[பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை.

நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்:

இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1)

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்; நீங்கள் அதனை அறியாத நிலையில்! (49:2)

அவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அவர்களை நேசிப்பதையும் அல்லாஹ்வே முஃமின்களுக்கு கடமையாக்கியுள்ளான்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்.அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (47:33)

இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள்.
(59:7)

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங் கருணையுடைவனுமாவான். (3:31)

தன்னுடைய தந்தை, தன்னுடைய பிள்ளை இன்னும் பிற மக்கள் யாவரையும் விட ஒருவருக்கு நான் மிகப் பிரியமானவராக ஆகாதவரை உங்களில் யாரும் நம்பிக்கை கொண்டவராக ஆக மாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:புகாரி, முஸ்லிம்

என்றாலும் அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும்? அது எந்த வகையில் அமைய வேண்டும்?

அது, அவர்களுக்கு கீழ்ப்படிவதன் மூலமாக, மார்க்க மற்றும் உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களைப் பின்பற்றி நடப்பதன் மூலமாக அமைய வேண்டும்.

அவர்களை நேசிப்பதும், கண்ணியப்படுத்துவது, மதிப்பது ஆகியவற்றை விட வேறு யாருடைய நேசத்திற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது.

அவர்கள் நேசிக்கின்றவர்களை இவனும் நேசிக்க வேண்டும். அவர்கள் பகைக்கின்றவர்களை இவனும் பகைக்க வேண்டும். மேலும் அவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை இவனும் விரும்பவேண்டும். அவர்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவனும் வெறுக்கவேண்டும்.

அவர்கள் கூறிய மார்க்க விஷயங்கள், உலகக் காரியங்கள் மற்றும் இம்மை, மறுமை பற்றிய மறைவான விஷயங்கள் ஆகியவற்றில் அவர்களை நம்பவேண்டும்.

அவர்களைப் பற்றிக் கூறப்படும்போது அவர்களைக் கண்ணியப்படுத்தும் முகமாக அவர்கள் மீது ஸலாத்தும் ஸலாமும் சொல்ல வேண்டும்.

அவர்களுடைய வழிமுறையை, மார்க்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுடைய பிரச்சாரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுடைய அறிவுரைகளை எடுத்து நடக்க வேண்டும்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.