அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)

இறைவனைப் பற்றிய அறிவும், அவன் மீது வைக்கப்படும் நம்பிக்கையுமே இஸ்லாத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இஃது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே இதனை தெளிவுபடுத்திட முழுமையானதொரு விவாதம் தேவைப்படுகின்றது. இங்கே சில எளிய எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. நாம் விவாதத்திற்காக எடுத்துக்கொண்ட பொருள்பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். இவர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அறிவியலின் பெயரால் அல்லது அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லாத காரணத்தால் இறைவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களை ’அறிஞர்கள்’ என்று கூறிக் கொண்டாலும் அவர்களது மனப்பான்மை ஒரு விதமான அமைதியின்மையையே பிரதிபலிக்கின்றது. என்னுடைய கவலையெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியல்ல. அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதுதான்.

பின்வரும் விளக்கங்கள் பெரியவர்களுக்காக அல்லாமல் பெரும்பாலும் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டது போல தோன்றுவதற்கான காரணத்தை இது விளக்கும். இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை முஸ்லிம் இளைஞர்களுக்கு விளக்கிடுவதே இங்கே குறிக்கோள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மதத்திற்காக வக்காலத்து வாங்குகிற முஸ்லிமல்லாதவர்கள், இவர்களிடையே இஸ்லாத்தின் இறைக் கருத்துப் பற்றி தவறான கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. இவர்களுக்கும் இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை எடுத்துச் சொல்வதும் இந்த விவாதத்தின் இன்னொரு நோக்கமாகும்.

இவைகளையெல்லாம் மனதில் கொண்டுதான் சில எளிமையான மிகச் சாதாரணமான விளக்கங்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. சில விளக்கங்களின் எளிமை வயது வந்தவர்களிடம் கூட சில புதிய சிந்தனைகளைத் தூண்டக்கூடும். இது சுவை நிறைந்ததாகவும், நிறைந்த பலனைத் தருவதாகவும் இருக்கும். இதுவே இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நாம் நம்மை சுற்றியிருக்கின்றவைகளை பார்க்கும்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்பத்தலைவர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநகருக்கும் ஒரு மேயர் இருக்கின்றார்; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்கின்றார்; ஓவ்வொரு  நாட்டிற்கும் ஒரு பிரதமர்-தலைவர் இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளரின் தயாரிப்பு, ஒவ்வொரு அழகிய கலையும் ஒரு கலைஞரின் படைப்பு என்பதை நாம் ஐயமற அறிவோம். இவையெல்லாம் மிகத் தெளிவாக இருந்தபோதிலும் உலகிலுள்ள பெரும் ரகசியங்களைப் பற்றிய மனிதனின் அறிவுப் பசியை இவைகளால் திருப்திப்படுத்த முடியவில்லை.

அழகு கலையும், அழகையும் அள்ளித் தெளிக்கும் கவர்ச்சியான காட்சிகள், இயற்கையின் அற்புதம், ஆகாயத்தின் முடிவற்ற அடிவானம், ஆகாயத்தின் நீண்டு விரிந்த பரப்பு, மிக ஒழுங்கான முறையில் இரவு, பகல் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும் நுணுக்கம், சூரியன், சந்திரன், இதர தாரகைகள் ஆகியவற்றின் போக்கு, உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் உலகம், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் மனித வளர்ச்சியின் தொடர்ச்சி இவற்றைப் பார்த்து மனிதன் அடிக்கடி ஆச்சரியப்படுகின்றான். நாம் பார்த்து அனுபவித்து வருகின்ற இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வருபவன் யார் என்பதை அவன் அறிந்து கொள்ள விரும்புகின்றான்.

