இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஆசிரிய முன்னுரை)

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம்.

முன்னுரை.

இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளை ஒரு சாதாரண வாசகர் புரிந்திட உதவுவதே இந்த நூலின் நோக்கமாகும். அதாவது இஸ்லாத்தை மிகவும் விரிவாக விளக்குவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம். இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அது என்னென்ன கொள்கைகளுக்காக இருக்கின்றது என்பனவற்றை விளக்கிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவர் ஒருமுறை இஸ்லாத்தைப் பற்றிய ஆரம்ப அறிவை பெற்றுவிட்டால், பின்னர் அவர் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை தாமே மேற்கொள்வார்.

பூமியின் மேற்கு தூரப் பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு குழப்பமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்தப் பகுதிகளின் சூழ்நிலைகள் இஸ்லாத்தைப் பொறுத்தவரைச் சாதகமில்லாத நிலையிலேதான் அமைந்திருக்கின்றன.

வானொலி தரும் செய்திகள், தொலைக்காட்சி தரும் காட்சிகள், பத்திரிக்கைகள் தரும் செய்திகள், திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்கள், சஞ்சிகைகளில் வெளிவரும் கட்டுரைகள், கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்படும் பாட புத்தகங்கள் இவை அனைத்தும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களையே தந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை தவறாக போதிக்கின்றோம் என்று தெரியாமல் இவை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை தந்து கொண்டிருக்கவில்லை. மேலே சொன்ன மக்கள் தொடர்புக் கருவிகள் வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. சிலர் இஸ்லாத்திற்கு எதிராக அமைந்த இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, முஸ்லிம்களைத் திசைதிருப்ப முயன்றனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் இஸ்லாத்தை வெறுத்து ஏதேனும் வேறு கொள்கைக்குத் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றனர்.

இன்னொருபுறம் மனிதனின் சிற்றின்ப ஆசைகளைத் தூண்டி விட்டு அவர்களின் கவனத்தைச் சமயக் கோட்பாடுகளிலிருந்து திருப்புகின்ற விதத்தில் பல்வேறு கருவிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எண்ணற்ற தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் இளைஞர்களை இவை வெகுவாக பாதிக்கின்றன.

இஸ்லாத்தை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கும் இந்த மேற்குப் பகுதியில் இவை இன்னும் அதிகமான தீங்குகளை விளைவிக்கின்றன.

உண்மையில் முஸ்லிம்களில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்கத்தைப் பற்றிய விளக்கங்களையும், தெளிவுகளையும் தர வேண்டும் என்றே விழைகின்றனர். ஆனால் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் சிறியதாகவே இருக்கின்றன. இந்த சிறிய முயற்சிகளால் பயனேதும் இல்லாமல் போய்விடுகின்றது. சூழ்நிலைகள் சூறாவளியாகத் தாக்கிடும் இந்த நிலையில் அவர்கள் மேற்கொள்ளும் இந்த சிறிய முயற்சிகள் வலுவிழந்தே போய்விடுகின்றன. பின்னர் என்னதான் நடக்கின்றது? இங்கே நிலைமை குளறுபடியாக இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஆனால் நிலைமை நாம் நம்பிக்கை இழந்து விடும் அளவிற்கு மோசமாக இல்லை.

தங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களுக்கு ஆளாகுகின்ற முஸ்லிம்கள், தங்களை இழந்து, மார்க்கம் தரும் போதனைகளில் அக்கறை அற்றவர்களாக தங்களது சொந்த வேலைகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்து வெட்கப்படுகிறார்கள் சில வேளைகளில் அச்சப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்திற்கு எந்த பலனையும் தர முடியாதவர்களாக ஆகி விடுகின்றனர். அதுபோலவே சமுதாயத்திலிருந்து கிடைக்கும் பலன்களையும் பெற முடியாதவர்களாக ஆகி விடுகின்றனர்.

இன்னும் பலர் சமுதாயம் போகும் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் நாகரீகமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் சமுதாய மாற்றங்களுக்குத் தலை சாய்க்கின்றனர். இவர்களும் சமுதாயத்திற்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை. இப்படிப்பட்ட முஸ்லிம்கள் சமுதாயத்தை அழிக்கின்ற சக்தியாகவும், சாபத்திற்குரியவர்களாகவும் மாறிவிடுவார்கள். ஏனெனில் அவர்களிடம் உருப்படியான மார்க்க ஒழுக்கங்கள் இல்லை.

