படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)

மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை’ என்று வேறு சிலர் கூறுகின்றனர்.அவன் தன் அடியார்களுக்குச் செய்கின்ற அனுக்கிரகங்கள், நன்மைகள் அனைத்துமே அவன் அருள்கிருபை என்ற அமைப்பிலாகும். அல்லாஹ் தன்மீது அடியார்களுக்கு அருள் பாலிப்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மூமினான படைப்பினங்களுக்கு இத்தகைய இரக்கமான கூலிகளை அளிப்பதாக தன்மீது இறைவன் தானாகவே ஏற்படுத்தியுள்ளான். அவர்களுக்கு அநீதி இழைப்பதை தன்மீது விலக்கியிருக்கிறான் அல்லவா? சிருஷ்டிகளுக்கு எந்தச் செயலை அல்லாஹ் செய்தாலும் அது கடமை என்ற அடிப்படையிலல்ல. மாறாக அவன் தன் மீது ஏற்படுத்திக் கொண்ட இரக்கம், நேர்மை, நீதி என்பன போன்ற குணங்களுக்கு, தன்மைகளுக்கும் உட்பட்டதாகும். ஹதீஸுல் குத்ஸியிலும் இந்த உண்மையை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் இறைவன் குறிப்பிடுகிறான்: ‘அடியார்களே! என் மீது நான் அநீதியை விலக்கிக் கொண்டேன். இந்த அநீதியை விட்டு உங்களையும் விலக்குகிறேன். நீங்கள் யாருக்கும் அக்கிரமம், அநீதி செய்யாதீர்கள்’.

திருமறையும் இதை எடுத்துக் கூறுகிறது: “உங்கள் இறைவன் அருள்புரிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்” (6:54). “விசுவாசிகளுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகி விட்டது”. (30:47)

முஆத் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸில் கூறுகிறார்கள்: நபியவர்கள் முஆதிடம்: முஆதே! அல்லாஹ்வுக்காக அடியார்கள் செய்ய வேண்டிய (ஹக்குகள்) கடமைகள் யாவை என்பது பற்றி உமக்குத் தெரியுமா? எனக் கேட்டார்களாம். இதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் தான் நன்கறிவார்கள் என நான் கூறினேன். பின் நபியவர்கள் தூய்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு அவனுக்கு இணைதுணை கற்பிக்காமல் இருப்பதுதான் அல்லாஹ்வுக்காக அடியார்கள் செய்ய வேண்டிய (ஹக்குகள்) கடமைகள் என்று கூறினார்கள். பின் நபியவர்கள் முஆதே! அடியார்கள் இவற்றைப் புரிந்தால் அவர்களுக்காக அல்லாஹ்வின் மீது என்ன கடமையுண்டு? என்று கேட்டார்கள். பின்னர் இதற்கு நபியவர்களே அதாவது அடியார்களை வேதனைப் படுத்தாமலிருப்பதே அவன் மீதுள்ள (ஹக்காகும்) கடமையாகும் என்று விளக்கம் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் நபிமார்கள், ஸாலிஹீன்கள் போன்ற நல்லடியார்களுக்கும் தூய்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடப்பவர்களுக்கும் (அவர்கள் சுவாதீனம் செலுத்தும்) ஏதோதோ சில உரிமைகள் (ஹக்குகள்) அல்லாஹ்வின் மீது இருப்பதாக விளங்க முடிந்தாலுமிந்த (ஹக்கை) பாத்தியதைகளைக் கொண்டு அவனுடைய ரஹ்மத் எனும் அருளை நாட வேண்டும். மனிதர்கள் தமக்கிடையில் சில விஷயங்களை அமைத்துக் கொண்டு சுவாதீனம் செலுத்துகின்ற பாத்தியதைகளைப் போன்று எண்ணி விடக் கூடாது.

