை எனத் தோன்றுகின்றதோ, அதை நோக்கித் தொழலாம்.

தொழுகையின் வகைகள்:

1. கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய (பர்ளு) தொழுகைகள்.

இது அன்றாடம் நிறைவேற்ற வேண்டிய தொழுகைகளையும், வெள்ளிக்கிழமைக் கூட்டுத் தொழுகைகளையும் உள்ளடக்கும்.

தகுந்த காரணங்களின்றி இவற்றை நிறைவேற்றத் தவறுவது தண்டனைக்குரிய பெரும்பாவமாகும்.

2. கட்டாயம் (பர்ளு) அல்லாத தொழுகைகள் வாஜிப், சுன்னத். இவை, கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையோடு நிறைவேற்றப்படும் தொழுகைகளையும், இரண்டு பெருநாள்களிலும் (ஈத்) நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகைகளையும் உள்ளடக்கும். இதைக் கடைப்பிடிக்கத் தவறுவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

3. விரும்பி நிறைவேற்றும் தொழுகைகள்.

இவை நாமாக விரும்பி நிறைவேற்றும் எல்லாத் தொழுகைகளையும் உள்ளடக்கும். இவைகளை இரவில் அல்லது பகலில் நிறைவேற்றலாம். ஆனால் இவை குறித்து இரண்டு காலங்களைக் குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். ஒன்று, சூரிய உதயத்திற்கு முந்திய இரவின் பிற்பகுதி. இன்னொன்று, மத்திய காலைப்பொழுது.

தொழுகை நேரங்கள்:

ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், பெண்ணும் அன்றாடம் குறித்த நேரத்தில் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.தொழுகையை விட்டுவிடுவதற்கோ, சேர்த்துத் தொழுவதற்கோ நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லையேல் தொழுகையை குறித்த நேரத்தில் நிறைவேற்றியேயாக வேண்டும்.

இத்தொழுகையின் நேரங்கள்:

1. வைகறைத் தொழுகை (பஜ்ரு தொழுகை)

வைகறைக்கும் சூரிய உதயத்திற்கும் இடையேயுள்ள சுமார் இரண்டு மணி நேரம்.

2. நண்பகல் தொழுகை (லுஹர் தொழுகை)

சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்திற்கும், சூரியன் அடையும் நேரத்திற்கும் இடையிலுள்ள நடுநேரத்தில் இந்தத் தொழுகையை நிறைவேற்றலாம். உதாரணமாக, சூரியன் பிற்பகல் ஏழுமணிக்கு மறைந்தால் இந்தத் தொழுகையை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் பிந்தியும், பிற்பகல் மூன்றரை மணிக்கு முந்தியும் உள்ள காலத்தில் நிறைவேற்றலாம். இதற்குப் பிறகு அடுத்த தொழுகையின் (அஸர்) நேரம் ஆரம்பமாகி விடுகின்றது. ஒவ்வொரு தொழுகைக்கான நேரத்தையும் துல்லியமாகக் காட்டுகின்ற நாட்காட்டிகள் உள்ளன. ஆனால் இத்தகைய நாட்காட்டிகள் எதுவும் கிடைக்காவிட்டால் ஒருவர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் சிந்தித்து சரியானதென்று தோன்றுகின்ற நேரத்தில் தொழ வேண்டும்.

3. பிற்பகல் தொழுகை (அஸர்)

இதற்கான நேரம், நண்பகல் தொழுகை நேரம் முடிந்ததிலிருந்து ஆரம்பித்து சூரியன் மறையும் வரையிலான நேரமாகும்.

4. மஃக்ரிப் தொழுகை

இதற்கான நேரம் சூரியன் மறைந்ததிலிருந்து செவ்வானம் மறையும் வரையிலாகும். சாதாரணமாக இந்த நேரம் ஏறத்தாழ ஒரு மணி நேரம், 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கும்.

5. இஷாத் தொழுகை

இத்தொழுகைக்கான நேரம் செவ்வானம் மறைந்ததிலிருந்து (அதாவது சூரியன் மறைந்தபின், ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு) வைகறைக்கு சற்று முன்பு வரையாகும்.

தொழுகையின் நேரங்களை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். தொழுகையின் நேரங்கள் நாம் உணவருந்தும் நேரங்களோடு ஒத்துப் போகின்ற வகையிலேயே அமைந்திருக்கின்றன. இஸ்லாமிய அமைப்பின் கீழ் நமது ஆன்மீகத் தேவைகளும், உடல் தேவைகளும் ஒரே நேரத்தில் நிறைவடையும் விதத்திலேயே தொழுகையின் நேரங்கள் அமைந்துள்ளன. அதோடு மன அமைதியை உடல் ஓய்வோடு சேர்த்துத் தருகின்ற விதத்திலேயே அமைந்திருக்கின்றன.

