அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்

இஸ்லாம் என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்குப் பல பொருள்களுண்டு. அவற்றில் சில சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்படிதல் ஆகியவை ஆகும். மதம் என்ற கண்ணோட்டத்தில் இஸ்லாம் என்ற சொல்லுக்கு இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும், அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலப்பொருளுக்கும், மதம் என்ற நோக்கில் அதற்கு இருக்கும் பொருளுக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இறைவனின் ஆணைக்கு அடிபணிதல், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படிதல் இவற்றின் மூலமே உண்மையான அமைதியை அடைய முடியும். நிலையான தூய்மையான, புனித நிலையை எய்த முடியும்.

சில மதத்தவர்கள் இஸ்லாத்தை ’முஹம்மதியம்’ என்றும், அதனை ஏற்றுக் கொண்டவர்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இப்படித் தங்களை அழைப்பதை நிராகரிப்பதோடு அவற்றை எதிர்க்கவும் செய்கிறார்கள். தங்களது மார்க்கத்தை ’முஹம்மதியம்’ என்றும் தங்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் பிரித்துக் கூறுவது பல தவறான கருத்துக்களை வளர்க்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறு தவறாக பெயரிடுவது, இஸ்லாம் என்பது மரணத்திற்குட்பட்ட வாழ்க்கையையுடைய முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது என்ற தவறான கொள்கையைத் தரும். இன்னும் ஏனைய ‘இஸம்’களான யூதாயிசம், (யூதமதம்) ஹிந்து இஸம், மார்க்சிஸம் போன்று இன்னொரு ‘இஸமே’ இஸ்லாம் என்றும் ஆகிவிடும். இந்த தவறான பெயர் ஏற்படுத்தக்கூடிய பிறிதொரு தவறான கருத்து என்னவெனில், முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தொழுபவர்கள் என்பதாகும். அதாவது கிருஸ்தவர்கள் எந்த முறையில் ஏசுநாதரிடம் விசுவாசம் கொண்டிருக்கிறார்களோ அதே முறையில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான கருத்தை தந்துவிடும். முஹம்மதியம் என்ற சொல்லானது இஸ்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களால் தான் நிறுவப்பட்டது என்றும், ஆகையால் நிறுவியரின் பெயரால் அது அழைக்கப்படுகின்றது என்றும் தவறான பொருளை தந்துவிடும். இப்படி பொருள் கொள்வது பெரும் தவறுகளாகும். மிகத் தவறான எண்ணங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவையுமாகும். இஸ்லாம் என்பது இன்னொரு ‘இஸம்’ அல்ல. முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்குவதுமில்லை. கிருஸ்தவர்கள், யூதர்கள், இந்துக்கள், மார்க்சிஸ்ட்டுகள் ஆகியோர் தங்களது தலைவர்களை பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பார்ப்பதுமில்லை.

(முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்த போதிலும் அவர்களும் மரணத்திற்கு உட்பட்ட மனிதராகவே இருந்தார்கள். மரணமடையக் கூடியவர்களின் பெயரால் இஸ்லாம் அழைக்கப்படவில்லை. மரணம் அடையக் கூடியவர்களால் இஸ்லாம் தோற்றுவிக்கப்படவுமில்லை என்பதை வலியுறுத்தவே இங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.)

முஸ்லிம்கள் இறைவனை மட்டுமே தொழுகிறார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் போதனைகளை உலக மக்களுக்கு எடுத்து சொல்லிடவும், அந்த இறைவனின் போதனைகளின்படி ஒரு வாழ்க்கையை நடத்திக்காட்டி ஒரு முன்மாதிரியாக அமைவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதரே ஆவார்கள். இறை அச்சத்திலும், இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்து காட்டுவதிலும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவனாக இருக்க முடியும் என்பதற்கும், நற்குணங்கள், நற்பண்புகள் இவற்றில் மனிதன் எத்துணை உன்னதமான நிலைக்கு உயரமுடியும் என்பதற்கும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

