அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்!

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் – நபியாகவும் – இருந்தார். (19:41)

“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும். (19:42)

“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன். (19:43)

“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன். (19:44)

“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்). (19:45)

(அதற்கு அவர்) “இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார். (19:46)

(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார். (19:47)

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவானாகாமல் இருக்கப் போதும்” (என்றார்). (19:48)

(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (19:49)

மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். (19:50)

This entry was posted in இறுதி இறை வேதம் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.