நாம் காணும் இப்பிரமாண்டமான பிரபஞ்சத்திற்கு ஒரு விளக்கம் காண முடியுமா? ஜீவிதத்தின் ரகசியத்திற்கு நம்பத்தகுந்த விளக்கங்கள் ஏதேனும் இருக்கின்றதா? பொறுப்புள்ள ஒரு தலைவரின்றி எந்த குடும்பமும் சரிவர இயங்க முடியாது, சிறியதொரு நிர்வாகமின்றி எந்த மாநகரமும் செழிப்பாக இருக்க முடியாது, ஏதாவது ஒரு தலைவர் இல்லாமல் எந்த நாடும் இயங்க முடியாது, இவைகளையெல்லாம் நாம் உணர்ந்திருக்கின்றோம். எந்த ஒரு பொருளும் தானே தோன்ற முடியாது என்பதையும் கூட நாம் உணர்கின்றோம்.

இந்த உலகம் மிக ஒழுங்கான முறையில் இயங்கி வருகின்றது. இது பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இவற்றையும் நாம் அறிகிறோம். இவை அனைத்தும் தற்செயலானவையென்றோ, கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாதவையென்றோ நாம் சொல்ல முடியுமா? மனிதன் வாழ்வதும், உலகம் இயங்குவதும் வெறும் யதேச்சையாக நிகழ்ந்தவைகள்தானா?

மனிதன் தோன்றியது தற்செயலானது அல்லது யதேச்சையானது என்று கொண்டால், மனிதனது வாழ்க்கை முழுவதும் யதேச்சையான ஒன்றாகவும், அர்த்தமற்ற ஒன்றாகவும் ஆகிவிடும். ஆனால் அறிவுள்ள மனிதர் யாரும் தான் வாழும் வாழ்க்கையை அர்த்தமற்றது என கூற மாட்டார்.

பகுத்தறிவு படைத்த மனிதர் எவரும் தங்களது வாழ்க்கையை சூழ்நிலைகள் முடிவு செய்யட்டும் என்றும் விட்டுவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு மனிதரும் எந்த அளவுக்கு தங்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிட முடியுமோ அந்த அளவிற்கு அர்த்தமுள்ளதாக்கிட முயல்வார்கள். அதோடு ஏதாவதொரு கொள்கையை தனது வாழ்க்கைக்கு வழிகாட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்.

ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நாடும் தாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடுகின்றன. கவனமாகத் தீட்டப்பட்ட ஒவ்வொரு திட்டமும் விரும்பிய சில விளைவுகளை உண்டாக்கவே செய்கின்றன. உண்மை என்னவென்றால், ஏதாவது ஒருவகையான திட்டத்தில் மனிதன் ஈடுபடுகின்றான். அதோடு அவன் நல்லதொரு திட்டத்தின் நன்மைகளைப் புரிந்து கொள்ளவும் செய்கின்றான்.

இருப்பினும் மனிதன் இம்மாபெரும் உலகின் ஒரு சிறு பகுதியாகவே இருக்கின்றான். மனிதன் திட்டமிட முடியும் என்றால், அத்திட்டத்தின் நன்மைகளை புரிந்து கொள்ள முடியுமென்றால், அவனுடைய இந்த உலக வாழ்க்கையும், இந்த உலகம் இருந்து வருவதும் ஒரு திட்டமிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது நமது உலக வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு திட்டமிடும் சக்தி உண்டு என்பதும், உலகில் இருப்பவைகளை தோன்றச் செய்து அவற்றை ஒரே சீரான முறையில் இயங்கச் செய்யும் ஒரு தனிதன்மை வாய்ந்த ’சக்தி’ உண்டு என்பதுமே இதன் பொருளாகும்.

இந்த உலகில் நாம் காணும் அற்புதமான காட்சிகளும், வாழ்கையின் இரகசியங்களும் தானாகவோ அல்லது தற்செயலினாலோ உண்டானவை என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியவையாகும்.

ஆகவே ஒவ்வொன்றையும் ஒரு ஒழுங்கு முறையில் வைக்கின்ற மாபெரும் (சக்தி) ஆற்றல் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

அழகிய இயற்கையின் கவர்ச்சிகரமான கலைகளைப் படைக்கின்ற- இன்னும் ஒரு சிறந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு பொருளையும் படைத்து வைத்திருக்கின்ற பெரும் கலைஞன் ஒருவன் இருந்தே ஆக வேண்டும்.

