83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6521

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது’ என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6522

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்றுதிரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6523

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! (திருக்குர்ஆன் 25:43 வது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தன்னுடைய முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (இதை அறிவித்த) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள்’ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6524

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, காலால் நடந்தவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக (பிறந்த மேனியுடன்) அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள். ‘இது நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கேட்ட (பிரபலமான) ஹதீஸ்களில் ஒன்றென நாங்கள் கருதுகிறோம்’ என்று சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6525

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி ‘நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்’ என்று உரையில் குறிப்பிட்டதை கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6526

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104)

மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்’ என்பேன். அப்போது அல்லாஹ் ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா(அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று ‘நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்’ (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது ‘இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6527

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6528

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி(ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் ‘சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள் ‘முஹம்மதின் உயிர் எவனுடைய கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்; அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6529

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மறுமை நாளில் முதன் முதலில் அழைக்கப்படுபவர் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களாவார்கள். அப்போது அவர்கள் முன் அவர்களின் சந்ததிகள் இருப்பார்கள். சந்ததிகளிடம் ‘இவர் தாம் உங்கள் தந்தை ஆதம்’ என்று கூறப்படும். உடனே ஆதம் (அலை) அவர்கள் (இறைவனின் அழைப்பை ஏற்று, ‘இறைவா!) எத்தனை பேரை (அவ்வாறு) பிரிக்க வேண்டும்?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்று ஒன்பது பேரைத் தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒவ்வொரு நூறு பேரிலும் தொண்ணூற்று ஒன்பது பேர் (நரகத்திற்கெனப் பிரித்து) எடுக்கப்பட்டால் எங்களில் (சொர்க்கத்திற்கென) யார்தான் மிஞ்சுவார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘மற்ற சமுதாயங்களுக்கிடையே என் சமுதாயத்தார் கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6530

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) ‘ஆதமே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் ‘(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்’ என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்’ என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன் ‘ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)’ என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகிற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.

இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன். மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்’ என்றார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6531

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘அந்நாளில் அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் (விசாரணைக்காக) நிற்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) வசனம் தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் நிற்பார்’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6532

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6533

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6534

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் சமரசம் செய்து) அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவற்றை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விகிதாசாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்) என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6535

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு ஸூரைஉ(ரஹ்) அவர்கள் ‘(இவ்வுலகில் ஒருவரின் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தை அவர்களின் இதயங்களிலிருந்து அகற்றிவிடுவோம்’ எனும் (திருக்குர்ஆன் 07:43 வது) வசனத்தை ஓதிவிட்டு, (அதற்கு விளக்கமாக) இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6536

(மறுமையில்) துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை செய்யப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ‘அல்லாஹ் (தன் வேதத்தில்) ‘வலக் கரத்தில் தம் வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (திருக்குர்ஆன் 84:08) என்றல்லவா கூறுகிறான்?’ எனக் கேட்டதற்கு, ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப் படுதலாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6537

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்’ என்று கூறினார்கள். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் கூறினான்?’ (திருக்குர்ஆன் 84:08) என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6538

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு ‘உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?’ என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ‘ஆம்’ என்று பதிலளிப்பான். அப்போது ‘இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)’ என்று கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6539

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(து முகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6540

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ‘நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டுப் பிறகு (நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு (மீண்டும்) ‘நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டுப் பிறகு, (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு மூன்று முறை (இவ்வாறு) செய்தார்கள். பிறகு ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6541

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத் தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சில பேர் கடந்து சென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் ‘(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தினரா?’ என்று கேட்டேன். ஜிப்ரீல், ‘இல்லை. மாறாக, அடிவானத்தைப் பாருங்கள்’ என்றார். உடனே பார்த்தேன். அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல் ‘இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னிலையில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை. வேதனையுமில்லை’ என்று கூறினார். நான் ‘ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், ‘இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்’ என்று கூறினார்.

உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்கள் எழுந்து (வந்து) ‘அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து) ‘அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6542

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பெளர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிராகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்’ என்று கூறினார்கள். உடனே உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அசதீ(ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6543

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீரா (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (ஒரே நேரத்தில்) சொர்க்கத்தில் நுழையும் அளவுக்கு (ஓரணியில்) செல்வார்கள். மேலும், அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் முழு நிலவு பிரகாசிப்பதைப் போன்று பிரகாசிக்கும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6544

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து ‘நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. சொர்க்கவாசிகளே! மரணம் இல்லை; இது நிரந்தரம்’ என்று அறிவிப்பார்  என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6545

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கவாசிகளிடம் ‘(இது) நிரந்தரம்; (இனி) மரணம் இல்லை’ என்றும், நரகவாசிகளிடம் ‘(இது) நிரந்தரம்; மரணம் (இனி) இல்லை’ என்று சொல்லப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6546

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன். என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6547

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும் பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (கேள்வி கணக்கிற்காக சொர்க்கத்தில் நுழைந்துவிடாமல்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஆணையிடப்பட்டிருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள். என உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6548

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் ‘சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது’ என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6549

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே* என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே* இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே* அதைவிடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6550

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல் அன்சாரி (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடப்பாவமே! இழப்பால் துடிக்கிறாயோ! அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6551

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6552

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது  என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6553

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது  என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6554

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள்.

அறிவிப்பாளர் அபூ ஹாஸிம்(ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை. அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்  என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6555

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)களை (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6556

அபூ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் இந்த ஹதீஸை நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூ ஸயீத்(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் ‘கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று’ எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6557

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ் ‘நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!’ என்று கூறுவான் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6558

ஜாபிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘பரிந்துரையால் (நரகவாசிகளில் சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் ‘ஸஅரீர்’ போன்று இருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ‘ஸஆரீர்’ என்றால் என்ன? என்று அறிவிப்பாளர் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அன்னார் ‘வெள்ளரிப் பிஞ்சுகள்’ என்று பதிலளித்தார்கள். அன்னாருக்குப் பல் விழுந்துவிட்டிருந்தது. (இதனால் ‘ஷஆரீர்’ என்பதை ‘ஸஆரீர்’என்று உச்சரித்தார்கள்.) மேலும், ‘பரிந்துரையால் (சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று ஜாபிர்(ரலி) அவர்கள் உங்களிடம் கூறினார்களா? என அம்ர் இப்னு தீனார் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6559

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் ‘ஜஹன்னா மிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6560

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் ‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்’ என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களி மண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அந்த வித்து (விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6561

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும்.
என நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6562

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும். என நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6563

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும்) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (தப்பித்துக் கொள்ளுங்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6564

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், ‘அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்’ என்று சொல்ல கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6565

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் ‘(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!’ என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் ‘அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். எனவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு ‘நீங்கள் (எனக்குப் பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறி, (உலகில்) தாம் புரிந்தவற்றை நினைவுகூர்ந்து ‘அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்களும் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு ‘அல்லாஹ் உரையாடிய (நபி) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள்நினைவு கூர்ந்தபடி ‘நபி(ஸல்) ஈசாவிடம் செல்லுங்கள்!’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்’ என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னைவிட்டுவிடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும. சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பார்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6566

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள் என இம்ரான் இப்னு ஹூஸைன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6567

அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராக்கா அல்அன்சாரி(ரலி) அவர்கள் பத்ருப் போரில் யாரோ எறிந்த அம்பு தாக்கி இறந்தார்கள். இந்நிலையில் அவரின் தாயார் இறைத்தூதர் அவர்களே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என் இதயத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவர் (இப்போது) சொர்க்கத்தில் இருந்தால் அவருக்காக நான் அழப்போவதில்லை. அவ்வாறில்லையேல், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என்று கூறினார். அப்போது அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இழப்பால் துடிக்கிறாயா? அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்களின் படித்தரங்)கள் நிறைய உள்ளன. உன் மகன் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6568

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களைவிட மேலானதாகும்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6569

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.) என அபூ ஹூரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6570

அபூ ஹூரைரா(ரலி) அறிவித்தார். நான் ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகிறவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகிறவர் யாரெனில், உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொன்னாரே அவர் தாம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6571

