அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்

இஸ்லாம், சாந்தி அல்லது அமைதி என்பதை எப்படி அணுகுகின்றது என்பதை அறிந்துகொள்ள ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படைகளை மட்டும் கவனித்தால் போதுமானது. சாந்தி – சமாதானம் (மன அமைதி) இஸ்லாம் இவை அனைத்தும் ஒரே வேரிலிருந்து பிறந்தவைகளே! ஆதலால், இவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைந்தவைகளே! இறைவனின் அழகிய பெயர்களில் ஒன்று சாந்தி – அமைதி. முஸ்லிம்கள் ஒவ்வொரு இறை வணக்கத்தையும் (தொழுகையை) முடிக்கும்போது இறைவனிடம் அமைதியை வேண்டியே – இறைஞ்சியே முடிக்கின்றனர். முஸ்லிம்கள் இறைவனிடம் திரும்பிடும்போது, அமைதியைக் கொண்டே முகமன் கூறப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் தினமும் ஒருவரை ஒருவர் அமைதியைக் கொண்டே முகமன் கூறி வரவேற்கின்றனர் – வாழ்த்துகின்றனர் – விட்டுப் பிரிகின்றனர்.

முஸ்லிம் என்ற அடைமொழிக்கு ஒரு பொருள் சாந்தி, சமாதானம், அமைதி என்பதாகும். இஸ்லாத்தின் சுவர்க்கம் என்பது அமைதியின் நிரந்தர இருப்பிடமாகும்.

மேலே எடுத்துத் தந்த விளக்கங்கள் அமைதி அல்லது சாந்தி என்பது இஸ்லாத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவி நிற்கின்றது என்பதை எடுத்துக் காட்டிடும். இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களின் வழி இறைவனை அணுகுகின்ற எவரும், அமைதியை, சாந்தியைப் பெற தவறமாட்டார். அவர் இறைவனுடைய அமைதியை பெறுவார். தன்னளவில் (மன) அமைதியப் பெறுவார். தான் வாழும் சமுதாயத்தின் பிற மனிதர்களுடன் சமுகமாகவும், அமைதியாகவும் வாழ்வார். இதுவரை சொன்ன கொள்கைகள் அனைத்தையும் ஒன்றாய் இணைத்து மனிதனை இந்த உலகில் உரிய இடத்தில் அமர்த்தி, வாழ்வை இஸ்லாமிய முறையில் அணுகினால், நன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் எவரும் நாம் வாழும் இந்த பூமியை அமைதியின் உறைவிடமாக ஆக்கிட தவறமாட்டார்கள். அவர்கள் மனிதன் இழந்து நிற்கும் கண்ணியத்தை அவனுக்குப் பெற்றுத் தருவார்கள். சமத்துவத்தை நிலைநாட்டுவார்கள். சகோதரத்துவத்தை உலகெங்கும் உயர்ந்து நிற்கும் கொள்கையாக ஆக்குவார்கள். மொத்தத்தில் இந்த உலகை ஒரு அமைதிப் பூங்காவாக மாற்றுவார்கள். அந்த அமைதி என்றும் நிலைத்து நிற்கும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.