அத்தியாயம் – 2 மதம் அல்லது மார்க்கம்.

மனித வரலாற்றை சற்று உற்று நோக்குவோமானால், வரலாறு முழுவதும் மதம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது.

அடுத்தவர்களை சுரண்டுவதற்காகவும், பலரை ஏய்திடவுமே மதத்தை சிலர் பயன்படுத்தினர். சிலர் தாங்கள் கொண்டிருந்த மாச்சரியங்களை மறைத்திடவும், தாங்கள் இழைத்த கொடுமைகளை நியாயப்படுத்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றிடவும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்திடவும், கற்றவர்களை, பாமரர்களையும் ஏய்த்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். மதத்தின் பெயரால் பல அநீதியான போர்கள் நடத்தப்பெற்றன. சிந்தனை சுதந்திரமும், மனசாட்சிப்படி காரியமாற்றிடும் சுதந்திரமும் பறிக்கப்பட்டன. விஞ்ஞானமும், விஞ்ஞானிகளும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

மதத்தின் பெயரால் மனிதனின் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்தும் நசுக்கப்பட்டன. மனிதனின் சுயமரியாதையும், கண்ணியமும் தகர்த்தெறியப்பட்டன. மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்த பித்தலாட்டங்கள் மனித இனத்திற்கு எண்ணற்ற இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மதத்திற்கே பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலே நாம் சொன்னவைகளெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். இவற்றை எவரும் மறுத்திட முடியாது. நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். ‘மதம்’ என்பதை இப்படித்தான் அணுக வேண்டுமா? மதத்தின் உண்மையான பணிகள் இவைதானா? இந்தக் கேள்விகளுக்கான பதில், அழுத்தம் திருத்தமாக ‘இல்லை’ என்பதே ஆகும்.

இந்த உலகில் எண்ணற்ற மதங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவைகள் ஒவ்வொன்றும் தானே உண்மையான மதம் எனக் கூறுகின்றன. ஒவ்வொரு மதமும் தான் இறைவனிடமிருந்து, மனிதனின் வழிகாட்டுதலுக்காக வந்ததே எனக் கூறுகின்றது. இப்படி ஒவ்வொரு மதமும் தானே உண்மையானது எனக் கூறுவதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவைகளை கேள்விப்படுகின்ற மக்கள் ஒரு விரக்திக்கே ஆளாகி இருக்கின்றார்கள். இந்த முரண்பாடுகள் மக்கள் மனதில் மதத்தைப் பற்றி ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மதங்கள் அவைகள் சொல்லும் முரண்பட்ட தத்துவங்கள், இவைகளெல்லாம் மனித இனத்தை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக துண்டுபடுத்தி விட்டன. எந்தக் கொள்கையின் பக்கமும் சாயாமல் நடுநிலையில் நின்று பார்ப்பவர்கள். ஒருவித குழப்பத்திற்கே ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் இவர்கள் எல்லா மதத்தையும் ஒட்டுமொத்தமாக வெறுக்கின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

’மதம்’ என்று இஸ்லாம் கூறுவது மிகவும் விசாலமானதொரு பொருளைக் கொண்டதாகும்.

உண்மையான மதம் என்பது இறைவனிடமிருந்தே வரும் என்பது உண்மையே. மதம் மனிதனுக்கு வழிகாட்ட வந்ததே என்பதும் உண்மையானதே!

மனிதனின் அடைப்படை இயல்புகளும், மனிதனின் அடிப்படை தேவைகளும் எல்லாக் காலங்களிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்ற உண்மையையும் இங்கே நாமும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

நாம் மேலே சொன்ன உண்மைகள் நம்மை ஒரு முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அதாவது உண்மையான மதம் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். இந்த உண்மையான மதம் இறைவனிடமிருந்தே வரவேண்டும். இந்த மதம் மனிதனின் எல்லாப் பிரச்சனைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஏற்புடைய தீர்வுகளை தருவதாக இருந்திட வேண்டும். இந்த மதத்தின் பெயர் ‘இஸ்லாம்’. இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இஸ்லாம் என்பது முஹம்மத் (ஸல்) அவர்களால் போதிக்கப்பட்டது மட்டுமல்ல, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்த அத்தனை இறைத்தூதர்களாலும் போதிக்கப்பட்டது இஸ்லாமேயாகும். ஆகவே இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய அத்தனை இறைத்தூதர்களையும் உண்மையாய் பின்பற்றிய அத்தனை பேரும் முஸ்லிம்களேயாவர். ஆகவே இஸ்லாமே அன்று முதல் இன்றுவரை இறைவனின் மதமாக இருந்து வந்திருக்கிறது. இனி என்றும் இருக்க போவதும் இஸ்லாமேயாகும். ஏனெனில் இறைவன் ஒருவனே. அவன் மாற்றங்கள் இல்லாதவன்!

அதுபோலவே மனிதனின் அடிப்படை தேவைகள், அடிப்படை இயல்புகள், இவை அன்றும், இன்றும் ஒன்று போலவே இருந்து வருகின்றன. இனி என்றும் அவைகள் இப்படியே இருந்து வரும். புறசூழ்நிலைகளும் ஏனைய புறத்தேவைகளுமே நிறைவு செய்கின்ற மதமாக, என்றும் நிலைத்திருக்கின்ற மதமாக இருந்து வரும்.