இந்த கலைஞன்- இந்த சக்தி- இந்த ஆற்றல் எல்லா சக்திகளையும் விட வலிமையானதாகும். இந்த கலைஞன் எல்லா கலைஞர்களையும் விட மிகப் பெரியவன். உண்மையான நம்பிக்கையாளர்களும், ஆழ்ந்த சிந்தனையுடையோரும், அறிஞர்களும் இந்தக் கலைஞனை தெரிந்து கொண்டு அவனை அல்லாஹ் என்றோ அல்லது இறைவன் என்றோ அழைக்கின்றார்கள். ஏனெனில் அவன் இந்த உலகத்தைப் படைத்தவனும், தலைமைச் சிற்பியும் ஆவான். மேலும் உயிரினங்களைப் படைத்தவனும், உலகிலுள்ள பொருள்கள் அனைத்தையும் வழங்கியவனும் அவனே. அவன் ஒரு மனிதன் அல்ல. ஏனெனில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் படைக்க முடியாது. அவன் ஒரு விலங்குமல்ல. ஒரு தாவரமும் அல்ல. அவன் ஒரு விக்கிரகமும் அல்ல. ஏனெனில் இவைகளில் எதுவுமே தன்னைத்தானே படைக்க முடியாது. அவன் ஒரு இயந்திரமும் அல்ல. வேறுவகையான தாரகைகளோ அல்ல. ஏனெனில் இவைகளெல்லாம் ஒரு பேரமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டவைகளே. மேலும் இவை அனைத்தும் இன்னொருவனால் படைக்கப்பட்டவையேயாகும். அவன் இப்பொருள்கள் அனைத்திலிருந்தும் வேறுபட்டவனாக இருக்கின்றான்.

ஏனெனில் அவனே அவை அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆவான்.

நிச்சயமாக படைத்தவன் படைக்கப்பட்ட பொருள்களிலிருந்து வேறுபட்டவனாகவும், அவைகளை விட உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும். எந்தப் பொருளும் தானே உயிருடன் தோன்ற முடியாது என்பதையும், இந்த அற்புத உலகம் தன்னைத்தானே படைத்துக் கொள்ளவில்லை அல்லது தற்செயலாகத் தோன்றவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

இந்த உலகத்தில் தொடர்ந்து வரும் மாற்றங்களே இந்த உலகம் படைக்கப்பட்ட ஒன்று என்பதை நிரூபிக்கின்றது. படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு படைத்தவனை கொண்டிருத்தல் வேண்டும்.

உலகத்தைப் படைத்து பரிபாலித்து வருபவன்

மனிதனை படைத்தவன், அவனுக்கு தேவையானவற்றை வழங்குபவன்.

இயற்கையின் வலிமையான சக்தி ஆகிய அனைத்துமே ஒன்றுதான். அதுதான் அல்லாஹ்-இறைவன். இதுவே எல்லா இரகசியங்களுக்கும் உள்ளிருக்கும் இரகசியம். இதுவே உலகிலுள்ள எல்லாவற்றிலும் உயர்ந்தது வலிமையானது.

இறைவனின் அருட்கொடையாம் திருமறை, நீங்கள் ஓய்வு கொள்வதற்காக இரவையும், பார்ப்பதற்காக பகலையும் உங்களுக்காகப் படைத்திருப்பவன் இறைவனே! நிச்சயமாக மனிதன் மீது இறைவன் கருணையும் பேரருளும் கொண்டவனாக இருக்கின்றான். இருந்த போதிலும் பெரும்பாலோர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை. அவனைத் தவிர வேறொரு இறைவன் இல்லை. இருந்தும் ஏன் நீங்கள் அவனிடமிருந்து விலகிச் செல்கிறீர்கள்? இறைவனின் அத்தாட்சிகளை மறுப்பவர்கள் இவ்வாறுதான் திருப்பப்பட்டனர். உங்களுக்கு பூமியை ஓய்வுக் கொள்ளும் இடமாகவும், வானத்தைக் கூரையாகவும் ஆக்கியவன் அந்த இறைவனே! மேலும் அவன் உங்களுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தான். அந்த வடிவத்தை அழகுள்ளதாகவும் அமைத்தான். மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களையும் உங்களுக்கு வழங்கி இருக்கின்றான். அத்தகையவன் தான் உங்கள் இறைவன்.