மேலே விவரிக்கப்பட்ட முஸ்லிம்களைப்போல் இன்னும் பல முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவர்களும் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்களாக இல்லை. இவர்கள் சில மதத்தினர் அல்லாது மதசார்பற்ற கொள்கையைக் கொண்டவர்கள் செய்கின்ற பிரசாரத்தினால் கவரப்பட்டிருக்கலாம். இவர்கள் கவர்ச்சியின் பக்கம் சாய்பவர்களே ஆவார்கள்.

இவர்கள் ஏதேனும் ஒரு கூட்டத்தோடு சேர்வதற்கான காரணம், அவர்கள் எந்தக் கூட்டத்தோடு சேருகின்றார்களோ அந்தக் கூட்டத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்பதால் அல்ல. இன்னும் இதுபோலவே இவர்கள் மனித இனத்தின்மேல் ஒரு சுயநலமற்ற அன்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதனாலும் அல்ல. மாறாக இந்த முஸ்லிம்கள் இதுபோன்ற கவர்ச்சி ஓட்டங்களில் சேர்ந்து ஓடுவதற்கான காரணம், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான இஸ்லாமியப் பண்பாட்டின் உயர்வை உணரவில்லை என்பதேயாகும். இதன் விளைவாகவும், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்நிலைகளில் வாழ்வதாலும் இவர்களுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறி தங்களுக்கே உரிய தனித்தன்மைகளோடு தனித்து நின்றிட போதிய அறிவும் உளவலிவும் ஏற்படுவதில்லை.

இந்த முஸ்லிம்களிடம் இஸ்லாத்தை அறிந்திட வேண்டும் என உண்மையான ஆர்வம் இருக்குமேயானால் அவர்கள் நிச்சயமாக சமய வளர்ச்சியின் உயர் நிலையிலிருக்கும் இஸ்லாத்தின் வழியிலிருந்து வழி தவறி சென்றிருக்கவே மாட்டார்கள். இவர்கள் உண்மையிலேயே மனித இனத்தின் ஆன்மீக ஒழுக்க மேம்பாட்டில் அக்கறை உடையவர்களாக இருந்தால் இஸ்லாத்தில் தான் – அது காட்டும் ஆன்மீக மேம்பாட்டில் தான் இவர்கள் நிறைவை காண முடியும். ஆகவே இவர்கள் இஸ்லாத்தை விடுத்து வேறு ஏதேனும் கூட்டங்களில் சேர்வார்களேயானால் இவர்கள் அதில் ஒரு பகட்டுக்காக நடிப்பவர்களாகத் தான் இருப்பார்களேயல்லாமல் அதில் முழுமையாக ஈடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் சேரும் கூட்டங்களில் இவர்கள் எதிர்பார்ப்பதை அடையவே முடியாது. இதன் விளைவாக இவர்கள் ஏனைய முஸ்லிம்களின் தொடர்பால் ஏற்படும் ஆன்மீக தொடர்பை இழப்பார்கள். அஃதோடு அவர்கள் தங்களது புதிய கூட்டங்களின் திட்டங்களையே சுற்றி வருவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளால் இறுதியாக ஏற்படும் விளைவுகளை ஆராய்வோமானால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகையான இழப்புகளையே தரும் என்பதை அறிவோம். முஸ்லிம்களுக்கு ஏற்படும் இழப்பு எல்லோருக்கும் ஏற்படும் பேரிழப்பாகும். நாட்டிலே பொறுப்புள்ள குடிமக்களை ஏற்படுத்துவதில், உலகில் அமைதியை நிலைநாட்டுவதில், மனிதர்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதில், சகோதரதுவத்தை நிலைநாட்டுவதில், மனசாட்சியின் விடுதலையைப் பெற்றுத் தருவதில், மனித கண்ணியத்தைக் காப்பதில் முஸ்லிம்கள் சிறந்த சேவைகளைச் செய்திட முடியும். இவைகள் முஸ்லிம்களின் கடமைகளாகும். இவைகளை உலகில் நிலைநாட்டும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை இஸ்லாத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்தக் கொள்கைகளுக்காக போராட வேண்டிய ஒரு முஸ்லிமை இழந்து விடுவோமேயானால் அல்லது ஒரு முஸ்லிம் இந்தக் கொள்கையில் அக்கறை அற்றவனாக அலைவானேயானால் மானிட இனம் முற்றாக இந்தச் சேவைகளை இழந்து விடுகின்றது என்றே பொருள். இது ஒரு சிறிய நஷ்டமல்ல. பேரிழப்பாகும்.

