ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!

தமிழில்: K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி, வெளியீடு: இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா (யுனிகோட் தமிழில்)

பதிப்புரை:

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் பொழியட்டுமாக!

இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்!

மனிதனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழச் செய்து மரணத்திற்குப் பின்னர் நாளை மறுமையில் அவனுக்கு, அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுத் தந்து அருட்பேறுகள் நிறைந்த சுவனபதிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் இனிய நெறிதான் – இறைமார்க்கம்தான் இஸ்லாம்!

இத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை இவ்வுலகத்தாருக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் எனும் மகத்தான வேதத்தையும் அவர்களுக்கு வழங்கினான்.

திருக்குர்ஆனும் திருநபி(ஸல்) அவர்கள் அருளிச்சென்ற ஹதீஸ்களும் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் இரு மூலாதாரங்களாகும்!

இறைவன் தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முழுமையான அறிவு ஞானத்துடன் பேசச் செய்தான். நாளும் பொழுதும் அப்படி அவர்கள் நவின்ற நல்வாக்குகள்தான் ஹதீஸ்கள் என்கிற பொன்மொழிகள். அவை யாவும் தூய்மையானவை. பாதுகாக்கப்பட்டவை! குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:

‘அவர் மன இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, (அவர் மீது ) இறக்கியருளப்பட்ட வஹியே தவிர வேறில்லை!’ (53 : 3-4)

நபிகளார் மொழிந்தவை மட்டுமல்ல, அவர்கள் செய்தவையும் செய்வதற்கு அனுமதி அளித்தவையும் – அனைத்தும் ஹதீஸ்களின் கீழ் வருபவைதான். இம் மூவகை ஹதீஸ்களும் குர்ஆனுக்கு அழகியதொரு விரிவுரையாகவும் அதன் உன்னத கருத்துக்களையும் உயர் இலட்சியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளன.

ஆம்! அகிலத்திற்கோர் அருட்கொடையாய், அழகிய முன்மாதிரியாய் அனுப்பப்பட்ட, நற்குணத்தின் மிக உன்னத நிலையில் நின்று வாழவும் வழிகாட்டவும் செய்த பூமான் நபியவர்களின் பாக்கியம் நிறைந்த ஹதீஸ்கள்-

  • வானுலகத்து வஹி அருளிய தெளிந்த நீரோடை மூலம் இப்புவி வாழ் மக்களுக்குப் புது வாழ்வு நல்கின. நல்கிக் கொண்டே இருக்கின்றன!

  • மனித வாழ்வின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து மிகச் சிறந்த பண்பாட்டைத் தோற்றுவிக்கக்கூடிய நன்நெறிகளையும் நல்லொழுக்கங்களையும் அவற்றிற்குத் தேவையான அறிவுரைகளையும் ஞானங்களையும் அளித்தன. அளித்துக் கொண்டே இருக்கின்றன!

  • வாய்மையும் தூய்மையும் மிக்க வணக்க வழிபாடுகளையும் அவற்றின் ஒழுங்கு முறைகளையும் வழங்கின. வழங்கிக் கொண்டே இருக்கின்றன!

சுருங்கக்கூறின், எத்தகைய தூய்மையான வணக்க வழிபாட்டை, நேர்மையான வாழ்க்கையை மனிதனிடம் இருந்து இஸ்லாம் விரும்புகிறதோ அதற்கேற்ப அல்லாஹ்வின் அருள் வேதமாகிய அல்குர்ஆனின் கருத்துக் கருவூலங்களை வெளிக்கொணரும் அள்ளக் குறையாத அறிவுச் சுரங்கமே அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள்!

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களாகிய ஸஹாபாப் பெருமக்கள் திருக் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருந்தார்கள். அவ்விரண்டின் அடியொற்றியே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல குர்ஆனையும் ஹதீஸ்களையும் மனனம் செய்தார்கள். ஆய்வு செய்தார்கள், தொகுத்துப் பாதுகாத்தார்கள். தொல்லுலகெங்கும் பரப்பிடப் பாடுபட்டார்கள்.