ஆகவே உங்களைப் படைத்தவனாகிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. அவனே நித்திய ஜீவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு உண்மையான பக்தி செலுத்தி, அவனிடமே வேண்டுதல் செய்யுங்கள். உங்கள் தலைவனாகிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. (அல்குர்ஆன்: 40:61-65)

அவனின் கட்டளைப்படி கப்பல்கள் கடலில் செல்ல கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான். அதன் மூலம் அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். அதற்காக நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! சிந்திப்பவர்களுக்கு உண்மையிலேயே இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன்:45:12,13)

(நல்ல இலக்கியப் படைப்புகளை வேறு மொழியில் முழுமையாக மொழி பெயர்ப்பதென்பது இயலாத ஒன்றாகும். அதிலும் திருக்குர்ஆனை மொழியாக்கம் செய்வதென்பது இன்னும் மிகக் கடினமானதாகும். இப்புனித திருமறையானது அரபுமொழி வல்லுனர்களுக்கே ஒரு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்த மாபெரும் நூலின் மிகச்சிறிய அத்தியாயத்திற்குக் கூட இணையாக எதையும் அரபுமொழி பண்டிதர்களால் உருவாக்கிட முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆதலால் திருக்குர்ஆனின் பொருளை, அழகை, கவர்ச்சியை வேறு எந்த மொழியிலும், வடிவத்திலும் மீண்டும் தருவதென்பது இயலாத ஒன்றாகும்.

இந்த புத்தகத்தில் எடுத்து தரப்பட்டுள்ள திருமறை வசனங்களின் மொழிபெயர்ப்புகள் மூல குர்ஆனின் முழுமையான, குறையற்ற மொழியாக்கம் என்றோ அல்லது மூல குர்ஆன் என்றோ கொள்ள முடியாது. இங்கே தோன்றும் திருமறை வசனங்கள் பல்வேறு மொழிகளில் மனிதனால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த மொழிபெயர்ப்புகள் இறைவனின் மூலநூல் கொண்டிருக்கும் ஆற்றலைவிட பன்மடங்கு குறைவான ஆற்றலைக் கொண்டதாகும். இதனால்தான் இங்கே தோன்றும் இறைவசனங்கள் அடைப்பு குறிகள் எதுவுமின்றி காணப்படுகின்றன.)

உலகின் தனிப்பெரும் தலைவனும், எல்லாவற்றையும் படைத்தவனும் அல்லாஹ்வே ஆவான். அவன் ஏனையவற்றிலிருந்து வேறுபட்டவனாகவும் மிகப் பெரியவனாகவும் இருக்கின்றான். ஆகையால் சிந்திப்பதன் மூலமும், வணக்கத்தின் மூலமுமே அவனை மனிதன் அறிந்து கொள்ள முடியும். அவன் எக்காலமும் இருந்து வருகின்றான். மேலும் அவனது பெரும் ஆற்றல் உலகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இறைவன் இருக்கின்றான் என்பதை மனிதன் நம்ப வேண்டும். ஏனெனில் உலகிலுள்ள ஒவ்வொன்றும் அவனிருக்கின்றான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இறைவனிடத்திலும் அவனுடைய பேராற்றலிலும் வைக்கப்படும் நம்பிக்கைகள் மட்டுமே வாழ்க்கையின் பல்வேறு மறைவான விஷயங்களுக்கு மிகச் சிறந்த விளக்கமாகும். இதுவே உண்மையான அறிவிற்கும் ஆன்மீக உள்ளொளிக்கும் பாதுகாப்பான ஒரு வழியாகும். நல்ல நடத்தைக்கும், சீரிய ஒழுக்கங்களுக்கும் சரியானதொரு பாதையாகும். இன்பத்திற்கும் செழிப்பிற்கும் நிச்சயமானதொரு வழிகாட்டியாகும்.