திருக்குர்ஆனே இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் முடிவானது, அதுவே வேதங்களின் உண்மைக்கு உரைக்கல் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு வலுவான நல்ல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் திருமறையாம் திருக்குர்ஆன் இறைவனின் அழிவற்ற திருச்செய்தியை புதுப்பித்து நிலைநிறுத்த வந்த திருவேதமாகும். ஏற்கனவே வந்த வேத வெளிப்பாடுகள் குறித்து இருந்து வந்த சர்ச்சைகளையும் அதன் வழியாக எழுந்த சண்டைகளையும் தீர்த்து வைக்க வந்த வேதமும் அதுவே. இவைகள் முஸ்லிம்களின் அழுத்தமான நம்பிக்கைகளாகும்.

இப்படிச் சொல்வதனால் முஸ்லிம்கள் தங்களை ஏனைய மனிதர்களிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள் என்றோ அல்லது ஏனைய மனிதர்களிலிருந்து தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்றோ பொருளாகாது. அவர்கள் இஸ்லாத்தை எவர் மீதும் திணித்திட விரும்புவதில்லை. அதுபோலவே மனித இனத்தை உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் பாகுபடுத்திக் காட்டிடவும் அவர்கள் விரும்புவதில்லை. வேண்டிய நாடுகள், வெறுப்புக்குரிய நாடுகள் என்ற கோட்பாட்டை அவர்கள் வரவேற்பதில்லை. மாறாக, அவர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மானிட இனத்திற்கு எடுத்துச் சொல்லும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள். மானிட இனத்திற்குச் சேவை செய்யும்படியும் அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் முஸ்லிம்கள் மானிட இனத்தின் துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்திட முடியாது. முஸ்லிம்கள் தங்களைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரிந்திட முடியாது. அதுபோலவே அவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருந்திட முடியாது. வாழ்க்கையின் எல்லா உண்மைகளைக் குறித்தும் அவர்கள் தங்கள் இதயத்தை முழுமையாகத் திறந்து வைத்திட வேண்டியவர்களாவார்கள். அவர்கள் தங்களது நோக்கை – இலட்சியத்தை, இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து செலுத்திட வேண்டியவர்களாவார்கள். இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டும்போது அவர்கள் ஏனைய மக்களோடு இரக்கம், மனிதாபிமானம் இவை தோய்ந்த இஸ்லாமிய உணர்வோடு கலந்திடும்போது மட்டுமே அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகள் முழுமையாக நிறைவேற முடியும்.

மேலே சொன்ன சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் இந்த நூலில் இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான, புதுமையானதொரு அறிமுகத்தைத் தர முனைந்திருக்கின்றேன். முஸ்லிம்களை முரட்டுத்தனம் உடையவர்களாகவும், குறுகிய நோக்குடையவர்களாகவும் ஆக்கிடுவது அல்ல இங்கே நோக்கம். ஏனெனில் இவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இங்கே நமது இலக்கு என்னவெனில் அத்தகைய முஸ்லிம்களுக்கும் அதைப்போன்ற ஏனைய முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் உண்மையைத் தெளிவாக்குவது. மேலும் அவர்கள் ஆன்மீக உள்நோக்கோடு உலகத்தைப் பார்த்திடவும், மனித நிலைமையை நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அணுகிடவும் தேவையான அறிவை தருவதுமேயாகும். இந்த இலக்கு ஈடேறுமேயானால் (அந்த) முஸ்லிம்களை அவர்கள் வாழும் நாடுகளின் சிறந்த பிரஜைகளாகவும், மானிட இனத்தின் மாண்புமிக்க உறுப்பினர்களாகவும், இவைகளுக்கெல்லாம் மேலாக, இறையச்சம் உள்ள இறையடியார்களாகவும் மாற்றுவதில் மகத்தான வேற்றியைக் காண முடியும்.

