88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைவைப்பையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைவைப்பதே மிகப் பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை(க் குர்ஆனில் 31:33 வது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா?

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6919

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியன பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பொய் சாட்சி’ என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் ‘அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!’ என்று கூறினோம்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6920

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘பொய்ச் சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6921

‘இறைத்தூதர் அவர்களே! ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?’ என ஒருவர் கேட்டதற்கு, ‘இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6922

இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அலீ(ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ(ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். மாறாக, நபி(ஸல்) அவர்கள், ‘தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரண தண்டனை அளியுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6923

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அபூ மூஸாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்றார்கள். நான், ‘சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது’ என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள், ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்க மாட்டோம்’. எனவே, ‘அபூ மூஸாவே’ அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்’ என்றார்கள்.

(அவ்வாறே அபூ மூஸா(ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா(ரலி) அவர்கள் எடுத்து வைத்து ‘வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)’ என்றார்கள். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, ‘இவர் யார்?’ என்று முஆத்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா(ரலி) அவர்கள் ‘இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) யூதராகிவிட்டார்’ என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா(ரலி) அவர்கள் முஆத்(ரலி) அவர்களிடம்) ‘அமருங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)’ என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா(ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத்(ரலி) அவர்கள்) ‘நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6924

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து, அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபுகளில் சிலர் இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர்(ரலி) கூறினார்.) அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘அபூ பக்ர் அவர்களே! மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹுவைத் தவிர வேறெவருமில்லை என்று மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவர் அல்லாஹுவைத் தவிர வேறெவருமில்லை எனக் கூறுகிறவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தன் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்புப் பெறுவார். அவரின் (அந்தரங்க எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்குரிய) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே?’ என்று கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6925

அதற்கு அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை மக்கள் என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் கொடுக்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கி விட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுதான் சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6926

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு யூதன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விடுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6927

ஆயிஷா(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் ‘வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா’ அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். நான் ‘அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நானே ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6928

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு யூதர்கள் சலாம் (முகமன்) சொன்னால் ‘ஸாமுன் அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதில் சலாமாக) ‘அலைக்க’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று நீங்கள் சொல்லி விடுங்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6929

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி ‘இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருந்தார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6930

அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள (போர் போன்ற) ஒரு விவகாரம் தொடர்பாக நான் உங்களிடம் பேசினால், போர் என்பது சூழ்ச்சியே (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயதுடைய இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியுற்ற புத்தியுடையவர்களாக இருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் உயிரோடு விடாதீர்கள். ஏனெனில், அவர்களை அழிப்பது, அதைச் செய்தவர்களுக்கு மறுமைநாளில் நற்பலனாக அமையும்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6931

அபூ ஸலமா(ரஹ்) மற்றும் அதாஉ இப்னு யஸார்(ரஹ்) ஆகியோர் அறிவித்தார்கள்: நாங்கள் இருவரும் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்று ‘ஹரூரிய்யாக் கூட்டத்தார் (காரிஜிய்யாக்கள்) பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியேற்றுள்ளீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ஹரூரிய்யாக்கள் என்றால் யாரென்று எனக்குத் தெரியாது. (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள்.

இந்தச் சமுதாயத்திற்கிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். -(சமுதாயத்திற்கிடையே என்று கூறினார்களே தவிர,) இந்தச் சமுதாயத்திலிருந்து என்று கூறவில்லை- அவர்களின் தொழுகையுடன் உங்களின் தொழுகையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையை அற்பமானதாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு களைகட்டியிருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் ‘தொண்டையை’ அல்லது ‘தொண்டைக் குழியை’த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் தைக்கின்ற) அம்பு (உடலின்) மறுபுறம் வெளிப்பாட்டு) சென்றுவிடுவதைப் போன்று இந்த மார்க்கத்தைவிட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அம்பெய்தவர் அந்த அம்பை; அதன் முனையை; அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்ப்பார். அவர் (இவ்வாறு) சந்தேகப்பட்டு நாண் பொருத்தப்படும் இடம் வரை, அவற்றில் இரத்தம் ஏதேனும் பட்டுள்ளதா? என்று பார்ப்பார். (ஆனால், எந்த அடையாளமும் இராது.)

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6932

முஹம்மத் இப்னு ஸைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (‘காரிஜிய்யாக்கள்’) குறித்துக் கூறியபோது, ‘(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தை விட்டும் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் செல்வார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6933

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (அலீ(ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியை) நபி(ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘அப்துல்லாஹ் இப்னு தில் குவைஸிரா’ என்பவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். (இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?’ என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், ‘என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டி விடுகிறேன்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவரை விட்டுவிடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களின் தொழுகையையும் உங்களின் நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக்கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் ‘இரண்டு கரங்களில்’ அல்லது ‘இரண்டு மார்பகங்களில்’ ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்று’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று’ இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்’ என்றார்கள்.