அல்லாஹ்வின் பேருதவியினால், எல்லாக் காலத்திலும் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், மார்க்க அறிஞர்கள், மாமேதைகள் அனைவரின் கருத்திலும் கவனத்திலும் அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள் இடம்பெற்றன. அனைவரின் வாழ்வையும் பண்படுத்தின. ஹதீஸ்களை மனனம் செய்வதும் ஆராய்வதும் அவற்றிற்கு நூல் வடிவம் கொடுப்பதும் இவ்வுலகில் தொடர் பணிகளாயின. பல்வேறு கோணங்களில் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு முஸ்னத்களிலும் ஸிஹாஹ்களிலும் ஸுனன்களிலும் முஃஜம்களிலும் வரிசைப்படுத்தப்பட்டன.

இத்தகைய பணிகளில் பங்கு பெற்றவர்களுள் ஒருவர்தாம் இமாம் அபூ ஜகரிய்யா யஹ்யா ஷரஃப் அந் நவவி (ரஹ்) அவர்கள். (631 – 676) இவர்கள் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் புகழ் மிக்க மாமேதைகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவை யாவும் மக்களின் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன. மார்க்க அறிஞர்கள் அந்நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர். தாங்களும் பயன் பெற்றனர். மக்களுக்கும் பயனளித்தனர்.

இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் – பண்டிதர் அனைவரிடையேயும் அறிமுகமான நூல்தான் ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்.

அனைத்துத் தரப்பு மக்களிடையும் இத்தொகுப்பு அதிக அளவு புகழ் பெற்றதற்குக் காரணம், இந்நூல் வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய சீரான அறிவுரைகளைத் தனித்தனித் தலைப்புகள் அமைத்துச் சிறப்பாய் வழங்குகிறது என்பதுதான்.

இஸ்லாத்தின் நன்நெறிகளிலும் நற்குணங்களிலும் நல்லார்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் குர்ஆன் வசனங்களை மணிமகுடமாகச் சூட்டி ஆர்வமூட்டுதல், அச்சுறுத்துதல் எனும் இரு அம்சங்களைக் கொண்ட ஹதீஸ்களையும் அணிகலன்களாக அணிவித்துப் பார்ப்போரும் படிப்போரும் கேட்போரும் இன்புறும் வகையில் அறிவுக்கு அருசுவை விருந்தொன்றை இந்நூல் படைத்துத் தருகிறது!

பள்ளிவாசல் இமாம்கள் தொழுகைக்குப் பின்னர் அல்லது முன்னர் இந்நூலைப் படித்துக் காட்டுவதும் மக்கள் அனைவரும் நல்லார்வத்துடன அதனைச் செவிமடுப்பதும் உலகின் பலநாடுகளிலும் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுவதே இதற்குச் சான்றாகும்.

சமகால அறிஞர்களிடையே கல்வி ரீதியில் ஓர் ஒளிமிக்க உன்னத இடத்தை இமாம் நவவி (ரஹ்)அவர்கள் பெற்றிருந்ததும் ஒரு காரணமாகும். அந்த அளவுக்கு ஆழமான அறிவு ஞானமும் நபிமொழியின் இலக்கினைத் துல்லியமாகப் புரிந்து கொள்கிற – புரிய வைக்கிற ஆற்றலும் அவர்களிடம் நிறைந்திருந்தன.

இவ்வாறாக இந்த ரியாளுஸ்ஸாலிஹீன் நூல், ஏனைய நபிமொழித் தொகுப்புகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்து விளங்குவதை நாம் காணலாம்! உண்மையில் இந்நூல் சொற்பொழிவாளர்களின் துணைவன். அறிவுரை பெறுவோர்க்கு ஓர் அரிய கருவூலம்! நடைபயில்வோருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு! உத்தமர்களின் பூங்காவனம்!

ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்புக்கு – சுவூதி அரேபியாவின் உனைஸா மாநகரைச் சேர்ந்த, அண்மையில் காலமான அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாய் இருந்தார்கள். இமாமாகவும் கத்தீபாகவும் அவர்கள் பணியாற்றிய உனைஸா பெரிய பள்ளிவாசலில் நாள்தோறும் தொழுகைக்குப் பிறகு இந்நபிமொழிகளுக்கு விரிவான விளக்கத்துடன் அழகியதோர் உரையினை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவை யாவும் சுமார் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன!

உனைஸா இஸ்லாமிக் சென்டரில் இரவு நேர ஹதீஸ் வகுப்புகளில் கலந்துகொண்ட தமிழ் அன்பர்கள், ஷைகு முஹம்மத் (ரஹ்) அவர்களின் விரிவுரை நூலை அடிப்படையாகக் கொண்டு நான் அளித்த விளக்கங்களைக் கேட்டதும் இவற்றைத் தமிழில் நூலாகத் தொகுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்று விரும்பினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவே இந்நூலை நான் எழுதத் தொடங்கினேன்.

அல்லாஹ்வின் பேருதவியினால் இப்பொழுது முதல் பாகம் நிறைவு பெற்று உங்கள் கைகளில் மலர்ந்துள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

தமிழ்நாட்டிலுள்ள மகளிர் மத்ரஸாக்களில் ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு பாடநூலாக இடம் பெற்றுள்ளது. ஆகையால் மாணவிகளின் பயன்பாடு கருதியே ஒவ்வொரு ஹதீஸ் தெளிவுரைக்கும் பொருத்தமான தலைப்பும் இறுதியில் அறிவிப்பாளர் அறிமுகமும் அரபியிலும் தமிழிலும் அருஞ்சொல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த முதல் பாகத்தில் 59 நபிமொழிகளின் தெளிவுரையே இடம் பெற்றுள்ளது. இமாம் நவவி(ரஹ்) அவர்கள் தங்களது தொகுப்பை பதினேழு அத்தியாயங்களாக அமைத்து 265 பாடங்களும் 1897 நபிமொழிகளும் இடம்பெறச் செய்துள்ளார்கள்! இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து இப்பணியை நிறைவு செய்ய நாடியுள்ளேன். அதற்கான கால அவகாசத்தையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் யாசிக்கிறேன்!

இந்நூல் வெளிவருவதற்கு தக்க ஆலோசனைகள் கூறி உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

அபூ காலித் உமரி

உனைஸா 11 – 2 – 2002

ஹதீஸ் கிரந்தங்கள் – ஒரு பார்வை

அல் ஜாமிஉ: இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல். எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி

அஸ் ஸிஹாஹ்: ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

அஸ் ஸுனன்:
ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான ஹதீஸ்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். எடுத்துக்காட்டாக, ஸுனன் அபீ தாவூத், ஸுனன் நஸாஈ

அல்முஸ்னத்: ஸஹாபிகளின் நபிமொழி அறிவிப்புகள் அனைத்தும் அவரவரின் பெயரில் வரிசையாய்த் தொகுக்கப்பட்டுள்ள – அல்லது பிரபலமான ஓர் இமாமின் அறிவிப்புகள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டுள்ள நூல். எடுத்துக்காட்டாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் முஸ்னத்

அல்முஃஜம்: அறிவிப்பாளர்களின் பெயர்கள் அல்லது ஷைகுகளின் பெயர்களை அனுசரித்து அரபி எழுத்துக்களின் வரிசைப்படி ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட நூல்கள். எடுத்துக்காட்டாக, தபரானியின் முஃஜமுஸ் ஸஃகீர், முஃஜமுல் கபீர்

அல் ஜுஸ்வு: குறிப்பிட்டதொரு ஃபிக்ஹ் சட்டம் தொடர்பான ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்ட நூல். எடுத்துக்காட்டாக, இமாம் புகாரி அவர்களின் ஜுஸ்வு ரஃப்இல் யதைன் தொழுகையில் ருகூவுக்குப் பிறகு கைகளை உயர்த்துதல்


இமாம் நவவி அவர்களின் வரலாறு!