மனிதர்கள் புரிகின்ற வணக்க வழிபாடுகளினால் அவர்கள் சுவாதீனம் செலுத்துகின்ற ஒரு பாத்தியதையையும் அல்லாஹ்வின் மீது சுமத்தி விட முடியாது. மனிதர்கள் தம் வழிபாட்டினால் அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுத்தல் அவன் மீது கடமையாகி விட்டது என நினைக்கும் போது அங்கே ஈமானுக்குப் பழுது ஏற்பட்டு விடுகிறது. முஸ்லிம்கள் தம் பிரார்த்தனைகளில் எடுத்துக் கூறி சுவாதீனம் செலுத்திக் கேட்கும் அளவுக்கு எந்த ஒரு பாத்தியதையும் மனிதர்களுக்கு அல்லாஹ்வின் மீது இல்லவே இல்லை. இந்த உண்மையை நபி தாவூத் (அலை) அவர்களின் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது. அதில் அல்லாஹ் நபி தாவூத் (அலை) அவர்களைப் பார்த்து உம்முடைய மூதாதையர்களுக்கு என்மீது என்ன (ஹக்கு) பாத்தியதை இருக்கிறது என்று கேட்கிறான்.

இதிலிருந்து மனிதர்கள் தமக்கு மத்தியில் ஒருவர் மற்றவர் மீது செலுத்துகின்ற சுவாதீனங்களைப் போன்று அல்லாஹ்வின் மீது எந்தப் பாத்தியதையும், சுவாதீனத்தையும் சுமத்தி விடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா? விபரமில்லாமல் அல்லாஹ்வை ரொம்ப வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் சில போலி வணக்கசாலிகள் தம் வணக்கங்களுக்குக் கூலி வழங்கும் பாத்தியதையை அல்லாஹ்வின் மீது சுமத்தி அவனுக்குக் கடமையாக்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் தம் வணக்கத்தை பாழாக்கி விடுகிறார்களேயொழிய எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள். மன்னருக்கு வேலைக்காரன் பணிவிடை புரிவதினால் மன்னரிடமிருந்து பற்பல பலாபலன்களைப் பெறுகிறான். வேலையாட்களுக்குப் பற்பல ஒத்தாசை உதவிகளை மன்னன் செய்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், தொல்லைகளையும் விட்டும் அவர்களைக் காப்பாற்ற மன்னன் ஏற்பாடு செய்கிறான். இது மன்னன் மீது கடமையாகிறது.

மன்னனின் பணியாளர்கள் தாம் செய்த பணியின் கூலியை மன்னனிடமிருந்து எதிர்பார்த்து செயல்பட்டது போல இறைவனையும் சில போலி வணங்கிகள் மன்னனுக்கு ஒப்பிடுகிறார்கள். தமது வணக்க வழிபாட்டின் கூலிகளை அல்லாஹ்வின் மீது கடமையாக்கி விடுகிறார்கள். இதனால் அல்லாஹ்வை மனித இனத்தைச் சார்ந்த ஒரு மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறி அவனுக்கு ஒப்புவமை கொடுத்து விடுகிறார்கள். மனிதர்களிலுள்ள இந்த அரசனையும், மற்றவர்களையும் படைத்த இறைவனுக்கும், அரசனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை இவர்கள் விளங்கவில்லை. அரசன் தன் பணியாளர்களின் சேவையை எதிர் நோக்கி நிற்கின்றான். இச்சேவை அரசனுக்குப் பெரிதும் தேவை. ஆனால் இறைவனுக்கு மனிதனின் வணக்கங்கள் தேவையா? இல்லவே இல்லை. வணக்க வழிபாடுகளுக்கு வருவோமேயானால் மனிதர்களின் வணக்கம் அல்லாஹ்வுக்குத் தேவையே இல்லை. வணக்கங்களை மனிதன் தன் சுய நன்மைகளை நாடியே புரிகிறானேயொழிய அல்லாஹ்வுக்குத் தன் சிருஷ்டிகளின் எந்த வழிபாடும் தேவையில்லை. அவன் தேவைகளில்லாதவன். எனவே தான் கூறினோம். இந்த உண்மையைத் திருமறையும் கூறுகிறது: “நீங்கள் நன்மை செய்தால் அது உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே கேடாகும்”. (17:7)

மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: “எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”. (41:46)

இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: “நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதேயில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (39:7)

இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: “எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”. (27:40)

“இதற்காக நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் நான் என்னுடைய அருளை பின்னும் நான் அதிகப்படுத்துவேன். நீங்கள் என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும். மேலும் நபி மூஸா தம் மக்களை நோக்கி நீங்களும் உலகிலுள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு முற்றிலும் மாறு செய்த போதிலுமவனுக்கொன்றும் நஷ்டமேற்பட்டு விடாது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் இல்லாதவனும், புகழுக்குரியவனுமாக இருக்கிறான்”. (14:7-8)

