71. அகீகா

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5467

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார். எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5468

ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடுவதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5469

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்து விட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) ‘குபா’வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகி விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், ‘யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது’ எனக் கூறப்பட்டு வந்தது.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5470

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்து விட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது ‘என் மகன் என்ன ஆனான்?’ என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்’ என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) ‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்’ என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இன்றிரவு தாம்பத்திய உறவு கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), ‘ஆம்’ என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), ‘குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பி இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?’ என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன’ என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5471

சல்மான் இப்னு ஆமிர்(ரலி) கூறினார். பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து சல்மான் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவித்தார்கள்.

இப்னு சீரின்'(ரஹ்) வழியாக வரும் சல்மான்(ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5472

சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) ‘குர்பானி’ கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஹபீப் இப்னு அஷ்ஷமீத்(ரஹ்) கூறினார். ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களிடம், ‘அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக கேட்டார்கள்’ என்று வினவும்படி என்னை இப்னு சீரின்(ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அவர்களிடமிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5473-5474

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இனி), தலைக்குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி ‘ஃபரஉ’ ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’வாகும்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.