அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)

உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார்.

1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார்.

இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். அவனுடைய உதவிகளையே சார்ந்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மனிதனுக்கு கௌரவத்தை அளிப்பதோடு அவனை அச்சத்திலிருந்தும், விரக்தியிலிருந்தும், குற்றங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.

2. ஒரு முஸ்லிம் இறைவனின் தூதர்கள் அனைவரையும் நம்புகிறார். இறைவனின் தூதர்களுக்கிடையில் அவர் எந்தவித வேற்றுமைகளையும் பாராட்டுவதில்லை.

ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைவனிடமிருந்து ஒரு எச்சரிக்கையாளர் அல்லது ஒரு தூதர் வந்துள்ளார்கள். இத்தூதர்கள் நன்மையின் நனிசிறந்த போதகர்கள். நேர்மையின் உறைவிடங்கள். அவர்கள் மனித இனத்திற்கு அறிவூட்டுவதற்காகவும், இறைவனின் தூதை மனித இனத்திற்கு கொண்டு வந்து சேர்க்கவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு இறைத்தூதரோ அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்களோ அனுப்பப்பட்டார்கள்.

சில காலங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்கள் ஒரே காலத்தில் ஒரே சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். இறைவனின் அருள்மறையாம் திருமறை குர்ஆன் 25 இறைத்தூதர்களின் பெயரைக் குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் இவர்கள் அனைவரையும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைத்தூதர்களே என நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர ஏனைய நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கோ அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எனத் தெரிகிறது. இருப்பினும் எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும், அவர்கள் கொண்டுவந்த இறைத்தூதும் ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. அதுதான் ’இஸ்லாம்’. ஏனெனில் அது இறைவன் எனும் ஒரே ஆதாரத்திலிருந்து, ஒரே நோக்கத்திற்காக வந்தது. அதாவது மனித இனத்தை இறைவன் காட்டிய நேரிய பாதையில் வழி நடத்துவதாகும்.

விதிவிலக்குகள் எதுவுமின்றி இறைவனின் தூதர்கள் அனைவரும் மரணத்திற்கு உட்பட்ட மானிட பிறவிகளே! அவர்கள் வேத வெளிப்பாடுகளைப் பெற்றவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். இறைவனின் தூதர்களில் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதியானவர். மகத்துவமிக்கவர்!.

இது தாமாக தமது வசதிக்காக வைத்துக்கொண்ட நம்பிக்கையல்ல. இஸ்லாத்தின் ஏனைய நம்பிக்கைகளைப்போல இதுவும் ஆதாரபூர்வமான, வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் அமைந்தது. இங்கு நூஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், ஆசிகளும் உண்டாவதாக!) போன்ற சில தூதர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது:

அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இவ்வேதத்தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாக்கூப், முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும், அருளப்பெற்ற யாவற்றையும், ஏனைய நபிமார்களுக்கு அருளப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்புகின்றோம். அவர்கள் எவரிடையேயும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. இன்னும் இறைவனுக்கே நாங்கள் அடிபணிகின்றோம். (அல்குர்ஆன்: 2:136) ஒப்புநோக்குக. (3:84, 4:163-165, 6:84-87)

3. மேலே சொன்னவற்றின் விளைவாக முஸ்லிம்கள் இறைவனின் எல்லா வேதங்களையும், வேத வெளிப்பாடுகளையும் நம்புகின்றார்கள். இவ்வேதங்கள் இறைவனின் நேரிய பாதையை தம் மக்களுக்கு காட்டுவதற்காக இறைத்தூதர்களால் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும். திருக்குர்ஆனில் இப்ராஹீம், மூஸா, தாவூத், ஈஸா ஆகியோருக்கு வழங்கப்பட்ட வேதங்கள்பற்றி குறிப்பாக சொல்லப்பட்டுள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வெளிப்படுத்தப் படுவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே இந்த வேதங்களில் சில தொலைந்து விட்டன. சில இடைச்செருகல்களுக்கு உள்ளாயின. மற்றவை மறக்கப்பட்டு விட்டன. அல்லது புறக்கணிக்கப்பட்டு விட்டன அல்லது மறைக்கப்பட்டு விட்டன.

இப்போது இருக்கிற வேதங்களில் ஆதாரபூர்வமான, முழுமையான ஒரே இறைவேதம் திருக்குர்ஆனே ஆகும்.

