ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-3)

3 – ஜிஹாத் ஏன்? எதற்கு?

ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்)

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்பதே! ஏனெனில் அது இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டது’

தெளிவுரை

ஹிஜ்ரத் என்பது- முன்னர் குறிப்பிட்டது போன்று – இறை வழிகாட்டலுக்கு ஏற்ப வாழவும் அதன்பால் மக்களை அழைக்கவும் இடம் தராத நாட்டிலிருந்து வெளியேறி விடுவதாகும்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எதனால்? அங்கு ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யவும் இறை நெறியைப் பின்பற்றி வாழவும் மக்கத்து குறைஷிகள் அனுமதிக்கவில்லை. மேலும் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஏழை எளிய முஸ்லிம்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்! ஒருகட்டத்தில் அது எல்லை மீறிப்போயிற்று! இதனால் நபியவர்கள் மக்காவை விட்டு வெளியேறி இஸ்லாத்தின் பாதுகாப்புக்கும் பிரச்சாரப் பணிக்கும் உத்திரவாதம் அளிக்க முன்வந்த திருமதீனாவில் குடியேறினார்கள்! நபித்தோழர்களும் சிறுகச்சிறுக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய வண்ணம் இருந்தார்கள்!

இந்த ஹிஜ்ரத் பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்தது!

மதீனா சென்ற மாநபி(ஸல்) அவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்காவின் மீது போர் தொடுத்து அங்கே வெற்றிக் கொடி நாட்டினார்கள். சிலைவணக்கத்தின் ஆதிக்கத்திலிருந்த அந்நாட்டை மீட்டு ஓரிறைக் கொள்கை கோலோச்சும் புண்ணிய பூமியாய் மாற்றினார்கள். யுத்தமின்றி, ரத்தமின்றியே இந்தச் சாதனை நடந்தேறியது! இவ்வாறு புனித மக்காநகர் இஸ்லாமிய நாடாய் மலர்ந்த பிறகு அங்கிருந்து வெளியேறி வேறுநாடு செல்வதற்கு – ஹிஜ்ரத் செய்வதற்கு என்ன இருக்கிறது? எனவேதான் வெற்றிக்குப்பின் ஹிஜ்ரத் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அதாவது, இனி யாரும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவேண்டியதில்லை என்றார்கள்!

ஆகவே இது பொதுவான கட்டளை அல்ல. அதாவது, இனி எந்நச் சூழ்நிலையிலும் – எந்நாட்டிலிருந்தும் ஹிஜ்ரத் செய்ய வெண்டியதில்லை என்பதல்ல இதன் பொருள்., இமாம் நவவி (ரஹ்) அவர்கள் சென்னது போன்று-மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தல் இல்லை என்பதே கருத்தாகும்.

தௌபா பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று மற்றொரு நபிமொழி கூறுகிறது.

மட்டுமல்ல, மக்காத் திருநகர் இனி மறுமைநாள் வரையில் அல்லது அல்லாஹ் நாடும் காலம் வரையில் இஸ்லாமிய நாடாகவே நீடிக்கும். இனி ஒருபொழுதும் நிராகரிப்பு நாடாய் அது மாறாது என்பதும் இதிலிருந்து தெரிய வருகிறது.

‘ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் எனும் எண்ணமும் உண்டு’

அதாவது இதன் பிறகு செய்யவேண்டியது ஜிஹாத் ஆகும். மக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஜிஹாதுக்கான சூழ்நிலை வரும்பொழுது அங்கிருந்து வெளிக் கிளம்பத்தான் வேண்டும். எப்பொழுதும் அதற்குத் தயார் எனும் தூய்மையான எண்ணம் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

‘நீங்கள் புறப்படவேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்பட வேண்டும்’

அதாவது, உங்களில் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்கள் அல்லது உங்களின் தலைவர்கள் உங்களை இறைவழியில் ஜிஹாத் செய்யுமாறு உங்களை அழைத்தால் நீங்கள் புறப்படத்தான் வேண்டும். அது உங்கள் மீது கடமை! இங்கு ஜிஹாத் என்றால் என்ன? அதன் இலட்சியம் என்னஎன்பதை அறிந்து கொள்வது அவசியம்.

ஜிஹாத் என்றவுடன் இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்து யுத்தம் செய்வது என்று மட்டும் பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். ஜிஹாத் என்பது இதனை விடவும் விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும். எதிரிகளுடன் மோதுவது- யுத்தம் செய்வது என்பதற்கு முதலில் பல்வேறு நிலைகளைக் கடந்து வருவது அவசியமாகும். ஷைத்தானிய உணர்வுகனை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல் – அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல், பித்அத் எனும் நூதன அனுஷ்டானங்களை ஒழிப்பதற்காகப் போரிடுதல், இஸ்லாத்திற்கெதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல், இதேபோல் எல்லா வகையான தீமைகளை எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும் அதில் அடங்கும்.

