ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1)

நிய்யத் – எண்ணமும் அதன் தூய்மையும்

வாய்மை மற்றும் தூய எண்ணத்துடன் இருத்தல். வெளிப்படையான, மறைமுகமான அனைத்து செயல்களிலும் சொற்களிலும்!

அல்லாஹ் கூறுகிறான்- ‘மேலும் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாகவும் ஓர்மனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கி வழிபட வேண்டும். தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுவே சீரான – செம்மையான மார்க்கமாகும்’ (98:5) – மற்றோர் இடத்தில்,

‘அந்தப் பலிப்பிராணிகளின் இரத்தமும் இறைச்சியும் அல்லாஹ்வைச் சென்றடையப் போவதில்லை. உங்களின் பயபக்தியே அவனிடம் போய்ச் சேர்கிறது’ (22:37) – இன்னோர் இடத்தில்,

‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலும் வெளிப்படுத்தினாலும் சரியே அல்லாஹ் அதனை அறிகிறான்’
(3:29)

தெளிவுரை

நிய்யத்தின் நிறைநிலை

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் எண்ணத் தூய்மையை வலியுறுத்தி இங்கு மூன்று வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். நிய்யத் என்றால் என்ன என்பதையும் இந்த வசனங்களின் விளக்கத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்!

எண்ணம் எழுவது மனத்தில்தான். மனம் தான் அதற்குரிய இடம். எண்ணத்திற்கும் நாவுக்கும் தொடர்பில்லை. எந்த அமல்களிலும் நிய்யத்தை நாவால் மொழிவதென்பதில்லை. இதனால் தான் தொழுகை, நோன்பு, ஹஜ் அல்லது உளூ போன்ற அமல்களை செய்யும்பொழுது நிய்யத்தை நாவால் மொழிபவன் பித்அத் எனும் புதிய நடைமுறையைக் கடைப்பிடித்தவன் ஆகிறான். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றைச் சொன்னவனாகிறான்!

நபி(ஸல்) அவர்கள் உளூ, தொழுகை, தர்மம், நோன்பு, ஹஜ் போன்ற இபாதத் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிய பொழுது நிய்யத்தை நாவால் சொன்னதில்லை. நிய்யத்- எண்ணத்திற்கான இடம் மனதே தவிர. நாவல்ல என்பதனால்!

மனிதனின் உள்ளத்தில் எழுகிற எல்லா எண்ணங்களையும் அல்லாஹ் அறிகிறான். அவனுக்குத் தெரியாததென்று உலகில் எதுவுமே இல்லை.

மேற்சொன்ன வசனம் ஒன்றில் இறைவன் குறிப்பிடுவது போன்று: ‘உங்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் மறைத்தாலும் சரி, வெளிப்படுத்தினாலும் சரி அல்லாஹ் அவற்றை அறிகிறான்’

அனைத்து வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுகிற பொழுதும் மனத்தில் எண்ணத்தூய்மை அதாவது, அல்லாஹ்வுக்காக மட்டுமே நிறைவேற்றுகிறோம் என்கிற வாய்மை நிலை இருக்க வேண்டும். அவனது திருப்பொருத்தத்தையும் மறுமை வெற்றியையும் தவிர வேறெந்த உலகாயத நோக்கமும் மனத்தில் இருக்கக் கூடாது.

மேற்சொன்ன இன்னொரு வசனம் இதையே குறிப்பிடுகிறது : தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரிதாக்கியவர்களாய்… அவனை வழிபட வேண்டும் என்றுதான் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது! அதாவது தங்களது அமல்களை அவனுக்கு மட்டுமே சமர்ப்பித்தவர்களாய்.

எல்லா வணக்கவழிபாடுகளிலும் நிய்யத் – மனத்தில் நினைத்தல் இணைந்திருப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, உளூ செய்கிற பொழுது – அல்லாஹ்வுக்காகச் செய்கிறோம். அவனது கட்டளைக்குக் கீப்படிந்து செய்கிறோம் எனும் எண்ணம் இருக்க வேண்டும்.