கொள்கையளவில் முஸ்லிம்கள் முந்திய எல்லா வேத நூல்களையும், வேத வெளிப்பாடுகளையும் நம்புகிறார்கள். ஆனால் அவற்றின் ஆதாரபூர்வமான, முழுமையான மூலநூல்கள் எங்கிருக்கின்றன? அவைகளெல்லாம், இன்னும் மரணக்கடலுக்கு (Dead Sea) அடியிலே இருக்கலாம் அல்லது இன்னும் பல சுவடிகள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டியதாக இருக்கலாம். ஒருவேளை கிருஸ்தவர்களும், யூதர்களும் தொடர்ந்து மேற்கொண்டிருக்கின்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளின் முடிவுகளை உண்மையாக வெளியிடுவார்களேயானால், இந்த வேதங்கள் பற்றி இன்னும் பல உண்மைகள் வெளிப்படலாம்.

ஆனால் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏனெனில் அவர்களிடமிருக்கும் திருக்குர்ஆன் முழுமையானது, ஆதாரம் நிறைந்தது. அதில் இருப்பவைகள் எதுவும் தவறி விடவில்லை. அதில் இருப்பதற்கு மேல் நாம் எதையும் அதிகமாக எதிர்பார்க்கவுமில்லை. ஏனெனில் அதுவே முழுமையானது, ஆதாரம் நிறைந்தது இதில் எள்ளளவும் ஐயமில்லை. அதன் உண்மை நிலையை சந்தேகித்து அறிஞர்களோ, சிந்தனையாளர்களோ ஒருபோதும் சர்ச்சை எழுப்பிட முனைந்ததே இல்லை. குர்ஆன் அதனை அருளிய இறைவனால் அத்தகைய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இடைச்செருகல்களிலிருந்தும், ஊடுருவல்களிலிருந்தும் அதனை பாதுகாப்பதை இறைவன் தனது கடமையாக்கிக் கொண்டான். ஏனைய நூல்களை கணிப்பதற்கு ஏற்றதொரு அளவுகோலாக, உரைகல்லாக ஆக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது திருக்குர்ஆன்!.

ஆகையால் திருமறையாம் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றவைகள் அனைத்தும் உண்மையென ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. திருக்குர்ஆனோடு ஒத்துப் போகாதவைகள் – முரண்படுகின்றவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. இறைவன் கூறுகின்றான்:

“மெய்யாகவே நாம் சந்தேகமின்றி குர்ஆனை இறக்கி வைத்தோம். மேலும் நாம் அதனை நிச்சயமாக பாதுகாப்போம்.” (அல்குர்ஆன்: 15:9) ஒப்புநோக்குக: 2:75-79, 5:13-14, 41:45,47, 6:91, 41:43.

4. உண்மையான முஸ்லிம் ஒருவர் வானவர் உண்டு என நம்புகிறார். வானவர் ஆன்மீகமயமானவர்கள், ஒளி பொருந்தியவர்கள். உணவு, பானம், தூக்கம் இவை தேவையில்லாத இயல்புடையவர்கள். அவர்களுக்கு உடல் ஆசைகளும், உலகத் தேவைகளும் கிடையாது. அவர்கள் இரவையும், பகலையும் இறைவனின் பணியிலே செலவிடுவார்கள். அவர்கள் பலர். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கடமையுண்டு. நாம் நமது கண்களால் அவர்களைக் காண முடியவில்லை என்பது அவர்கள் இருப்பதை பொய்யாக்கி விடாது. கண்களுக்குப் புலப்படாத, புலன்களுக்கு எட்டாத பல பொருள்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. அவைகளை நாம் நம்பத்தான் செய்கின்றோம். நாம் நமது கண்களால் ஒருபோதும் காணாத பல இடங்கள் இவ்வுலகில் உள்ளன.

அதுபோலவே, நம்முடைய கண்களால் பார்க்கமுடியாத, நுகரமுடியாத, தொடமுடியாத, சுவைக்கமுடியாத எண்ணற்ற பொருள்கள் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. நாம் பார்க்காதபோதும், சுவைக்காதபோதும் அவை இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளவே செய்கின்றோம்.

அறிவும், உண்மையும் நமது புலன்களின் உணர்வுக்கு உட்பட்டதல்ல. நமது புலன்களின் உணர்வுக்கு அப்பாற்பட்ட அறிவும், உண்மையும் எத்தனையோ இருக்கின்றன என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் வானவர்கள் உண்டு என்ற நம்பிக்கை எழுகின்றது. (16:49-50, 21:19-20. இரண்டாவது பிரிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் பார்க்கவும்.)

