நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை?

கேள்வி எண்: 107. நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை?

பதில்: நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் அத்தியாயம் அல் மாயிதா (5:110) மற்றும் ஆல இம்ரான் (3:49)-ல் குறிப்பிடும் அற்புதங்கள்:

1) குழந்தையில் பேசியது,

2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் உத்தரவின் பேரில் உயிர் கொடுத்தல்,

3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல்,

4) வெண் குஷ்டரோகியைக் குணப்படுத்துதல்,

5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல்

6) பிறர் உண்பதை, வீட்டில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல்

إِذْ قَالَ اللّهُ يَا عِيسى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَى وَالِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلاً وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالإِنجِيلَ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِىءُ الأَكْمَهَ وَالأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُواْ مِنْهُمْ إِنْ هَـذَا إِلاَّ سِحْرٌ مُّبِينٌ

அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (5:110)

وَرَسُولاً إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللّهِ وَأُبْرِىءُ الأكْمَهَ والأَبْرَصَ وَأُحْيِـي الْمَوْتَى بِإِذْنِ اللّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).  (3:49)

This entry was posted in கேள்வி பதில் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.