காலை தொழுகை (பஜ்ர்) காலை சிற்றுண்டி அருந்தும் முன் நிறைவேற்ற வேண்டிய விதத்தில் அமைந்துள்ளது. மதிய உணவுக்கான நேரத்தில் நிறைவேற்றப்படுகின்றது. லுஹர் தொழுகை அல்லது நண்பகல் தொழுகை. அடுத்து வரும் அஸர் தொழுகை நாம் உழைப்பின் ஊடே சற்று ஊட்டம்பெறக் கொள்ளும் டீ அல்லது காபி அருந்தும் நேரத்தில் அமைந்துள்ளது. மாலை மங்கும் நேரத்தில் வருவது, மஃரிப் தொழுகை; இது இரவு உணவு எடுப்பதற்கு முந்திய நேரத்தில் நிறைவேற்றப்படுகின்றது. இஷாத் தொழுகை இரவு உணவு நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய விதத்தில் அமைந்துள்ளது.

ஐங்காலத் தொழுகைகளையும் ஒழுங்காக – காலந்தவறாமல் – நிறைவேற்றும் ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஆன்மீக ஆனந்தக் களிப்பிலேயே கழிக்கின்றார். அவர் ஆண்டவனைத் தொழுதே நாளை துவக்குகின்றார். அவனைத் தொழுதே நாளை முடிக்கின்றார். இடைப்பட்ட நேரத்திலும் அவர் இறை நினைப்பிலேயே இருக்கின்றார். அவர் மதத்தையும் நித்திய வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்கின்றார். நாள் முழுவதும் இறைவன் தன்னோடு இருப்பதை உணருகின்றார், உணர்ந்தே செயல்படுகின்றார். ஒரு முஸ்லிம் தனது நித்திய விவகாரங்களை இறை உணர்வுடனேயே முடிக்கின்றார். இதன் மூலம் அவர் தனது ஒழுக்கக் குணங்களை மிகவும் அழுத்தமான அடிப்படைகளில் அமைத்துக் கொள்கின்றார்.

ஐங்காலத் தொழுகைகளையும் காலந் தவறாமல், முறையாக நிறைவேற்றுவதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், ஆன்மீக ஊட்டத்தை ஊட்டுகின்றார். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறை உணர்வை இருக்கச் செய்கின்றார். மதத்தை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் செயல்படுத்துகின்றார். அதாவது தான் கொண்ட நம்பிக்கையை தனது அன்றாட வாழ்வில், எல்லாச் செயல்களிலும் பிரதிபலிக்கச் செய்கின்றார். மதம் சில சடங்குகளோடு முடங்கிக் கிடப்பதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்ட வல்லது என்பதை செயல் மூலம் நிரூபிக்கின்றார். மதம் (இஸ்லாம்) அங்காடியில் விலை கூறும் இடத்தில், விலை பேசி பொருள்களை வாங்கும் இடத்தில், அலுவலகத்தில், வயல் வெளிகளில், கழனிகளில், வீட்டு நிர்வாகத்தில், நாட்டு நடப்பில், ஆலைகளில், அரசாங்கத்தில், பாட்டாளியின் உழைப்பில், பஞ்சையரின் பிழைப்பில் ஊடுருவி நிற்கின்றது. எங்கும் எதிலும் இறைவன் தன்னை தன்னுடைய செயல்களை உற்று நோக்கிக் கொண்டு இருப்பான் என்ற இறை உணர்விலேயே ஒரு முஸ்லிம் செயல்படுகின்றார்.

இஸ்லாம் அமைத்துத் தந்துள்ள தொழுகை முறை பல்வேறு விதங்களில் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அது அனைத்தும் அறிந்த ஆண்டவனால் அமைக்கப்பட்ட திட்டம்.

எதிர்பாராத விதத்தில் சில தடைகள் ஏற்பட்டாலன்றி குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றியேயாக வேண்டும். தொழுகை இறைவன் நடத்தும் தேர்வு, அவன் தரும் பயிற்சி. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அவன் தரும் பரிசு அளவுகளுக்குள் அடங்காதது. அவை தரும் பேரின்பம் கற்பனைகளுக்கு கட்டுப்படாதது. அவர்கள் பெறும் கண்ணியமும், கௌரவமும் வார்த்தைகளுக்குள் வராது. அதே நேரத்தில் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருப்பது, அல்லது தேர்விலே தொற்றுப் போவது தண்டனைக்குரிய பாவமாகும். அது பேரிழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆன்மீக ஆனந்தத்தை மனிதன் இழப்பான். எண்ணற்ற மன உறுத்துதல்களுக்கு மனிதன் ஆளாவான். அதோடு சமுதாயம் என்ற கட்டமைப்பிலிருந்து பிரிந்து போவான்.

நண்பகல் தொழுகையாகிய லுகர் தொழுகையையும், அதை அடுத்து அஸர் தொழுகையையும், பயணத்தில் இருப்பவர்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும் சேர்த்துத் தொழலாம். இந்த அனுமதி மஃரிப் தொழுகை, இஷாத் தொழுகை ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

Leave a Reply