5. இறுதி தீர்ப்பு நாள் உண்டு என்று உண்மையான முஸ்லிம் நம்புகிறார். இந்த உலகம் ஒருநாள் முடிந்து விடும். இறந்தவர்கள் எல்லோரும் தங்களது இறுதி தீர்ப்பை பெறுவதற்காக எழுப்பப்படுவார்கள். நமது செய்கைகள், அசைவுகள், சிந்தனைகள், சொற்கள் அனைத்தும் துல்லியமாக பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கின்றன. இறுதி தீர்ப்பு நாளில் அவை அனைத்தும் கொண்டு வரப்படும். நற்செயல்கள் மிகையாக செய்தவர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். தீமைகளை மிகையாக செய்தவர்கள் தண்டனைக்குட்படுத்தப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

சுவர்க்கம், நரகம் இவற்றின் உண்மையான நிலைபற்றிய சரியான விளக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பிலும் சுவர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் உள்ளன. ஆனால் அந்த விளக்கங்களை மேலெழுந்தவாரியாக அங்கே காணப்படும் சொற்களின் வெளிப்படையான பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. சுவர்க்கத்தில், கண்கள் ஒருபோதும் பார்த்திருக்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத பல பொருள்கள் இருக்கின்றன என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும் நற்செயல்களுக்கு நல்ல வெகுமதியும், தீய செயல்களுக்கு தண்டனையும் நிச்சயமாக உண்டு என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். அதுதான் நீதி வழங்கும் நாளாகும். அன்றுதான் எல்லா கணக்குகளும் இறுதியாகத் தீர்க்கப்படும்.

நம்மில் சிலர் சில சமயங்களில் இவ்வுலக சட்டங்கள் வழங்கும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவதுண்டு. அதுபோலவே மறுமையிலும் இறுதி தீர்ப்பு நாளில் தாங்கள் தங்களது சாதுரியங்களால் தப்பித்து விடலாம் என எண்ணினால் அது அங்கே நடக்காது. அங்கே அவர்கள் தப்பிக்கவே முடியாது. அவர்கள் தப்பிக்க முடியாதவாறு அவ்விடத்திலேயே பிடிக்கப்படுவார்கள்.

அங்கு அவர்களின் சார்பாக பேசுவதற்காக எவரும் இருக்க மாட்டார்கள். அனைத்தையும் அல்லாஹ் அறிவான். நமது செயல்கள் அனைத்தும் அவனுடைய பிரதிநிதிகளால் கணக்கிடப்படுகின்றன. இறையச்சம் மிக்கோர் இறைவனின் திருப்தியை பெறுவதற்காகவே நற்செயல்கள் புரிகின்றார்கள். அவர்களுக்கு நிலையற்ற இந்த உலகில் வரவேற்பில்லாமல் போகலாம். பாராட்டுகள் இல்லாமல் போகலாம். வெகுமதிகள் எதுவும் கிடைக்காமல் போகலாம். நிச்சயமாக அவர்கள் இறுதி தீர்ப்பு நாளில் முழுமையான பலனை அடைவார்கள். அவர்களுடைய செயல்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். எல்லோருக்கும் நியாயம் வழங்கப்படும்.

இறுதி தீர்ப்பு நாள் உண்டு என நம்புவது இந்த உலகத்தில் நாம் எதிநோக்கும் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு நிம்மதியான பதிலாக அமையும். பாவம் செய்து கொண்டு, இறைவனையும் புறக்கணித்துக் கொண்டு, எண்ணற்ற அநியாயங்களையும் செய்து கொண்டு வாழுகின்ற பலர் இந்த உலக வாழ்க்கையில் செழிப்பாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இறையச்சம் நிறைந்த மக்கள், நல்ல ஒழுக்கங்களைக் கொண்ட மக்கள் தங்களிடம் அத்தனை நற்பண்புகளும் இருந்த போதிலும், இந்த உலக வாழ்க்கையில் தங்களது உண்மையான முயற்சிகளுக்கு போதிய அளவு பலன் கிடைக்காமல் அல்லலுறுவதைப் பார்க்கிறோம். இஃது ஒரு பெரும் புதிராகவே தென்படுகிறது. இறைவனின் நியதிக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது.

