பிறை பார்த்து நோன்பு நோற்றல் விடுதல்.

653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

654. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள்.

புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

655. நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1913 இப்னு உமர் (ரலி).

656. ”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.