முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்

பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது – அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.

பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருபால் உறவுக்காரர்களோ பெரும்பாலும் தங்களது சுய அடையாளத்தைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது.

சமூகத்தால் ஒதுக்கப்படுவோமோ, இழிவுபடுத்தப்படுவோமோ, தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவோமோ என்ற அச்சம் காரணமாகவே ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் தம்முடைய பாலியல் நாட்டத்தை வெளியில் சொல்லாமல் மூடிவைத்திருக்கின்றனர்.

ஆனால் தாம் உறவுக்காரர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கின்ற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறர்கள்.

பிரிட்டனில் நாஸ் என்ற அரசு சார தொண்டு நிறுவனம் தெற்காசிய பூர்வீகம் கொண்ட பிரிட்டிஷ் ஒருபால் உறவுக்காரர்களுக்கு உதவிவருகிறது.

தமது அமைப்பின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காகி விட்டது என்று நாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் குரெய்ஷி கூறினார்.

ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் – திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.

ஒரு சில இமாம்களும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.

பெருமளவில் வெளியில் வராமல் இருந்து விடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்களிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த இமாம்கள் ஏதோ ஒருவகையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.

நன்றி: BBC Tamil

மேலுள்ள செய்தி இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்த முஸ்லிம்களுக்கு நிச்சயம் பாரதூரமான செய்தியாகவே இருக்கும். இறை வேதத்தை அல்லாஹ் நாடிய அளவு கற்றவர்கள் நிச்சயம் இந்த செயல் இறை வரம்பை மீறுதல் என்றே கவலைக் கொள்வர். இந்த ஒருபால் சேர்க்கை செயலை சரிகாணும் இவர்கள் நிச்சயம் பெயரளவிலான முஸ்லிம்களே. சரி இஸ்லாத்தை விளங்கிய இமாம்கள் எவ்வாறு இதற்கு துணைப்போக முடியும்? நிச்சயம் இந்த இமாம்கள் லூத் (அலை) அவர்களின் மனைவியின் பண்பைச் சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.

இறை வேதமான குர்ஆனை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்காத காரணத்தினால் இறை வரம்பை மீறும் செயலை மக்களுக்கு ஷைத்தான் அழகாக்கி காட்டி வருகிறான். இதைக் கண்டும் காணாமல் நாம் இருந்து வருவோமானால் லூத் (அலை) அவர்களின் சமூகம் கண்ட அந்த கடினமான நாளை நிச்சயம் சந்திக்க வேண்டி வரும். இதன் தீமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு மதத்திற்கு அப்பாற்ப்பட்டு, சமூக நலன் நாடும் அனைவர் மீதும் கடமையாகும்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத் அலைஹிஸ்ஸலாம் எனும் நபியை அனுப்பி வைத்தான்.

இறைவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா? செய்கிறீர்கள்” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். (அல்குர்ஆன்: 7 : 80)

“நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக செல்கின்றீர்கள்! என்னே! நீங்கள் மிகவும் வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்!” என்று (லூத்-அலை) கூறினார்கள். (அல்குர்ஆன்:  7 :81)

“நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். “மிகவும் கடினமான நாள்” எனவும் கூறினார்.

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். “என் சமுதாயமே! இதோ எனது புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு தூய்மையானோர் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்கு கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன் கூட இல்லையா? என்று கேட்டார்.

“உமது புதல்விகளிடம் எங்களுககு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்!” என்றனர்.

“உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

“லூத்தே நாங்கள் உமது இறைவனின் தூதர்கள், அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக. உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா? என்றனர்.

நமது கட்டளை வந்த போது, அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை. (சூரத்துல் ஹுது வசனம் 77 தொடக்கம் 83 வரை)

எனவே இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக எவ்வாறான அழிவுகளை இச்சமுதாயத்தினர் பெற்றனர் என்பதனை இறைவன் நமக்கு ஓர் படிப்பினையாகக் கூறுவது மாத்திரமின்றி அவைகளை நாம் செய்ய முற்படுவோமாயின் அவ்வாறான தண்டனைகளையே நாம் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதனை நமக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , . Bookmark the permalink.