ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-15)

15,  பாவம் செய்த மனிதனும் காணாமல் போன ஒட்டகமும்

ஹதீஸ் 15: நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான். ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக!

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.

நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அது பற்றி அல்லாஹ் அதிக அளவு மகிழ்ச்சி அடைபவனாக இருக்கிறான். அது உங்களில் ஒருவர் (பின்வரும் சூழ்நிலையில்) அடையும் மகிழ்ச்சியைவிட அதிகமாகும்., அவர் ஒருபொட்டல் பூமியில் தனது வாகனத்தில் பயணமாகிக் கொண்டிருந்தார். திடீரென அது அவரை விட்டும் காணாமல் போய்விட்டது! அவரது உணவும் பானமும் அதிலேதான் இருந்தன. இனி அந்த வாகனம் கிடைக்கப் போவதில்லை என அவர் நிராசை அடைந்தார். பிறகு ஒரு மரத்தருகே வந்து அதன் நிழலில் ஓய்வாகப் படுத்திருந்தார். தன் வாகனம் கிடைக்குமென்ற நம்பிக்கையே அவருக்கில்லை. இந்நிலையில் திடீரென அந்த வாகனத்தை அவர் காண்கிறார். அவர் முன்னால் அது நின்று கொண்டிருக்கிறது! உடனே அதன் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு கூறலானார்: யாஅல்லாஹ்! நீதான் என் அடிமை! நான் உன் எஜமானன் என்று! அதிக அளவு மகிழ்ச்சியினால் அவரது வார்த்தை தவறியது! (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

பாவம் செய்த மனிதன் திருந்தி மனம் வருந்தி பாவமீட்சி தேடுவது குறித்து இறைவன் அடையும் மகிழ்ச்சியை ஓர் உவமை மூலம் அழகாக விளக்கியுள்ளார்கள் நபி(ஸல்)அவர்கள். அந்த உவமை இதுதான்: தண்ணீரோ புற்பூண்டுகளோ இல்லாத ஒருபொட்டல் பூமியில் ஒட்டகப் பயணம் மேற்கொண்ட மனிதன் அந்த ஒட்டகத்தைத் தொலைத்து விடுகிறான். அங்கும் இங்கும் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. பதறிப் போய்விட்டான்;. என்ன செய்வது? எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. அப்படியே அலைந்து திரிந்து களைத்து- மனம்நொந்து கடைசியில் ஒருமரத்தடிக்கு வந்து அதன் நிழலில் படுத்துச் சிறிது கண்ணயர்ந்து விடுகிறான்!

இனி நமக்கு வாழ்வேது! மரணமாக வேண்டியதுதான். தாகத்திற்குத் தண்ணீரோ உண்பதற்கு உணவோ எதுவுமில்லை! எல்லாம் அந்தப் பாழாய்ப்போன ஒட்டகத்தில்! அதுதான் தொலைந்து விட்டதே! எங்கே போய்த் தேடுவது? எங்கே கிடைக்கப் போகிறது? – இவ்வாறு நிராசையின் உச்சகட்டத்தை அடைந்திருந்தான்.

ஏதோ அரவம் கேட்டு கண்விழித்தான். என்ன ஆச்சரியம்! அவனது ஒட்டகம் அங்கே நின்று கொண்டிருந்தது! அவன் படுத்திருந்த மரத்தடியில் அதன் கடிவாளம் சிக்கிவிட்டிருந்தது!

திடீரென தன்முன்னால் அந்த ஒட்டகத்தைக் கண்டதும் திக்குமுக்காடிப் போனான் அவன்! அளவிலா ஆனந்தம் அவனுக்கு! அதன் யதார்த்த நிலையை எவராலும் கற்பனை செய்ய முடியாது! மரணத்திற்குப் பிறகு வாழ்வு கிடைத்தது போன்ற மட்டில்லாத மகிழ்ச்சி அது! அப்படியொரு சூழ்நிலை யாருக்கு ஏற்பட்டதோ அவர்தான் அதை முழுமையாக உணர முடியும்.

உடனே ஒட்டகத்தின் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தவாறு சொன்னான்: யா அல்லாஹ்! நீதான் என் அடிமை., நான் உன் எஜமானன். -ஒட்டகம் கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் நா உயர்த்தினான். யா அல்லாஹ் நீதான் நல்லுதவி செய்த எஜமானன் என்று புகழத்தான் நாடினான். ஆனால் மகிழ்ச்சிப் பெருக்கின் காரணத்தால் நா தடுமாறியது., வார்த்தை தவறியது!

