96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268

தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7269

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பாக ஏகத்துவ உறுதிமொழியைக் கூறினார்கள். பிறகு ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் (கூறுகிறேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக் கொண்டு உங்கள் தூதரை வழி நடத்தினானோ அதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்; நேர்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நேர் வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7270

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, ‘இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக் கொடுப்பாயாக’ என்று சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7271

அபூ பர்ஸா அல்அஸ்லமீ(ரலி) அறிவித்தார். அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் வாயிலாகவும் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாயிலாகவும் ‘தன்னிறைவு கொள்ளச் செய்தான்’ அல்லது ‘உயர்வாக்கினான்’.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: இவ்விடத்தில் ‘தன்னிறைவு கொள்ளச் செய்தான்’ என்றே இடம் பெற்றுள்ளது. ஆனால், ‘உயர்வாக்கினான்’ என்றே இருக்க வேண்டும். இதே தலைப்பிலுள்ள என்னுடைய தனி நூலின் மூலத்தில் காண்க.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7272

அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து (பின்வருமாறு) எழுதினார்கள்: நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறைப்படியும் என்னால் இயன்றவரை உங்கள் கட்டளைகளைச் செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7273

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பெற்று அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றியும் மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. (நேற்றிரவு) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என்னுடைய கையில் வைக்கப்பெற்றதை கண்டேன்.

இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்; நீங்கள் அவற்றை இயன்றவாறெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்’ அல்லது ‘நீங்கள் அவற்றைப் பருகிக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்று, அல்லது அதைப் போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7274

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் ‘நம்பியே ஆகவேண்டிய’ அல்லது ‘பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய’ நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7275

அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இந்தப் (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா இப்னு உஸ்மான்(ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள். உமர்(ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள், ‘நான் தங்கம் மற்றும் வெள்ளி எதையும் மக்களிடையே பங்கிடாமல் கஅபாவில் விட்டு வைக்கலாகாது என விரும்பினேன்’ என்று கூறினார்கள். நான், ‘உங்களால் அப்படிச் செய்ய முடியாது’ என்று கூறினேன். அவர்கள், ‘ஏன் முடியாது?’ என்று கேட்டார்கள். நான், ‘உங்கள் தோழர்கள் (நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவரும் அப்படிச் செய்யவில்லையே’ என்று சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், ‘அவ்விருவரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7276

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (‘அமானத்’ எனும்) நம்பகத் தன்மை வானிலிருந்து வந்து இடம் பிடித்தது. (அதற்கேற்ப) குர்ஆனும் அருளப் பெற்றது. குர்ஆனை மக்கள் படித்தார்கள். (அதிலிருந்து அதை அறிந்து கொண்டார்கள்.) மேலும், என்னுடைய வழிமுறையிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7277

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது என முர்ரா அல்ஹமதானீ(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7278-7279

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்’ என்று நபியவர்கள் சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7280

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7281

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றார். அதற்கு மற்றொருவர் ‘கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது’ என்று கூறினார். பின்னர் அவர்கள் ‘உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்றார். மற்றொருவர் ‘கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். பின்னர் அவர்கள் ‘இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை’ என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள், ‘இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்று சொல்ல, மற்றொருவர் ‘கண் தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். அதைத் தொடர்ந்து ‘அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் – கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டி விட்டார்கள்’ என்று விளக்கமளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் ‘(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறிவந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7282

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். இறைவேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள் (அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிகமாக முன்னுக்கு கொண்டு கொல்லப்படுவீர்கள். (அந்த நேர்பாதையை விடுத்து) வலப் பக்கமோ இடப்பக்கமோ (திசை மாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழிதவறிச் சென்று விடுவீர்கள். இதை ஹம்மாம் இப்னு அல்ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7283

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக் காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று ‘நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடிவந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். எனவே தப்பித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அப்போது அவரின் சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பி விட்டனர். அவரை நம்ப மறுத்தவர்கள் தம் இடத்திலேயே தங்கிவிட்டனர். எனவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர். இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டு வந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7284-7285

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறை மறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர் அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது.  அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!’ எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்யும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கி விட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், (கயிறு என்பதற்க பதிலாக) ‘ஒட்டகக் குட்டி’ என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7286

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா இப்னு பத்ர்(ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ் இப்னி ஹிஸ்ன்(ரலி) அவர்களிடம் த ங்கினார்கள். உமர்(ரலி) அவர்கள் தம் அருகே (தமக்கு நெருக்கமாக) வைத்துக் கொள்பவர்களில் ஒருவராக ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்கள் இருந்தார்கள். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும் (குர்ஆனையும் ஹதீஸையும்) கற்றறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையோராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா(ரலி) அவர்கள் தம் சகோதரருடைய புதல்வரிடம், ‘என் சகோதரர் மகனே! இந்தத் தலைவர் (உமர்(ரலி) அவர்களிடம் உனக்கு செல்வாக்கு உள்ளதா? அப்படி இருந்தால் நான் அவரிடம் செல்ல எனக்காக நீ அனுமதி பெற்றுத் தா’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘உமர்(ரலி) அவர்களிடம் செல்ல உங்களுக்காக நான் அனுமதி கோருகிறேன்’ என்றார். அவ்வாறே உயைனாவுக்காக ஹுர்ரு இப்னு கைஸ் அனுமதி கேட்டார்கள்.

