அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்

இந்த அத்தியாயத்தில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க இஸ்லாம் சில கடமைகளை விதித்திருக்கின்றது. அவை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் முதலியவையாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும் என இறைவன் கட்டளை இட்டிருப்பதற்கான காரணம், மனிதனின் ஆன்மீகத் தேவைகளையும், இன்னும் இதர தேவைகளையும் நிறைவு செய்வதற்காகவேயாகும்.

இந்தக் கடமைகளில் சில தினந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாரந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில மாதந்தோறும் நிறைவேற்ற வேண்டியவை, சில ஆண்டிற்கு ஒருமுறை நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாழ்க்கையில் ஒருமுறையாவது நிறைவேற்ற வேண்டியவைகள்.

ஆகவே அவைகள் வாரத்தின் எல்லா நாட்களையும், மாதத்தின் எல்லா வாரங்களையும், வருடத்தின் எல்லா மாதங்களையும், வாழ்நாளின் எல்லா வருடங்களையும் தழுவி நிற்கின்றன. இவைகளையெல்லாம்விட, அவைகள் மனிதனின் வாழ்க்கையை முழுமையாக இறைவனின் பார்வையில் கொண்டு செல்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் இறைவனை நினைத்தவனாக, இறைவனோடு தொடர்புக் கொண்டவனாக இருக்கின்றான், இஸ்லாம் பணித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாக!

செயலில் வராத நம்பிக்கை உயிரற்றது என நாம் ஏற்கெனவே பார்த்தோம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகும். நம்பிக்கையின் இயற்கையான இயல்பே செயலாகும். செயலில் வரும்போது நம்பிக்கைக்கு உயிரும், ஊட்டமும் பிறக்கும். நாம் கொண்டுள்ள நம்பிக்கை உண்மையானதாக இருக்குமேயானால் அது நம்மை செயலில் ஈடுபடுத்தியே தீரும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்தானால், செயல்தான் நம்பிக்கைக்குச் சக்தியைக் கொடுப்பதாகும். நம்பிக்கையும் செயலும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன. நம்பிக்கை மனிதனை தனது இலட்சியத்தை நோக்கி உந்தித் தள்ளி விடும். அவன் தனது இலட்சியத்தை கைவிடாமல் அதிலேயே நிலைத்திருக்கும்படி செய்வதும் நம்பிக்கையே ஆகும்.

நம்பிக்கை இல்லாத மனிதன் துடுப்பே இல்லாத படகாகத் தத்தளித்துக் கொண்டே இருப்பான். அவனை இலட்சியத்தின்பால் இட்டுச் செல்வது எதுவும் இருக்காது. அவனுக்கு இலட்சியம் என்ற ஒன்றுகூட இருக்குமா என்பதே மிகவும் சந்தேகத்திற்குரியதே! அப்படிப்பட்ட மனிதன் வாழ்க்கையே பொருளற்றது. அவன் ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கின்றான், ஆனால் அவன் வாழுவது வாழ்க்கையே இல்லை.

இதைப்போலவே, நம்பிக்கை வைத்துக் கொண்டு, அதை செயல்படுத்தாமல் இருப்பவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவன் ஆவான். அவன் கொள்ளும் நம்பிக்கை நம்பிக்கையே அல்ல. அவன் திசை தெரியாமல் திரியும் ஒரு மனிதனுக்கு ஒப்பாவான்.

நம்பிக்கைக்கும், செயலுக்கும் இடையிலுள்ள உறவு, இஸ்லாத்தின் முழு அமைப்பிலேயே உயிர்த்துடிப்புள்ள பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. உடலிலிருந்து ஆன்மாவையும், வாழ்க்கையிலிருந்து மதத்தையும் பிரித்தாளுவதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இறைவன் மனிதனை எவ்வாறு படைத்தானோ அவ்வாறே இஸ்லாம் மனிதனை ஏற்றுக் கொள்ளுகின்றது. அவனுள் ஆன்மா, உடல் என்று எந்த விதமான பாகுபாடுகளையும் பாராட்டுவதில்லை. அவன் ஆன்மா, உடல் ஆகியவைகளை அகத்தே கொண்டவன் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுகின்றது.

இஸ்லாம் மனிதனின் ஆன்மீக நாட்டங்களை புறக்கணிப்பதில்லை. ஏனெனில் ஆன்மீக நாட்டமில்லாத மனிதன் மிருகத்திற்கு ஒப்பாவான். அதுபோலவே இஸ்லாம், மனிதனின் உடல் தேவைகளையும் புறக்கணிப்பதில்லை. உடல் தேவைகள் இல்லாத மனிதன் வானவர்களின் இனத்தையே சாருவான். ஆனால் உண்மையில் அவன் வானவர் வகையைச் சார்ந்தவனல்ல. அவன் மனிதன். அவன் வானவராக இல்லை, இருக்கவும் முடியாது.

