85. பாகப் பிரிவினைச் சட்டங்கள்

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6623

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டு வரப்பட்டன. எனவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள். நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்று கொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள்’ அல்லது ‘எங்களில் சிலர்’, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி(ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது. நபி(ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் நாம் மீண்டும் சென்று அவர்கள் செய்த சத்தியத்தை) அவர்களுக்கு நினைவு படுத்துவோம்’ என்று சொல்லிக் கொண்டோம். அவ்வாறே நபி அவர்களிடம் சென்றோம். (அவர்கள் செய்த சத்தியத்தை நினைவு படுத்தினோம்.) அப்போது அவர்கள், ‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை, மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் ‘சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே செய்வேன்’ அல்லது ‘சிறந்ததையே செய்துவிட்டு, சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்து விடுவேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6624

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6625

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6626

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (எனவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! – அதாவது பரிகாரம் செய்யட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6627

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, (இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் (இது ஒன்றும் புதிதல்ல!) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். வஅய்முல்லாஹி (அல்லாஹ்வின் மீதாணையாக!) அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். மக்களிலேயே (அவரின் புதல்வரான) இவர் (உசாமா) என் அன்புக்குரியவராவார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6628

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பது நபி(ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)யமாக இருந்தது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6629

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டு விட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டு விட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் இறைவழியில் செலவழிக்கப்படும் என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6630

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவழிக்கப்படும் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6631

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6632

அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், ‘எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் ‘ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘பேசுங்கள்’ என்றார்கள். அந்த மனிதர், ‘என் மகன் இவரிடம் ‘அஸீஃப்’ ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ‘அஸீஃப் என்பதற்குக் ‘கூலியாள்’ என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். எனவே, மக்கள் என்னிடம், ‘உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு’ என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், ‘(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்’ என்றார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: ‘உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்’ என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப் பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6635

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) ‘பனூ தமீம், பனூ ஆமிர் இப்னு ஸஅஸமு, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள் தாமே!’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6636

அபூ ஹ¤மைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து ‘இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்’ என்று கூறிவிட்டு ‘(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்’ என்று கூறினார்கள்.
அபூ ஹ¤மைத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள். இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6637

அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6638

அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ‘கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிக்’ என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், ‘என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?’ என்று (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் ‘என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது’ என்று கூறினார்கள். உடனே நான் ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர’ என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6639

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்) சுலைமான்(அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர் ‘இன்ஷாஅல்லாஹ்’ (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்’ என்று கூறினார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர்களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத் தாம் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள் அனைவரும் இறைவழியில் அறப்போர் புரிகிற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப்பார்கள் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6640

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப் பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) ‘இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஸஅத்(பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை’ என்று கூறினார்கள்.

அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா(ரஹ்) மற்றும் இஸ்ராயீல்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக’ என்பது இடம் பெறவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6641

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அபூ சுப்யான்(ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ'(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது’ என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (உன்னுடைய இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)’ என்று கூறினார்கள். அவர் ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது’ என்று பதிலளித்தார்கள்.

‘வீட்டார்கள் என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா இப்னு புகைர்(ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6642

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் முதுகை யமன் நாட்டுத்தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், ‘சொர்க்க வாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்ப மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6643

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒருவர் ‘குல் ஹ¤வல்லாஹ¤ அஹத்’ எனும் (112 வது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பச் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6644

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தொழுகையில்) ருகூவையும் (குனிதலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத்தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போது சஜ்தா செய்யும் போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6645

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்’ என்று மூன்று முறை கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6647

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர்(ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘பிறரின் பேச்சை எடுத்துரைத்தல்; என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொருடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்று பொருள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. இன்னோர் அறிவிப்பில், உமர்(ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி(ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6648

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6649

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார். (குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூ மூஸா(ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் பன} தைம்’ குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார். அபூ மூஸா(ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், ‘இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டேன்’ என்றார். (இதைக் கேட்ட) அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் தரும்படி கேட்டுச் சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லாத நிலையில் உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்’ என்று கூறினார்கள். (எனவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (ஃகனீமத் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே, ‘அஷ்அரீ குலத்தார் எங்கே?’ என எங்களைக் குறித்து கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். நாங்கள் (அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டு) சென்று கொண்டிருந்தபோது (நாங்கள் எங்களுக்குள்) ‘நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு (வாகன) ஒட்டகங்கள் வழங்கப் போவதில்லையென சத்தியம் செய்தார்கள்; அவர்களிடம் (அதற்கான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. பிறகு (என்ன நடந்தோ!) நமக்கு ஒட்டகங்களை வழங்கினார்கள். (ஒரு வேளை) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கும்படி செய்து விட்டோமா! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை’ என்று பேசிக் கொண்டோம். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். அவர்களிடம், ‘நாங்கள் தங்களிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் கேட்டு முதலில்) வந்தபோது எங்களுக்கு ஒட்டகங்கள் தரப் போவதில்லையெனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். தங்களிடம் எங்களை ஏற்றியனுப்ப(த் தேவையான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. (பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் தரும்படி மறதியாகச் சொல்லி விட்டீர்களோ?)’ என்று கேட்டோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை ஏற்றிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கினான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (பொதுவாக) நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்வேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6650

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குத் தகுதியானவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூதாடலாம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6651

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, ‘நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்’ என்று வறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்’ என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6652

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார் எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறை நம்பிக்கையாளரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இதை ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6653

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பனூ இஸ்ராயீல் மக்களில் (தொழு நோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். எனவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, ‘பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை’ என்று கூறினார்.

இதை அபூ ஹ¤ரைரா(ரலி) அவர்கள் அறிவித்து விட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6654

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6655

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் (ரலி) தம் மகன் (அல்லது மகள்) இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும், ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும்’ இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) சலாம் கூறி அனுப்பியதோடு ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!’ என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது. குழந்தையைத் தம் மடியில் படுக்க வைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. (இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது (அழுகிறீர்களே)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். திண்ணமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6656

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; (‘உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6657

ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6658

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(மக்களில் சிறந்தவர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும் அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் ‘சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறுவதைத் தடுத்து வந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6659

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமின் அல்லது ‘தம் சகோதரனின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக (ஒரு பிரமாண வாக்குமுலத்தின்போது துணிவுடன்) பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்’ என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்வின் (‘அஹ்து’ எனும்) உடன் படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6660

சுலைமான் இப்னு மிஹ்ரான்(ரஹ்) அறிவித்தார். (மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்டார்கள். மக்கள் அன்னாரிடம் (விஷயத்தைக்) கூறினார்கள். அப்போது அஷ்அஸ்(ரலி) அவர்கள், ‘எனக்கும் என் தோழர் ஒருவருக்குமிடையே இருந்த ஒரு கிணறு தொடர்பாக எங்களின் விஷயத்தில் அருளப்பெற்றதே இந்த வசனமாகும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6661

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘இன்னம் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது ‘போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!’ என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6662

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறினார்: உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ் அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்களென இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்த சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது:) அப்போது நபி(ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்கள் எழுந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6663

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை அளிக்கமாட்டான்’ எனும் (திருக்குர்ஆன் 02:225 வது) இறைவசனம் ‘லா வல்லாஹி’ (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், ‘பலா வல்லாஹி) (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6664

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்து விடுகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6665

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (தம் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, ‘நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்கு முன் பலியிடல், பலியிடலுக்கு முன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். பிறகு மற்றொருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்றார்கள். இவை அனைவருக்குமே நபி(ஸல்) அவர்கள் ‘(அவ்வாறே) செய்யுங்கள். (முன் பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை’ என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் ‘(அப்படியே செய்யுங்கள்; (அப்படியே செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை’ என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6666

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபில் ஸியாரா) சுற்றி வந்து விட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். மற்றொருவர், ‘பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்து விட்டேன்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். இன்னொருவர், ‘கல்லெறிந்தற்கு முன்பே பலியிட்டு விட்டேன்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘குற்றமில்லை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6667

அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுஸவட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) ‘திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், ‘அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

‘நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹ¤ அக்பர்’ என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்து வருவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6668

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கூச்சலிட்டான். உடனே முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி), பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். உடனே, ‘(அவர்) என் தந்தை! என் தந்தை!’ என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹ¤தைஃபா(ரலி) அவர்கள், ‘(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸ¤பைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! ஹ¤தைஃபா(ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6669

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டு விட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6670

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். (அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தருவாயில் நபி(ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்த போது (இருபபிலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிலிருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6671

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுகை நடத்தினார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுகை நடத்தினார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம்(ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா(ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது – (தொழுகை முடிந்த பின்), ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இப்படி இப்படி நீங்கள் தொழுகை நடத்தினீர்கள்’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தாச் செய்தார்கள். பிறகு, ‘இந்த இரண்டு சஜ்தாக்கள், தம் தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்’ என்றார்கள்

Leave a Reply