உயைனா(ரலி) அவர்கள் உள்ளே சென்றவுடன், ‘கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை; எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’ என்றார். உடனே உமர்(ரலி) அவர்கள் கோபமடைந்து அவரை அடிக்க முன்வந்தார்கள். அப்போது ஹுர்ரு அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக நன்மை புரியுமாறு ஏவுவீராக. அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக’ (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறிவீனர்களில் ஒருவராவார்’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதி காட்டியபோது உமர் அதை மீறவில்லை. (பொதுவாகவே) உமர் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படுபவர்களாய் இருந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7287

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நான் (என் சகோதரி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். (அவர்களுடன்) ஆயிஷாவும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். நான் ‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் கையால் வானத்தைக் காட்டி சைகை செய்து ‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)’ என்று கூறினார்கள். நான் ‘ஏதேனும் அடையாளமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்பதைப் போன்று ஆயிஷா(ரலி) அவர்கள் தங்களின் தலையால் சைகை செய்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: நான் இதுவரை காணாத யாவற்றையும் – சொர்க்கம், நரகம் உள்பட அனைத்தையும் இதோ இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். மேலும், நீங்கள் தஜ்ஜாலின் சோதனைக்கு நெருக்கமான அளவிற்கு மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறை அறிவிப்பு) அறிவிக்கப்பட்டது. (மண்ணறையில் தம்மிடம் கேள்வி கேட்கும் வானவரிடம்), இறை நம்பிக்கையாளர் ஒருவர் அல்லது ‘முஸ்லிம்’ ‘(இவர்கள்) முஹம்மத்(ஸல்) ஆவார்கள். அன்னார் தெளிவான சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்று நம்பிக்கை கொண்டோம்’ என்று பதிலளிப்பார். அப்போது, ‘(தம் நற்செயல்களால் பயனடைந்த) நல்லவராக நீர் உறங்குவீராக! நீர் உறுதி(யான நம்பிக்கை) கொண்டிருந்தவர் என்று நாம் அறிவோம்’ என்று (அவரிடம்) சொல்லப்படும். ‘நயவஞ்சகர்’ அல்லது ‘சந்தேகங் கொண்டவர்’ மண்ணறைக்கு வரும் வானவரின் கேள்விகளுக்கு), ‘மக்கள் எதையோ சொன்னார்கள்; அதையே நானும் சொன்னேன். (மற்றபடி வேறொன்றும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7288

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7289

‘தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7290

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. எனவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். எனவே (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள், ‘(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்களின் மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீங்கள் தொழுது (இரவுத்) தொழுகை உங்களின் மீது கடமையாக ஆக்கப்பட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7291

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, ‘(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்’ என்றார்கள். உடனே ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஹுதாஃபாதாம் உன் தந்தை’ என்றார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘ஷைபா வால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தாம் உன் தந்தை’ என்றார்கள். (இக்கேள்விகளால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர்(ரலி) அவர்கள் கண்டபோது, ‘நாங்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7292

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்கள், முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, ‘நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு எழுதி அனுப்புங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள் பின்வருமாறு முஆவியா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும், அல்லாஹுவைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது’ என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.

மேலும், முஆவியா(ரலி) அவர்களுக்கு முஃகீரா(ரலி) அவர்கள் எழுதினார்கள்: நபி(ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றைப்) பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுததவருக்குரியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கோருவது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7293

அனஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், ‘வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7294

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) வெளியே வந்து லுஹ்ர் தொழுகை தொழுகை நடத்தினார்கள், (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்த பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி உலக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு, ‘எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் (என்னிடம்) அவர் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்க மாட்டேன்’ என்றும் சொன்னார்கள். அப்போது மக்களின் அழுகை அதிகமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கேளுங்கள் என்னிடம்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் எங்கு செல்வேன் (சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நரகத்திற்கு’ என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்கள் எழுந்து, ‘என் தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், ‘உன் தந்தை ஹுதாஃபா’ என்று கூறிவிட்டு, கேளுங்கள் என்னிடம்! கேளுங்கள் என்னிடம்’ எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (நபியவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து ‘அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்’ என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறியபோது மெளனமாக இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்னர் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சற்று முன் நான் தொழுது கொண்டிருக்கையில் இந்தச் சுவற்றில் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7295

