[பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.

காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள்.

ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் கருத்தை விடவும் அவர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹ்வுடைய, அவன் தூதருடைய அல்லது நபித்தோழர்களுடைய கூற்றுக்காகவே அன்றி அவர்களுடைய கூற்றை விட்டு விடக்கூடாது.

இமாம் மாலிக் (ரஹ்), இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகிய நான்கு இமாம்கள் தொகுத்த நூல்களும், அவர்கள் கூறிய மார்க்க சம்பந்தமான விஷயங்கள், ஃபிக்ஹ் மற்றும் ஷரீஅத் சட்டங்கள் அனைத்தும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து பெறப்பட்டதே. இவ்விரு அடிப்படை ஆதாரங்களிலிருந்து அவர்கள் விளங்கியதைத் தவிர அல்லது இவ்விரண்டிலிருந்து அவர்கள் ஆய்வு செய்து பெற்றதைத் தவிர அல்லது இவ்விரண்டையும் ஒப்பு நோக்குவதன் (கியாஸ்) மூலம் பெறப்பட்டதைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இல்லை.

அவர்கள் மனிதர்கள்தாம். அவர்கள் சரியாகச் சொல்லியிருக்கலாம். தவறாகவும் சொல்லியிருக்கலாம் என்று கருத வேண்டும். சிலவேளை அவர்கள் ஏதாவது ஒரு சட்டத்தில் உண்மைக்குப் புறம்பாக சொல்லியிருக்கலாம். இது வேண்டுமென்றே அல்ல. மாறாக மறதியாக அல்லது பாராமுகமாக அல்லது ஆழ்ந்த ஆய்வின்றி அவ்வாறு சொல்லியிருக்கலாம். இதனால்தான் ஒரு முஸ்லிம் அவர்களில் ஒருவருடைய கருத்தை விட்டுவிட்டு இன்னொருவரது கருத்தை மாத்திரம் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக அவர்களில் எவரது கருத்தையும் அவர் எடுத்துக் கொள்ளலாம்.

நூல்: முஸ்லிமின் வழிமுறை.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , . Bookmark the permalink.