[பாகம்-11] முஸ்லிமின் வழிமுறை.

பிள்ளைகளுக்குரிய கடமைகள்.

ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்பதையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அந்த குழந்தையின் தாயை அவர் தேர்ந்தெடுப்பதில் இருந்து அக்குழந்தைக்கு அழகிய பெயர் சூட்டுவது, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா கொடுப்பது, கத்னா செய்வது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, மென்மையாக நடந்து கொள்வது, அவர்களுக்குச் செலவு செய்வது, சிறந்த ஒழுக்கப் பயிற்சி அளிப்பது, அவர்களைப் பண்படுத்துவது, பக்குவப்படுத்துவது, அவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது, ஃபர்லுகளையும் சுன்னத்துகளையும் இஸ்லாமிய ஒழுக்கங்களையும் நிறைவேற்றுவதற்குப் பயிற்சி கொடுப்பதுவரை அனைத்தும் அடங்கும்.

அவகளுக்குத் திருமணமாகின்ற வரை இவ்வனைத்தும் தந்தையின் கடமையாகும். அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவர்களை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டும். விரும்பினால் அவர்கள் தந்தையின் பராமரிப்பில் இருக்கலாம். அல்லது தனியாகச் சென்று விடலாம்.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு: தம் குழந்தைகளுக்குப் பால் குடியைப் பூர்த்தியாக்க வேண்டும் என்று தந்தையர்களில் யாராவது விரும்பினால் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். இந்நிலையில் அத்தாய்மார்களுக்கு நல்லமுறையில் உணவளிப்பதும் உடையளிப்பதும் குழந்தைகளின் தந்தையர்க்குரிய பொறுப்பாகும். (அல்குர்ஆன்: 2:233)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 66:6). வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளை கொலை செய்யாதீர்! நாம்தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம் உங்களுக்கும் உணவளிக்கிறோம். (அல்குர்ஆன்: 17:31)

நபி(ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாள் அகீகா கொடுத்து, பெயர் சூட்ட வேண்டும். தலை முடியை மழித்துவிட வேண்டும். அறிவிப்பவர்:ஸமுரா(ரழி), நூல்: திர்மிதி, இப்னு மாஜா.

குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்கும்போது அவர்களிடம் சமமாக நடந்துகொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:பைஹகி, தப்ரானி.

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது அவர்களை தொழும்படி ஏவுங்கள். பத்து வயதை அடைந்ததும் தொழாமலிருந்தால் அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களைப் பிரித்து வையுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: அபூதாவூத், தப்ரானி.

நூல்: முஸ்லிமின் வழிமுறை.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.