இமாம் ஹாபிழ் முஹ்யித்தீன் அபூ ஜகரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந் – நவவி ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், ஷாம் தேசத்துச் சிற்றூர்களில் ஒன்றான நவா என்னும் ஊரில் பிறந்ததால் நவவி (நவாவைச் சேர்ந்தவர்) என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்கள். அவர்களின் இயற்பெயர் யஹ்யா. முஹ்யித்தீன் என்பது பட்டப்பெயர். அபூ ஜகரிய்யா என்பது குறிப்புப் பெயர்.

பிறப்பும் கல்வியும்

இமாம் நவவி அவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 631 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம். பத்து வயதிலேயே குர்ஆனை முழுமையாகக் கற்று மனப்பாடம் செய்த பிறகு தங்கள் ஊரிலேயே கல்வியில் சிறந்த ஆசிரியர்களிடம் அரபி இலக்கணம், இலக்கியம், நபிமொழிகள், அறிவிப்பாளர்கள் வரலாறு மற்றும் ஃபிக்ஹுச் சட்ட விளக்கம் போன்ற பல்வேறு கலைகளைக் கற்றார்கள்.

மராக்குஷ் மாநகரத்தைச் சேர்ந்த ஷைக் யாஸீன் பின் யூசுப் அவர்கள் ஒருதடவை நவா என்கிற அந்தச் சிற்றூருக்குச் சென்றிருந்தபொழுது ஒரு காட்சியைக் கண்டார். சிறுவர் யஹ்யாவை சம வயதுடைய சிறுவர்கள் விளையாட வருமாறு வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு விளையாட்டில் ஆர்வமில்லை., அதிகமாக வற்புறுத்தியதால் அழுதுகொண்டே அவர்களை விட்டும் ஓடுகிறார். எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்று ஷைக் யாஸீன் பின்தொடர்ந்த பொழுது வீட்டிற்குச் சென்று குர்ஆனை எடுத்து ஓதினார் சிறுவர் யஹ்யா. உடனே அவரது தந்தை ஷரஃப் அவர்களைச் சந்தித்து, ‘உங்கள் புதல்வரைக் கல்வி கற்பதிலேயே முழுமையாக ஈடுபடுத்துங்கள். இதோ! இந்தச் சிறுவயதில் விளையாட்டில்கூட ஆர்வம் இல்லாமல் குர்ஆன் ஓதுகிறரர் உங்கள் புதல்வர்’ என்று கேட்டுக் கொண்டார்! தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டுத் தம் புதல்வரின் படிப்புக்காக எல்லா உதவிகளும் செய்தார்!

சிறுவர் யஹ்யா அவர்கள், தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் சேர்ந்து கல்வி கற்பதற்காக ஹிஜ்ரி 649 ஆம் ஆண்டு தம் தந்தையுடன் திமிஷ்க் மாநகரம் வந்து அங்கு கிழக்குத் திசையில் உமையா மஸ்ஜிதுடன் இணைந்த கட்டிடமான மத்ரஸா ரவாஹிய்யாவில் தங்கி கல்வி கற்றார்கள்.

கல்விப் பணி

இமாம் நவவி (ரஹ்) அவர்கள், ஹிஜ்ரி 665 ஆம் ஆண்டு திமிஷ்கில் புகழ்பெற்ற கல்விக்கூடமாகிய தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்கள். அங்கு ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் கிடைத்ததுதான். ஆயினும் இமாம் நவவி அவர்கள் எவ்வித ஊதியமும் பெற்றுப் பயனடையவில்லை. என்ன செய்தார்கள்? ஒவ்வொரு மாத ஊதியத்தையும் மத்ரஸா நிர்வாகியிடமே சேமித்து வருவார்கள். ஓராண்டில் பெருந்தொகை ஒன்று சேர்ந்ததும் ஏதேனும் சொத்து வாங்கி அதனை மத்ரஸா பெயரில் வக்ஃப் செய்து விடுவார்கள். அல்லது நூல்கள் வாங்கி அங்கிருந்த நூலகத்திற்கு கொடுத்து விடுவார்கள். தேவையான பண உதவியை அவர்களின் தந்தை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆடைகள் தேவையெனில் தங்கள் தாயாரிடம் இருந்து தருவித்துக் கொள்வார்கள்.