இஸ்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களால் நிறுவப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பவில்லை. சமய வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில் இஸ்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றே முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

இஸ்லாத்தை நிறுவியது இறைவனைத் தவிர வேறு எவருமில்லை. இஸ்லாம் நிறுவப்பட்ட காலம் ஆதம் (அலை) அவர்களின் காலமாகும். உலகம் தோன்றிய நாள் முதல் இஸ்லாம் ஏதேனும் ஒரு வடிவில் இருந்து கொண்டே வருகின்றது. அது இந்த உலகம் உள்ளவரை தொடர்ந்து இருந்து வரும். ஆகவே இந்த சமயத்தின் உண்மையான பெயர் ‘இஸ்லாம்’ என்பதாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

இறைவனின் ஆணைக்கு கீழ்படியுங்கள். அவனது சட்டத்திற்கு கீழ்படியுங்கள் என்று சொல்லும்போது, இது தனிமனிதனின் சுதந்திரத்தைப் பறித்து விடுகின்றது என்றும், எல்லாம் விதியின் படி நடக்கட்டும் என்று இருந்து விடுவதென்றும் சிலர் தவறான பொருள் கொண்டு விடுகின்றனர். ஆனால் உண்மை இதுவல்ல. அவ்வாறு நினைப்பவர்கள் இஸ்லாத்தையும், இஸ்லாம் வழங்கும் இறைக் கொள்கையையும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். இஸ்லாம் வழங்கும் இறைக்கொள்கை அந்த இறைவனை அருளாளன், கருணையுடையவன், அன்புடையவன், மனித நலத்தில் மிக அக்கறைக் கொண்டவன், ஞானம் நிறைந்தவன், அவனுடைய படைப்புகளை பாதுகாப்பவன் என்றெல்லாம் விவரிக்கின்றது.

அந்த இறைவனுடைய எண்ணமும் சிந்தனையும் நன்மை நிறைந்ததாகும். இறைவன் விதிக்கின்ற சட்டங்கள் அனைத்தும் மனித இனத்தின் நன்மைக்காகவும் மேன்மைக்காகவுமே இருக்கும்.

நாகரீகமடைந்த மக்கள் தங்களது நாட்டில் இருக்கும் சட்டங்களுக்கு இணங்கி நடக்கின்றபோது அவர்கள் அந்த நாட்டின் நல்ல குடிமக்களாகவும், சமுதாயத்தில் நேர்மையான உறுப்பினர்களாகவும் கருதப்படுகின்றார்கள்.

தங்களது நாட்டு சட்டங்களுக்குப் பணிந்து வாழ்வதனால் அவர்கள் தங்களது சுதந்திரத்தை இழந்து விட்டதாக பொறுப்புள்ள மக்கள் யாரும் சொல்ல மாட்டார்கள்.

தங்களது நாட்டில் நடமாடும் சட்டத்திற்கு கீழ்படிவதனால் அம்மக்கள் தங்களை விதி வழி நடத்தட்டும் என்று இருந்து விட்டவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் உதவியற்றவர்கள் என்று எவரும் சொல்வதில்லை. அது போலத்தான் இறைவனின் சட்டத்திற்கு கீழ்படிகின்றவர்கள் நல்லவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் திகழ்வார்கள். தங்களது உரிமைகளுக்குப் பாதுகாப்புப் பெறுகிறார்கள். அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கிறார்கள். அதோடு பொறுப்பான, ஆக்கப்பூர்வமான, முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆகையால் இறைவனின் வழிகாட்டுதல்படி வாழ்வது, தனிமனிதனின் சுதந்திரத்தை பறிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யாது. மாறாக அது நிலையான, தாராளமான சுதந்திரத்தை தருகின்றது. அது மூடநம்பிக்கைகளில் இருந்து மனதை விடுவித்து, அதனை உண்மையினால் நிறப்புகின்றது. அது பாவத்திலிருந்து ஆன்மாவை விடுவித்து அதனை நன்மையோடும், தூய்மையோடும் இயங்கச் செய்கின்றது. அது மனிதனின் உள்ளத்தை தற்பெருமை, பேராசை, பொறாமை, மன உளைச்சல், அச்சம், பாதுகாப்பின்மை இவற்றிலிருந்து விடுவிக்கின்றது.

