79. பிரார்த்தனைகள்

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6227

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, ‘நீங்கள் சென்று, அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்’ என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். ‘சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)’ என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6228

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பி விட்டார்கள். அப்போது அப்பெண், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நிறைவேறும்)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6229

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6230

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது ‘அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்’ (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, ‘நிச்சயமாக அல்லாஹ்வே ‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன’ (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6232

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6233

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6234

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6235

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:) 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது. 4. நலிந்தவருக்கு உதவுவது. 5. அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது. 6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது. 7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(பின்வருவனவற்றைச் செய்யக் கூடாதென) தடை செய்தார்கள். 1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது. 3. மென்பட்டுத் திண்டில் அமர்வது. 4. சாதாரணப் பட்டு அணிவது. 5. அலங்காரப் பட்டு அணிவது. 6. எகிப்திய பட்டு அணிவது. 7. தடித்த பட்டு அணிவது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6237

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து மூன்று முறை செவியேற்றுள்ளேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6238

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வி(ன் இறுதிப் பகுதியி)ல் பத்தாண்டு காலம் நான் அவர்களுக்குச் சேவகம் செய்தேன். பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். அது குறித்து உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் என்னிடம் கேட்டு(த் தெரிந்து) உள்ளார்கள்.

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணந்து தாம்பத்திய உறவைத் தொடங்கிய சந்தர்ப்பத்தில்தான் (இந்த வசனம்) ஆரம்பமாக அருளப்பெற்றது. நபி(ஸல்) அவர்கள் ஸைனபின் மணாளராக இருந்தபோது (வலீமா – மணவிருந்துக்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகிலேயே நீண்ட நேரம் இருந்தனர். அவர்கள் வெறியேறட்டும் என்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நானும் அவர்களுடன் வெளியேறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடக்க, நானும் அவர்களுடன் நடந்தேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். பிறகு அக்குழுவினர் வெளியேறிப்பார்கள் என்று எண்ணியவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸைனப் அவர்களின் இல்லத்திற்குத்) திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். ஸைனப்(ரலி) அவர்களிடம் வந்தபோது அந்தக் குழுவினர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். (இப்போதும்) ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அந்தக் குழுவினர் வெளியேறிச் சென்று விட்டிருந்தனர். அப்போதுதான் பர்தா தொடர்பான (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம் அருளப்பெற்றது. உடனே எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் திரையிட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6239

அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டபோது மக்கள் வந்து (வலீமா – மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்குத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. இதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றபோது மக்களில் சிலரும் எழுந்து சென்றனர். மற்றவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (வெளியில் சென்றுவிட்டு) நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைய வந்தபோது அந்தச் சில பேர் (அப்போதும்) அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவர்களும் எழுந்து நடந்தார்கள். (மீண்டும் வெளியில் சென்றிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நான் (சென்று அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டதைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். (அவர்களுடன்) நானும் நுழையப் போனேன். அப்போதுதான் எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் (ஹிஜாப்) திரையிட்டார்கள்.

மேலும், உயர்ந்தவனான அல்லாஹ் ‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: ‘விருந்தளிப்பவர் (அவையிலிருந்து) எழுவதற்கும் வெளியே செல்வதற்கும் விருந்தாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை’ என்றும், ‘விருந்தாளிகள் எழுந்து செல்லட்டும் என்ற நோக்கில் தாம் எழுந்து போகத் தயாராவது போல் காட்டலாம்’ என்றும் இந்த ஹதீஸிலிருந்து (நமக்கு) மார்க்கச் சட்டம் கிடைக்கிறது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6240

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘தங்கள் துணைவியரை பர்தா அணியச் சொல்லுங்கள். (அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)’ என்று கூறுவார்கள். ஆனால், (அப்போது) நபி(ஸல்) அவர்கள் (ஒன்றும்) செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) ‘மனாஸிஉ’ எனுமிடத்திற்குச் செல்வோம்.

(ஒரு நாள் நபியவர்களின் துணைவியார்) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) அவர்கள் (அங்கு செல்ல) வெளியேறினார்கள். அவர் உயரமான பெண்ணாயிருந்தார். அப்போது ஓர் அவையில் அமர்ந்திருந்த உமர்(ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, ‘சவ்தாவே! தங்களை நாம் அடையாளம் கண்டுகொண்டோம்’ என்று பர்தா சட்டம் அருளப்பெற வேண்டுமென்ற பேரார்வத்தில் கூறினார்கள். பிறகு, அல்லாஹ் பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6241

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், ‘நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6242

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6243

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளதை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.  மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6245

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரலி) அவர்கள் வந்து, ‘நான் உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி விட்டேன். பின்பு உமர்(ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை’ என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், ‘(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. எனவே, நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்’ என்று கூறினார்கள்’ என்றேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்’ என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா(ரலி) அவர்களுடன் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்’ என்று உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்’

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6246

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற்குள்) நுழைந்தேன். அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண்டார்கள். உடனே (என்னிடம்) ‘அபூ ஹிர்! திண்ணை வாசிகளிடம் சென்று, ‘அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (இறைத்தூதர்(ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6247

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6248

அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறினார்: ‘நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம்’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார். நான், ‘ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரீச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி, (அங்கு பயிராகும்) தண்டுக் கிரையின் தண்டுகளைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது வாற்கோதுமையை அரைத்து அதில் இடுவார். நாங்கள் ஜுமுஆத் தொழுதுவிட்டுத் திரும்பிவந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள் முன் வைப்பார். அதன் காரணத்தினால் தான் நாங்கள் (வெள்ளிக் கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பின்னர் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவையும் உட்கொள்வோம்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6249

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்’ என்றார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி’ (அவரின் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, ‘நாங்கள் பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொன்னேன்.

மற்றோர் அறிவிப்பில், ‘வ பரகாத்துஹு’ (இறைவன் வழங்கும் சுபிட்சமும்) என்று (கூடுதலாக) ஆயிஷா(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது. இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6250

ஜாபிர்(ரலி) அறிவித்தார். என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘நான்தான்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6252

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறியாவது: நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு நீ தலையை உயர்த்தி (சற்று நேரம்) நிலையாக அமர்ந்திரு’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6253

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம், ‘(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்’ என்றார்கள். நான், ‘வ அலைஹிஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி’ (அவரின் மீதும் இறை சாந்தியும் அவனுடைய கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6254

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். – இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்’ என்றார்.

நபி(ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உம்முடைய இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்’ என்றார்.

(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள், ‘(ஆம். இறைத்தூதர் அவர்களே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்’ என்றார்கள். இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்) கொள்ள முனைந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தம் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, ‘சஅதே! அபூ ஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?’ என்று கூறி, ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்படி இப்படிக் கூறினார்’ என்று தெரிவித்தார்கள்.

அதற்கு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘அவரை மன்னித்துவிட்டு விடுங்கள், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகர வாசிகள் அவருக்குக் கீரிடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்திருந்த நிலையில் தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்’ என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6255

அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள் கூறினார்: (என் தந்தை) கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது குறித்துக் கூறுகையில் (பின்வருமாறு) தெரிவித்தார்கள். எங்களிடம் (யாரும்) பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களுக்குத்) தடை விதித்துவிட்டார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்வேன். அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள் தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். இறுதியாக ஐம்பது நாள்கள் பூர்த்தியாயின. நபி(ஸல்) அவர்கள் (அன்றைய) பஜ்ருத் தொழுகையை முடித்தபோது எங்களின் பாவ மன்னிப்பு வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6256

ஆயிஷா(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். ‘வ அலைக்குமுஸ்ஸாமு வல்லஅனா’ (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்றார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து) ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6257

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6258

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள். இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6259

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையும் அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ(ரலி) அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் தலைவர்க)ளுக்கு ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)’ என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க அவளை நாங்கள் சென்றடைந்தோம். ‘உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)’ என்று கேட்டோம். அவள், ‘என்னிடம் கடிதம் ஏதுமில்லை’ என்று பதிலளித்தாள். அவளிருந்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் நண்பர்கள் இருவரும் ‘கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!’ என்றார்கள்.

நான் (அவளிடம்), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒன்று நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை (சோதனையிடுவதற்காக உன்னுடைய ஆடையை) நான் கழற்ற வேண்டியிருக்கும்’ என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள்.

அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். (கடிதம் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ(ரலி) அவர்களை நோக்கி,) ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களின் மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் மக்காவில் உள்ளனர்’ என்று கூறினார்.

(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே கூறுங்கள்’ என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள், ‘இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களிடம் அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?’ என்றார்கள். இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6260

அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார். எனவே, அவரிடம் நாங்கள் சென்றோம். பிறகு, அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது அது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் ரோம பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிக் கொண்டது. அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நேர்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச் சாந்தி உண்டாகட்டும்.)

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6261

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். ‘அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் (தமக்குக் கடன் கொடுத்த) தம் நண்பருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்(துக் கடலில் அனுப்பி வைத்)தார்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள், ‘(இஸ்ரவேலரான) அவர் ஒரு மரக்கட்டையைத் துளையிட்டு அதன் நடுவே அந்தப் பணத்தை வைத்தார். மேலும், தம் நண்பருக்கு ‘இன்னாரிடமிருந்து இன்னாருக்கு’ என ஒரு கடிதம் எழுதி (அதையும் உள்ளே வைத்துக் கடலில் அனுப்பி)னார்’ என்று குறிப்பிட்டதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6262

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) ‘பன} குறைழா குலத்தார்’ (கைபர் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பிட ஸஅத் அவர்கள் (வாகனத்தில் அமர்ந்தபடி) வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் தலைவரை’ அல்லது ‘உங்களில் சிறந்தவரை’ நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்’ என்று (அன்சாரிகளை நோக்கிச்) சொன்னார்கள்.

ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் (வந்து) நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்தபோது, ‘(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பளிக்கப் போகிறீர்கள்?)’ என்றார்கள். ஸஅத்(ரலி) அவர்கள், ‘இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்படவேண்டும். இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அரசன் எவ்வாறு தீர்ப்பளிப்பானோ அவ்வாறு நீங்கள் தீர்ப்பளித்து விட்டீர்கள்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்துள்ளார்கள்’ என்பது வரை இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6263

கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர்களிடையே இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6264

அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் உமர்பின் கத்தாப்(ரலி) அவர்களின் கரத்தைப் பற்றி இருந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6265

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தை எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள். (அது பின்வருமாறு:) அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்).
நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே (உயிரோடு) இருந்தவரை இவ்வாறு (‘அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு’ – நபியே உங்களின் மீது சாந்தி நிலவட்டும் என்று முன்னிலைப்படுத்தி) சொல்லிவந்தோம். அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது நாங்கள் ‘அஸ்ஸலாமு அலந் நபிய்யி’ (நபி(ஸல்) அவர்களின் மீது சாந்தி நிலவட்டும்) என்று (படர்க்கையாகக்) கூறலானோம்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6266

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (அவர்களை உடல் நலம் விசாரித்துவிட்டு) அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்கள் வெளியேறி வந்தார்கள். அப்போது மக்கள், ‘அபூ ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?’ என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு ‘அவர்கள் அல்லாஹ்வின் மாட்சிமையால் நலமடைந்துவிட்டார்கள்’ என்று அலீ(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘(மரணக் களையை) நபி(ஸல்) அவர்களிடம் நீர் காணவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப் போகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் இந்த நோயின் காரணத்தால் விரைவில் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். அப்துல் முத்தலிபின் மக்களுடைய முகங்களில் மரணக் களை(இருந்தால் அ)தனை நான் அடையாளம் அறிந்துகொள்வேன். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். (அவர்கள் இறந்த பிறகு) இந்த ஆட்சி அதிகாரம் யாரிடமிருக்கும் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால், அதை நாம் அறிந்து கொள்ளலாம். அது பிறரிடம் இருக்கும் என்றால், (அவர்களிடம் (அதைக் குறித்து நாம் கோருவோம். அவர்கள் (தமக்குப் பின் பிரதிநிதி யார் என்பது பற்றி) இறுதியுபதேசம் செய்யலாம்’ என்றார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு, நபி(ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால், (அவர்களுக்குப் பிறகு) மக்கள் ஒருபோதும் நமக்கு அதைத் தரமாட்டார்கள். உறுதியாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருபோதும் கேட்க மாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6267

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்று முறை அழைத்துவிட்டு, ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (எனக்குத் தெரியாது)’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைவைக்கக் கூடாது’ என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்று சொன்னேன். ‘அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6268

ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு அருகிலுள்ள) ரபதா எனும் இடத்தில் அபூ தர்(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ஹர்ராப் பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்ரே! (இந்த) உஹுத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் ‘ஓர் இரவு’ அல்லது ‘மூன்று இரவுகள்’ கழிந்து செல்வதைக் கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர’ என்றார்கள். -(இந்த இடத்தில் அபூ தர்) தம் கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்ரே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே!’ என்றேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தம் செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!’ என்றார்கள். பிறகு என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்! நான் திரும்பி வரும் வரை இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்து விட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று சொன்னது நினைவுக்கு வரவே அங்கேயே இருந்து விட்டேன்.

(நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்ததும்,) ‘இறைத்தூதர் அவர்களே! ஏதோ குரலை கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களின் சொல்லை நினைவு கூர்ந்தேன். எனவே, (இங்கேயே) இருந்து விட்டேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல் தான்). அவர் என்னிடம் வந்து ‘என் சமுதாயத்தாரில் இறைவனுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று தெரிவித்தார்’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் விபசாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)’ என்று பதிலளித்தார்கள்.

வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதைப் போன்றே ஹதீஸ் வந்துள்ளது. அஃமஷ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘மூன்று நாள்களுக்கு மேல் அந்தப் பொற்காசு (என்னிடம்) தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6269

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6270

இப்னு உமர்(ரலி) கூறினார்: ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, ‘நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தம் இடத்திலிருந்து எழுந்து கொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர்(ரலி) அவர்கள் வெறுத்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6271

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணந்து கொண்டபோது மக்களை (வலீமா – மணவிருந்துக்காக) அழைத்தார்கள். மக்கள் (வந்து) சாப்பிட்ட பின் பேசிக்கொண்டு (அங்கேயே) அமர்ந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லட்டும் என்ற எண்ணத்தில்) நபி(ஸல்) அவர்கள் தாம் எழுந்து போகத் தயாராக இருப்பதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழவில்லை. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் எழுந்து (சென்று) விட்டார்கள். அவர்கள் எழுந்தபோது மக்களில் சிலரும் அவர்களுடன் எழுந்து (சென்று) விட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் எழாமல் எஞ்சி இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைய வந்தபோது அந்த மூவரும் அமர்ந்து கொண்டேயிருந்தார்கள். (எனவே நபி அவர்கள் தங்களின் வீட்டுக்குள் நுழையவில்லை.)

பிறகு, அந்த மூவரும் எழுந்து நடக்கலாயினர். உடனே நான் வந்து நபி(ஸல்) அவர்களிடம் அந்த மூவரும் சென்றுவிட்ட விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். நானும் வீட்டுக்குள் நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள் எனக்கும் தமக்கும் இடையே திரையிட்டு விட்டார்கள். மேலும், அல்லாஹ் (பர்தா தொடர்பான 33:53 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6272

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தம் கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6273

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வின் தூதரே’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6274

பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும் (மிகப் பெரிய பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் ‘அவர்கள் நிறுத்த மாட்டார்களா?’ என்றோம்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6275

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள்அஸர் தொழுகையைத் தொழுகை நடத்திவிட்டு உடனே (வழக்கத்திற்கு மாறாக) விரைவாகச் சென்று வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6276

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டிலின் நடுவில் தொழுவார்கள். நான் அவர்களுக்கும் கிப்லாவிற்கும் இடையே படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். எழுந்து அவர்களுக்கு முன்னே செல்ல விரும்பாமல் மெல்லத் தவழ்ந்தபடி செல்வேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6277

அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபுல்மலீஹ்(ரஹ்) அவர்கள் (என்னிடம்), நான் உங்கள் தந்தை ஸைத்(ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் எங்களிடம் கூறினார்கள். நான் (அதிகமாக) நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, (ஒரு நாள்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (அவர்கள் சாய்ந்து கொள்வதற்காக) பேரீச்ச நாறினால் நிரப்பப்பட்ட தலையணையொன்றை வைத்தேன். ஆனால், அவர்கள் தரையின் மீதே அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. அப்போது அவர்கள் என்னிடம், ‘ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (நான் அதைவிட அதிக நாள்கள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)’ என்றேன். அவர்கள், ‘ஐந்து நாள்கள் (நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அதை விட அதிக நாள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘(மாதம் ஒன்றுக்கு)’ என்றார்கள். நான் (மீண்டும்), ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘பதினோரு நாள்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே’ என்றேன். அவர்கள், ‘ஐந்து நாள்கள் (நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)’ என்று சொன்னேன். அவர்கள், ‘பதினொரு நாள்கள் (நோன்பு நோற்றுக் கொள்க)’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அதை விட அதிக நான் நோன்பு நோற்கும் சக்தி பெற்றுள்ளேன்)’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள் (இறைத்தூதர்) தாவூத் அவர்களின் நோன்பை விட மேலான நோன்பில்லை. (அது) ஒரு நாள் நோன்பு நோற்பது; ஒரு நாள் நோன்பில்லாமல் இருப்பது எனச் சரிபாதிக் காலம் ஆகும் என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6278

அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குள் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ‘இறைவா! எனக்கு ஒரு (நல்ல) நண்பரை தந்தருள்வாயாக!’ என்று பிரார்த்திதேன். பிறகு (நபித்தோழர்) அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டேன். அபுத்தர்தா(ரலி) அவர்கள், ‘நீங்கள் எந்த ஊர்க்காரர்?’ என்று கேட்டார்கள். நான், ‘கூஃபாவாசி’ என்று சொன்னேன். அபுத்தர்தா(ரலி) அவர்கள், ‘(நபி(ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (தொடர்ந்து) அவர்கள், ‘தன் தூதரின் நாவால் யாரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா? என்று அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில்காண்டு கேட்டார்கள். (நபி(ஸல்) அவர்களின் பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும் தலையணையையும் சுமந்து சென்றவர் உங்களிடையே இல்லையா? என்று இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (அவற்றுக்கெல்லாம் நான் ‘ஆம்’ என பதிலளித்தேன். பிறகு), அபுத்தர்தா(ரலி) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், ‘வல்லய்லீ இதா யஃக்ஷா’ எனும் (அல்லைல் அத்தியாயத்தின்) வசனங்களை எப்படி ஓதிக் கொண்டிருந்தார்கள்?’ என்று கேட்டார்கள். ‘வத்தகரி வல்உன்ஸா’ என்று (‘வமா கலக்க’ எனும் சொற்றொடர் இல்லாமல்தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அப்போது அபுத்தர்தா(ரலி) அவர்கள், ‘(ஷாம் நாட்டினரான) இவர்கள் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட இந்த ஓதல் முறை விஷயத்தில் என்னைக் குழப்பப் பார்க்கிறார்கள்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6279

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னால் தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்ளுவோம்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6280

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (தம் பெயர்களில்) ‘அபூ துராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ(ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒரு நாள்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. எனவே, நபி அவர்கள் ‘உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா(ரலி) அவர்கள், ‘எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டு விட்டது. எனவே, அவர் கோபித்துக் கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றார் என்று பதிலளித்தார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘அவர் எங்கே என்று பார்’ என்றார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர் பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருக்கிறார்’ என்றார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே ‘அபூ துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூ துராபே ! எழுங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6281

அனஸ்(ரலி) அறிவித்தார். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி(ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தம் கஃபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6282-6283

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும்போது) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். உம்மு ஹராம்(ரலி) அவர்கள் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். உடனே உம்மு ஹராம்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடல் மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர் களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள். என்று கூறினார்கள். உடனே, ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்ற உம்மு ஹராம்(ரலி) கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என உம்மு ஹராம் கேட்க, முன்போன்றே நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள் அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்’ என்றார்கள்.

அவ்வாறே உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியிலிருந்து விழுந்து இறந்து விட்டார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6284

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன:1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக் கொள்ள, அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.)
2. இஹ்திபா, அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய அமர்வது.3. முலாமஸா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.) 4. முனாபதா. (ஒருவரின் மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6285-6286

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா(ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி(ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!’ என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப் பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி(ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!’ என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்’ என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)’ என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6287

அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கால் மீது கால் வைத்து மல்லாந்து படுத்திருக்கக் கண்டேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6288

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6289

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6290

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6291

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்’ என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம் முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘(இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதை விட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமையு(டன் சகித்துக்) கொண்டார்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6292

அனஸ்(ரலி) அறிவித்தார். (தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டு விட்டது. அப்போது ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஏதோ தனியாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர் உரையாடிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் உறங்கி விட்டனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பேசி முடித்து) எழுந்து வந்து தொழுவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6293

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டு விடாதீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6294

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ‘நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்’ என்றார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6295

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக்கூடும் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6296

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘குச்சியை (குறுக்காக) வைத்தேனும் உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6297

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6298

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிக்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘கத்தூம்’ என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும் என (அறிவிப்பாளர்) அபுஸ் ஸினாத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (இதன்படி ‘கத்தூம்’ எனுமிடத்தில் விருத்த சேதனம் செய்து கொண்டார்கள்) எனப் பொருள் வரும்.)

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6299

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?’ என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன்’ என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார். பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6300

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் விருத்தசேதனம் செய்தவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உயிர் கைப்பற்றப்பட்டது.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6301

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’வின் மீதும் சத்தியமாக என்று கூறி விட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பனிடம், ‘வா சூதாடுவோம்’ என்று கூறியவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6302

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.

பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6303

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டது. முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்ததுமில்லை; எந்த பேரீச்ச மரத்தையும் நான் நட்டதுமில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இது குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களின் குடும்பத்தார் சிலரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் வீடு கட்டினார்’ என்று கூறினார்கள். நான், ‘தாம் வீடு கட்டுவதற்கு முன்னர் இவ்வாறு அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்’ என்றேன்.

Leave a Reply