யாரேனும் அன்பளிப்போ சன்மானமோ வழங்கினால் அந்த நபர் மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தால் மட்டுமே – அந்த அன்பளிப்பு தமக்குத் தேவை என்றால்தான் பெற்றுக் கொள்வார்கள். மரணம் அடையும் வரையில் தாருல் ஹதீஸ் மத்ரஸாவிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.

பேணுதலான – தூய வாழ்வு

வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறுவது இதுதான்: இமாம் நவவி (ரஹ்)அவர்கள் உலகப் பற்றில்லாத – பேணுதலான வாழ்வை மேற்கொள்பவர்களாக இருந்தார்கள்! கல்விப்பணியில் முழுஈடுபாடு கொண்டிருந்ததுடன் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதிலும் நன்மையைக் கடைப் பிடிக்குமாறு ஏவுதல் – தீமையைத் தடுத்தல் போன்ற பெரும் பணிகளிலும் நல்லார்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்கள். இதேபோல் ஆட்சியாளர்களின் தவறான போக்கைத் தக்க முறையில் கண்டிப்பதற்கும் அவர்கள் தயங்கியதில்லை.

இமாம் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பியதில்லை. எளிய உணவுகள், எளிமையான ஆடைகளிலேயே வாழ்வைக் கழித்தார்கள். திருமணத்திலும்கூட அவர்களது மனம் நாட்டம் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு கல்விப் பணியில் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்!

நடுத்தரமான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருந்து திமிஷ்க் மாநகரம் சென்ற இமாம் அவர்களை எல்லா வசதி வாய்ப்புகளும் தேடிவந்தன! இளமையின் வசந்த காலத்தில் – அனைத்து ஆரோக்கியமும் சக்தியும் நிரம்பி இருந்தும்கூட அவர்கள் இன்ப வாழ்வையும் வசதிவாய்ப்புகளையும் – கல்விப் பணிக்காகவே தியாகம் செய்துவிட்டு சாதாரணமான – எளிய வாழ்க்கையிலேயே மனநிறைவு கண்டார்கள்!

எழுத்துப் பணி

இமாம் அவர்கள் எழுதிய முக்கியமான நூல்களில் சில: ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரை, அல் மஜ்மூஃ (அல் முஹத்தஃப் விரிவுரை), ரியாளுஸ் ஸாலிஹீன், அல் அத்கார், அல் அர்பஈனுந் நவவிய்யா, தஹ்தீபுல் அஸ்மா வல் லுகாத், அல் மின்ஹாஜ் – இவை தவிர இன்னும் ஏராளமான நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள்.

மரணம்

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் நிறைவேற்றிய ஹஜ் இரண்டு. மரணம் அடைவதற்கு சில காலம் முன்பு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். வக்ஃப் நிர்வாகத்தில் இருந்து எடுத்த எல்லா நூல்களையும் திரும்ப ஒப்படைத்தார்கள். தங்கள் ஆசிரியர்களின் மண்ணறைகளைத் தரிசித்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் அழுது அழுது பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் நண்பர்களையெல்லாம் சந்தித்து விடை பெற்றார்கள். பிறகு தங்கள் தந்தையின் கப்றை ஜியாரத் செய்துவிட்டு பிறகு பைத்துல் முகத்தஸ் மற்றும் கலீல் ஆகிய இடங்களையும் ஜியாரத் செய்தார்கள். பிறகு நவா திரும்பி அங்கே பிணியுற்ற இமாம் அவர்கள் ஹிஜ்ரி 676 ஆம் ஆண்டு ரஜப் பிறை 24 இல் மரணம் அடைந்தார்கள்!

இதுவே இலட்சியத்தை அடையும் பாதை! – இமாம் நவவி அவர்களின் முன்னுரை

அளவிலாக் கருணையும் நிகரிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்)

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனித்தவன். அனைத்தையும் அடக்கியாளுபவன். யாவரையும் மிகைத்தவன். பெரும் மன்னிப்பாளன். பகலின் மீது இரவைச் சுற்றிவரச் செய்பவன். இவ்வாறு செய்வதன் நோக்கம், – இதயமும் அகப்பார்வையும் உடையோர்க்கு ஓர் நினைவூட்டியாகவும் – அறிவும் சிந்தனையும் உடையோர்க்கு ஓர் அறிவுரையாகவும் படிப்பினையாகவும் அது திகழ வேண்டும் என்பதுதான்!