மனிதன் படைப்பினங்களில் ஒரு நடுநிலையை வகிக்கின்றான் என்று கூறுகின்றது இஸ்லாம். அவன் முழுக்க முழுக்க ஆன்மீகமயமானவனல்ல. ஏனெனில் முழுக்க, முழுக்க ஆன்மீகமயமானவர்கள் வானவர்களே ஆவார்கள். அதுபோலவே மனிதன் இதற்கு அப்பாற்ப்பட்ட நிலையிலுள்ளவனும் அல்ல. ஏனெனில் இதற்கு அப்பாற்பட்டவன் இறைவன் ஒருவனே! மனிதன் ஒரேடியாக உடல் தேவைகளை மட்டும் கொண்டவனல்ல. ஏனெனில் உடல் தேவைகளை மட்டுமே கொண்ட ஒரே படைப்பினம் மிருகங்களே! ஆனால் மனிதன் ஆன்மீக, உடல் தேவைகளைக் கொண்ட ஒரு நடுநிலை படைப்பினமே. அவனுக்கு உடல் தேவைகளை நிறைவு செய்கின்ற கட்டாயமுண்டு. அதே அளவில் ஆன்மீக நாட்டங்களை நிறைவு செய்கின்ற கடமைகளும் உண்டு.

மனிதனுக்கு உதவி செய்து அவனை இறைவன் பக்கம் இழுத்து வருகின்ற அதே மதம் மனிதனின் ஏனைய தேவைகளின் நிறைவுகளுக்கும் வகை செய்கின்றது. ஆன்மீக உயர்வுகளைப் பெற்றுத்தரும் அதே மதம் அவனுடைய உடல் இச்சைகளையும் ஒழுங்குப்படுத்துகின்றது.

இந்த மதமே இஸ்லாம். மனிதனிடம் இயல்பாகவே அமையப்பெற்றுள்ள ஆன்மீக, உடல் அல்லது உலகத் தேவைகள் இவைகளில் ஒன்றை புறக்கணித்து விட்டு, இன்னொன்றுக்கு அதிக முக்கியத்துவம் தருவது இயற்கைக்கு எதிரானது. இறைவன் மனிதனை எந்தெந்த இயல்புகளோடு படைத்தானோ, அந்த இயல்புகளுக்கும் எதிரானது.

இஸ்லாம் மனிதனின் இயற்கையான இயல்புகளை அங்கீகரிக்கின்றது. அத்துடன் அவனது ஆன்மீக, உலகியல் நல்வாழ்வுகளுக்காக வேண்டி எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றது. ஆதலால்தான், மதம் மனிதனின் சொந்த விவகாரம் மட்டுமே என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மதம், மனிதன் சாதாரணமாக எதிர்நோக்கும் வாழ்க்கை ஓட்டத்திலிருந்து அப்பாற்பட்டது என்ற கருத்தையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதையே வேறு வார்த்தையில் சொல்வதானால், மனிதனின் அந்தரங்க வாழ்விலும், சமுதாய வாழ்விலும் மதத்தின் போதனைகள், தெளிவானதொரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், மதத்திற்கு எந்த மதிப்புமில்லை. அதுபோலவே இறைவனின் வழிகாட்டுதல்களின் வழி அமைக்கப்படாத வாழ்க்கை அர்த்தமற்றது. இஸ்லாம் மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் ஒழுங்குப்படுத்த முனைவதற்கான காரணமும் இதுதான். மதசார்பற்ற தன்மையை இஸ்லாம் ஏன் அனுமதிப்பதில்லை என்பதற்கான காரணமும் இதுதான். அதாவது, மதம் மனிதனின் அந்தரங்க வாழ்வோடு மட்டுமே சம்பந்தப்பட்டது, அவனது பொதுவாழ்வைப் பொறுத்தவரை மதம் பொருளற்றதே என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே தான் இஸ்லாம் மனிதனின் தனி வாழ்வையும், ஆன்மீக வாழ்வையும், பழக்கவழக்கங்களையும், பண்பாட்டு முறைகளையும் இறைவனின் நாட்டப்படி அமைத்திட வேண்டுமெனக் கூறுகின்றது. அப்போதுதான் மனிதனின் வாழ்வு அர்த்தமுள்ளதாகவும் பலன் பயப்பதாகவும் அமையும்.

