அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் ‘சமம்’ எனக் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று பொருளல்ல. மனிதர்கள், தங்கள் திறமைகளால், தகுதிகளால், அவர்கள் கொண்டிருக்கும் ஆசைகளால், செல்வங்களால் வேறுபட்டு நிற்பவர்களே. ஆனால் இவைகளில் எதுவும் ஒரு மனிதனின் அந்தஸ்தை இன்னொரு மனிதனின் அந்தஸ்திலிருந்து உயர்த்தி விடாது. அதுபோலவே இவைகளில் எதுவும் ஒரு இனத்தை இன்னொரு இனத்தை விட உயர்ந்ததாக ஆக்கிவிடாது.

மனிதனின் கோத்திரம் அல்லது குலம், மனிதனின் நிறம், மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள், அவன் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து இவைகளில் எதுவும் இறைவன் முன் ஒரு மனிதனைவிட இன்னொரு மனிதனை உயர்ந்தவனாக ஆக்கிடாது. இறைவன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அளக்கின்ற அளவுகோல் அவர்கள் கொண்டுள்ள இறையச்சமேயாகும். இறையச்சத்தின் அடிப்படையிலிருந்து இறைவன் மனிதர்களுக்கிடையில் எந்த பாகுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், தீய செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரித்தறிகின்றான். இதனை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து சிருஷ்டித்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமைப் பாராட்டிக் கொள்வதற்கில்லை. எனினும்) உங்களில் எவன் மிகவும் பயபக்தி உடையவனாக இருக்கின்றானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியவான். நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) நன்கறிந்தோனும், நன்கு தெரிந்தோனுமாக இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன்: 49:13)

குலம், கோத்திரம், நிறம், சமூக அந்தஸ்து இவைகளின் அடிப்படையில் எழும் வேற்றுமைகள் தற்செயலானவைகளே! இறைவனின் பார்வையில் இவைகள் எந்த வேற்றுமையையும் ஏற்படுத்துவதில்லை. சமத்துவம் என்பது, அரசியல் சட்டம் அமைத்துத் தருவதல்ல, சில சீமான்கள் போடும் பிச்சையுமல்ல, அல்லது சிலர், பலருக்கு தருகின்ற நன்கொடையுமல்ல. சமத்துவம் என்பது நம்பிக்கையின் (ஈமானின்) ஒரு பகுதியாகும். இதை ஒரு முஸ்லிம் அக்கறையுடன் எதிர்பார்க்கின்றார். தானும் அடுத்தவர்களை அப்படியே சமமாக நடத்துகின்றார். இஸ்லாம் வழங்கும் இந்த சமத்துவம், அதன் சமுதாய அமைப்பில் ஆழமாக வேறூன்றி நிற்கின்றது. அது பின்வரும் அடிப்படைகளின் கீழ் அமைகின்றது:

1). மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் அந்த ஏக இறைவனே! அவனே மிகவும் உயர்ந்தவன்.

2). மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற பெற்றோர்களின் பிள்ளைகளே! ஆகவே அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லை.

3). இறைவன் தனது படைப்பினங்கள் அனைத்தையும் நீதியுடனும், நேர்மையுடனுமே நடத்துவான். அவன் எந்த இனத்திற்கும் தலை சாய்ப்பவனல்ல. இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் அவனது படைப்பே! அனைத்தும் அவனது அதிகாரத்தின் கீழ் இருப்பவைகளே! அனைத்தும் அவனுக்கே சொந்தம்!

4). மனிதர்கள் பிறக்கும்போது தங்களோடு எதையும் கொண்டு வந்தவர்களல்ல என்ற வகையில் எல்லோரும் பிறப்பால் சமமானவர்களே! அதுபோலவே, மனிதர்கள் இறக்கும்போது தங்களோடு எடுத்துச் செல்பவைகள் எதுவுமில்லை என்ற வகையில் அவர்கள் அனைவரும் சமமானவர்களே!

5). இறைவன் ஒவ்வொரு மனிதனையும் அவனது செயல்களைக் கொண்டே தீர்மானிக்கின்றான்.

6). இறைவன் மனிதர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை தந்திருக்கின்றான். அது ‘மனிதன்’ என்ற அந்தஸ்தாகும். மனிதன் படைப்புகள் அனைத்திலும் அழகானவன். உயர்ந்தவன். ஆனால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

இவைகள் இஸ்லாம் வழங்கும் சமத்துவத்தின் சில அடிப்படைகளாகும். இஸ்லாம் வழங்கும் இந்த சமத்துவம் முற்றாக செயல்படுத்த படுமேயானால், சமுதாயத்தில் அநீதிகளுக்கும், மாச்சரியங்களுக்கும் அறவே இடமிருக்காது. இறைவனின் வாழ்க்கைத் திட்டமாம் இஸ்லாம் நிலைநாட்டப்படும் போது தாழ்த்தப்பட்டவர்கள், அழுத்தப்பட்டவர்கள், அமுக்கப்பட்டவர்கள் என்பனவற்றிற்கு கிஞ்சித்தும் இடமிருக்காது.

உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஆண்டான் – அடிமை, எஜமான் – ஏவலாள், சாமானியர்கள் – சீமான்கள் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகள் ஆகிவிடும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.