[பாகம்-1] முஸ்லிமின் வழிமுறை.

அல்லாஹ்வை நம்புவது.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமெனில், இறைவன் ஒருவன் இருக்கின்றான்,அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அனைத்துக்கும் இரட்சகனும், எஜமானனும் அவனே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் பரிபூரணமானவன்! என்று நம்ப வேண்டும். இதற்கு அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில:

அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவனே சகல படைப்பினங்களையும் படைத்து பரிபாலிப்பவன்; அவனுக்கு அழகிய திருநாமங்கள், பண்புகள் இருக்கின்றன் என்பது பற்றி அல்லாஹ்வாகிய அவனே கூறுவது.

நிச்சயமாக அல்லாஹ்தான் உங்களுடைய இறைவன். அவன் எத்தகையவன் எனில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷில் அமைந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் படைத்தவன். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்! (அல்குர்ஆன்: 7:54)

மூஸாவே! நான் தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி!
(அல்குர்ஆன்: 28:30)

நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை! எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூறுவதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன்: 20:14)

இதுபோல மாறுபட்ட இவ்வுலகங்களும் வேறுபட்ட படைப்பினங்களும் அவற்றைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவனே அல்லாஹ்! என்பதற்குச் சான்று பகர்வது.

ஏனெனில் இவ்வுலகங்களைப் படைத்தவன், அவற்றை உருவாக்கியவன் நான்தான் என்று வாதிடக்கூடியவன் இவ்வுலகில் (அல்லாஹ்வைத் தவிர) வேறு யாரும் இல்லை. உருவாக்குபவன் இல்லாமல் எதுவும் தானாகவே உருவாகுவது சாத்தியமில்லை என்று தானே மனித அறிவும் கூறுகிறது. எனவே இதுபோன்ற அறிவுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான மற்றும் வேறு பல சான்றுகளின் அடிப்படையில்தான் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும் அவன் தான் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன்; முன்னோர் பின்னோர் அனைவருக்கும் இறைவன் என்பதையும் நம்புகிறான்.

அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன். இதில் அவனுக்கு இணை யாரும் கிடையாது. “அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலனம் செய்யக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (அல்குர்ஆன்: 1:2) இதற்கான அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் வருமாறு:

1. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அவன் மட்டுமே! அப்பொருள் சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும் சரியே. “ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே என்று (நபியே) நீர் கூறும்” (அல்குர்ஆன்: 13:16)

2. அனைத்துப் படைப்பினங்களுக்கும் அவன் மட்டுமே ரிஸ்க் – வாழ்வாதாரம் வழங்குபவன். “உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை” (அல்குர்ஆன்: 11:6)

3. அல்லாஹ் தான் படைத்து பரிபாலிப்பவன் என்பதற்குச் சரியான மனித இயல்பு சான்று பகர்கின்றது. இதை ஒவ்வொரு மனிதனும் உள்ளூர உணர்கின்றான்.

“ஏழு வானங்களைப் படைத்துப் பரிபாலிப்பவனும் மகத்துமிக்க அர்ஷின் உரிமையாளனும் யார்? என்று (நபியே! இம்மக்களிடம்) கேளுங்கள். ‘அல்லாஹ்தான்’ என இவர்கள் நிச்சயம் பதில் கூறுவார்கள் (அல்குர்ஆன்: 23:86,87)

4. ஒவ்வொரு பொருளுக்கும் உரியவன்.  பொதுவாக ஒவ்வொரு பொருளையும் நிர்வகிப்பவன் அவன் மட்டுமே!

(நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?”

அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில் கூறுவார்கள். “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா?” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன். இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன மிஞ்சியிருக்கும்? (அல்குர்ஆன்: 10:31,32)

அவ்வாறே இவ்வுலகில் முன்னால் சென்றவர்கள் பின்னால் வரக்கூடியவர்கள் அனைவருக்கும் இறைவன் அல்லாஹ்தான்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன், உண்மையான கடவுள் வேறு யாருமில்லை என்று முஸ்லிம் நம்ப வேண்டும்.