இறைவன் உண்டு என்பதை ஒருவர் நம்பினால் அவர் அவனுடைய பண்புகளையும் திருநாமங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக சொன்னால் நிறைவானவனும், குறைகளற்றவனும் அவனே! எல்லா நன்மைகளும் அவனுக்கே சொந்தம்! குறைகள் தவறுகள் அவனிடத்தில் இல்லாதவைகள்!

பின்வருவனவற்றை ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும். அவற்றை நம்ப வேண்டும்.

1. இறைவன் ஒருவனே! அவனுக்கு இணையானவரோ சந்ததியோ கிடையாது. அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை. அவன் என்றென்றும் எல்லோராலும் நாடப்படுபவன். அவன் ஆதியோ அந்தமோ இல்லாதவன். அவனுக்கு இணையானது எதுவுமில்லை. (அல்குர்ஆன்: 112:1-5)

2. அவனே அன்பு செலுத்துகின்றவன், பாதுகாவலன், உண்மையான வழிகாட்டி, நியாயமானவன், உயர் தலைவன், படைத்தவன், பாதுகாப்பவன், காண்காணித்து வருபவன், முதலும் முடிவும் அவனே ஆவான். அவன் அறிகிறவன், ஞானமுடையவன், கேட்பவன், உணர்பவன், சாட்சியானவன், கீர்த்தி மிக்கவன், ஆற்றலுள்ளவன், வலிமை மிக்கவன். (சான்றாக திருக்குர்ஆன் : 57:1-6, 59:22-26வரை)

3. அவனே அன்புடையோன், தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்பவன், செல்வம் நிறைந்தவன், தனித்தவன், மன்னிப்பவன், கருணை மிக்கவன், பொறுமையாளன், புரிந்து கொள்ளுபவன், தனித்தன்மை வாய்ந்தவன், பாதுகாப்பவன், நீதிபதி, நிரந்தர அமைதியும் அவனே ஆவான். (சான்றாக திருக்குர்ஆன் : 3:31, 11:6, 35:15, 65:2,3.)

இத்திருநாமங்களும், இந்த பண்புகளும் புனித குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனைவரும் அவனுடைய காவலிலும், கருணையிலும் வாழ்ந்து வருகின்றோம். அவனோ தனது படைப்புகளிடம் மிக அன்புடையோனாகவும், பரிவுடையோனாகவும் இருக்கின்றான். அவன் நமக்கு அருளியிருக்கின்ற நன்மைகளை நம்மால் எண்ணிட இயலாது. ஏனெனில் அவைகள் எண்ணிலடங்காதவைகள். (அல்குர்ஆன்: 14:32-34, 16:10-13)

இறைவன் மிக உயர்ந்தவனாகவும் சிறப்பு மிக்கவனாகவும் இருக்கின்றான். எனினும் பக்தியுடையோருக்கும், சிந்திப்போருக்கும் அவன் மிக அருகிலேயே இருக்கின்றான். தன்னை நேசிப்பவர்களை தானும் நேசிக்கின்றான். அவர்களுடைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். அவன் அவர்களுக்கு வாழ்க்கையில் அமைதி, வெற்றி, மகிழ்ச்சி, அறிவு, பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கின்றான். அவன் தன்னுடன் சமாதானமாக இருக்க விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றான். அவர்களில் எவரையும் அவன் நிராகரிப்பதில்லை. நல்லவராக இருக்கவும், சரியானவற்றை செய்யவும், தவறானவற்றிலிருந்து விலகி இருக்கவும் அவன் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கின்றான்.

இறைவன் மிக நல்லவனாகவும் அன்புடையோனாகவும் இருப்பதனால் அவன் நல்லனவற்றையும் சரியானவற்றையும் மட்டுமே பரிந்துரை செய்கின்றான். அவற்றையே ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய ஆதரவையும், பாதுகாப்பையும் உண்மையாக நாடுகிறவருக்கு அவனுடைய கருணையின் வாயில் எப்போதும் திறந்தே இருக்கின்றது. (அல்குர்ஆன்: 2:186, 50:16)

தன்னுடைய படைப்புகள் மீது இறைவன் கொண்டுள்ள அன்பு அளவிட முடியாதது. அது மனிதனுடைய கற்பனைக்கு எட்டாதது. அந்த இறைவனின் அருட்கொடைகளை அளவிடவோ எண்ணவோ நம்மால் இயலாது. அவன் நம்மை படைக்கின்றான்.

நாம் பிறந்த நேரத்திலிருந்து மட்டுமல்லாமல் அதற்கு முன்பிருந்தே நம்மை நன்கு பாதுகாத்து வருகின்றான்.

அந்த இறைவன் நம்மைப் படைப்பிலேயே மிகச் சிறந்த வடிவத்தில் படைத்து நமது வளர்ச்சிக்குத் தேவையான எல்லா அறிவுகளையும் புலன்களையும் அளித்திருக்கின்றான். நமக்கு நாமே உதவி செய்யாதபொழுது அவன் நமக்கு உதவி செய்கின்றான். நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அவன் தேவையானவற்றை அருளியிருக்கின்றான்.

நாம் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பதற்கு ஆன்மாவையும், மனசாட்சியையும் தந்திருக்கின்றான்.

நாம் பரிவுடனும், மனிதாபிமானத்துடனும் இருப்பதற்கு உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அவன் மனிதனுக்குத் தந்திருக்கின்றான்.

அவனுடைய கருணையினால் நாம் மெய்யறிவை அடைகின்றோம். உண்மை ஒளியைக் காண்கின்றோம்.

அவன் (அந்த ஏக இறைவன்) கருணை உடையவனாக இருப்பதனால் அவன் நம்மை மிக அழகிய வடிவத்தில் படைத்திருக்கின்றான். நமக்கு சூரியன், சந்திரன், கடல், நிலம், வானம், பூமி, தாவரங்கள், விலங்குகள் இவைகளை வழங்கி இருக்கின்றான். நம்முடைய நலனுக்காகவும், நமது உபயோகத்திற்காகவும் உள்ள இப்பொருள்களையும் இன்னும் பிறவற்றையும் படைத்தவன் அவனே ஆவான்.

இந்த வாழ்க்கையில் நமக்குப் பயன்படக்கூடிய பலவற்றை அவன் படைத்திருக்கின்றான்.

மனிதர்களாகிய நமக்கு கௌரவத்தையும், நுண்ணறிவையும், மதிப்பையும், மரியாதையையும் அளித்திருக்கின்றான். ஏனெனில் படைக்கப்பட்டவைகள் அனைத்திலும் மனிதனே சிறந்த படைப்பாவான்.

மனிதன் பூமியில் இறைவனுடைய பிரதிநிதியாக இருக்கின்றான்.

இறைவனுடைய கருணை நமக்கு தன்னம்பிக்கை, அமைதி, துணிவு ஆகியவற்றை அளிக்கின்றது. நமது துன்பங்களுக்கும், துயர்களுக்கும் தீர்வு கண்டிட, இடர்களை கடந்து சென்று வெற்றியடைந்திட அந்த இறைவனின் கருணை நமக்குத் துணை புரிகின்றது.

உண்மையிலேயே இறைவனின் கருணை அல்லலுற்றவர்களுக்கு நிவாரணத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பலத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. நோயுற்றவர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கை இழந்தவர்களுக்கு பலத்தையும், தேவை உடையவர்களுக்கு ஆறுதலையும் அளிக்கின்றது.