அது பொய் தெய்வங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையிலிருந்தும், கீழான ஆசைகளிலிருந்தும் மனிதனை விடுவித்து அவனுக்கு நன்மை மற்றும் சீர்மையின் அழகிய வாயில்களை திறந்து விடுகின்றது.

இறைவனுடைய சட்டத்திற்கு கீழ்படிவது அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வகைச் செய்வதாகும். அது ஒருபுறம் மனிதர்களுக்கிடையே அமைதியை நிலைக்கச் செய்கின்றது. மறுபுறம் மனித சமுதாயத்திற்கும் இறைவனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. அது இயற்கையின் மூலக்கூறுகளுக்கிடையே ஒரு இசைவை ஏற்படுத்துகின்றது.

இஸ்லாமிய கொள்கைகளின்படி உலகிலுள்ள படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் சட்டங்களின்படியே இயங்குகின்றன. இதற்கு மனிதன் மட்டும்தான் விதிவிலக்கு. இதன் பொருள் உலகிலுள்ளவைகள் அனைத்தும் இறைவனின் சட்டப்படியே இயங்குகின்றன. இறைவனுக்கு கீழ்படிந்த நிலையிலேயே இருக்கின்றன என்பதாகும். அதாவது இவைகள் எல்லாம் இஸ்லாம் என்ற நிலையில் தான் இருக்கின்றன. இறைவனுக்கு கீழ்படிந்த நிலையில் இருப்பதனால் அவைகள் அனைத்தும் ‘முஸ்லிம்’களே!

இந்த உலகில் இருப்பவைகளுக்கு தன்னிச்சையாக இயங்கும் சுதந்திரம் கிடையாது. அவைகளுக்கு இறைச் சட்டத்திற்கு அடிபணிவதன்றி வேறு வழியில்லை. அவைகள் எல்லாம் இஸ்லாமாக அதாவது கீழ்படிதல் என்ற நிலையில் தான் இருக்கின்றன.

மனிதனுக்கு மட்டுமே நுண்ணறிவும், தேர்ந்து எடுக்கும் ஆற்றலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மனிதன் பெற்றிருப்பதால் தான் இறைவனின் ஆணைக்கு அடிபணியுமாறும், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படியுமாறும் அவன் அழைக்கப்பட்டிருக்கின்றான். இறைவனின் சட்டத்திற்கு பணிகின்ற போக்கினை மனிதன் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது அவன் இயற்கையோடு ஒத்துப்போய் விடுகின்றான். ஏனெனில் இயற்கையின் எல்லா மூலக்கூறுகளும் அந்த இறைவனுக்கே கீழ்படிந்து இயங்குகின்றன. இதனால் மனிதன் உண்மை நிலையோடும் பிரபஞ்சத்தின் மற்ற மூலக்கூறுகள் அனைத்துடனும் இணைந்து போகின்ற நிலையை அடைகின்றான்.

மனிதன் இறைவனுக்கு கீழ்படியாமல் நடக்க துணிவானேயானால் அவன் நேரிய பாதையிலிருந்து விலகியவனாகவும், உண்மை நிலைக்கு மாறுபட்டவனாகவும் ஆகிவிடுகின்றான். அதோடு அவன் சட்டம் வழங்குபவனான இறைவனின் அதிருப்தியோடு, தண்டனைக்கும் ஆளாகி விடுகின்றான்.