வாழ்வின் எல்லாத் துறைகளும் எல்லா நேரமும் இறை வழிகாட்டுதல்களின் வழி அமைக்கப்பட வேண்டும் என இஸ்லாம் அழுத்தம்திருத்தமாகக் கூறுவதால் அது, ‘வாரத்திற்கு ஆறு நாட்கள் உலகியலுக்கு, ஒருநாள் இறைவனுக்கு’ என்ற முரட்டு தத்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த ‘வாரத்தில் ஒருநாள் ஆண்டவனுக்கு’ என்ற கொள்கை, காலப்போக்கில், மதம் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மண்மூடிப் போகச் செய்து விடுகின்றது. அஃதோடு இறைவனுக்கு எதிராக மனிதன் பல அநீதிகளை இழைத்திட வழி வகுக்கின்றது. அதுபோலவே மனிதனின் ஆன்மாவையும் காயப்படுத்தி விடுகின்றது. வாரத்தில் ஆறுநாட்கள் ஆண்டவனைப் பற்றி கவலை கொள்வதில்லை என்று கூறும் இந்த சித்தாந்தம் மனிதன் ஒழுக்க நெறிகளையும், ஆன்மீக உயர்வுகளையும் புறக்கணிக்கச் செய்து விடுகின்றது. இஃது மிகப்பெரும் அநீதியாகும். இது மனிதனின் இயல்புக்கே எதிரானது. ஆபத்தானது. மனிதன் தரம் தாழப்போகிறான் என்பதன் அறிகுறியாகும்.

இதுபோலவே மனிதன், ஆறுநாள் ஆன்மீகத்தில் ஆழ்ந்து விடுவானேயானால் அப்போது அவன் சீராக ஆகிவிட்டான் என்றாகாது. அப்போதும் சமநிலை பிறழ்ந்தே நிற்கும். ஆகவே இயல்பான, இயற்கையோடு ஒத்துப்போகின்ற ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! ஆன்மீகம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சமநிலையை அமைத்துத் தருவதும் இஸ்லாமேயாகும்.

மனிதன் தனது ஆன்மா, உடல் இவற்றில் எதை நிராகரித்தாலும் சமநிலையிலிருந்து விலகியவனேயாவான். அதன் விளைவாக அவன் எண்ணற்ற இன்னல்களுக்கும், இடர்களுக்கும் ஆளாவான். தனது ஆன்மீக நாட்டங்களையும், உலகியல் தேட்டங்களையும் ஒரு சமநிலையில் வைத்திட வேண்டியதே மனிதனின் திறமைக்கும், நம்பிக்கைக்கும், உண்மைக்கும், உழைப்பிற்கும் விடப்படும் மிகப்பெரும் சவாலாகும். அவன் இந்த சவாலை சமாளித்து வெற்றிபெற இஸ்லாம், நம்பிக்கையை செயல்படுத்துகின்ற முறையான பயிற்சிகளை அமைத்து தந்து, மனிதனுக்கு உதவி செய்கின்றது.

தொழுகைகள்:

தொழுகையின் நோக்கம்.

தொழுகை இஸ்லாத்தின் ஒரு தூண். அது இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஒரு முஸ்லிம் தகுந்த காரணங்களின் அடிப்படையில் அல்லாமல், தான் நிறைவேற்ற வேண்டிய தொழுகைகளை நிறைவேற்றத் தவறினால், அவர் ஒரு பெரும் தவறையே செய்கின்றார். அத்துடன் அவர் ஒரு பெரும் பாவத்தையும் செய்கின்றார் என்றே பொருள்.

இது ஒரு பெரிய குற்றமாகும். ஏனெனில், இது இறைவனுக்கு எதிரானது மட்டுமல்ல; இது மனிதனுடைய இயற்கைக்கும் எதிரானதாகும். பெரியனவற்றைப் புகழ்வது மனிதனின் இயற்கையான உணர்வாகும். அதுபோலவே உயர்ந்த இலட்சியங்களை அடைந்திட முனைவதும் மனிதனின் இயல்போடு ஒட்டிய ஒன்றாகும். அனைத்தினும் பெரியவன் இறைவனே ஆவான்.

இறைவனை அடைவதே மிகவும் சிறந்த உயர்ந்த இலட்சியமாகும். மனிதனை மாண்புமிக்கவனாக மாற்றுவதும் அவனது இயற்கையான உணர்வுகளுக்கு வடிகாலாக அமைவதும், இஸ்லாம் நிறைவேற்றச் சொல்லும் தொழுகையாகும். மனிதனை முறையாகப் பக்குவப்படுத்துவதும் தொழுகையேயாகும்.

