ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-13,14)

13, 14. இதில் இரு நன்மைகள் உண்டு!

ஹதீஸ் 13: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திண்ணமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். அவன் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: புகாரி)

ஹதீஸ் 14: அஃகர்ரு இப்னு யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஓ! மனிதர்களே! பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். திண்ணமாக நான் ஒருநாளில் நூறு தடவை பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

இமாம் நவவி(ரஹ்) அவர்கள், பாவமீட்சி தேடுவதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பிறகு இப்பொழுது நபிமொழிகளை வரிசைப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு ஒன்றுக்கதிகமான ஆதாரங்கள் சேரும்பொழுது அதன் உறுதிப்பாடும் கட்டாய நிலையும் அதிகரிக்கும்.!

நபி(ஸல்)அவர்கள் பரிசுத்தமானவர்கள். அவர்களின் முந்தைய – பிந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். அத்தகைய உத்தமரான நபி(ஸல்) அவர்களே ஒருதடவை இருதடவை அல்ல. ஒருநூறு தடவை பாவமீட்சி தேடியுள்ளார்கள் எனில் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பாவமீட்சி தேடுமாறு நபியவர்கள் தம் சமுதாயத்திற்கு இட்ட கட்டளையாகும் இது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஒருமுஸ்லிம் பாவமீட்சி தேடும்பொழுது அதில் இரு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று: அல்லாஹ் – ரஸூலின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் அதிலுள்ளது. அல்லாஹ் – ரஸூலின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது முழுக்க முழுக்க நன்மையே! இம்மை, மறுமையின் நற்பேறுகளுக்கு அதுவே அடிப்படை.

இரண்டாவதாக ஒரு நாளைக்கு சுமார் நூறு தடவை பாவமீட்சி தேடிய உத்தம நபியைப் பின்பற்றிய நற்பேறு கிடைக்கிறது.

இந்த நபிமொழிகள் சில உண்மைகளை உள்ளங்களில் பதிய வைக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் இறைவழிபாட்டில் கொண்ட உறுதி நிலையில் அனைத்து மனிதர்களினும் சிறந்து விளங்கினார்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அனைவரினும் அதிகமாக அல்லாஹ்வின் திருமுன்னால் பணிபவர்களாய் – அவனை வணங்குபவர்களாய் – அனைவருக்கும் அதிகமாக அவனுக்கு அஞ்சுபவர்களாய் திகழ்ந்தார்கள். அல்லாஹ்வை அவர்கள் அறிந்திருந்ததை விட உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் நன்மையின் சிறந்த போதகராய்த் திகழ்ந்தார்கள். எதனை நன்மை என்று உலக மக்களுக்கு எடுத்துச் சொன்னார்களோ அதனை அனைவருக்கும் முதலில் தமது வாழ்வில் செயல்படுத்தினார்கள். பாவமன்னிப்புக் கோருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பிறருக்கு ஏவியது அவ்வழியில் தாங்கள் ஒரு முன்மாதிரியாய் வாழ்ந்த பிறகுதான். இவ்வாறு அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருந்தன.

இதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் -குறிப்பாக அழைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல படிப்பினை உள்ளது. ஒன்றைச் செய்யுமாறு மக்களுக்கு ஏவும்பொழுது அனைவருக்கும் முதலில் அதனை அவர்கள் செயல்படுத்திட வேண்டும். தீமையை விட்டும் தடுத்திடும் பொழுது அனைவரை விடவும் முதலில் அவர்கள் அதிலிருந்து விலகிட வேண்டும். அப்படிச் செய்யும் பொழுதுதான் அவர்களின் அழைப்புப்பணி வெற்றி பெறும். அவர்களின் உழைப்பு மறுமையில் மதிக்கப்படும். நற்கூலியைப் பெறும்!

அறிவிப்பாளர் அறிமுகம் – அஃகர்ரு பின் யஸார்(ரலி) அவர்கள்

அஃகர்ரு பின் யஸார் அல் முஸனி(ரலி) அவர்கள், நபித்தோழர்களில் ஒருவர். இவர் அறிவித்த ஹதீஸ்களை அல் அதபுல் முஃப்ரதில் இமாம் புகாரி அவர்களும் அல்யவ்மு வல் லைலாவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். முஸ்னத் அஹ்மதிலும் அபூதாவூதிலும் கூட பதிவாகியுள்ளது.

கேள்விகள்

1) பாவமன்னிப்புத் தேடுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?

2) இந்த இரு நபிமொழிகளிலும் உள்ள படிப்பினைகள் யாவை?

3) அறிவிப்பாளர்களைப் பற்றி சிறு அறிமுகம் செய்யவும்.

4) மனித உரிமை தொடர்பான பாவங்களுக்கு உதாரணம் கூறவும். அவற்றிலிருந்து விடுபடுவதற்கு என்ன நிபந்தனைகள் உள்ளன?

5) புறம் பேசுதல், கடனைத் திருப்பித் தராமல் இருத்தல் போன்ற பாவங்களில் இருந்து விடுபடுவதெப்படி?

6) மரண நேரம் நெருங்கும் முன்பே பாவமீட்சி தேடிட வேண்டும் என்பதற்கு குர்ஆன் – ஹதீஸில் இருந்து ஆதராங்கள் தரவும்.

7) பார்வையைத் தாழ்த்துவது – பேணுவது என்றால் என்ன? அதை வலியுறுத்தும் குர்ஆன் வசனத்தை விளக்கவும்.

8) தௌபா எனும் அரபிச் சொல்லின் பொருளை விவரிக்கவும்.

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.