தனது படைப்பினமாகிய மனிதர்களில் (தனது தீனுக்காக) யாரை அவன் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு விழிப்புணர்வூட்டினான். உலகில் அவர்களைப் பற்றற்றவர்களாய் ஆக்கினான். மேலும் தனது கண்காணிப்பு குறித்து அஞ்சவும் சதாவும் தன்னை நினைவு கூர்ந்து கொண்டிருக்குமாறும் அவர்களைச் செய்தான். (பேரண்டத்தில் பரவியுள்ள இறைச் சான்றுகளிலிருந்து) தக்க படிப்பினைகள் பெற்று அவனை நினைவு கூர்ந்து சதாவும் அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் நிலையான மறுமை வீட்டிற்காகத் தயாரிப்புச் செய்யவும் அவர்களுக்கு நல்லருள் புரிந்தான். மேலும் இரட்சகனுக்குக் கோபமூட்டுகிற – நரகத்திற்குரியவர்களாய் அவர்களை ஆக்கக்கூடிய தீமைகள் குறித்து அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்தான். எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள், காலநிலைகள் வந்தாலும் சரியே! தன்னுடைய நேர்வழியில் நிலைத்திருக்க அவர்களுக்கு நல்லருள் புரிந்தான்.

அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். பொருளாழமிக்க, தூய புகழாக, ஒருங்கிணைந்த, வளமிக்க புகழாக! (புகழ்கிறேன்)

மேலும் திண்ணமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை என்று சாட்சி சொல்கிறேன். அவன் உபகாரி. கண்ணியமிக்கவன். பரிவுமிக்கவன். கருணையாளன்! மேலும் திண்ணமாக முஹம்மத் நபியவர்கள் அல்லாஹ்வின் அடியார். தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்கள், அல்லாஹ்வின் அன்புக்குரியவராகவும் அவனுடைய நேசராகவும் நேரான வழியின் பக்கம் வழிகாட்டக் கூடியவராகவும் செம்மையான மார்க்கத்தின் பால் அழைக்கக் கூடியராகவும் திகழ்கிறார்கள்.

அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் ஈடேற்றமும் அவர்கள் மீதும் அனைத்து நபிமார்கள் மீதும் அவர்கள் அனைவரின் குடும்பத்தினர் மீதும் நல்லோர்கள் அனைவர் மீதும் பொழியட்டுமாக!

இறைப் புகழுக்கும் நபி ஸலவாத்துக்கும் பிறகு சொல்லவருவது என்னவெனில்-

அல்லாஹ் கூறுகிறான்: ‘ஜின்களையும் மனிதர்களையும் நான் படைத்தது, அவர்கள் என்னை வணங்கி வழிபட வேண்டும் என்பதற்காகத்தான். நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றும் நான் நாடவில்லை’ (51: 56-57)

திண்ணமாக மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் இறைவழிபாடு தான் என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. எனவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் உலகின் வசதி வாய்ப்புகளைப் புறக்கணித்துப் பற்றற்ற நிலையை மேற்கொள்வதும் அவர்களுக்குக் கடமையாகி விட்டது!

ஏனெனில், இது அழியும் உலகமே தவிர நிலைத்திருக்கும் வீடல்ல. கடந்து செல்லும் வாகனமே தவிர இன்பம் துய்க்கும் இல்லமல்ல! வற்றும் நீரோடையே தவிர நிலையாகத் தங்கும் நாடல்ல!

