பெற்றோருக்குப் பணிவிடையில் முன்னுரிமை.

1654. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!” என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அக்குழந்தை, ‘(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், ‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், ‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.

புஹாரி :3436 அபூஹூரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , . Bookmark the permalink.