அட்டூழியங்களைச் செய்கின்ற ஒழுக்கக் கேடானவர்கள் எந்த துன்பமுமின்றி இவ்வுலகச் சட்டத்திலிருந்து தப்பிப்பதோடு மட்டுமல்லாமல், மிகச் செழிப்பாகவும் இருக்க முடியுமென்றால், நன்மை செய்த மக்களுக்கு என்னதான் பதில்? நல்லொழுக்கத்திற்கும், நன்மையை செய்திட வேண்டும் என்ற எண்ணத்திற்கும் ஊக்கம் தருவது எது? எதை எதிர்பார்த்து மக்கள் நன்மையை மட்டும் செய்ய வேண்டும்? எதற்கு அஞ்சி அவர்கள் தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆகவே நன்மை செய்வதற்கு ஊக்கம் தந்திடவும், தீமையை தடுத்திடவும் ஏதாவது ஒரு வழி இருந்தாக வேண்டும். நன்மையை செய்பவர்களுக்கு நற்கூலி கிடைக்கும் என்பதற்கு ஏதாவது ஒரு உத்திரவாதம் இருந்தே ஆக வேண்டும். இது இவ்வுலகில் செய்யப்படவில்லை என்றால் (இது இவ்வுலகில் ஒழுங்காகவும், விரைவாகவும் செய்யப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.) இது ஏதாவது ஒருநாளில் செய்யப்பட்டே ஆகவேண்டும். அதுவே இறுதித் தீர்ப்பு நாளாகும்.

இறுதி தீர்ப்பு நாளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்பதனால் அதுவரை இந்த உலகத்தில் அநீதியை மன்னித்து விட வேண்டும், ஒழுங்கீனங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. இறுதி தீர்ப்பு நாளின்மீது நம்பிக்கைக் கொள்வதென்பது நேரிய பாதையிலிருந்து விலகிச் செல்பவருக்கு எச்சரிக்கை கொடுப்பதற்காகவும், என்றாவது ஒருநாள் இறைவனுடைய நீதி முழுக்க முழுக்க செயல்படும் என்று அறிவுறுத்துவதற்காகவுமேதான்.

6. இறைவனின் அறிவு, காலத்தின் கட்டுகளை கடந்தது. அது காலத்தின் எல்லைகளைக் கடந்தது. இதை ஒரு முஸ்லிம் உண்மையான மனதுடன் நம்புகிறார். அதுபோலவே திட்டமிடுதலில் இறைவனுக்கு இருக்கின்ற ஆற்றலையும், அவைகளை நிறைவேற்றுவதில் அவனுக்கிருக்கின்ற ஆற்றலையும் ஒரு முஸ்லிம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார், நம்புகிறார்.

இறைவன் இந்த உலகத்தைப் பற்றி அக்கறையற்றவனாகவோ, எப்பக்கமும் சாராமல் விலகி நிற்பவனாகவோ இல்லை. தன்னுடைய பரந்த ஆட்சியின் எல்லைக்குள் எல்லாக் காலங்களிலும் ஒழுங்கை நிலைநாட்டவும், தான் படைத்தவற்றின் மீது தனது முழு ஆதிக்கத்தை செலுத்திடவும், இறைவனது அறிவும், ஆற்றலும் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இறைவன் அறிவு நிறைந்தவனாகவும், அன்பு நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அவன் செய்வது என்னவாக இருந்தாலும் அதற்குப் பின்னால் நல்லெண்ணமும், சீரியதொரு நோக்கமும் இருக்க வேண்டும். இந்தக் கருத்து நமது மனதில் ஆழப்பதிந்து விடுமேயானால் இறைவனுடைய செயல்களை அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம். பரிபூரணமாக நம்புவோம். நாம் இறைவனுடைய செயல்கள் அனைத்தையும் முழுமையாக புரிந்துக் கொள்ள தவறிவிட்டாலும், அது நல்லதல்ல என்று நினைத்தாலும் கூட இந்த நம்பிக்கை நம்மில் இடம்பெறும்.

நம்முடைய அறிவு ஓர் வரம்புக்குட்பட்டதாகும். அதோடு நமது சிந்தனைகள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும். நம்முடைய செயல்களில் நமது பலவீனங்கள் இடம்பெறலாம். ஆனால் இறைவனுடைய அறிவு எல்லையற்றது. அவன் உலகமனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுகிறான். ஆதலால் நாம் இறைவனிடத்தில் வலுவான நம்பிக்கை வைக்க வேண்டும். அவன் என்ன செய்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் என்ன செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டதனால் மனிதன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் எல்லாம் விதியின்படி நடக்கட்டும் என் இருந்து விடலாம் என பொருளாகாது. இறைவனுடைய எண்ணத்திற்கும் மனிதனுடைய எண்ணத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரித்துக் காட்டுவதே இங்கே எண்ணம். இயற்கையிலேயே நாம் ஓர் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், நமது சுதந்திரமும், ஆற்றலும் வரையறைக்குட்பட்டதாகவே இருக்கின்றது. நம்மால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. ஆதலால் கருணை நிறைந்த இறைவன் நாம் செய்கின்ற செயல்களுக்கு மட்டுமே நம்மைப் பொறுப்பாக்குகின்றான். நம்மால் செய்ய முடியாத செயல்களுக்கும், இறைவன் தான் செய்கின்ற செயல்களுக்கும் நாம் பொறுப்பல்ல.