“நிராகரிப்பால் அவர்கள் விரைந்தோடுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்து விட முடியாது” (3:176). மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வாலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை”. (3:97)

நாம் அல்லாஹ்வுக்காக செய்கிற அமல்களை அவன் மீது எடுத்துரைத்து தமக்குரிய பாத்தியதைகளைக் கூறுவதற்கு முன்னர் அல்லாஹ்வாகவே நம்மீது அவன் புரிந்த பேருதவிகளை எடுத்துக் கூறி விளக்கம் தருகிறான்: “அவர்கள் இஸ்லாத்தை தழுவியதின் காரணமாக உம்மீது (நபியின் மீது) ஏதோ பேருபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர். நீர் கூறும்! நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததினால் எனக்கு உபகாரம் செய்ததாகக் கருதாதீர்கள். எனினும் விசுவாசத்தின் நேர்வழியில் உங்களைச் செலுத்தியதின் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்ததாக எடுத்துரைக்கிறான். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதனை நன்கு அறிந்து கொள்வீர்கள்”. (49:17)

பிரிதொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: “நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வுடைய தூதரிருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு வழிபடுவதென்றால் நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இருப்பினும் அல்லாஹ் ஈமானை விசுவாசத்தை விரும்பும்படி உங்களை ஆக்கினான். உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கி வைத்தான். மேலும் குஃப்ரையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்தான். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருக்கின்றனர். (மிகச் சிறந்த இவ்வர்ணிப்பை அடைவது) அல்லாஹ்வுடைய கிருபையும், அருளுமாகும். அவன் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கின்றான்”. (49:7-8)

ஹதீஸ் குத்ஸியில் இறைவன் கூறுகிறான்: ‘என்னுடைய அடியார்களே! ஒருபோதும் உங்களால் எனக்கு நன்மை செய்யவோ, தீங்கிழைக்கவோ இயலாது. இரவு பகலாக நீங்கள் எத்தனையோ குற்றங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நான் அவையனைத்தையும் மன்னித்து விட்டேன். ஆகவே என்னிடம் மன்னிப்பைக் கேளுங்கள். உங்களை மன்னித்து விடுகிறேன். என் அடியார்களே! உங்களில் தோன்றிய முன்னோர்கள், பின்வருவோர்கள், மனு-ஜின் வர்க்கத்தினர் எல்லோரின் இதயங்களும் பாவம் செய்யும் இயல்புடையதாக மாறி விட்டால் கூட அவை என்னுடைய ஆட்சி பலத்தை எள்ளவும் குறைத்து விடாது. என் அடியார்களே! இதற்கு மாறாக உங்களிலுள்ள மானிடர்கள் மற்றும் ஜின் இனங்கள் மேலும் தொன்றுதொட்டே தோன்றிய, மறுமை நாள் வரையில் தோன்றவிருக்கும் படைப்புகள் அனைத்தின், அனைவரின் இதயங்களிலெல்லாம் இறைபக்தி நிரம்பிய ஓர் இதயமாக மாறிவிட்டால் கூட இதனால் இவை என்னுடைய ஆட்சி அதிகாரத்தில் ஒரு அணுவளவைக் கூட அதிகமாக்கி விடப் போவதில்லை. என் அடியார்களே! நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே திடலில் ஒரே குரலில் நின்று தத்தம் தேவைகளை வேண்டி அதற்கொப்ப நான் உங்கள் அனைவருக்கும் அவரவர் வேண்டுகோளுக்கிணங்க தந்துவிட்டேனென்றால் கூட அதுவும் என்னுடைய பொக்கிஷத்தைக் குறைத்து விடப் போவதில்லை. சமுத்திரத்தில் முக்கப்பட்ட ஊசியின் முனையிலிருக்கும் ஈரநைப்பால் சமுத்திரம் எந்த அளவு குறையுமோ அந்த அளவுக்குத்தான் என்னுடைய பொக்கிஷத்தைக் குறைக்குமேயொழிய வேறு எவற்றையும் அதிகமாகக் குறைத்து விடாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.