சுருக்கமாகச் சொன்னால் இறைவனின் கருணையானது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் துணை நிற்கின்றது. சிலர் இதைப் புரிந்து கொள்ள தவறி விடலாம். ஏனெனில் அவர்கள் இது தானாகவே நடப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இது இறைவனின் செயலாகும். இதனை நாம் நமது இதயத்தால் புரிந்து கொள்ள முடியும். அன்பும் கருணையும் நிறைந்த இறைவன் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை அல்லது கைவிடுவதில்லை. அவன் நமது கோரிக்கைகளை புறக்கணிப்பதில்லை. அவனுடைய கருணையினாலும், அன்பினாலும் அவன் நமக்கு நேரிய பாதையைக் காட்டி இருக்கின்றான். இவைகள் அனைத்தும் நமக்கு உதவி செய்வதற்காகவும் வழி காட்டுவதற்காகவும் உள்ளவையாகும்.

இறைவனின் இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள். தற்போது பின்பற்றப்பட்டு வரும் வேத நூல்களில் திருக்குர்ஆனே உண்மையான இறை நூலாகும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (ஹதீஸ்) திருக்குர்ஆன் இவைகளின் மூலம் மன்னிக்கும் மாண்புள்ள இறைனைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.

ஒருவர் பாவமொன்றை செய்கிறார் அல்லது தவறொன்றைச் செய்கிறார் என்றால் அவர் இறைவனின் சட்டத்தை மீறுகிறார் என்றே பொருள். அதோடு அவர் தான் இருப்பதையும் தனது கௌரவத்தையும் தவறாக பயன்படுத்தி இறைவனுக்கெதிராக மிகப்பெரும் குற்றத்தை செய்கின்றார். ஆனால் அவர் தான் செய்த தவறுகளுக்காக வருந்தி உண்மையான மனதுடன் இறைவனிடம் மன்றாடுவாரேயானால், அவனிடம் மன்னிப்புக் கோருவாரேயானால் அவன் நிச்சயமாக அதனை ஏற்று அவருக்கு மன்னிப்பளிக்கின்றான்.

இறைவனையோ, அவன் ஒருவன்தான் என்பதையோ நிராகரிப்பவர்கள் கூட தங்களது தவறான போக்கை உணர்ந்து இறைவனிடம் திரும்பி மன்னிப்புக் கோருவார்களேயானால், அவர்களையும் இறைவன் நிச்சயமாக மன்னித்தருளுகின்றான்.

இதைப்பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

தனக்கு இணை வைப்பதை இறைவன் மன்னிப்பதே இல்லை. இதைத்தவிர ஏனைய பாவங்களை தான் விரும்பியவர்களுக்கு மன்னிப்பான். இறைவனுக்கு இணை வைப்பது உண்மையிலேயே மிகக் கொடியதொரு பாவத்தை உருவாக்குவதாகும். (அல்குர்ஆன்: 4:48, 116)

கூறுவீராக! உங்களுடைய ஆன்மாவுக்கு எதிராக சென்றிருக்கின்ற என்னுடைய அடியார்களே! இறைவனின் கருணையைக் குறித்து அவநம்பிக்கைக் கொள்ளாதீர்கள். ஏனெனில் எல்லாப் பாவங்களையும் இறைவன் மன்னிக்கின்றான். ஏனெனில் அவன் மிக மன்னிக்கும் தன்மையுடையவனாகவும், மிக்க கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்பு வருந்தி, உங்கள் தலைவன்பால் திரும்பி அவனுக்குப் பணிந்து விடுங்கள். அவனது தண்டனை வந்துவிட்டபின் உங்களுக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள். நீங்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று தண்டனை வருவதற்கு முன்பு உங்கள் தலைவனிடமிருந்து வெளியாகியிருக்கின்ற மிகச் சிறந்த வழிகளை பின்பற்றுங்கள். (அல்குர்ஆன்: 39:53,54)

இப்பெரும் அருட்கொடைகளுக்குப் பதிலாக இறைவன் நம்மிடமிருந்து எதனையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் அவன் தேவையற்றவனும் தனித்தவனும் ஆவான். தனக்கு கைம்மாறு செய்யுமாறு அவன் நம்மைக் கேட்பதில்லை. ஏனெனில் நம்மால் அவனுக்கு கைம்மாறு செய்ய இயலாது.

