அத்தியாயம்-2 சுதந்திரம்.

சுதந்திரம் என்பது எப்போதுமே தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. பல நேரங்களில் அது தவறாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த மனித சமுதாயத்திற்கும் பூரணமானதொரு சுதந்திரத்தை இந்த வார்த்தைக்கு இருக்கின்ற அதே பொருளில் தந்திட முடியாது. சமுதாயம் ஒழுங்காக செயல்பட வேண்டுமேயானால் அங்கே சில கட்டுப்பாடுகள் இருந்தே ஆக வேண்டும்.

இந்த பொது நியதி ஒரு புறமிருக்க, இஸ்லாம் சுதந்திரத்தை போதிக்கின்றது. பாதுகாக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பூரணமான சுதந்திரம் தரப்படும் என உறுதி தருகின்றது. இஸ்லாம் கூறும் சுதந்திரம் என்பது மனிதன் தானாகச் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே சொன்னதுபோல் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் புனிதமான (பாவம் செய்யாத) நிலையிலேயே பிறக்கின்றனர். இதன் பொருள் மனிதன் யாருக்கும் அடிமையாகப் பிறந்தவனல்ல. அத்தனை அடிமைத்தனத்திற்கும் அப்பாற்பட்டவனாக, அத்தனை பாவங்களுக்கும் அப்பாற்பட்டவனாகப் பிறக்கின்றான். சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புரிமை, இந்த உரிமை அவன் இறைவனின் நியதிகளை எதிர்க்காதவரை, அடுத்தவர்களின் உரிமைகளில் கை வைக்காதவரை புனிதமானதாகப் போற்றிப் பாதுகாக்கப்படும்.

மூடத்தனம், மௌட்டீகம், அவநம்பிக்கை இவைகளுக்கு அடிமைப்பட்டிடாமல் மனதை விடுவிக்கின்றது இஸ்லாம்.

பாவம், அவமானம் இவற்றிற்கு அடிமைப்பட்டிடாமல் ஆன்மாவை விடுவிக்கின்றது இஸ்லாம்.

மனிதன் தனது மனசாட்சிப்படி இயங்குவதிலிருந்து தடுக்கின்ற அத்தனை சக்திகளையும் இஸ்லாம் உடைத்தெறிகின்றது. அத்துடன் மனதை எல்லாவித அச்சங்களிலிருந்து விடுவிக்கின்றது இஸ்லாம்.

ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கவழக்கங்களுக்கு அடிமைப்பட்டு அழிந்து போவதிலிருந்து மனிதனின் உடலை பாதுகாக்கின்றது இஸ்லாம்.

இப்படி மனம், ஆன்மா, மனசாட்சி, உடல் ஆகிய அனைத்திற்கும் நிறைவான சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது இஸ்லாத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும்.

இந்த அடிப்படை நோக்கத்தை அடைவதற்காக இஸ்லாம் மேற்கொள்ளும் வழிகள், அறிவைத் தேடுவதில் அயரா முயற்சி, தொடரான ஆன்மீக நாட்டங்கள், கட்டுப்பாடான ஒழுக்க விதிகள், இன்னும் சில உணவு கட்டுப்பாடுகள் இவையே ஆகும். மனிதன் இந்த விதிகளை மதம் போதிக்கும் விதத்தில் கடைப்பிடித்து வருவானாயேனால் அவன் தனது இறுதி இலக்கான சுதந்திரத்தை நிச்சயம் அடைவான்.

