அத்தியாயம்-2 ’சகோதரத்துவம்’ இஸ்லாத்தின் தனித்தன்மை.

மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என்பது இஸ்லாத்தின் பிரிதொரு பிரிக்க முடியாத அடிப்படையாகும். ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’ இவைகள் எந்த அடிப்படையில் அமைந்துள்ளனவோ அதே அடிப்படையில் தான், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அமைந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகள் அமைந்துள்ள அடிப்படைகளைத் தவிர இன்னும் சில அடிப்படைகள் இதற்குண்டு. அவை, இறைவன் ஒருவனே, அவன் எங்கும் நிறைந்து நிற்பவன். அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவன் அருளிய மார்க்கம் (வழி காட்டுதல்) ஒன்றே என்பவைகளாகும்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன், அவன் எங்கும் நிறைந்து நிற்பவன், அவன் நிரந்தரமானவன், மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் அவனே. மனிதர்கள் அனைவருக்கும் தேவையானவற்றைத் தருபவன் அவனே. மனிதர்களுக்கு நீதி வழங்குபவனும் அவனே. அவனே அனைவருக்கும் அதிபதி. சமுதாய கௌரவம், தேசிய அந்தஸ்து, குலப்பெருமை, குடும்பப்பெருமை இவைகளுக்கு அவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லை. அவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களே ஆவார்கள்.

மனிதர்கள் படைப்பால் ஒரே ஆதாரத்திலிருந்து வந்தவர்களே! அவர்கள் ஒரே தாய், தந்தையர்களின் பிள்ளைகளே! அவர்கள் இறப்பிற்குப்பின் மீளும் இடமும் ஒன்றே! இந்த அடிப்படைகளிலே ஒரு முஸ்லிம் மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே எனக் கொள்கின்றார். மனிதர்களின் படைப்பின் ஆதாரம் இறைவனே! மனிதர்களின் தாய், தந்தையர்கள் ஆதம், ஹவ்வா ஆகியோராவார்கள். இவர்களின் கிளைகளே மனிதர்கள் அனைவரும். மனிதர்கள் இறந்தபின் அனைவரும் மீளுமிடம் இறைவனே! அதாவது மனிதன் யாரால் படைக்கப்பட்டானோ, எந்த இறைவனிடமிருந்து வந்தானோ அந்த இறைவனிடமே மீண்டும் செல்வான்.

முஸ்லிம்கள் அனைவரும் இறைவனின் மார்க்கம் (மதம்) ஒன்றுதான் என நம்புகின்றார்கள். அது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ, ஒரு குறிப்பிட்ட நிறத்தாருக்கோ, ஒரு குறிப்பிட்ட குலத்தாருக்கோ வந்ததல்ல. அது மனிதர்கள் அனைவரும் பொதுவானது என முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இறைவனின் மார்க்கத்தில் (மதத்தில்) முரண்பாடுகளோ, அடிப்படையில் வேறுபாடுகளோ என்றும் ஏற்பட்டதில்லை. இவைகளை நாம் ஆழ்ந்து கவனிப்போமேயானால், சற்று நிதானித்து சிந்திப்போமேயானால், நாம் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்பதை அறிவோம். நாம் வெளிப்படையாக ஏற்படுத்தி வைத்துள்ள உயர்வு தாழ்வுகளுக்கு சற்றும் இடமிருக்காது. இவைகளை மனிதர்களின் மனதில் பதிய வைத்து விடுவோமானால் அவர்கள் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். அவர்கள் நாமெல்லோரும் சகோதரர்களே என்பதில் உறுதியாக நிற்பார்கள். முஸ்லிம்கள் இறைவன் ஒருவனே என்றும், மனிதர்கள் அனைவரும் ஒரே குலமே என்றும், மனிதர்கள் அனைவருக்காகவும் வந்த மதம் ஒன்றே என்றும் நம்புவதால் அவர்கள், இறைவனின் தூதர்கள் அனைவரையும், இறைவெளிப்பாடுகள் என்ற வேதங்கள் அனைத்தையும் எந்த வேறுபாடுகளுமின்றி நம்புகின்றார்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

Leave a Reply