இறைவன் நியதிமிக்கவன். ஆதலால் அவன் நமது இயல்புக்கும், நாம் மேற்கொண்டிருக்கும் பொறுப்புகளுக்கும் ஏற்ற ஆற்றலையே நமக்குத் தந்திருக்கின்றான்.

காலத்தின் எல்லைகளைக் கடந்த அறிவு இறைவனிடம் உண்டு. திட்டமிடுவதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் அவன் தனித்த ஆற்றல் மிக்கவன். ஆனால் இவை நாம் நமது சக்திக்குள் திட்டமிடுவதையும், அந்த திட்டங்களை நிறைவேற்றுவதையும் கட்டுப்படுத்த மாட்டா. மாறாக இறைவன் நம்மை சிந்திக்கவும், திட்டமிடவும், அவற்றை நிறைவேற்றவும் அறிவுறுத்துகின்றான். அதுபோலவே நல்லவற்றை தேர்ந்தெடுக்கவும் நம்மை பணிக்கின்றான். ஆனால் நாம் தீட்டும் திட்டங்களை நாம் விரும்பிய வண்ணம் நிறைவேறாமல் போய்விடுமேயானால், அது கண்டு நாம் கலங்க வேண்டாம், நம்மால் இனி எதுவுமே இயலாது என்ற முடிவுக்கும் வரவேண்டாம், நாம் நம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டாம் என இறைவன் அறிவுறுத்துகின்றான்.

ஆனால் நாம் நமது முயற்சிகளை தளராமல் மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். விளைவுகள் நாம் விரும்பிய வண்ணம் அமையாவிட்டால் நாம் அதற்கு பொறுப்பல்ல. ஏனெனில், நமது முயற்சிக்குள் அடங்காதவைகளுக்கு நாம் பொறுப்பல்ல. நமது முயற்சிகளுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்டவைகள் இறைவனுடைய சித்தத்திற்கு உட்பட்டவைகளாகும். இஃதொரு அடிப்படையான நம்பிக்கையாகும். இதனை முஸ்லிம்கள் ‘களா’, ‘கத்ர்’ மீது வைக்கப்படும் நம்பிக்கை என்று கூறுகிறார்கள். இதன் பொருள்:

நடக்க விருப்பவைகள் அனைத்தையும் இறைவனின் அறிவு முன்னரே கணித்து விடுகின்றது. அந்த கணிப்பின்படியே உலகின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடக்கின்றன. (சான்றாக அல்குர்ஆன்: 18:29, 41:46, 53:33-62, 54:49, 65:3, 76:30-31)

7. இறைவனுடைய படைப்பு அர்த்தமுள்ளதாகும். மனிதனுடைய உலகியல் செயல்களுக்கும், உடல் தேவைகளுக்கும் அப்பால் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த நோக்கம் இருக்கின்றது. இவற்றை ஒரு முஸ்லிம் நம்புகின்றார். இறைவனை வணங்குவதே வாழ்க்கையின் நோக்கமாகும். எப்போதும் தனித்திருந்து, இறைவனை தொழுவதிலும், அவனது புகழைப் பாடுவதிலும் மட்டுமே நமது வாழ்க்கையை கழித்திட வேண்டும் என்பதல்ல இதன் பொருள். இறைவனை தொழுவதென்பதன் பொருள்:

அவனை அறிந்து கொள்வது, அவனை நேசிப்பது, அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிவது, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவனது வழிகாட்டுதலை மேற்கொள்ளுவது, நன்மை செய்வது, நல்லனவற்றைச் செய்யத்தூண்டுவது, தீமையை தடுப்பது, இவற்றின் மூலம் இறைவனுடைய நோக்கத்திற்கு உதவியாக இருப்பது, இறைவனிடமும், ஏனைய மனிதர்களிடமும் நீதியுடன் நடப்பது, நமக்கு நாமே நீதியுடன் நடப்பது, இவையே ஆகும்.

இறைவனைத் தொழுவது வாழ்வதற்கேயல்லாமல், வாழ்க்கையை வெறுத்து, உலகத்தை துறந்து காடு நோக்கி ஓடுவதற்கல்ல. சுருங்கச் சொல்லின் இறைவனை வணங்குவதென்பது அவனுடைய தெய்வீகப் பண்புகளை நம்முள் ஊடுருவச் செய்வதென்பதாகும்.

வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உண்டு என்பது உண்மையானால், மனிதன் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பது உண்மையானால், மனிதன் நிச்சயமாக அந்த பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

மனிதன் தான் வாழ்கிறான் என்பதையோ அல்லது தனது உண்மையான பொறுப்பையோ மறுக்க முடியாது. அவன் தான் ஏற்றுள்ள மிகப்பெரிய பொறுப்பை தட்டிக்கழித்திட முடியாது.

இறைவன் மனிதனின் மீது பொறுப்புகளை சுமத்தும்போது, அந்த பொறுப்பினை நிறைவேற்றிட என்னென்ன உதவிகள் தேவையோ அவை அனைத்தையும் அளிக்கின்றான். இறைவன் மனிதனுக்கு தனது வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் வழங்குகின்றான். ஆகவே மனிதன் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இறைவன் மனிதனுக்கு கண்டிப்பாக கட்டளை இடுகின்றான்.

மனிதன் தனது படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறினால், அவன் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இவ்வுலக வாழ்க்கையை தவறாக பயன்படுத்தினால் அவன் இறைவனிடம் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும். (சான்றாக அல்குர்ஆன்: 21:17-18, 51:56-58, 75:37)

8. படைப்புகளில் எல்லாம் மனிதனே சிறந்த படைப்பு என்றும், அவனே உயர்ந்த நிலையில் உள்ளவன் என்றும் ஒரு முஸ்லிம் நம்புகிறார். மனிதனே ஆண்டவனின் படைப்புகளில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார் என்றும் ஒரு முஸ்லிம் நம்புகிறார்.

பகுத்தறிவு, ஆற்றல், ஆன்மீக நாட்டங்கள், சிந்தித்து அதன்படி செயல்படும் திறன் இவை அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதனால் தான் மனிதன் இத்தகைய சிறப்பான கண்ணியத்தைப் பெறுகின்றான். அவனுடைய நிலை உயர உயர அவனுடைய பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவன் பூமியில் இறைவனுடைய பிரதிநிதி என்ற அந்தஸ்தை வகிக்கின்றான். இப்படி இறைவனின் பிரதிநிதியாக பூமியில் நியமிக்கப்பட்டிருக்கின்றவர், நிச்சயமாக சில ஆற்றல்களையும், அதிகாரங்களையும் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும். அதுபோலவே இதற்கு தேவையான தகுதியும், அதற்கே உரிய நேர்மை எனும் உயர்ந்த பண்பும் அவருக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இல்லையேல் இந்த தகுதியையும், நேர்மையையும் தேடிப் பெறுகின்ற ஆற்றலாவது அவருக்கு அளிக்கப்பட வேண்டும். இதுவே இஸ்லாத்தில் மனிதனின் நிலையாகும்.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை ஒரு பழிக்கப்பட்ட, பாவம் சுமத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய ஒரு இனமே என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

மனிதன் கண்ணியமான படைப்புகளில் ஒருவன். மலையத்தனை சாதனைகளை சாதிக்கின்ற ஆற்றல் பெற்ற படைப்புகளில் அவன் ஒருவன். உன்னதமான – உயர்ந்த ஆற்றல்களுக்கு அவன் சொந்தக்காரன். இத்துணை சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஒரு அசாதாரண படைப்பாக மனிதனை கருதுகின்றது இஸ்லாம்!

இறைவன் தனது தூதர்களை மனித இனத்திலிருந்து தான் தேர்ந்தெடுத்தான். இந்த உண்மை ஒன்றே மனிதன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன், திறமை மிக்கவன், எல்லா உயர்ந்த நிலைகளையும் அவனால் அடைய முடியும் என்பதைத் தெளிவாக காட்டும். (சான்றாக அல்குர்ஆன்: 2:30-34, 6:165, 7:11, 17:70-72, 90-95)