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்னார்தாம் உன் தந்தை’ என்றார்கள். அப்போது, ‘இறை நம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவி) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்’ எனும் (திருக்குர்ஆன் 05:101 வது) இறை வசனம் அருளப்பெற்றது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7296

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், ‘அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?’ என்று கூடக் கேட்பார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7297

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றிய படி நின்றிருந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், ‘இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்’ என்றார். மற்றொருவர், ‘நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது’ என்றார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, ‘அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், ‘அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். எனவே, வஹீ (இறைச்செய்தி) வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின் தள்ளி நின்றேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) ‘நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7298

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் பொன் மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நான் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டேன். (அப்படித்தானே!)’ என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள். மேலும், ‘நான் அதை ஒருபோதும் அணியமாட்டேன்’ என்றும் சொன்னார்கள். உடனே, மக்கள் அனைவரும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7299

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘தொடர் நோன்பு நோற்காதீர்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கிற நிலையில் நான் உள்ளேன்’ என்று பதிலளித்தார்கள். இருந்தும், மக்கள் தொடர்நோன்பைக் கைவிடவில்லை. எனவே, அவர்களுடன் சேர்ந்து நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டு தினங்கள்’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ தொடர் நோன்பு நோற்றார்கள். பிறகு மக்கள் பிறையைப் பார்த்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர் நோன்பை) அதிகமாக்கச் செய்திருப்பேன்’ என்று மக்களைக் கண்டிப்பதைப் போன்று சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7300

யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அலீ(ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்க விடப்பட்டிருந்தது. அவர்கள் (தம் உரையில்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகிற நூல் எதுவும் எங்களிடம் இல்லை’ என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன. மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது; மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து கூடுதலான வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7301

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதியளித்தார்கள். அப்போது சிலர் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (உரையாற்ற எழுந்து) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்னாயிற்று? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7302

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஒரு முறை) நல்லவர்களான அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூ தமீம் தூதுக்குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூ பக்ர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ(ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், ‘எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்’ என்று சொல்ல, அதற்கு உமர்(ரலி) அவர்கள் ‘தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போதுதான், ‘இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 49:2 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது.

இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.

இந்த ஹதீஸை தம் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிப்பதாக இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் குறிப்பிடவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7303

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதி நாள்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடம் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூ பக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; எனவே, உமர்(ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுகை நடத்தட்டும்’ என்று சொன்னேன். ஆனால் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ பக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுதுவிக்கட்டும்’ என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி உமர்(ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று சொல்’ என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் தாம் யூசுஃப்(அலை) அவர்களின் தோழிகள் (போன்றவர்கள்). எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடமே சொல்லுங்கள்’ என்றார்கள். அப்போது ஹஃப்ஸா(ரலி) அவர்கள் என்னிடம் ‘உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை’ என்று கூறினார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7304

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். அஜ்லான குலத்தைச் சேர்ந்த உவைமிர்(ரலி) அவர்கள், ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் வந்து, ‘ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவனை இவன் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? எனக்காக (இதைப் பற்றி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள், ஆஸிமே!’ என்றார். அவ்வாறே ஆஸிம்(ரலி) அவர்களும் நபியவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் திரும்பி வந்து உவைமிர்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்கள். அதற்கு உவைமிர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி நேரடியாகக் கேட்பதற்காகச்) செல்வேன்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ஆஸிம்(ரலி) வந்துவிட்டுச் சென்றபின் உயர்ந்தோன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை அருளியிருந்தான். எனவே, (தம்மிடம் வந்த) உவைமிர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்களின் விஷயத்தில் அல்லாஹ் குர்ஆன் (வசனத்தை) அருளிவிட்டான்’ என்று கூறி, தம்பதியர் இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வந்து பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். பிறகு உவைமிர்(ரலி) அவர்கள், ‘(இதற்குப் பிறகும்) அவளை நான் எண்ணுடனேயே வைத்துக் கொண்டிருந்தால் நான் பொய் சொன்னதாக ஆகிவிடும், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு (விவாக விலக்குச் செய்து) மனைவியிடமிருந்து (தாமாகவே) பிரிந்து கொண்டார்கள். அவ்வாறு அவளைப் பிரிந்துவிடுமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. (அவராகவே அந்த முடிவுக்கு வந்தார்.) பிறகு (இந்தத் தம்பதியரின் சம்பவமே) சாப அழைப்புப் பிரமாணம் செய்வோருக்கான வழிமுறையாகத் தொடர்ந்தது.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘இவளைக் கண்காணித்துவாருங்கள்; இவள் அரணையைப் போன்று குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் கணவன் சொன்னது பொய் என்றே நான் கருதுவேன். இவள் கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளின் மீது உவைமிர் சொன்னது உண்மை என்றே நான் கருதுவேன்’ என்றார்கள். பிறகு விரும்பத்தகாத அந்தத் தோற்றத்திலேயே அவள் குழந்தை பெற்றெடுத்தாள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7305

முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் மாலிக் இப்னு அவ்ஸ் இப்னி ஹதஸான்(ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் சம்பவம் பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, ‘உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கோருகின்றனர்; தங்களுக்கு இசைவு உண்டா?’ என்று கேட்டார். உமர்(ரலி) அவர்கள், ‘ஆம் (வரச் சொல்லுங்கள்)’ என்று கூறினார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்போது (மீண்டும்) யர்ஃபஉ (வந்து), ‘அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?’ என்று கேட்டார். அவர்கள் இருவருக்கும் அனுமதி அளித்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் (என்னுடைய) இந்த அக்கிரமக்கார(ப் பங்காள)ருக்கும் இடையே (இச்சொத்து தொடர்பாக) தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்போது (அங்கிருந்த) உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்தம் தோழர்களும் கொண்ட அந்தக் குழுவினர் ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்’ என்று கூறினர்.

உமர்(ரலி) அவர்கள், ‘சற்று பொறுங்கள். வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்க்ள, ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், ‘(ஆம்) நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்’ என்று பதிலளித்தனர். உமர்(ரலி) அவர்கள், அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘ஆம் (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)’ என்று பதிலளித்தனர்.

உமர்(ரலி) அவர்கள், ‘அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன்: ‘(போரிடாமல் கிடைத்த) இந்த (‘ஃபய்உ’)ச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ் எச்செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று’ எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து ‘எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கே கொடுத்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடாந்திரச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களைக் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம் (அறிவோம்)’ என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், ‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், ‘ஆம் (அறிவோம்)’ என்று பதிலளித்தனர்.

(தொடர்ந்து,) ‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது (‘கலீஃபா’ பொறுப்பேற்ற) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறி அ(ந்த செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கிச் சொல்கிறார்கள் ‘அபூ பக்ர் அச்செல்வத்தில் இன்னின்னவாறு செயல்படுகிறார்’ என்று கூறினீர்கள். அல்லாஹ் அறிவான். அபூ பகர்(ரலி) அவர்கள் அது விஷயத்தில் உண்மையே சொன்னார்கள். நல்லதே செய்தார்கள்; நேரான முறையில் நடந்து சத்தியத்தையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது (கலீஃபா பொறுப்பேற்ற) நான், ‘இறைத்தூதர்(ஸல்), அ(ச் செல்வத்)தை இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டு வந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; உங்கள் இருவரின் பேச்சும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. நீங்கள் இருவரும் ஒன்றுபட்டே இருந்தீர்கள். (அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். இவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்கவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கோரியபடி என்னிடம் வந்தார். அதற்கு நான் உங்கள் (இருவரிடமும்,) ‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டர்களோ, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்து விடுகிறேன்; அவ்வாறில்லையாயின் இது விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னிடம் பேச வேண்டாம்’ என்று நான் சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், ‘எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்; அந்த நிபந்தனைகள் படியே (நாங்கள் செயல்படுகிறோம்)’ என்று சொன்னீர்கள். அதனடிப்படையிலேயே உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?’ என்று கேட்டார்கள். இருவரும் ‘ஆம்’ என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் மறுமை வரும்வரை இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் அளிக்கமாட்டேன்! உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்து விடுங்கள். உங்களுக்கு பதிலாக நானே அதைப் பராமரித்துக் கொள்கிறேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7306

ஆஸிம் இப்னு சுலைமான் அல்அஹ்வல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம் வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக்கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்’ என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.

அனஸ்(ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், ‘அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது’ என்று வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7307

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்’ என்று கூறக் கேட்டேன்.

பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், ‘என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்’ என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7308

அஃமஷ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அபூ வாயில்(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் ஸிஃப்பீன் போரில் கலந்து கொண்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம் (கலந்து கொண்டேன்)’ என்று கூறிவிட்டு, ‘நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என (பின்வருமாறு) அறிவித்தார்கள்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) கூறினார்: மக்களே! (இந்தப் போரில் கலந்து கொள்ளாததற்காக என் மீது குற்றம் சாட்டாதீர்கள். மாறாக, கலந்து கொள்ள வேண்டும் என்று) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள். அபூ ஜந்தல் (அபயம் தேடிவந்த) நாளில், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய, (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இது (ஸிஃப்பீன் சண்டை) வேறு விஷயம். (முஸ்லிம்களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்.)