மதம் மனிதனின் அறிவின் தாகத்தை நிறைவு செய்வதற்கும், ஆன்மீக நாட்டங்களை நிறைவு செய்வதற்காகவும் மட்டுமே வந்ததில்லை எனக் கூறுகின்றது இஸ்லாம். மதம் மனிதனுக்கு ஒரு சமுதாயத் தேவை எனக் கூறுகின்றது இஸ்லாம். மதம் எல்லா மக்களுக்கும் தேவையான ஒன்று.

இஸ்லாம் இப்படிச் சொல்வது மனிதனை குழப்பத்தில் ஆழ்த்திட அல்ல. மாறாக அவனுக்கு நேர்வழி காட்டுவதற்கேயாகும். மனிதனின் நம்பிக்கையை உடைத்தெறிவதல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக மனிதனை ஒழுக்கத்தில் உயர்ந்த உத்தமனாக ஆக்கிடுவதே இஸ்லாத்தின் நோக்கம்!

மதத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் ஆராய்வோமேயானால் நாம் ஒன்றைக் கண்டு கொள்ளலாம். அதாவது மதம் மனிதனின் ஆன்மீகத் தேவைகளையும், அவனது நியாயமான உலகியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றது. மதம் மனிதனை அவனது மனத் தடுமாற்றங்களிலிருந்து விடுவித்து மன ஒருமையை ஏற்படுத்துகின்றது. அது அவனது உணர்வுகளை, வேட்கைகளை ஒழுங்குப்படுத்துகின்றது. சுருங்கச் சொன்னால் அவனது வாழ்க்கையின் போக்கையே ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருகின்ற மதம் இஸ்லாமே!

இஸ்லாமிய மதம் இறைவனைப் பற்றிய மனிதனின் அறிவை ஆழப்படுத்துகின்றது. அதுபோலவே மனிதனுக்கு அவனைப் பற்றிய முழு அறிவையும் கொடுக்கின்றது. இஸ்லாமிய மதம் இயற்கையின் இரகசியங்களை மனிதனுக்கு கற்றுத் தருகின்றது. மனிதனின் இயல்புகளை மனிதனுக்கு உணர்த்துகின்றது. இஸ்லாமிய மதம் மனிதனுக்கு நல்லது எது? கெட்டது எது? என்பனவற்றைக் கற்றுத் தருகின்றது. அது மனிதனின் ஆத்மாவை தீமைகளிலிருந்து காப்பாற்றி தூய்மைப்படுத்துகின்றது. மனதை சந்தேகங்களிலிருந்து மீட்டெடுக்கின்றது. மனிதனின் பண்புகளை பண்படுத்துகின்றது. அவனுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் பலப்படுத்துகின்றது.

மதம் தருகின்ற இத்தனை பலன்களையும் மனிதன் பெற வேண்டுமானால் அவன் இஸ்லாமிய மதம் பணிக்கின்ற அத்தனை கடமைகளையும் முறையாகவும் நிறைவாகவும் செயல்படுத்திட வேண்டும்.

மறுபுறம் உண்மையான மதம், நம்பிக்கையிலும், பொறுமையிலும், உறுதி தளராமையிலும் தேவையான பயிற்சியை மனிதனுக்கு தருகின்றது. நேர்மை, உண்மை, நல்லவை இவற்றை நேசிக்கின்ற மனநிலையை மனிதனுக்குள் உருவாக்கித் தருகின்றது இஸ்லாமிய மதம். இன்னும் உண்மையான மதம் மனிதனை அச்சங்களிலிருந்து விடுவிக்கின்றது. ஆன்மீக இழப்புக்களிலிருந்து காப்பாற்றுகின்றது. மனிதனுடைய எல்லா நல்ல முயற்சிகளிலிருந்தும் இறைவனின் துணையை பெற்றுத் தருகின்றது. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே அறுந்துபோகாத ஒரு இணைப்பை ஏற்படுத்துகின்றது. மதம் மனிதனுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் வழங்குகின்றது. மொத்தத்தில் அவனது வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றது.

இவையே உண்மையான மதம் மனிதனுக்குத் தரும் நற்பலன்களாகும். இதுவே இஸ்லாம் மதம் என்ற ‘பதத்தை’ உபயோகப்படுத்தும் போது கொள்ளும் பொருளாகும். மேலே சொன்ன இந்த பலன்களை விளைவிக்காத எந்த மதமும் இஸ்லாமாக இருக்காது. ஏன்? அது ஒரு மதமே இல்லை! மேலே சொன்ன இந்த பலன்களைப் பெறாத மனிதர்கள் மதத்தைப் பின்பற்றியவர்களாக மாட்டார்கள். அவர்கள் இறை உணர்வு உடையவர்கள் என்றும் கொள்ள முடியாது. இதையே இறைவன் தனது திருமறையாம் திருக்குர்ஆனில் பின்வருமாறு பகர்கின்றான்:

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன்: 3:85)

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply