[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வின் வார்த்தையுடன்…

அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்:

அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள்.  தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு  ஆளாவார்கள்; அழிந்து போவார்கள் என ஒரு முஃமின் நம்ப வேண்டும்.

நபி(ஸல்) கூறினார்கள்: திருக்குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக அது மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி), முஸ்லீம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக மக்களில் அல்லாஹ்வுக்கென்று சிலர் இருக்கின்றனர். அவர்கள் குர்ஆனின்படி நடப்பவர்கள். அவர்களே அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனுக்கே உரித்தானவர்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அஹ்மத், நஸயீ

திண்ணமாக இரும்பு துருப்பிடிப்பதுபோல உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அதை நீக்குவது எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதுவதும் மரணத்தை நினைவு கூர்வதும்தான் என்று பதிலளித்தார்கள். (பைஹகீ)

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் திருக்குர்ஆன் எதை ஹலால் என்று கூறுகிறதோ அதை ஹலால் என்றும் எதை ஹராம் என்று கூறுகிறதோ அதை ஹராம் என்றும் கூறவேண்டும். மேலும் அது கூறும் ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதோடு அது கூறும் பண்புகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் அதை ஒதும்போது பின்வரும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்:

உழுச் செய்து கொண்டு கிப்லாவை முன்னோக்கி மரியாதையோடும் கண்ணியத்தோடும் அமர்ந்து திருக்குர்ஆனை ஒதவேண்டும்.

அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக ஓதவேண்டும். முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதக் கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் முழுக் குர்ஆனையும் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதிமுடிக்கின்றாரோ அவர் குர்ஆனை விளங்கவில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: திர்மிதி, நஸயீ

ஓதும்போது பயபக்தியை மேற்கொள்ள வேண்டும்.

அழகிய ராகத்துடன் ஓதவேண்டும். ஏனெனில் “திருகுர்ஆனை அழகிய ராகத்துடன் ஓதுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அல்பர்ராஉ பின் ஆஸிப்(ரலி) நூல்: அஹ்மத், இப்னுமாஜா

தனக்கு முகஸ்துதி ஏற்பட்டுவிடும் என்றோ, தொழுது கொண்டிருப்பவருக்கு இடையூறாக இருக்கும் என்றோ அஞ்சினால் சப்தமில்லாமல் ஓதவேண்டும்.

அதன் அர்த்தங்களையும் உட்கருத்துக்களையும் விளங்கி சிந்தித்து, மனதை ஒரு நிலைப்படுத்தி ஓதவேண்டும்

திருகுர்ஆனை ஓதும்போது அலட்சியமாகவோ அதற்கு மாறுசெய்யும் விதமாகவோ நடந்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது சிலவேளை தன்னைத் தானே சபித்துக் கொள்வதற்க்கு காரணமாக ஆகிவிடும். ஆம்! ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பணிந்து இறைஞ்சுவோம் ‘(3:61) என்ற வசனத்தையோ அல்லது ‘எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்’ (11:18) என்ற வசனத்தையோ ஓதும்போது தானே அந்நிலையில் இருந்தால் அவன் தன்னைத் தானே சபித்துக் கொள்ளக்கூடியவனாக ஆகிவிடுகின்றான்.

குர்ஆனின்படி செயல்படுபவர்கள் ஆக முயற்சி செய்ய வேண்டும். அத்தகையோர்தான் அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனுக்கே உரித்தானவர்கள்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.