இதனால்தான் உலகில் வாழும் மக்களில் விழிப்புணர்வு அடைந்தவர்கள் இறைவனை வணங்கி வழிபடுவோராய் உள்ளனர். அறிவிற் சிறந்த மக்கள் உலகப் பற்றில்லாதவர்களாய் இருக்கின்றனர். அல்லாஹ் கூறுகிறான்:

‘(எந்த உலக வாழ்வின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: வானத்திலிருந்து மழையை இறக்கினோம். பின்னர் அதன் மூலம்- மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாய் வளர்ந்தன. இவ்வாறாக, பூமி அழகாகவும் செழுமையாகவும் காட்சியளிக்கத் தொடங்கியபோது – அதன் பலனை அடைந்திட தங்களுக்கு ஆற்றலுள்ளதென அதன் உரிமையாளர்களும் எண்ணியபொழுது திடீரென இரவிலோ பகலிலோ நம்கட்டளை அங்கு வந்தது. நேற்றைய தினம் எதுவும் விளைந்திருக்காதது போன்று அதனை நாம் முற்றாக அழித்து விட்டோம். சிந்தித்துணரும் மக்களுக்குச் சான்றுகளை இவ்வாறு தெளிவாக விளக்குகிறோம்’ (10 : 24) – இந்தக் கருத்தில் இறைவசனங்கள் ஏராளமாய் உள்ளன. ஒரு கவிஞர் ஓர் அழகிய கவிதை பாடினார்:

கூரறிவு பெற்றஇறை அடியாரிங்கே

கொடுத்திட்டார் மணவிலக்கு உலகத்திற்கே!

பாருலக வாழ்வினிலே பயந்தார் குழப்பம்!

பகுத்தாய்ந்தார்., உலகத்தின் உண்மை பற்றி!

யாருக்கும் இவ்வுலகு நிலைதளமில்லை

என்றறிந்து ஆழ்கடலாய் அதனை ஆக்கி

சீரமல்களைக் கப்பல்களாய்ச் செலுத்தினார்கள்!

சிறப்புடனிறையருள் பெற்றே வென்றார் உலகில்!

எனவே உலகத்தின் யதார்த்த நிலை நான் விளக்கியதாகவே இருக்கும் பொழுது – நமது நிலையும் நாம் படைக்கப்பட்டதன் நோக்கமும் சற்றுமுன் நான் எடுத்து வைத்ததாகவே இருக்குமாயின் அறிவும் பருவ வயதும் உடைய ஒவ்வொருவரின் கடமை இதுதான்: சான்றோர் சென்ற வழியிலேயே அவர் தன்னைச் செலுத்த வேண்டும். அகப்பார்வையும் விவேகமும் உடைய மக்களின் பாதையிலேயே அவரும் நடைபோட வேண்டும்., மேலும் நான் எதைச் சுட்டிக் காட்டினேனோ அதற்கு அவர் தயாராக வேண்டும். எதைக் குறித்து எச்சரிக்கை செய்தேனோ அதைக் குறித்து அவர் அக்கரை கொள்ள வேண்டும்!

இந்த விஷயத்தில் மிகவும் சரியான வழி – இலட்சியத்தின் பால் கொண்டு சேர்க்கும் மிகவும் சீரான பாதை எதுவெனில், நம்முடைய நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் அருளியதாக ஆதாரப்பூர்மாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களை எடுத்து நடப்பதுவே! – அவர்கள் முன்னோர், பின்னோர்களின் தலைவர். முற்கால, பிற்காலமக்கள் அனைவரினும் கண்ணியமிக்கவர்கள்! அல்லாஹ்வின் ஸலவாத் (வாழ்த்துரை) களும் ஸலா(ம் ஈடேற்ற)மும் அவர்கள் மீதும் அனைத்து நபிமார்கள் மீதும் பொழியட்டுமாக!