அபூ வாயில்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஸிஃப்பீன் போரில் நான் கலந்து கொண்டேன். ஸிஃப்பீன் போர் ஒரு கெட்ட நிகழ்ச்சி.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7309

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நோயுற்றிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நான் மூர்ச்சையடைந்து விட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  அங்கசுத்தி (உளூ) செய்து, பின்னர் தாம் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மூர்ச்சை தெளிந்தேன். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வம் தொடர்பாக எப்படி முடிவெடுப்பது? என் செல்வத்தை நான் என்ன செய்வது?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், வாரிசுரிமை வசனம் (திருக்குர்ஆன் 04:11) அருளப்பெறும்வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7310

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்’ என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா?’ என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7311

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும். இதை முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7312

முஆவியா(ரலி) அவர்கள் தங்களின் உரையில் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான். இந்த சமுதாயத்தின் நிலை (சத்திய மார்க்கத்தின்படி) செம்மையானதாகவே இருக்கும் ‘மறுமை நாள் வரும்வரை’ அல்லது ‘அல்லாஹ்வின் கட்டளை (உலக முடிவு நாள்) வரும்வரை’ என்று சொல்ல கேட்டேன். இதை ஹுமைத்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7313

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுககு அருளப்பெற்றபோது ‘உங்களுக்கு மேலிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘(இறைவா!) உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘உங்கள் கால்களின் கீழிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்றார்கள். ‘அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறு சிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ என்பதைக் கேட்டவுடன் ‘(பிரிப்பதும் துன்பத்தைச் சுவைக்கச் செய்வதுமான) இந்த இருவித வேதனைகளும் (முந்தைய வேதனைகளை விட) ‘மிக எளிதானவை’ அல்லது ‘சுலபமானவை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7314

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ‘(வெள்ளை நிறுத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்’ என்றார். அதற்கு அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆம்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அவற்றின் நிறம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்றார். ‘அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன’ என்று பதிலளித்தார். ‘(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்’ என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7315

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்து விட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்’ (எனக் கூறிவிட்டு) ‘உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (நிறைவேற்றுவேன்)’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7316

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்கு) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (பிறருக்கு) அதைக் கற்பித்துக் கொண்டும் இருத்தல் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7317

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் மக்களிடம் ஒரு பெண்ணுக்குக் குறைப்ப பிரசவம் ஏற்படச் செய்வது குறித்து – அதாவது (கர்ப்பிணிப்) பெண்ணின் வயிற்றின் மீது அடித்து கருவைச் சிதைத்துக் குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து – கேட்டார்கள். அப்போது ‘இ(ந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் என்ன என்ப)து தொடர்பாக உங்களில் யாரேனும் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் கேட்டுள்ளீர்களா?’ என்று உமர்(ரலி) அவர்கள் வினவினார்கள். ‘கேட்டிருக்கிறேன்’ என்று நான் சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், ‘அது என்ன?’ என்று கேட்க, நான் ‘நபி(ஸல்) அவர்கள், ‘அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்’ என்று சொன்னேன். உடனே உமர்(ரலி) அவர்கள், ‘நீங்கள் சொன்னதற்கு ஒரு சாட்சியைக் கொண்டுவராத வரை உங்கள் பொறுப்பிலிருந்து நீங்கள் விடுபடமுடியாது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7318

உடனே நான் (சாட்சி கொண்டுவர) வெளியே சென்றேன். முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) அவர்களைக் கண்டு அவர்களை அழைத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் என்னுடன் சேர்ந்து ‘இதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறத் தாமும் கேட்டதாக சாட்சியம் அளித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7319

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?’ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7320

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7321

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அநியாயமாகக் கொல்லப்படும் எந்த (மனித) உயிராயினும் அ(தைக் கொலை செய்த பாவத்)தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் நிச்சயம் ஒரு பங்கு இருந்தே தீரும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஹுமைத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள், ‘அதன் கொலையி(ன் பாவத்தி)லிருந்து’ என்று சிலவேளை கூறுவார்கள். ஏனெனில், அவர் (ஆதமின் முதல் மகனான காபீல்) தாம் மனித சமுதாயத்திலேயே முதன் முதலாகக் கொலை செய்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7322

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்து விட்டார்கள். பிறகு மீண்டும் அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்’ என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் மீண்டும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்’ என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) கிளம்பிச் சென்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மதீனா கொல்லனின் உலை போன்றது; தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களை அது தூய்மைப்படுத்துகிறது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7323

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), ‘நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்னான், ‘இறை நம்பிக்கையர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், ‘இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சப்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்’ என்றார்கள். நான், ‘அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும் வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்’ என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப்போகிறேன்’ என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். ‘நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது’ என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7324

முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு ‘அடடா! அபூ ஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7325

அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதுண்டா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம் (கலந்து கொண்டிருக்கிறேன்). நபி(ஸல்) அவர்களுடன் (சொந்தம் காரணமாக) எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் நபியவர்களுடன் (பெருநாள் தொழுகையில்) கலந்து கொண்டிருக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் (பெருநாளில் வீட்டில் இருந்து புறப்பட்டு) கஸீர் இப்னு ஸல்த் உடைய வீட்டருகே உள்ள அடையாளமிடப்பட்ட இடத்திற்கு வந்து தொழுகை நடத்தினார்கள். பிறகு உரையாற்றினார்கள். பாங்கு சொல்லவுமில்லை; இகாமத் சொல்லவுமில்லை. பிறகு (உரையில்) தர்மம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். உடனே, பெண்கள் தம் காதுகள் மற்றும் கழுத்துகளின் பக்கம் தம் கைகளைக் கொண்டு சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் அப்பெண்களிடம் சென்று (அவர்களின் காதணிகளையும் கழுத்தணிகளையும் சேகரித்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7326

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் (வாகனத்தில்) பயணம் செய்தும் செல்வது வழக்கம்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7327

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘என்னை (நான் இறந்த பின்) என் தோழிகளுடன் (நபியவர்களின் இதர துணைவியருடன்) அடக்கம் செய்யுங்கள். நபி(ஸல்) அவர்களுடன் (என்) வீட்டில் அடக்கம் செய்யாதீர்கள். ஏனெனில், நான் (மற்றவர்களால் என் தோழியரை விட) உயர்வாகக் கருதப்படுவதை விரும்பவில்லை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7328

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர்(ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘என் தோழர்கள் (முஹம்மத்(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்டு ஆளனுப்பினார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், ‘சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)’ என்றார்கள். ஆனால், (முற்ற தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், ‘முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறிவிடுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7329

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மதீனாவின் (புறநகர்ப் பகுதிகளிலுள்ள) மேட்டுக் கிராமங்களுக்குச் செல்வார்கள். அப்போது சூரியன் (மேற்கே) உயர்ந்தே இருக்கும்.
மற்றோர் அறிவிப்பில், ‘அந்த மேட்டுக் கிராமங்களின் தூரம் (மதீனாவிலிருந்து) நான்கு அல்லது மூன்று மைல்களாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7330

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தின் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1ஃ3) கொண்டதாக இருந்தது. பின்னர் (உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் தான்) அதன் அளவு அதிகமாக்கப்பட்டது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7331

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! மதீனாவாசிகளுக்கு அவர்களின் முகத்தலளவையில் வளத்தை அருள்வாயாக! அவர்களின் ‘ஸாஉ’ மற்றும் ‘முத்'(து) ஆகிய அளவைகளிலும் அவர்களுக்கு வளத்தை அருள்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7332

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் விபசாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் (தீர்ப்புக்காக) அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட அவ்வாறே அவ்விருவருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் சடலங்கள் (ஜனாஸாக்கள்) வைக்கப்படும் இடத்திற்கு அருகே கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7333

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, ‘இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்’ என்றார்கள்.

‘இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கிறோம்’ என்ற இதே நபிமொழியை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7334

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கிப்லா திசையிலுள்ள சுவருக்கும் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே ஆடு ஒன்று புகுந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7335

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) என்னுடைய (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7336

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத்துல் வதாஉ’ மலைக்குன்று வரையாக இருந்தது. மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஸனியத்துல் வதா’ மலைக்குன்றிலிருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல் வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில். பங்கெடுத்தவர்களில் ஒருவனாயிருந்தேன்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7337

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உமர்(ரலி) அவர்கள் கூற கேட்டுள்ளேன்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7338

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7339

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் (ஒரு பாத்திரத்தைக் காட்டி), ‘இந்தப் பாத்திரம் நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் குளிப்பதற்காக வைக்கப்பட்டு வந்தது. நாங்கள் இருவரும் ஒரு சேர இதில் குளிக்கத் தொடங்குவோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7340

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கும் குறைஷிகளுக்கும் இடையே மதீனாவில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7341

மேலும், நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (நிராயுதபாணிகளான நபித்தோழர்களை வஞ்சகம் செய்து கொலை செய்த) பனூ சுலைம் குலத்தாரின் சில குடும்பங்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7342

அபூ புர்தா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், ‘வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி(ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்’ என்றார்கள். எனவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள். பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களின் பள்ளிவாசலில் தொழுதேன்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7343

உமர்(ரலி) அறிவித்தார். ‘என் இறைவனிடமிருந்து வரக்கூடிய (வான)வர் இன்றிரவு என்னிடம் வந்து, இந்த சுபிட்சம் மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக (ஹஜ்ஜுல் கிரான் செய்வதாக)ச் சொல்வீராக என்று கூறினார்’ என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் பள்ளத்தாக்கில் இருந்தபோது என்னிடம் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘ஹஜ்ஜில் உம்ராவைச் சேர்ப்பதாக..’ என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7344

