84. சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6608

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6609

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6610

அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஒரு போரில் (கைபரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும்போதும் ஒரு கணவாயில் இறங்கும்போதும் உரத்த குரலில் ‘அல்லாஹூ அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறலானோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் அருகில் வந்து ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனையும் (எல்லாரையும்) பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்று கூறிவிட்டு, (என்னைப் பார்த்து) ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்தான் என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6611

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6612

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறுபாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6613

இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இந்த மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்’ எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. குர்ஆனில் சபிக்கப்பட்ட மரம்’ என்பது ‘சப்பாத்திக் கள்ளி’ மரத்தைக் குறிக்கிறது.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6614

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைத்தூதர்களான) ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம்(அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்’ என்றார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள் என மூன்று முறை ‘என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6615

முஃகீரா இப்னு ஷஅபா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத்(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்கள், முஃகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் ஓதிய துஆக்களில் நீங்கள் செவியேற்றதை எனக்கு எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது (பின்வருமாறு பதில்) எழுதுமாறு

முஃகீரா(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: தொழுகைக்குப் பின் நபி(ஸல்) அவர்கள்

‘லா இலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ அல்லாஹூம்ம லா மானிஅ லிமா அஉதைத்த வ லா முஉத்திய லிமா மன உத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்’ என்று கூறுவதை கேட்டேன்.

(பொருள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது.)

இப்னு ஜுரைஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்: இதை வர்ராத்(ரஹ்) அவர்கள் தமக்குத் தெரிவித்ததாக அப்தா இப்னு அபீ லுபாபா(ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். பின்னர் தாம் முஆவியா(ரலி) அவர்களிடம் சென்றதாகவும், அப்போது முஆவியா(ரலி) அவர்கள் இந்த துஆவை ஓதும்படி மக்களுக்குக் கட்டளையிட்டதைக் கண்டதாகவும் அப்தா கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6616

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6617

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) ‘இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!’ என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6618

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு ஸய்யாதிடம் நபி(ஸல்) அவர்கள் ‘நான் (உன்னைச் சோதிப்பதற்காக) ஒன்றை மனத்தில் மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)’ என்று கேட்டார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அத்துகான்’ எனும் 44 வது அத்தியாயத்தின் 10 வது வசனத்தை மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்கள்.) அதற்கு இப்னு ஸய்யாத் ‘(அது) ‘அத்துக்’ என்றான். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது’ என்றார்கள். (அருகிலிருந்த) உமர்(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொன்றுவிட எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவனைவிட்டுவிடுங்கள். இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனை நீங்கள் கொல்ல முடியாது. (ஏனெனில், இவனைக் கொல்ல வேறொருவர் (நபி ஈசா) வருவார் என்பது இறைவனின் ஏற்பாடு.) இவன் அவனாக இல்லையாயின் இவனைக் கொல்வதில் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6619

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அதற்கவர்கள் ‘அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாக இருந்தது. பிறகு அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கி விட்டான். எனவே, அந்த நோய் (பரவி) உள்ள ஓர் ஊரில் ஓர் அடியார், தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகப் பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் அந்த ஊரிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தால் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் கிடைக்கும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6620

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதை கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம். நோன்பு நோற்றிருக்க மாட்டோம். தொழுதிருக்கவும் மாட்டோம்.

நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இணைவைப்போர் எங்களின் மீது அட்டூழியம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6621

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் சத்தியத்தை முறித்ததற்காக பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை (தாம் செய்த) எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள். மேலும் அவர்கள், ‘நான் ஒரு சத்தியத்தைச் செய்து, அதன்பின்னர் (அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் நன்மை எதுவோ அதையே செய்வேன். சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தையும் செய்துவிடுவேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6622

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவன் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து’ என்றார்கள்.

Leave a Reply