அல்லாஹ் கூறுகிறான்: ‘நன்மையான காரியத்திலும் இறையசச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்’ (6 : 2) மேலும் நபி(ஸல்) அவர்கள் அருளியதாக ஆதாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது:

‘ஒருமனிதன் தன் சகோதரனுக்கு உதவி செய்வதில் ஈடுபட்டிருக்கும் காலெமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்’

‘எவர் நற்காரியத்திற்கு வழிகாட்டினாரோ அவருக்கு அதனைச் செய்தவர் பெறுவது போன்ற கூலி உண்டு’

‘எவர் நேர்வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு -அவரைப் பின்பற்றியவர்கள் பெறும் நற்கூலிகளைப்போல் கிடைக்கிறது. அவர்களின் கூலிகளில் எதையும் அது குறைத்து விடாது’

அலீ (ரலி) அவர்களை நோக்கி நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களின் மூலமாக அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது செந்நிற ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும்’

(இந்த குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில்) எனது சிந்தனை சென்றது. அதாவது, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் சுருக்கமான தொகுப்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்., படிப்போருக்கு மறுமைக்கான பாதையாக அமையும் கருத்துகளை உள்ளடக்கியதாகவும் – அகத்தையும் புறத்தையும் சீர்படுத்தக்கூடிய -நல்லொழுக்கங்களை வழங்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாகவும் அது திகழவேண்டும். மேலும் ஆர்வம் ஊட்டுதல், அச்சுறுத்தல் மற்றும் சான்றோர்களின் நெறிமுறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்ததாகவும் அது திகழ்ந்திட வேண்டும். உலகப் பற்றின்மை தொடர்பான நபிமொழிகளுடன் – மனப்பயிற்சி, குணவொழுக்கம், உள்ளங்களைத் தூய்மைப் படுத்துதல், அவற்றின் நிவாரணம், உறுப்பு (களின் செயல்பாடு)களைப் பாதுகாத்தல், அவற்றின் பாதிப்புகளை எடுத்துரைத்தல் மற்றும் இறைவனைப் பற்றி நன்கறிந்த மேலோர்களின் இலட்சியங்கள் ஆகிய அனைத்தையும் அந்த ஹதீஸ் திரட்டு உள்ளடக்கியிருக்க வேண்டும் (என்று நாடினேன்)

இந்நூலில் ஒரு நியதியை நான் கடைப்பிடிக்கிறேன். அதாவது தெளிவான, ஆதாரப்பூர்வமான நபிமொழியை மட்டும்தான் நான் சொல்வேன். அதுவும் ஆதாரப்பூர்வமான நூல்களென்று பிரபலமான நபிமொழித் தொகுப்பு ஒன்றுடன் அது இணைத்துச் சொல்லப்படும். பாடங்களின் தொடக்கத்தில் சங்கைமிகு குர்ஆனின் திருவசனங்களைக் கூறுவேன். உச்சரிப்பு தேவை எனும் பொழுது – உள்ளடங்கிய அர்த்தத்துக்கு விளக்கம் தேவை எனும் இடத்தில் நுணுக்கமான, எச்சரிக்கையான விளக்கத்தை அணிவிக்கிறேன். நபிமொழியின் முடிவில் முத்தஃபகுன் அலைஹ் என்று நான் கூறினால் அதன் பொருள், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் இருவரும் இந்த நபிமொழியை அறிவித்துள்ளார்கள் என்பதாகும்.

இந்நூல் நிறைவடைந்தால், கவனத்துடன் படிப்போருக்கு நன்மைகளின் பக்கம் வழிநடத்திச் செல்லக் கூடியதாக இந்நூல் திகழும் என்றும் எல்லா வகையான தீமைகள் – நாசகார பாவங்களை விட்டும் அவர்களைத் தடுக்கும் என்றும் நான் ஆதரவு வைக்கிறேன்.

இந்நூலிலிருந்து பயன் பெறும் சகோதரரிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவெனில், அவர் எனக்காக துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டும்., மேலும் என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அன்பர்கள் அனைவருக்காகவும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது தான்.

நான் நம்பியிருப்பது கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வைத்தான். என் பணிகளை ஒப்படைத்திருப்பதும் அவனிடமே. நான் முழுவதுஞ் சார்ந்திருப்பதும் அவனையே! அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனே சிறந்த முறையில் பொறுப்பேற்பவன்! நன்மைகள் மீது சக்தி பெறுவதும் தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை! அவன் யாவரையும் மிகைத்தவன். நுண்ணறிவாளன்!

This entry was posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) and tagged . Bookmark the permalink.