இஸ்லாம் என்பது இறைவனுடைய ஆணைகளுக்கு அடிபணிதல் என்றும், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படிதல் என்றும் பொருள். இதுவே இறைவனின் தூதர்கள் கொண்டு வந்த செய்திகளின் சாரமாகும். ஆகவேதான் ஒரு முஸ்லிம் பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முந்திய தீர்க்கதரிசிகள் அனைவரையும் ஏற்றுக் கொள்கின்றான். எல்லா இறைத் தூதர்களும் – அவர்களை பின்பற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்று அவன் நம்புகின்றான். அதுவே உலகின் உண்மையான ஒரே இறைமார்க்கமாகும். (சான்றாக திருக்குர்ஆன்: 2:128-140, 3:78-85, 17:42-44, 31:22, 42:13)

இந்த விவாதத்தை முடிக்கும் முகமாக டிசம்பர் 4, 1972. OBSERVER DESPATCH O.D.OF UTICA என்ற பத்திரிக்கையில் தோன்றிய எனது விளக்கத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இஸ்லாம் எந்த அளவிற்கு திரித்துக் கூறப்படுகின்றது என்பதையும், குழப்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் இந்த விளக்கம் விளக்கிக் காட்டும். மேலே குறிப்பிட்ட பத்திரிக்கையில் நவம்பர் 25-ஆம் தேதி வெளியான செய்தி ஒன்று மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்ற விதத்தில் அமைந்திருக்கின்றது. இந்தச் செய்தி மனசாட்சியையும், நல்லெண்ணமும் கொண்டுள்ள மக்கள் அனைவரும் தங்களது ஒழுக்க நெறியில் நிமிர்ந்து நிற்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றது.

இஸ்ராயில்களால் ஆக்கிரமிக்கப்பட்ட  ஜோர்டானிலிருந்து மார்கஸ் எலியாசன் என்பவர் விடுத்துள்ள செய்தியில் ‘முஸ்லிம்கள் ஆபிரகாமை இப்ராஹீம் என்று வணங்குகிறார்கள்……..’ எனக் கூறியிருக்கிறார்.

புத்தம்புதிய அச்சில் அச்சடிக்கப்பட்டு விஷயம் அறிந்த வட்டாரங்கள் என்று கருதப்படும் வட்டாரங்களிலிருந்து இப்படியொரு செய்தி பொதுமக்களுக்குத் தரப்படுவது, நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

நாம் வாழும் இன்றைய உலகில், இந்த யுகத்தில், இந்த காலகட்டத்திலும் கூட முஸ்லிம்கள் இப்ராஹீமை வணங்குகிறார்கள் என்று கூறுவோரும் இருக்கின்றார்களே என்பதை அறிந்திட வியப்பாகவே இருக்கின்றது.

இதற்கு முன்னர் மேலைநாட்டவர்கள் முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்குகின்றார்கள் என்றும், அவர்களுடைய மதம் முஹம்மதியம் என்றும், அதனை பின்பற்றுபவர்கள் முஹம்மதியர்கள் என்றும் எண்ணி அதனையே பரப்பினார்கள். இதனை அவர்கள் பல நூற்றாண்டுகளாக செய்து வந்தனர். இந்த மேலைநாட்டவர்களுக்கு பிற்காலத்தில் ‘முஸ்லிம்கள் அல்லாஹ் என்றொரு தெய்வத்தை தான் வணங்குகின்றார்கள்’ என்று எவ்வாறோ தெரிய வந்தது.

இப்போது முஸ்லிம்கள் ஆபிரகாமை இப்ராஹீம் என்று வணங்குகிறார்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு தோன்றி இருக்கின்றது.

உண்மை என்னவெனில், முஸ்லிம்கள் இப்ராஹீமையோ அல்லது முஹம்மத் (ஸல்) அவர்களையோ அல்லது வேறெந்த மானிட பிறப்பையோ வணங்குவதில்லை, வணங்கியதும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களைப்போல் மரணத்திற்குட்பட்ட ஒரு மனிதான் தான் என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கை. மனிதர்களில் ஒருவர் இறைவனின் தூதர் என்ற நிலைக்கு உயர முடியும் என்பது மனித இனத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரும் அருட்கொடையாகும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர்கள் என்பதும், இறைவன் மனித இனத்திற்கு அளித்த நிலையான மார்க்கத்திற்கு மீண்டும் வலுவூட்டி, அதனை நிலை நிறுத்தியவர்கள் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர்கள் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். ஆனால் அவரைப்போல் பல இறைத்தூதர்கள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். இந்த இறைத்தூதர்கள் அனைவருக்கும் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமேயாகும். இந்த மார்க்கமே இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், தாவூத், மூஸா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாவதாக) ஆகிய அனைத்து தூதர்களுக்கும் வழங்கப்பட்டது. தூதர்கள் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு மக்களுக்காக அனுப்பப்பட்டார்கள். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த இறைத்தூதர்கள் அனைவரையும் எந்த பாகுபாடுமின்றி முஸ்லிம்கள் நம்புகின்றார்கள் என்பதாகும்.