ஆக, எந்த வழிபாடானாலும் மூன்று விஷயங்களை மனத்தில் நினைக்க வேண்டும். 1) அந்த வழிபாட்டை நினைப்பது 2) அதை அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றுவதாக நினைப்பது 3) அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நிறைவேற்றுவதாக நினைப்பது. -இதுவே நிய்யத்தின் நிறைநிலை! தொழுகையிலும் ஏனைய எல்லா வழிபாடுகளிலும் நிய்யத் இவ்வாறே அமைந்திட வேண்டும்.

வாய்மையும் நாமும்

சில பொழுது மனிதன் செய்யும் ஒருசெயல் மக்களின் பார்வையில் நல்ல செயலாகத் தெரியலாம். ஆனால் அதனைச் செய்யத் தூண்டிய அவனது எண்ணம் கெட்டதாக இருப்பதால் அல்லாஹ் அந்தச் செயலை ஏற்றுக் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் எண்ணமானாலும் அல்லாஹ்வுக்குத் தெரியாதது எதுவுமே இருக்க முடியாது. அவன் எல்லாம் அறிபவன்!

நிய்யத் எனும் எண்ணத்தின் அடிப்படையில்தான் மறுமை நாளில் நற்கூலி அல்லது தண்டனை வழங்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: ‘திண்ணமாக (இறைவனாகிய) அவன் மனிதனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கிறான். எந்நாளில் உள்ளத்தின் இரகசியங்களெல்லாம் சோதனையிடப்படுமோ அந்நாளில் மனிதனிடம் எந்த சுயவலிமையும் இருக்காது. அவனுக்குத் துணைபுரிபவர் எவரும் இருக்கமாட்டார்! (86 : 8, 11)

இது மறுமையில்! ஆனாலும் இவ்வுலகில் மனிதர்கள் நடத்தப்படுவது அவரவரின் வெளிப்படையான நிலைகளுக்கு ஏற்பவே!

இந்த வெளிப்படையான நிலைகள் அந்தரங்கமான நிலைகளுக்கு ஏற்ப அமைந்தால் அவனது அகமும் புறமும் சீர்பெறுகின்றன. மாறாக புறத்தின் நிலை ஒன்று, அகத்தின் நிலை வேறொன்று என்றிருந்தால் உள்நோக்கம் தீயதாக இருந்தால் அது பேரிழப்பாகவே முடியும்.

ஆம், மனிதன் எவ்வளவோ அமல்கள் செய்கிறான். கஷ்டப்படுகிறான். ஆனாலும் நிய்யத் – உள்நோக்கம் சீராக இல்லாததால் அவன் செய்த அமல்களின் மூலம் யாதொரு நற்பேறும் அவனுக்குக் கிடைப்பதில்லை.

அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் அருளியது போன்று: மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட பிற கடவுள்களை என்னுடன் இணை சேர்ப்பதை விட்டும் நான் மிகவும் தேவையற்றவன். ஒருவன் ஓர் அமல் செய்து அதில் பிறிதொருவனையும் என்னுடன் இணையாக்கினால் அவனது இணைவைப்புச் செயலை அவனோடு விட்டு விடுகிறேன். ஏற்றுக் கொள்வதில்லை’ (முஸ்லிம்)

எனவே நிறைவேற்றும் ஒவ்வொரு வழிபாட்டையும் இக்லாஸ் எனும் வாய்மையுடன் நிறைவேற்றுவதில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஓர் இறைவழிபாட்டை அறப்பணியை நாம் நிறைவேற்ற நாடும்பொழுது ஷைத்தான் வந்து, நீ முகஸ்துதிக்காகவே செயல்படுகிறாய் என்று உள்ளத்தில் ஊசாட்டம் ஏற்படுத்தி, அதன் மூலம் நமது செயலூக்கத்தை குன்றிடச் செய்ய முனையலாம். அவனது ஊசாட்டத்தை நாம் பொருட்படுத்தக் கூடாது. ஷைத்தானின் சூழ்ச்சி வலைக்கு ஆளாகி அந்த அமலை விட்டு விடக்கூடாது. நல்ல அமல்களை நற்பணிகளை வாய்மையுடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். முகஸ்துதிக்காகவா இந்த அமலை இப்பொழுது நீங்கள் செய்கிறீர்கள் என்று யாரேனும் கேட்டால் இல்லை என்று தானே சொல்வோம்! அப்படியாயின் ஷைத்தான் ஏற்படுத்துகிற ஊசாட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.