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பதும் ஜிஹாதின் பொருளில் அடங்கும் என்பதுபோல் அதனை நல்வழியில் ஈடுபடுத்தும் முயற்சியும் அதற்கு இன்றியமையாததே. ஆம்! இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, அதன்படி அமல் செய்யப் பண்படுத்துவது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது, அவ்வழியில் நேரிடும் கஷ்டங்களைவும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு பழக்குவது ஆகிய அனைத்தும் ஜிஹாதில் அடங்கும்.

ஒரு மனிதன் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நம்பிக்கை கொண்டதாக அறிவித்து இஸ்லாத்தை ஏற்ற பிறகு அனைத்திற்கும் முதலில் தனது தனி வாழ்க்கையையும் சமுக வாழ்க்கையையும் இறை வழிகாட்டலுக்கு ஏற்ப அமைத்திட வேண்டும் என்பதும் ஜிஹாதின் தேட்டமாகும்.

ஆனால் எதிரிகளை எதிர்த்துக் களத்தில் போர் புரியவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை வந்தால் மனத்திண்மையுடன் அதில் குதித்தாக வேண்டும்.

இறைவன் கூறுகிறான்:

‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் என்று கூறப்பட்டால் பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கிறீர்களே! மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்து விட்டீர்களா? உலக வாழ்க்கையின் இன்பங்கள் யாவும் மறுவுலக வாழ்க்கைக்கு முன்னால் மிக அற்பமானவைதான்! நீங்கள் (இறை வழியில்) புறப்படவில்லையாயின் அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும் உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும் அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்’ (9:38-39)

இன்னோர் உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்காகவே -அவனது மார்க்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்காகவே எனும் நிய்யத்- எண்ணம் ஜிஹாதில் இருந்திட வேண்டும். மாறாக, இனம், நிறம், மொழி, தேசியம் என குறுகிய மாச்சரியங்களுக்குள்ளாகி போர்புரிந்தால் அல்லது பகட்டுக்காக, பட்டம் – பதவிகளுக்காக யுத்தம் செய்தால் அது ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ் என்கிற இறைவழிப் போராகாது. அதில் கொல்லப்படுவர் ஷஹீத் – இறை மார்க்கத்தியாகி எனும் உயர் பதவியை அடைய முடியாது!

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ஒருமனிதர் மன மாச்சரியத்திற்காகப் போர் புரிகிறார். மற்றொருவர் வீரத்தைக் காட்டுவதற்காகப் போர் புரிகிறார். இன்னொருவர் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறார். இவர்களில் யார் இறைவழியில் போர் புரிந்தவர்? அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள்: இறைமார்க்கம் மேலோங்குவதற்காக யார் போர் புரிந்தாரோ அவர்தான் இறை வழியில் போர் புரிந்தவர் ஆவார். (நூல்: புகாரி, முஸ்லிம்)

எனவே ஜிஹாத் போன்ற உன்னதமான தியாகமாகவும் வழிபாடாகவும் திகழ்கிற பணிகளிலேகூட – இஸ்லாத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான அறப்பணிகளிலே கூட நிய்யத் எனும் வாய்மையான எண்ணம் அவசியம். இல்லையெனில் எல்லாம் பாழாகி விடும்!

வாய்மையுடன் நிறைவேற்றப்படும் ஜிஹாதின் சிறப்பினை பின்வரும் நபிமொழி எடுத்துரைப்பதைப் பாருங்கள்:

‘எவர் (அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக்) காயப்படுத்தப்படுகிறாரோ அவனது பாதையில் காயப் படுத்தப்படுபவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன் – அவர் மறுமை நாளில் தன் காயத்திலிருந்து இரத்தம் வழியும் நிலையில் வருவார். நிறம் சிவப்பாய் இருக்கும். மணமோ கஸ்தூரி மணமாக இருக்கும்!’
(புகாரி, முஸ்லிம்)

கேள்விகள்

1) ஹிஜ்ரத் என்பதன் கருத்து என்ன? வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் இல்லை என்பதன் கருத்து என்ன?

2) ஜிஹாத் என்றால் என்ன என்று விளக்கவும்.

3) இறைவழிப் போர் (அல் ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ்) என்பதற்கு நபியவர்கள் அளித்த இலக்கணம் என்ன?

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.