தாங்கள் கொண்டிருக்கும் பரந்த மனப்பான்மையின் காரணமாக தங்களை ‘முஹம்மதியர்கள்’ என்றும், தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தை ‘முஹம்மதியம்’ என்றும் அழைப்பதை முஸ்லிம்கள் வெறுக்கின்றார்கள். முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் வலுவான அடிப்படைகளை கொண்டவைகளாகும்.

முஸ்லிம்கள் தங்களை இனம் அல்லது ஜாதி அடிப்படையிலான குழுக்களாகவோ, ஏகபோகவாதிகளாகவோ தங்களைக் கருதிக் கொள்வதில்லை. அவர்கள் பின்பற்றி வாழும் மார்க்கம் எந்த மானிடப்பிறவின் பெயராலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெயராலோ அழைக்கப்படுவதில்லை. அது இந்த எல்லைகளை எல்லாம் கடந்து நிற்பது, நிலையானது.

இந்த மதத்தின் – மார்க்கத்தின் சரியான பெயர் இஸ்லாம் என்பதாகும்.

அதனைப் பின்பற்றுபவர்களை முஸ்லிம்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்.

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சமய அடிப்படையில் இறைவனின் ஆணைக்கு அடிபணிதல், இறைவனின் சட்டத்திற்கு கீழ்படிதல் என்று பொருள்.

இறைவன் கருணை நிறைந்தவன், உயர்ந்தவன், சிறந்தவன், அவன் வழங்கும் சட்டம் நன்மை பயக்கக்கூடியது, நியாயமானது என்று குர்ஆன் கூறுகிறது. ஆகவே இவ்வாறு இறைவனின் சட்டத்திற்கு அடிபணிகிற மனிதர்கள், அவனுடைய வழிகாட்டுதலின்படி வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் முஸ்லிம்களே! இந்த அடிப்படையிலேதான் குர்ஆன் இப்ராஹீம்(அலை) அவர்களையும் இன்னும் இறைவனின் அனைத்து தூதர்களையும் முஸ்லிம்கள் என்று அழைக்கின்றது. இதே அடிப்படையில் தான் அவர்கள் பின்பற்றிய சமயங்கள் அனைத்திற்கும் இஸ்லாம் என்ற ஒரே பெயரைச் சூட்டுகிறது.

ஆகையால் முஸ்லிம் என்பவர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுபவர் அல்ல. அவர் இப்ராஹீமையும், மூஸாவையும், ஈஸாவையும் மற்றுமுள்ள இறைவனின் தூதர்களையும் கூட பின்பற்றுபவர் ஆவார்.

இறுதியாக, இஸ்லாத்தில் ’அல்லாஹ்’ என்ற சொல்லின் எளிமையான ஆனால் அழுத்தமான பொருள் என்னவெனில் இறைவன் ஒருவனே, அவன் நிலையானவன், உலகங்கள் அனைத்தையும் படைத்தவன் அவனே, அவனே தலைவர்களுக்கெல்லாம் தலைவன், ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன் என்பதேயாம்.

இஸ்லாத்தில் மன்னிப்பே இல்லாத பாவம் ஒன்று உண்டென்றால் அது இறைவனுக்கு இணை வைப்பதாகும். முஸ்லிம்களின் மிகப்பொதுவான அன்றாட வேண்டுதல் இதுதான்.

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.