நம்பிக்கைச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் இவைகள் இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானவைகளாகும். இஸ்லாத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்பும் கொள்கையை ஏற்றிடவும், தான் விரும்பும் மார்க்கத்தை நம்பிடவும், தான் விரும்பும் முறையில் தொழுதிடவும், தனது மனசாட்சிப்படி இயங்கிடவும் உரிமையுண்டு. இதனை திருக்குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்: ‘மார்க்கத்தில் நிர்பந்தமேயில்லை. வழிகேட்டிலிருந்து, நேர்வழி தெளிவாக்கப்பட்டு விட்டது. ஆகவே எவன் ஷைத்தானை நிராகரித்து விட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கின்றானோ அவன், நிச்சயமாக அறுபடாத பலமானதொருக் கயிற்றைப் பிடித்துக் கொண்டான். அல்லாஹ் செவியுறுவோனும், அறிவோனுமாயிருக்கின்றான். (திருக்குர்ஆன்: 2:256)

இஸ்லாம் இப்படிப்பட்டதொரு போக்கை மேற்கொள்வதற்கான காரணம், மதம் அல்லது மார்க்கம் என்பது அழுத்தமான நம்பிக்கை, நம்பிக்கையை அடியொற்றி எழும் உறுதி, திடமான எண்ணம், செயல், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தியாகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது. மதத்தை மனிதன் மீது பலவந்தமாகத் திணித்தால் இவைகளை அந்த மனிதனிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும் இஸ்லாம் இறைவனின் வழிகாட்டுதலை (இறை உண்மையை) மனிதன் வாழ்வில் வெற்றி பெற்றிட கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகவே வழங்குகின்றது. மனிதன் அதன் வழி நடப்பதோ அல்லது அதை நிராகரிப்பதோ அவன் விருப்பத்தை பொறுத்தது. இஸ்லாம் இந்தச் சுதந்திரத்தை மனிதனுக்குப் பூரணமாக வழங்கி விடுவதால் அங்கு கட்டாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை திருமறையில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: ‘(நபியே!) நீர் கூறும்: (முற்றிலும்) உண்மையான (இவ்வேதமான)து உம் இறைவனால் அருளப்பட்டது. விரும்பியவர்கள் விசுவாசிக்கலாம். விரும்பாதவர் நிராகரித்து விடலாம்…….’ (திருக்குர்ஆன்: 18:29)

இஸ்லாத்தில் சுதந்திரம் என்பது நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். படைத்த அந்த இறைவனின் புனிதமான கட்டளையாகும். இஸ்லாம் வழங்கும் சுதந்திரம் பின்வரும் அடிப்படையின் கீழ் அமைந்ததாகும்.

1). மனிதனின் மனசாட்சி இறைவனுக்கு மட்டுமே அடிமை. ஒவ்வொரு மனிதனும் இறைவனுக்கே நேரடியாக பொறுப்பாவான்.

2). ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயல்களுக்கு தானே பொறுப்பேற்க வேண்டும். ஒருவன் செய்த செயல்களின் பலனை அவனேதான் அடைவான்.

3). மனிதன் எந்தக் கொள்கையின் வழி வாழ வேண்டும் என்பதை மனிதனே தேர்ந்தெடுக்க வேண்டும்.

4). இறைவன் மனிதனுக்கு தேவையான அறிவையும், ஏனைய தகுதிகளையும் போதுமான அளவிற்கு தந்துள்ளான். ஆகவே, இறைவன் முன் பதில் சொல்லிடும்போது அவன் எந்தக் காரணத்தையும் காட்டி தப்பித்திட முடியாது.

இவையே இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தின் அடிப்படைகளாகும். இவையே சுதந்திரத்திற்கு இஸ்லாம் தரும் மதிப்பாகும். சுதந்திரம் மனிதனின் இயற்கையான உரிமையாகும். அது ஒரு ஆன்மீகத் தேவையாகும். அது ஒரு மார்க்கக் கடமையுமாகும். இஸ்லாம் வழங்கும் இந்த (சுதந்திர) விதிகளுக்குள், மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு அனுமதியில்லை. வர்க்கப் போராட்டத்திற்கு வழியில்லை. இனக்கலவரங்களுக்கு இடமில்லை. சுதந்திரமாக வாழ்வதற்கு தனிமனிதனுக்கு இருக்கும் உரிமை புனிதமானது. அது வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு இருக்கும் உரிமையை ஒத்ததாகும். சுதந்திரம் என்பது உயிருக்கு சமமானதாகும்.

Leave a Reply