தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘கொள்ள மாட்டோம்!” என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!” என்று கூறுவார். தஜ்ஜால்’ நான் இவரைக் கொல்வேன்!” என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1882 அபூ ஸயீத் (ரலி).

1859. நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், ‘அவனால் உமக்கென்ன தீங்கு?’ என்று கேட்டார்கள். நான், ‘(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்றார்கள்.

புஹாரி : 7122 அல்முகீரா பின் ஷூஹ்பா (ரலி).

1860. ”மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1881 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1861. யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 7067 இப்னு மஸ்ஊத் (ரலி).

1862. தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன்.

புஹாரி :4936 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1863. நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6504 அனஸ் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.