மேலே விவரித்தவைகள், இப்போதைய உலகில் இஸ்லாத்திற்கு எதிகாலமே இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றதா? அல்லது இன்றைய முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றும், விரக்தியையும் உதவிய தன்மையையும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுபோல் தோன்றுகிறதா? அல்லது இப்புதிய உலகில் முஸ்லிம்கள் மேற்கொண்டிருக்கும் ஆன்மீகப் போராட்டத்தில் அவர்கள் தோற்றுவிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பிரதிபலிப்பதுபோல் இருக்கின்றதா? இல்லை, நிச்சயமாக இவைகளில் எதுவுமில்லை.

அவநம்பிக்கைக் கொள்வதும், விரக்தி அடைவதும் இஸ்லாத்தின் போதனைகளுக்கும், உணர்வுகளுக்கும் முரணானவை.

இறைவன் மீது நம்பிக்கை வைத்த பிறகு நிராதரவான நிலை ஏற்படும் என்பது அர்த்தமற்ற ஒன்றாகும்.

இஸ்லாத்தின் எதிர்காலம் என்பது, மனித இனத்தின் எதிர்காலம் என்பதாகும். ஆகவே மனித இனத்திற்கு ஏதேனும் எதிர்காலம் இருப்பதாக இருந்தால் இஸ்லாத்திற்கும் பெரியதொரு எதிர்காலம் இருக்கின்றது என்றே பொருள். நான் மனித இனத்திற்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது என்று நம்புகின்றேன். ஆகவே இஸ்லாத்திற்கும் ஒளிமயமானதொரு எதிர்காலம் இருக்கின்றது என்று நான் உறுதி கூறுகின்றேன்.

முஸ்லிம்கள் இன்று மேற்கொண்டிருக்கும் ஆன்மீகப் போராட்டத்தில் அவர்கள் தோற்கப் போவதில்லை. அவர்கள் அடையும் வெற்றியின் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றே தீருவார்கள்.

இப்போது மேற்கொண்டிருக்கும் ஆன்மீகப் போராட்டத்தில், ஏதேனும் காரணங்களால், முஸ்லிம்கள் தோற்றுப் போவார்களேயானால், அது மனித இனத்திற்கே ஒரு மாபெரும் தோல்வியாக முடியும். பின்னர் மனித இனம் ஈடுகட்ட முடியாத அளவிற்கு எண்ணற்ற இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கலாம்.

இந்த முன்னுரையின் குறிக்கோள் முஸ்லிம்கள் இன்றைய உலகில் எதிர்நோக்கும் சூழ்நிலையின் உண்மை நிலைமையை எடுத்து விளக்குவதேயாகும்.

பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிர்வரும் பேராபத்துக்களை எடுத்து விளக்கி எச்சரிப்பதற்காகவும், வர இருக்கும் இழப்புக்களைத் தடுப்பதற்கு தயாராவதற்கும் இந்த முன்னுரையை இங்கே தந்திருக்கின்றேன்.

இன்னும் மனித இனத்தின் ஆன்மீக ஈடேற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்திட அவர்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.

முஸ்லிம் சகோதரர்களை அல்லாஹ்வின் கவனத்திலேயே விட்டு விடுகிறேன். அந்த இறைவனிடமே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.

நமது சகோதரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோற்று விடாமலிருக்க அவனிடமே உதவி தேடுகின்றேன்.

“என்னுடைய சக்திக்கு உட்பட்ட சீர்திருத்தத்தையே நான் விழைகின்றேன். இந்தப் பணியில் எனது வெற்றி இறைவனிடமிருந்து மட்டுமே வர முடியும். நான் அவனையே நம்பி இருக்கின்றேன். அவனிடமே உதவி தேடிக் காத்திருக்கின்றேன்.” (அல்குர்ஆன்: 11:88)

ஹமுத அப்த் அல் அத்தி

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.