நான் இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரான் எனுமிடத்தில்) அலீ(ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ(ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் அலீ(ரலி) அவர்கள் முன்னிலையில்) கொண்டு வரப்பட்டான். நபி(ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின் படியே அவன் இருந்தான். அவன் விஷயத்தில் தான் 9:58 வது இறைவசனம் அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6934

யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், ‘காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6935

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரே வாதத்தை முன்வைக்கும் இரண்டு குழுவினர் தம்மிடையே போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவுநாள் வராது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6936

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு இறைத்தூதர்(ஸல்) ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். உடனே தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை காத்திருந்தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு ‘அவரின் மேல் துண்டை’ அல்லது ‘என்னுடைய மேல் துண்டைக்’ கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?’ என்று கேட்டேன். அவர் ‘இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள்’ என்று பதிலளித்தார். ‘நீர் பொய் சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக் காட்டினார்கள்’ என்றேன்.

பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இழுத்துக் கொண்டு சென்று ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழி வழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக் கொடுத்தீர்கள்’ என்று கூறினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உமரே! இவரை விடுங்கள்’ என்று கூறிவிட்டு, ‘ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்!’ என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது’ என்று கூறினார்கள். பிறகு (என்னை நோக்கி) ‘உமரே! நீங்கள் ஓதுங்கள்’ என்றார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் ‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. நிச்சயமாக இந்தக் குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. எனவே, உங்களுக்கு அதில் எது சுலபமானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6937

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார் தாம் தமக்குத்தாமே அநீதியிழைக்காதவர்?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கிற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள்கொள்ளவேண்டும். ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணை கற்பிப்பதே மிகப்பெரும் அநீதியாகும்’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 31:13)24

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6938

இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னுடைய இல்லத்தில் தொழுமிடம்) அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமானோர் அங்கு குழுமி விட்டனர்.) அப்போது ஒருவர், ‘மாலிக் இப்னு துக்ஷுன் எங்கே? (அவர் மட்டும் நபியவர்களைச் சந்திக்க வரவில்லையே!)’ என்று கேட்டதற்கு எங்களில் ஒருவர், ‘மாலிக் இப்னு துக்ஷுன் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் அவர் நபியைக் காண இங்கு வரவில்லை)’ என்று கூறினார். அதைக் கேட்ட நபிஸல்) அவர்கள், ‘அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறுவதை நீங்கள் செவியேற்க வில்லையா?’ என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் எந்த அடியார் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ எனும் (ஏகத்துவ) வாக்கியத்துடன் செல்கிறவரின் மீது இறைவன் நரகத்தை தடை செய்யாதிருப்பதில்லை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6939

ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் (அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) ஹிப்பான் இப்னு அதிய்யா அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, ‘உங்கள் தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச் செய்யும் துணிவைக் கொடுத்தது எது? என்று நான் உறுதிபட அறிவேன்’ என்று கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், ‘தந்தையற்றுப் போவாய்! (அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது?’ என்று கேட்டார்கள். அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், ‘அது ஒரு சம்பவம். அதனை அலீ(ரலி) அவர்களே கூற கேட்டுள்ளேன்’ என்றார்கள். ஹிப்பான் அவர்கள், ‘என்ன சம்பவம் அது?’ என்று கேட்க, (பின்வருமாறு) அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்.

(அலீ(ரலி) கூறினார்:) குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையும் அபூ மர்ஸத்(ரலி) அவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ‘ரவ்ளத்து ஹாஜ்’ எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு ‘ஹாஜ்’ என்றே அபூ அவானா(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் ‘ரவ்ளத்து காக்’ என வந்துள்ளது) அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நம்முடைய இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தன்னுடைய ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), ‘உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?’ என்று கேட்டோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை’ என்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் ‘இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்’ என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, ‘ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உன்னுடைய ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்’ என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தன்னுடைய இடுப்பை நோக்கி(த் தன்னுடைய கையை)க் கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். (பிறகு அதை நான் நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.)

அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பரிகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களின் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களின் குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள் மீண்டும் ‘இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களிடம் ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கி விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்’ என்றார்கள்.

இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (அந்த இடத்தின் பெயர்) ‘ரவ்ளத்து காக்’ என்பதே சரியான தகவலாகும். ஆயினும், ‘ரவ்ளத்து ஹாஜ்’ என்றே அபூ அவானா கூறுகிறார். இது திரிபாகும். இது ஓர் இடத்தின் பெயராகும். ஹுஷைம் இப்னு பஷீர்(ரஹ்) அவர்கள் ‘காக்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.