9. பிறக்கும்போது ஒவ்வொருவனும் முஸ்லிமாகவே பிறக்கின்றான் என்பதை ஒரு முஸ்லிம் பூரணமாக நம்புகிறார். இதன் பொருள்: மனிதனின் பிறப்பு, இறைவனுடைய விருப்பம், திட்டம், கட்டளை இவற்றின் படியேதான் நிகழ்கின்றது என்பதாகும். மனிதன் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள தேவையான வாய்ப்புக்கள் அவனுக்கு வழங்கப்பட்டால், பிறப்பாலே மனிதன் தன்னுள் பெற்றிருக்கும் ஆற்றல்களை வளர்ப்பதற்கு தடங்கலின்றி சுதந்திரமாக விடப்பட்டால் அவன் தன்னை ஒரு நல்ல முஸ்லிமாக ஆக்கிக்கொள்ள முடியும். ஏனெனில் அவனுக்கு ஆன்மீக ஆற்றல்களும், அறிவின் அடிப்படைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாம் மக்களின் மத்தியில் சரியான முறையில் எடுத்து வைக்கப்பட்டால் அதனை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் நல்ல ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ விரும்புகின்றவர்கள், தங்களுடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்திட விரும்புகின்றவர்கள், தங்களுள் எழும் இயற்கையான ஆசைகளை நிறைவேற்றிட விழைகின்றவர்கள், உருப்படியானதொரு வாழ்க்கையை நடத்திட முனைகின்றவர்கள் இவர்களுக்கு அது வழிகாட்டும் நிறைவான இறைத்திட்டமாகும்.

மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை, சமுதாயத்தின் கூட்டமைப்பு, தேசியத்தின் ஒருங்கிணைந்த வாழ்க்கை, அனைத்துலக மக்களின் ஒருங்கிணைந்த வாழ்க்கை இவை அனைத்திற்கும் நிறைவான வழிகாட்டும் தெய்வீகத் திட்டமுமாகும். ஏனெனில், மனிதனிடம் காணப்படும் இயல்புகளை படைத்தவனும், மனித இயல்புக்கு மிகவும் சிறந்தது எது என்பதை நன்றாக அறிந்தவனுமாகிய இறைவனின் வழிகாட்டுதலே இஸ்லாம்!. அது உலகம் அனைத்திற்கும் வழங்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். (சான்றாக அல்குர்ஆன்: 30:30. 64: 1-3, 82:68)

10. மனிதன் பிறக்கும் போதே பாவத்தோடு பிறந்தவனல்ல. அவன் பாவமற்ற ஒரு நிலையிலேயே பிறக்கின்றான். அதுபோலவே அவன் பரம்பரை புண்ணியங்களுக்கு உரிமை கொண்டாடாத நிலையிலுமே பிறக்கின்றான் என்று ஒரு முஸ்லிம் நம்புகிறார். மனிதன் பிறக்கும்போது எதுவும் எழுதப்படாத ஒரு புத்தகம் போன்றவன். மனிதனுடைய வளர்ச்சி இயல்பானதாகவும், அவனது அறிவு நிலையானதாகவும் இருந்தால், அவன் பருவம் அடைந்தபின், தான் செய்யும் செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் அவன் கணக்கு காட்டவேண்டிய பொறுப்புடையவன்,

மனிதன் தான் பாவம் செய்யாதவரையில் பாவத்தின் பிடியிலிருந்து சுதந்திரமுடையவனாக இருக்கின்றான். மட்டுமல்லாமல், தான் தீட்டும் திட்டங்களின்படி தானே பொறுப்பேற்கின்ற அளவில் தான் சுதந்திரமாக காரியமாற்றிடவும் சுதந்திரமுடையவன். இதுதான் மனிதனுக்கிருக்கும் ‘இரட்டை சுதந்திரம்’ என்பதாகும். அதாவது:

பாவத்திலிருந்து சுதந்திரம்.

பயனுள்ள காரியங்களை செய்வதற்கான சுதந்திரம்.

இந்த இரண்டு சுதந்திரங்களும் மனிதர்கள் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்தவர்கள், (ஆகவே இனியொன்றும் செய்வதற்கில்லை) என்ற மன உளைச்சலை மனிதனுடைய இதயத்திலிருந்து அகற்றி விடுகின்றது. இது மனிதனுடைய ஆன்மாவையும், மனதையும் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்தவன் என்ற கோட்பாட்டின் பிடியிலிருந்து விடுவிக்கின்றது.

இஸ்லாம் மனிதனுக்கு வழங்கும் சுதந்திரம், இறைவனின் நியதி, மனிதன் தான் செய்கின்ற செயல்களுக்கு தானே பொறுப்பாவான் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தது.