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனுமிடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ‘ஜுஹ்ஃபா’வையும் மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித்தார்கள்.
இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான், செவியேற்றேன். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள், ‘யலம்லம்’ எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற்குரிய) இடமாகும்’ என்று கூறினார்கள் என எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில் இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், அந்நாளில் இராக் (வாசிகளிடையே முஸ்லிம்கள்) இருக்கவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7345

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பத்னுல் வாதியிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (இரவின் கடைசி நேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது அவர்களுக்குக் கனவு காட்டப்பட்டது. அப்போது (கனவில்) ‘சுபிட்சமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்’ என்று நபியவர்களிடம் கூறப்பட்டது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7346

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7347

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தம் தொடையில் தட்டிக்கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (இங்கு ‘இரவில் வந்தார்கள்’ என்பதைக் குறிக்க ‘தர(க்)க’ எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு ‘தாரிக்’ என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் ‘தாரிக்’ என்று சொல்வதுண்டு. ‘ஸாம்ப்’ என்பது ‘பிரகாசிக்கச் கூடியது’ என்று பொருள்படும். ‘உஸ்குப்’ (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7348

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) ‘பைத்துல் மித்ராஸ்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு ‘யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; (ஈருலகிலும்) சாந்தி அடைவீர்கள்’ என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதற்கு யூதர்கள், ‘நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள், அபுல் காசிமே!’ என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்’ என்றார்கள். அப்போதும் யூதர்கள் ‘நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள், அபுல் காசிமே!’ என்றார்கள். உடனே அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இதைத்தான் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போன்றே) சொன்னார்கள். பின்னர், ‘பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் தம் (விலையைப்) பெறுகிறவர் அச்சொத்தை விற்று விடட்டும். இல்லையென்றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7349

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘மறுமை நாளில் நூஹ்(அலை) அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் (இறைச் செய்தியை) எடுத்துரைத்து விட்டீர்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘ஆம்; (எடுத்துரைத்து விட்டேன்); என் இறைவா!’ என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களின் சமுதாயத்தாரிடம், ‘இவர் உங்களுக்கு (இறைச் செய்தியை) எடுத்துரைத்தாரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘எங்களை எச்சரிப்பவர் எவருமே வரவில்லையே?’ என்று (பொய்) சொல்வார்கள். அப்போது (நூஹ்(அலை) அவர்களிடம்) அல்லாஹ், ‘உங்கள் சாட்சிகள் யார்?’ என்று கேட்பான். ‘முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் தாம் (என் சாட்சிகள்’) என்று நூஹ்(அலை) அவர்கள் கூறுவார்கள். அப்போது நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்; (நூஹ்(அலை) அவர்கள் இறைச்செய்தியை எடுத்துரைத்தார்கள் என்று) நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியிருக்கிறோம்’ எனும் (திருக்குர்ஆன் 02:143 வது) இறைவசனத்தை ஓதினார்கள். அதிலுள்ள ‘வசத்தன்’ எனும் சொல்லுக்கு ‘நீதி செலுத்தும் சமுதாயம்’ (அத்லன்) என்று விளக்கம் அளித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7350-7351

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7352

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7353

உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஒரு முறை) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் உமர்(ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூ மூஸா திரும்பிச் சென்றார்கள். பின்னர் உமர்(ரலி) அவர்கள், ‘நான் அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா (ரலி) அவர்களின் குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்’ என்றார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘நீங்கள் இப்படிச் செய்ததற்கு (வராமலிருந்ததற்குக்) காரணம் என்ன?’ என்று (அவர்களிடம்) கேட்க, அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘(மூன்று முறை சலாம் சொல்லியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படி தான் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டு வாருங்கள்; இல்லையேல் உங்களின் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள், ‘எங்களில் (வயதில்) சிறியவர்தாம் இதற்கு சாட்சியமளிப்பார்’ என்றனர். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் எழுந்துவந்து, ‘(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப் பட்டுள்ளது’ என்றார்கள். அதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டுள்ளது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7354

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அபூ ஹுரைரா(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே’ என்று நீங்கள் (குறையாகக்) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச் சாட்டு சரியா? தவறா? என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே இருந்துவந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். நான் ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், ‘நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை தம் மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க் கொள்கிறவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்’ என்றார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி(ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7355

முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் ‘இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7356

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். குதிரை (வைத்திருப்பது), மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்): ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; அதை இறைவழியில் (நற்காரியங்களுக்குப்) பயன்படுத்துவதற்காக, அதைப் பசுமையான ‘ஒரு வெட்ட வெளியில்’ அல்லது ‘ஒரு தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் ‘பசும்புல் வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் பாதச் சுவடுகளும் கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மையாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து ஒரு தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (அதன் உரிமையாளரான) அவருக்கு இல்லாமல் இருந்தாலும் அதுவும் அவருக்குரிய நன்மையாகவே ஆகும். ஆக, அது அந்த மனிதருக்கு (இவ்விதம்) நற்பலனைத் தேடித் தருகிறது.