அவன் நமக்கு கட்டளை இடுவதெல்லாம், நல்லவர்களாக இருங்கள். நன்றி உடையவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருங்கள். இறைவனின் வழிகாட்டுதலை பின்பற்றி அவனுடைய சட்டங்களை நிறைவேற்றுங்கள். நன்மை, சிறந்த பண்புகள் இவற்றின் சரியான பிரதிபலிப்பாக இருங்கள். பூமியில் அவனுடைய நேர்மையான பிரதிநிதிகளாக வாழுங்கள். இறைவன் நம்மை அடிமைப்படுத்திட விரும்பவில்லை. ஏனெனில் கௌரவம், மதிப்பு இவற்றை நமக்கு அளிக்கின்றவன் அவனே ஆவான். ஆகவே அவனது கட்டளைகள் யாவும் நமது நன்மைக்காகவே இருக்கும்.

நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்காகத்தான் இறைக்கட்டளைகள் அருளப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி நடப்பதன் மூலம் நாம் அவனுடைய இனிய துணையை அடையலாம்.

நாம் நிறைவான இன்பத்தை அடைய சிறந்த அணுகுமுறையை மேற்கொள்ளத்தான் இறைவனின் வழிகாட்டுதல்கள் அருளப்பட்டுள்ளன.

இறைவனை அறிவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அவனை நமக்கு உணர்த்துவதற்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன. உலகில் நாம் காணும் அற்புதங்களும், திகைப்பூட்டும் அதிசயங்களும் அவனின் அத்தாட்சிகளை அறிவிக்கும் புத்தகங்களேயாகும். அவற்றில் நாம் இறைவனைப் பற்றிப் படிக்கலாம்.

இறைத்தூதர்கள், வேத வெளிப்பாடுகள் இவற்றின் மூலம் அந்த இறைவனே முன்வந்து அவனை அறிவதில் உதவுகின்றான்.

இறைவனைப்பற்றி நான் அறிந்து கொள்வதற்கு தேவையான ஒவ்வொன்றையும் இறைத்தூதர்கள் நமக்குச் சொல்கின்றார்கள். இறைவேத வெளிப்பாடுகள் நமக்குப் போதிக்கின்றன.

ஆகவே இயற்கையைப் பற்றி சிந்திப்பதன் மூலம், இறைத்தூதர்களின் மொழியைக் கேட்பதன் மூலம், இறைவனை நம்பிட போதுமான அறிவை நாம் பெறுகின்றோம். அதோடு அவன்பால் இட்டுச்செல்லும் நேரிய பாதையையும் நாம் அறிகின்றோம்.

நமது விவாதத்தை முடிக்கும் முன் திருக்குர்ஆனின் சில வசனங்களை குறிப்பிடுவது சிறந்தது.

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 3:18)

அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்வே!

அனைத்தையும் காப்பவன் அவனே!

வானம்-பூமி இவற்றின் திறவுகோல்கள் அவனுக்கே சொந்தமானவைகளாகும்.

படைப்புகளை தோற்றுவிப்பவன் அல்லாஹ்தான்! பின்னர் அவன் அதை திரும்ப மீளச் செய்கின்றான்.

அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான். பின்னர் அவனே அதை மீட்டுகிறான். பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 30:11)

வானங்களிலும் பூமியிலும் இருப்பவைகள் அனைத்தும் அவனுக்கே சொந்தம்!

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை – எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன. அவனே படைப்பைத் துவங்குகின்றான். பின்னர் அவனே அதை மீட்டுகிறான். மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே! மேலும் அவன் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 30:27)

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.