ஒவ்வொருவரும் தான் செய்யும் பாவத்தை மட்டும்தான் சுமக்க வேண்டும். தான் செய்யும் பாவத்தை தனே சுமந்தாக வேண்டும். தனது செயல்களுக்கு தானே பொறுப்பு. ஏனெனில் ஒருவர் செய்யும் பாவத்திற்கு இன்னொருவர் கழுவாய் தேட முடியாது. ஆகவே ஆதம் (அலை) அவர்கள்  முதல் பாவத்தை செய்திருந்தார்கள் என்றால், அந்த பாவத்திற்கு கழுவாய் தேடவேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும் என்பதே உண்மையான முஸ்லிமின் நம்பிக்கை. ஆதம் (அலை) அவர்களை இறைவன் மன்னிக்க இயலாதவனாக இருந்தான் என்றோ, ஆதம் (அலை) அவர்களுடைய பாவத்திற்கு இன்னொருவர் பரிகாரம் செய்யட்டும் என்று விட்டுவிட்டான் என்றோ, அல்லது ஆதம் (அலை) அவர்கள் தான் செய்த பாவத்தை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடவில்லை என்றோ, அல்லது அவர்கள் மன்னிப்புக் கோரியும் அது வழங்கப்படவில்லை என்ரோ கொள்ள முடியாது. இவ்வாறு நிச்சயமாக நடந்திருக்க முடியாது.

ஏனெனில், இது இறைவன் நம் பால் கொண்டிருக்கும் கருணைக்கும், அவனது நீதிக்கும், அவன் மன்னிப்பவன் என்ர உயர்ந்த பண்பிற்கும், மன்னிக்கும் மாண்பு அவனிடம் உண்டு என்று சொல்லுவதற்கும் முரண்பட்ட முறையில் அமைந்து விடும். அதோடு இது பகுத்தறிவுக்கு முற்றிலும் மாறானதாகும். அதோடு இறைவன் உண்டு என்ற கருத்தை மறுப்பதுமாகும். (சான்றாக அல்குர்ஆன்: 41:46, 45:15, 53:31-42, 74:38)

ஏனையோரைப் போலவே ஆதம் (அலை) அவர்களும் தாம் செய்த தவறை உணர்ந்து அதனை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடினார்கள் என்று ஒரு முஸ்லிம் நம்புகிறார். இந்த நம்பிக்கை, பகுத்தறிவையும், திருமறையின் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த அடிப்படையிலேயே மன்னிக்கும் மாண்பு மிக்கோனும், கருணை நிறைந்தவனுமான இறைவன் ஆதம் (அலை) அவர்களை மன்னித்தான் என்று ஒரு முஸ்லிம் நம்புகிறார். (சான்றாக அல்குர்ஆன்: 2:35-37, 20:117-122)

ஆகையால், ஆதம் (அலை) அவர்களும், இன்னும் மனித இனமும் தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காக (ஏசுநாதர்) ஈஸா (அலை) வரும்வரையில் காத்திருக்க வேண்டியதிருந்தது என்பதையும், (ஏசுநாதர்) ஈஸா (அலை) வரும்வரை ஆதம் (அலை) அவர்களும், ஏனைய மனிதர்களும் பழிக்கப்பட்ட பாவிகளாக, மன்னிப்புக் கிடைக்காதவர்களாக இருந்தார்கள் என்ற கோட்பாட்டையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் விளைவாக, மனித இனத்தின் பாவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக துடைத்தெறிவதற்காக (ஏசுநாதர்) ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் இறந்தார்கள் என்ற கதையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

(ஏசுநாதர்) ஈஸா (அலை) அவர்களுடைய பகைவர்களால், சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் நம்புவதில்லை. ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையானது இறைவனின் கருணைக்கும், நீதிக்கும் மட்டுமல்ல, மனிதனுடைய சிந்தனைக்கும், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கண்ணியத்திற்கும் மாறானதாகும். இதையும் இதுபோன்ற கோட்பாடுகளையும் முஸ்லிம்கள் நம்பவில்லை என்பது, அவர்கள் ஈஸா (அலை) அவர்கள்பால் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் சற்றும் குறைத்து விடாது. அதுபோலவே இஸ்லாத்தில் ஈஸா (அலை) அவர்களுக்கு தரப்பட்டுள்ள உயர்ந்த நிலையை சற்றும் தாழ்த்தி விடாது.

அதுபோலவே ஈஸா (அலை) அவர்கள் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு இறைத்தூதர் என்று அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக மேலே சொன்ன சில கோட்பாடுகளை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் ஏசுநாதரை மிகுந்த மதிப்புடனும், உயர்ந்த மரியாதையுடனும் ஏற்றுக் கொள்கிறார்கள். மட்டுமல்லாமல், ஏசுநாதர் அவர்களின் உண்மையான தூதை இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆகவே ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்றால், அவர் பாகுபாடு எதுவுமின்றி, இறைவனின் தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டு, அவர்களை மதிக்கவும் வேண்டும்.

இஸ்லாத்தில் இறைவனின் தூதர் ஈஸா (அலை) (ஏசுநாதர்) அவர்களின் நிலை என்ன என்பதை பிந்தியதொரு பகுதியில் விரிவாக தந்துள்ளோம்.

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.