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகிற ஒரு மனிதரே அவர் அவரிடம் அல்லாஹ் ‘நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்’ என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். எனவே, அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு அவன் ‘நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள். ஏனெனில், உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு’ என்று சொல்வான். அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னை நகைக்கிறாயா?’ என்று கேட்பார். (இதைக் கூறியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை பார்த்தேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவராவார் என்று கூறப்பட்டு வந்தது.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6572

அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘அபூ தாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?’ என்று கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6573

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மக்களில் சிலர் ‘இறைத்தூதர் அவர்களே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘பெளர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘(சிரமம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்று கூட்டி ‘(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்பான். எனவே, சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள்.

இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான். உடனே அவர்கள் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொண்வோம்’ என்பர். அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான். அதற்கு அவர்கள் ‘நீயே எங்கள் இறைவன்’ என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்னையும் ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று’ என்பதாகவே இருக்கும். அந்தக் காலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முற்களைப் போன்றிருக்கும். ‘கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘ஆம் (பார்த்திருக்கிறோம்) இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறை மறுப்பு உள்ளிட்ட) தன் (தீய) செயல்களால் அழிந்து போனவரும் இருப்பார். (இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன், தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனம் கண்டு கொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். எனவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.

அப்போது அவர்கள் (நரக நெருப்பில) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்களின் மீது ‘மாஉல் ஹயாத்’ எனப்படும். (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அவர்களில் தம் முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் மட்டும் எஞ்சுவார். அவர் ‘என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. எனவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பி விடுவாயாக!’ என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். அப்பேது அல்லாஹ் ‘(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன் வைக்கலாம் அல்லவா?’ என்று கேட்பான். அதற்கு அவர் ‘இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்’ என்பார். எனவே, இறைவன் அவரின் முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பி விடுவான். அதற்குப் பிறகு ‘என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக!’ என்பவர் அவர். அதற்கு இறைவன் ‘வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!’ என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் ‘நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்’ என்பான். அதற்கு அவர் ‘இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையம் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மெளனமாக இருப்பார். பிறகு ‘இறைவா! என்னை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’ என்று கூறுவார் பின்னர் இறைவன் ‘வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான் உன்னுடைய ஏமாற்று வேலை தான் என்ன!’ என்று கேட்பான். அதற்கு ‘என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!’ என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்திக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், ‘நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) ‘நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்’ என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும் வரை ஆசைப்பட்டு (தன் விருப்பங்களைத் தெரிவித்து)க் கொண்டே இருப்பார். அப்போது இறைவன் ‘இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்பான்.

அறிவிப்பாளர் அபூ ஹூரைரா(ரலி) கூறினார்: இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6574

அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (மேற்கண்ட ஹதீஸை) அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் (அறிவித்தபோது, அவர்கள்) உடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ‘இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று கூறியபோது தான், அபூ ஸயீத்(ரலி) அவர்கள் ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்’ என்றார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘இதைப் போன்று இன்னொரு மடங்கு’ என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6575

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6576

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அப்போது ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறப்படும்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6577

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6578

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (திருக்குர்ஆன் 108:1 வது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகையில், ‘அது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்’ என்று தெரிவித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ பிஷ்ர் ஜஅஃபர் இப்னு அபீ வஹ்ஷிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் ‘சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!’ என்று கேட்டேன். அதற்கு ஸயீத்(ரஹ்) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6579

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6580

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று கணக்கிலடங்க கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6581

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் ‘(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?’ என்று கேட்டேன். அவர் ‘இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா’ என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘வாசனை’ யா(தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹூத்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6582

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்பான். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6583

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6584

(அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் ‘இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்’ ‘(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’ என்று நான் கூறுவேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்’ என்று சொல்லப்படும். உடனே நான் ‘எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6585

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6586

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்’ என்று சொல்வான். இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

அறிவிப்பாளர் ஷஐப் இப்னு அபீ ஹம்ஸா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்’ என்றும், அறிவிப்பாளர் உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6587

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் ‘எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்றேன். அவர் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்’ என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் ‘(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?’ என்றேன். அவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்’ என்றார். நான் ‘இவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். அவர் ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்’ என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6588

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6589

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸ்ர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன் என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6590

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6591

ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6592

ஹாரிஸா(ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) அறிவித்தார். ‘ (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத்(ரலி) அவர்கள் என்னிடம் ‘அதன் கோப்பைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள் ‘(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்’ என (நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6593

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6594

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்மாக மாறிவிடுகிறது. பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! ‘உங்களில் ஒருவர்’, அல்லது ‘ஒருவர்’ நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே ‘விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு’ அல்லது ‘ஒரு முழம்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.