இன்னொருவர், தம் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதன் பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும், (அதனால் தாங்க முடிந்த சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அது (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன், பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் காரணமாக அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகிவிடுகின்றது.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வான்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (திருக்குர்ஆன் 99:7,8) வசனங்களைத் தவிர’ என்று பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7357

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து ‘அதிலிருந்து (தூய்மையாகிக் கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்கவேண்டும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! இதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) ‘அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்) ‘அதனால் தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால்) எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன். இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7358

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உம்மு ஹுஃபைத் பின்த் அல் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சிறிது நெய், பாலாடைக் கட்டி, சில உடும்புகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (உணவு வேளையில்) உடும்புகளைக் கொண்டு வரும்படி நபி(ஸல்) அவர்கள் கூற, (அவை கொண்டு வரப்பட்டு) நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டன. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதை அருவருப்பவர்களைப் போன்று அவற்றை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (நெய் மற்றும் பாலாடைக் கட்டியை மட்டும் உண்டார்கள்.) உடும்புகள் தடை செய்யப்பட்டவையாய் இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை பரிமாறப்பட்டிருக்க மாட்டா. அவற்றை உண்ணும்படி நபியவர்கள் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7359

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பச்சை) வெள்ளைப் பூண்டையோ வெங்கத்தையோ உண்டவர், ‘நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம்முடைய பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’ அவர் தம் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் இப்னு வஹ்ப்(ரலி) கூறினார்: (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் உள்ள ஒரு தட்டு கொண்டு வரப்பட்டது. அவற்றில் (துர்) வாடை அடிப்பதை நபி(ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். எனவே, அவற்றைப்பற்றி விசாரித்தார்கள். அவற்றிலுள்ள கீரைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தம்முடன் இருந்த தோழர்கள் சிலருக்கு அவற்றைக் கொடுக்கும் படி கூறினார்கள்.  அவ்வாறே கொடுக்கும் படி கூறினார்கள். அவ்வாறே கொடுத்தார்கள். அவர்கள் அதை உண்ண விரும்பாமலிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது ‘சாப்பிடுங்கள்; ஏனெனில், நீங்கள் உரையாடாதவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘காய்கறிகள் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது’ என்று இடம்பெற்றுள்ளது. வேறு சில அறிவிப்புகளில் பாத்திரம் பற்றிக் கூறப்படவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7360

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். அன்சாரிப் பெண்மணி ஒருவர், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் தேவைகளில்) ஒன்றைக் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு (பிறகு வருமாறு) உத்தரவிட்டார்கள். அவர், ‘நான் (திரும்பவும் வரும்போது) தங்களைக் காணாவிட்டால் என்ன செய்வது, இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘என்னைக் காணாவிட்டால் அபூ பக்ரிடம் செல்’ என்று பதிலளித்தார்கள்.

ஹுமைத்(ரஹ்) அவர்கள் தங்களின் அறிவிப்பில், ‘நான் திரும்பி வரும்போது தாங்கள் இறந்து விட்டிருந்தால்’ என்பதையே ‘தங்களைக் காணாவிட்டால்’ என்று அப்பெண்மணி குறிப்பிட்டார் என்று அதிகப்படியாக கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7361

ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறினார்: முஆவியா(ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை கேட்டேன். முஆவியா(ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, ‘வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப்(ரலி) அவர்கள் தாம். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7362

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். மாறாக, (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப் பெற்றதையும் உங்களுக்கு அருளப்பெற்றதையும் நம்புகிறோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7363

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களின் வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக் கொண்டு, அதன் மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக ‘இது இறைவனிடமிருந்து வந்ததே’ என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே! இதை உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7364

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்! (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸை அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்கள் சல்லாம் இப்னு முத்தீஉ(ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7365

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7366

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்’ என்றார்கள். உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்’ என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், ‘(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்’ என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்’ என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), ‘மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்’ என்று கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7367

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்’ என்றார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ‘நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?’ என்று நாங்கள் பேசிக் கொள்வதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.

‘நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர்(ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, ‘நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னுடைய குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்கமாட்டேன்’ என்றார்கள். எனவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி(ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7368

அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்’ என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, ‘இது விரும்புவோருக்குத் தான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7369

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. தம் குடும்பத்தாரை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ ‘அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப் பெண்ணிடம் (பரீராவிடம்) ‘நீ சந்தேகப்படும் படி எதையேனும் கண்டாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா ‘குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கி விடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் (பள்ளி வசாலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, ‘முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நல்லதையே அறிவேன்’ என்றார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7370

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘என் வீட்டாரை இகழ்ந்து பேசுகிற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்தில்லை’ என்றார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா(ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாய்வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பி வைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், ‘இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்’ என்றார்.

Leave a Reply