பாவம் செய்த மனிதன் பின்னர் மனம் திருந்தி நல்வழி திரும்புவது குறித்து அல்லாஹ் அந்தளவுக்கு மகிழ்ச்சி அடைகிறான் என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கம். இவ்வாறு பாவமீட்சி தேடுமாறு இந்நபிமொழி ஆர்வமூட்டுகிறது. இறைஉவப்பைப் பெறுவதிலேயே மனிதனின் இம்மை – மறுமை நலன் அடங்கியுள்ளது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு புரிந்து கொள்ளவேண்டும். பாவமீட்சி தேடுவதை இறைவன் விரும்புகிறான் எனில் அதற்குக் காரணம், நமது பாவமீட்சியும் நல்லமல்களும் அவனுக்குத் தேவை என்பதல்ல. மாறாக, இறைவன் பெருந்தகைமையாளன். மனிதர்களைத் தண்டிக்க வேண்டும்- பழிவாங்க வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருக்கவில்லை. மனிதர்களை மன்னிக்கவே அவன் பெரிதும் விரும்புகிறான். அவர்களின் குற்றங்குறைகளைப் பொறுத்தருளுவதே அவனுக்கு மிகவும் பிரியமானது!

மேலும் மகிழ்ச்சித் தன்மை இறைவனுக்கு உண்டு என்பதையும் இந்நபிமொழி உறுதிப்படுத்துகிறது. இறைவன் மகிழ்ச்சி அடைகிறான், கோபம் கொள்கிறான், அன்பு வைக்கிறான், வெறுக்கிறான்! ஆனால் அவை மனிதர்களுக்கு ஏற்படுவது போன்ற தன்மைகள் அல்ல! இறைவன் சகல நிலைகளிலும் தனித்தவன். இணையற்றவன். குர்ஆன் குறிப்பிடுகிறது:

‘(உலகின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை., அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்’ (42:11)

மேலே சொன்ன தன்மைகள் அவனது மகத்துவத்திற்கும் மாண்புக்கும் ஏற்றவகையில் அவனிடம் உள்ளன. இறைவனின் மகிழ்ச்சிக்குப் படைப்பினங்களின் மகிழ்ச்சி ஒப்பாகாது. படைப்பினங்களின் மகிழ்ச்சிக்கு இறைவனின் மகிழ்ச்சி ஒப்பானதல்ல.

மேலும் இந்நபிமொழியிலிருந்து தெரிய வருகிறது: ஒரு மனிதன் இறை நிராகரிப்பு (குஃப்ர்) வார்த்தையை நா தவறி கூறிவிட்டால் அது குற்றமாகாது. தொலைந்துபோன ஒட்டகம் கிடைக்கப் பெற்ற இந்த மனிதன் நிராகரிப்பு வார்த்தையைத்தான் கூறினான். தன் இறைவனை நோக்கி, நீ எனது அடிமை. நான் உன் எஜமானன் என்று சொல்வது சந்தேகமின்றி குஃப்ர்தான் இறைநிராகரிப்புதான்! ஆனால் நாவு தடுமாறியதே தவிர இதயமோ இறையைப் புகழவும் நன்றி செலுத்தவும் தான் நாடியது என்பதால் அந்த வார்த்தை மன்னிப்பைப் பெற்றது!

இதே போன்று தான் ஒருவன் பிறிதொருவனைத் தவறுதலாகத் திட்டி விடுவதும் பேசிவிடுவதும்! வேண்டுமென்றே திட்டமிட்டுப் பேசவில்லை என்றிருந்தால் அது குற்றத்திற்குரியதோ தண்டனைக்குரியதோ அல்ல! இதே போன்று ஒருவன் வேண்டுமென்றில்லாமல் தவறுதலாக தன் மனைவியை தலாக் – மணவிலக்கு சொன்னால் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. நா தவறி வெளிப்படும் இதுபோன்ற வார்த்தைகளின் சட்டநிலை அபத்தமாகச் சொல்கிற சத்தியத்தைப் போன்றதாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்று அபத்தமாக – வீணாகச் சொல்வதால் எதுவும் வினையமாக ஆகாது! குர்ஆன் கூறுகிறது:

‘(உள்நோக்கம் எதுவுமின்றி) தற்செயலாக நீங்கள் செய்யும் அபத்தமான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் நீங்கள் உள்ளத்தால் நாடிச்செய்யும் சத்தியங்களுக்காக உங்களைக் குற்றம் பிடிப்பான்’ (2:225)

ஆனால் இறைநிராகரப்பு (குஃபர்) வார்த்தையைப் பரிகாசத்திற்காகப் பேசுபவன் பாவியே! அவன் நிராகரிப்பாளனாகவே ஆகிவிடுகிறான். குர்ஆன் கூறுகிறது: ‘(நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அவர்களிடம் நீர் கேளும்: அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும் தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?- நீங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டபின் நிராகரித்து விட்டீர்கள்!’ (9:65)

இஸ்லாத்தின் அடிப்டைக் கொள்கை – கோட்பாடுகள் தொடர்பான வார்த்தைகளைப் பேசிப் பரிகாசம் செய்வது எந்தவகையிலும் கூடாது. பரிகாசம் செய்பவன் ஆழமான பொருள்கொண்டு- அர்த்தம் வைத்தே பேசுகிறான்., சிரித்து மகிழ்கிறான். எனவே குஃப்ர் – நிராகரிப்பு வார்த்தை பேசி பரிகாசம் செய்பவன் பாவியே ஆவான்.

அறிவிப்பாளர் அறிமுகம் – அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள்

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை மேற்கொண்டு மதீனா வந்தபொழுது அனஸ்(ரலி) அவர்கள் எட்டு வயது சிறுவர். அவர்களை, அவர்களின் தாயார் உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் நபியவர்களிடம் அழைத்துவந்து: அல்லாஹ்வின் தூதரே! இதோ என் மகன் அனஸ். இவர் உங்களோடு இருந்து உங்களுக்குப் பணிவிடை செய்யட்டும். இவருக்கு தீன் – இறைமார்க்கம் போதியுங்கள்., நல்லொழுக்கம் புகட்டுங்கள் என்று சொல்லி ஒப்படைத்தார்கள்! அன்றிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு, அவர்கள் மரணம் அடையும்வரையில் பணிவிடை செய்யும் பெரும் பேறு பெற்றார்கள், அனஸ்(ரலி) அவர்கள்! நபி(ஸல்) அவர்களது தலைமையில் நடைபெற்ற எட்டுப் போர்களில் கலந்து கொண்டார்கள்!

இவர்களின் குறிப்புப் பெயர் அபூ ஹம்ஸா. மதீனாவில் இவர்களது கோத்திரம் புகழ்பெற்ற கஸ்ரஜ் கோத்திரமாகும். பனூ நஜ்ஜார் கிளையைச் சோந்த இவர்களுடைய மாமன்மார்கள் நபி(ஸல்) அவர்களுக்குத் தாய்வழி உறவினர்களாவர். உமர்(ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் பஸராவில் குடியேறிய அனஸ்(ரலி) அவர்கள், ஹிஜ்ரி 93 ஆம் ஆண்டு அங்கேயே மரணம் அடைந்தார்கள். அப்பொழுது அவர்களது வயது 103 என்றும் 93 என்றும் இரு கருத்துகள் உள்ளன. ஸஹாபாக்களில் இறுதியாக மரணம் அடைந்தவர்கள் இவர்களே! அன்னாரிடமிருந்து 1286 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேள்விகள்

1) மனிதன் பாவமன்னிப்பு தேடும்பொழுது அல்லாஹ் அடையும் மகிழ்ச்சிக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய உவமை என்ன?

2) ஒருமனிதன் குஃப்ர் – இறைநிராகரிப்பு வார்த்தை நா தவறி கூறிவிட்டால் அதன் சட்டநிலை என்ன என்பதை விளக்கவும்.

3) மகிழ்ச்சி, கோபம், அன்பு, வெறுப்பு ஆகிய பண்புகள் இறைவனுக்கும் உள்ளனவா? அதன் விளக்கம் என்ன?

4) இந்நபிமொழியிலிருந்து நீ பெறும் படிப்பினைகளைப் பட்டியலிடவும்.

5) அறிவிப்பாளரைக் குறித்து நீ அறிந்திருப்பதென்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.