(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே ‘ஒரு முழம்’ அல்லது ‘இரண்டு முழங்கள்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஆதம் இப்னு அபீ இயாஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (ஒரு முழமா இரண்டு முழங்களா? என்பதில் சந்தேகம் இல்லாமல்) ஒரு முழம் என்றே (தீர்மானமாக) இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6595

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ், (தாயின்) கருவறையில் ஒரு வானவரை நியமிக்கிறான். அவர், ‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு’ என்று கூறிக் கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும்போது ‘இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? துர்பாக்கியம் உடையதா? அல்லது நற்பாக்கியம் பெற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?’ என்று வானவர் கேட்பார். அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு,) அது தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6596

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம் (தெரியும்)’ என்றார்கள். அவர் ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஒவ்வொருவரும் ‘எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது ‘எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப் பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6597

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6598

அபூ ஹூரைரா(ரலி) அறிவித்தார். இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6599

அபூ ஹூரைரா(ரலி) அறிவித்தார். ‘எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறனார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6600

மக்கள் அல்லாஹ்வின் தூதரே! சிறிய வயதில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது நிலை (என்ன என்பது) பற்றி என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்று சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6601

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்தி(ரம் எனும் வாழ்வாதா)ரத்தைக் காலி செய்(துவிட்டு, அதைத் தன்னுடையாக்கிக் கொள்)வதற்காக அவளை மணவிலக்குச் செய்திடுமாறு (தன் மணாளரிடம்) கோர வேண்டாம். (மாறாக, அந்த நிபந்தனையின்றி) அவள் மணம் புரிந்துகொள்ளட்டும். ஏனெனில், அவளுக்கென விதிக்கப்பட்டது அவளுக்கே கிடைக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6602

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவரின் தூதுவர் நபி அவர்களிடம் வந்தார். அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோர் நபி அவர்களுடன் இருந்தனர். அந்தப் புதல்வியாரின் மகன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகத் தூதுவர் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்ப்பாயாக’ என்று தம் புதல்விக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6604

ஹூதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6605

அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் ‘சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்றார்கள்.

அப்போது மக்களில் ஒருவர் ‘அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு பிறகு ‘(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6606

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்து விட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து ‘அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்’ என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் ‘அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்’ என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்குப் போய் விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தம் கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்)’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பிலாலே! எழுந்து சென்று ‘இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகிறான்’ என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6607

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் பங்கெடுத்த (கைபர்) போரில், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்த ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு குறிப்பட்டார்கள் என்பதை அறிய) மக்களில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதர்த்து எல்லாரையும் விடக் கடுமையாகப் போராடும் அதே நிலையில் இருந்தார். இறுதியில் அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தம் வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து (அழுத்தி)க் கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது. (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்து ‘தாங்கள் இறைத்தூதர்தாம் என்று நான் உறுதி கூறுகிறேன்’ என்றார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர் ‘தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரை பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காகப் போராடுவதில் மகத்தான (பங்காற்றுப)வராகத் திகழ்ந்தார். (தாங்கள் அவரைப் பற்றி நரகவாசி என்று குறிப்பிட்டிருப்பதால்) அவர் இதே (தியாக) நிலையில் இறக்கப் போவதில்லை என்று நான் அறிந்தேன். அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டபோது அவசரமாக இறந்துவிட விரும்பி தற்கொலை செய்தார்’ என்றார். அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால, (இறுதியில்) அவர் சொர்க்கவாசகளில் ஒருவராகி விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து வருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராகி விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.