தொழுகையைப் புறக்கணிப்பதன் மூலம், மனிதன் தன்னிடமிருக்கும் நல்ல பண்புகளை வளரவிடாமல் தடுக்கின்றான் என்றே பொருள். அதுபோலவே மனிதன் தொழுகையை நிராகரித்தால், அவன் தன்னிடம் இயல்பாக இருக்கும் பாச உணர்வுகளையும், நல்லனவற்றை நாடும் மன உந்துதலையும் நிராகரிக்கின்றான் என்றே பொருள். தொழுகையைப் புறக்கணிப்பதென்பது மனிதன் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி உயர்வதிலிருந்து தன்னை ஏமாற்றிக் கொள்கின்றான் என்றே பொருள். இப்படி மனிதன் தன்னிடமிருக்கின்ற இயல்பான உணர்வுகளை சாகடிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். இதுவே தொழுகையின் மகிமையையும், மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லிடும்.

ஒன்றை நாம் எப்போதும் கருத்தில் கொண்டிட வேண்டும். இறைவனுக்கு மனிதனின் வணக்கம் தேவையில்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன். அவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன். அவன் நமது நல்வாழ்விலும், உயர்விலும் அக்கறை கொண்டவன். அவன் தொழுகையின் அவசியத்தை சுட்டிக்காட்டும் போதும், நம்மீது ஏனைய கடமைகளை சுமத்தும்போதும், அவன் நமக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்கின்றான். ஏனெனில் நாம் செய்கின்றவைகள் அனைத்தும் நமது நன்மைக்காகவே. அதுபோலவே, நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறும், நமக்கு எதிராகச் செய்யப்படுபவைகளே! ஆகவே இறைவன் மனிதனின் நலனில் அக்கறை கொண்டே அவன் மீது சில கடமைகளை சுமத்தியிருக்கின்றான்.

இஸ்லாம் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவன் அடையும் நன்மைகள் அளவிட முடியாதவைகளாகும். இந்தத் தொழுகைகள் தரும் ஆசிகளும், அருளும் கற்பனைக்கும் எட்டாதவைகள். இது ஒரு ‘கோட்பாடு’ என்பதல்ல. அதுபோலவே இது வழக்கமாகச் சொல்லப்படும் கற்பனையுமல்ல. இது ஒரு உணர்வூட்டும் உண்மையான ஆன்மீக அனுபவமாகும்.

இஸ்லாம் சொல்லும் தொழுகை, எவ்வளவு பலன் பயப்பது, எவ்வளவு தூரம் வாழ்க்கையின் ஆழத்தில் ஊடுருவுவது என்பனவற்றை பின்வருமாறு விளக்கலாம்.

1. தொழுகை ஒழுங்கு, கட்டுப்பாடு, மனவலிமை ஆகியவற்றைக் கற்பிக்கும் பாடமாகும்.

2. இறைவனுக்கும் நமக்கும் உள்ள பாச உணர்வினை வெளிப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். அத்துடன் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி நாம்  முன்னேறுவதற்கான ஒரு பயிற்சியுமாகும்.

3. இறைவனை நினைவுபடுத்தும் ஒரு ஆற்றல் மிக்க சக்தியுமாகும். அவனது சிறப்புகளையும், மேன்மைகளையும் நமக்கு உணர்த்தும் தூண்டுகோலாகும்.

4. ஆன்மீகத்தை வளரச் செய்கின்ற ஒரு வித்து. ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் தரும் ஒரு வழுவான பயிற்சி.

5. மிகவும் நேரான வாழ்வில் நம்மை வழி நடத்தும் வழிகாட்டி.

6. அனாச்சாரம், தீமைகள், நெறியற்ற வாழ்க்கை, முறையற்ற செயல் இவற்றிலிருந்து மனிதனை காப்பாற்றிடும் அரண்.

7. உண்மையான சமத்துவம், உறுதியான ஒற்றுமை, உலக சகோதரத்துவம் ஆகியவற்றின் ஒப்பற்ற செயல்முறையான எடுத்துக்காட்டு.

9. மன ஆழத்தில் அமைதியை ஏற்படுத்துவது, மனதின் நிலையற்ற நிலையை மாற்றி மனதை ஒரு நிலைபடுத்துவது.

10. பொறுமை, தைரியம், நம்பிக்கை ஆகியவற்றைத் தரும் ஊற்றுக்கண்.

இதுவே இஸ்லாமியத் தொழுகை. இவைகளே தொழுகை மனிதனுக்கு செய்யும் நன்மைகளாகும். இவைகள் உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இருக்கும் ஒரே வழி தொழுகையில் ஈடுபட்டு, அது தரும் ஆன்மீக ஆனந்தங்களை அனுபவித்துப் பார்ப்பதாகும். அப்போதுதான் ஒருவர் இஸ்லாம் சொல்லும் தொழுகையின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

Leave a Reply