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதற்கு அவனே சான்று பகர்கின்றான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் இவ்வாறே சான்று பகர்கின்றனர். “(உண்மையில்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை! அவன் வல்லமைமிக்கவன், நுண்ணறிவாளன்! (அல்குர்ஆன்: 3:18)

“உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்! அளவிலாக் கருணையும், இணையில்லாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை! (அல்குர்ஆன்: 2:163)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதற்கான ஆதாரங்களில் சில:

எல்லா இறைத்தூதர்களும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றே கூறினர். அவனை மாத்திரம் வணங்க வேண்டும் என்பதன் பக்கமே தம் சமுதாயத்தவர்களை அழைத்தனர். நூஹ் (அலை), “எனது சமுதாயத்தவரே! அல்லாஹ்வை வணங்குங்கள்;அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை” என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:59)

இவ்வாறே ஹூத், ஸாலிஹ், ஷுஐப் (அலை) ஆகியோரும் கூறினார்கள். (பார்க்க: அல்குர்ஆன்: 11:50,61,84). மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனல்லாதவற்றை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு) நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம்” (அல்குர்ஆன்: 16:36)

நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ (திர்மிதி)

என்னைக் கொண்டு உதவி தேடப்பட மாட்டாது. அல்லாஹ்வைக் கொண்டே உதவித் தேடப்படும்! என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல்: தப்ரானீ.

யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோஅவர் இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: உண்மையில் மந்திரிப்பது, தாவீஸ் அணிவது, தலையணை மந்திரம் ஆகியவை ஷிர்க்காகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத்.

மேலும் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள், உயர்ந்த பண்புகள் உள்ளன. அவற்ரில் அவனுக்கு நிகர், இணை யாரும் கிடையாது என்றும் நம்ப வேண்டும். அவற்றுக்கு தவறான விளக்கம் தருவதோ, அவற்றை மறுப்பதோ அல்லது அவற்றை ஏனைய படைப்பினங்களின் பண்புகளோடு ஒப்பிடுவதோ கூடாது. மாறாக அல்லாஹ்வுக்கு என்னென்ன பண்புகள் இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்கின்றார்களோ அவற்றை அப்படியே நம்ப வேண்டும்.

மேலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் என்னென்ன குறைகளை விட்டும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி இருக்கிறார்களோ அவற்றை அப்படியே தூய்மைப்படுத்த வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள். அவனுடைய திருநாமங்களைத் தவறாக பயன்படுத்துபவர்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன்: 7:180)

(நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு நீங்கள் அவனை அழைத்தாலும் அவனுக்கு (பல) அழகிய பெயர்கள் இருக்கின்றன.” (அல்குர்ஆன்: 17:110)

இதுபோல் அல்லாஹ்வின் பண்புகள், திருநாமங்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய இன்னும் சில ஆதாரங்கள்:

‘இரு மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரை வெட்டிக் கொன்று விடுகிறார். அவ்விருவரும் சொர்க்கத்தில் இருப்பார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்.

‘நரகில் போட வேண்டியவைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா? என்று நரகம் கேட்டுக் கொண்டே இருக்கும். இறுதியில் கண்ணியத்திற்குரிய இறைவன் தனது காலை (மற்றொரு அறிவிப்பின்படி தனது பாதத்தை) அதில் வைப்பான். அதில் உள்ளவைகள் ஒன்றோடொன்று சேர்ந்து நரகம் நிரம்பி விடும். அப்போது நரகம் போதும் போதும் என்று கூறும்.’ நபிமொழி: அறிவிப்ப்வர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

‘மறுமை நாளில் அல்லாஹ் பூமியை (தனது இடது கையால்) பிடித்து வானத்தை தனது வலது கையால் சுருட்டி விடுவான். பிறகு நான் தான் அரசன்! எங்கே இப்புவியின் அரசர்கள்?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் பண்புகளை நம்பும் போதும், அவற்றைக் கொண்டு அவனை வர்ணித்துக் கூறும் போதும் அல்லாஹ்வுடைய கை உதாரணமாக படைப்பினங்களின் கையைப் போன்று இருக்கிறது என்று எந்த அர்த்ததிலேயும் எண்ணிவிடக் கூடாது. அதுபோன்ற சிந்தனை அவன் உள்ளத்திலும் உதித்து விடக் கூடாது. மாறாக அல்லாஹ்வுக்கும் கை இருக்கிறது. நமக்கும் கை இருக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “அவனைப் போன்று எதுவுமில்லை! அவன் (யாவற்றையும்) கேட்கக் கூடியவன். பார்க்கக் கூடியவன்.” (அல்குர்ஆன்: 42:11)

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Leave a Reply