கப்றும் வைபவங்களும்

நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் ‘இறைவா! என்னுடைய கப்றை அனுஷ்டானங்கள் செலுத்தப்படும் பிம்பமாக ஆக்கி விடாதே! தம் நபிமார்களின் கப்றுகளில் பள்ளி வாசல்களைக் கட்டி வைத்திருக்கும் சில சமூகத்தார்கள் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’ என்று இமாம் மாலிக் தம் முவத்தா என்ற நூலில் அறிவிக்கிறார்கள்.

இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘நபி ஈஸாவை கிறிஸ்தவர்கள் வரம்பு மீறித் துதித்தது போல என்னை நீங்கள் துதிக்காதீர்கள். நான் ஒரு அடிமை. எனவே என்னைப் பற்றி அல்லாஹ்வின் அடிமை என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘அல்லாஹ்வும், முஹம்மதும் நாடியவை நடக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியவை தான் நடக்கும் என்று கூறுங்கள். அல்லாஹ் நாடியதற்குப் பின்னர்தான் முஹம்மத் நாட முடியும்’.

காட்டரபிகளில் ஒருவர் நபிகளிடம் வந்து ‘நீங்களும், அல்லாஹ்வும் நாடியவை (நடந்தது)’ என்றார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘என்னை அல்லாஹ்வுக்கு (நிகராக்கி) இணையாக்கி விட்டீர்களா? அல்லாஹ் நாடியது மட்டும் (நடந்தது) என்று கூறும்’. என்றார்கள்.

இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: “நீர் கூறும்! அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகம் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது”. (7:188)

மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: “நீர் கூறும். அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான் எனக்கே தேடிக் கொள்ள சக்தியற்றவன் (10:49). மேலும் கூறினான்: “நபியே! நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ் மட்டும் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்” (28:56). “நபியே! இவ்விஷயத்தில் உமக்கு யாதொரு அதிகாரமுமில்லை” (3:128)

இதுவே ஏகத்துவத்தின் உண்மை நிலை. அல்லாஹ்விடத்தில் மிக்க மதிப்பிற்கும், பெருமைக்கும், கண்ணியத்திற்குமுரிய நபி (ஸல்) அவர்களின் நிலைமை இப்படி என்றால் வேறு சிருஷ்டிகளின் நிலைமை எப்படி எப்படி என்பதை சிந்தித்திப் பார்க்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.