சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43)

“…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45)

கல்வியைச் செலவழிப்பது கற்றவன் மீது கடமையாகும். கல்லாதவன் கற்றவனிடம் சென்று ஒரு விஷயத்தைக் கேட்கும்போது கற்றவன் அதைச் சொல்லிக் கொடுக்காமல் மறைத்தால் அல்லாஹ் மறுமையில் கடும் தண்டனையை அப்படி மறைப்பவனுக்கு வழங்குவதாகவும் ஹதீஸில் வந்திருக்கிறது. கல்வியை மறைத்து வைத்திருப்பவனுக்கு நெருப்பிலான கடிவாளமிட்டு வேதனை வழங்கப்படுவதாகவும் ஹதீஸில் காணப்படுகிறது.

அதுமட்டுமல்ல கல்வி என்பது கற்றுக் கொடுப்பதினால் வளர்ச்சி பெறுகிறது. செல்வத்தைச் செலவு செய்தால் குறைந்து விடுவது போல கல்வி குறைந்து விடாது. மாறாக நாளொரு மேனியாக கல்வி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆகவேதான் கல்வி ஒளிவிளக்குக்கு ஒப்பிடப்படுகிறது. எத்தனையோ பேர் விளக்கின் ஒளியில் பயன் பெறுகின்றனர். இந்த ஒரே விளக்கிலிருந்து எண்ணற்ற விளக்குகளைக் கொளுத்தவும் முடியும். அப்படியிருந்தும் விளக்குக்கு எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. பிறரிடம் கல்வியைக் கேட்பது போல தனக்குரிய உடைமைகளையும், உரிமைகளையும் கேட்டு வாங்கலாம். கொடுத்திருந்த கடன்கள், அடகுகள், அமானிதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கப் பட்டவர்களிடமிருந்து கேட்டு வாங்க வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களைக் கேட்டல் அனுமதிக்கப்படுகிறது. யுத்தத்தில் கிடைத்த ஆதாயப் பொருட்களைப் போன்ற கூட்டுச் சொத்துகளையும் மேலதிகாரிகளிடமிருந்து கேட்டு வாங்குவதற்கு அனுமதியிருக்கிறது.

வாரிசுகளுக்குரிய அனந்தர, அவகாசச் சொத்துகள், தனக்காக வஸிய்யத் செய்யப்பட்ட சொத்துகள், வாக்களிக்கப்பட்டதும் நன்கொடையாக எழுதி வைக்கப்பட்டதுமான பொருட்கள் இவை போன்றவற்றை கேட்டு வாங்கலாம். கேட்பது இங்கும் அனுமதிக்கப்படுகிறது. இச்சொத்துகளை வைத்திருப்பவரிடம் அணுகி அவற்றைக் கேட்டு வாங்க வேண்டும்.

மனைவி தன் கணவனிடம் தன் அன்றாடச் செலவினங்களைக் கேட்டு வாங்க வேண்டும். பிரயாணிகள் கடமைப்பட்டவர்களை அணுகித் தமக்காக விருந்தளிப்பதற்கு வேண்டுவதும் அனுமதிக்கப் படுகிறது. மூஸா நபியவர்களும், ஹிள்று அவர்களும் கிராமவாசிகளை அணுகி விருந்து கேட்டதும் அவர்கள் அதை மறுத்ததும் திருமறையில் தெளிவாகக் காணப்படும் சம்பவம் அல்லவா? அதுபோலவே உடன்படிக்கை செய்து கொண்டவர்கள், மேலும் கூட்டு வியாபாரம் செய்கிறவர்கள் தமக்குரிய பங்குகளை கூட்டாளிகளிடம் கேட்டு வாங்க வேண்டும். விற்றவன் வாங்கியவனிடம் விலையைக் கேட்க வேண்டும். வாங்கியவன் விற்றவனிடம் சரக்கைக் கேட்க வேண்டும். இப்படியாக வாழ்வில் சில, பல இடங்களில் பிறரிடம் கேட்க நேரிடும் சந்தர்ப்பங்களையும், நிலைமைகளையும் இஸ்லாம் வரையறுத்துத் தந்திருக்கிறது. இந்நிலைமைகளைத் தவிர வேறு எந்த நிலைமையிலும் மனிதன் தன்னைப் போன்ற மற்ற மனிதனை கெஞ்சி நிற்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தான் திருமறையும் கூறுகிறது: “அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்கஞ்சி) இரத்தக் கலப்பு உறவினர்க்கும் மதிப்பளியுங்கள். (4:1)

சில விஷயங்களைக் (கேட்பதை விட) கேட்காமலிருத்தல் மேன்மையாகும். அவற்றைக் கேட்க வேண்டுமென்று மனிதன் பணிக்கப்படவுமில்லை. எனவே கேட்காலிருப்பதே நன்மை தரும். நபியவர்கள் அதுபற்றிப் பேசும்போது ‘உங்களில் சிலர் ஏதோ சில விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் கேட்டுத் தெரிந்து செல்லும்போது நெருப்பையே அக்குளில் இடுக்கிக் கொண்டு செல்வது போல இருக்கிறது.’ என்று கூறினார்கள். இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் பார்க்கும்போது மனிதன் ஒரு சிலவற்றைக் கேட்டறியாமல் இருப்பது மேன்மையாகும். இவைக் கேட்பவை பொறுத்த சட்டம். ஆனால் கேட்கப்பட்டவனைப் பொறுத்த வரையில் கேட்பவனின் தேவைகளைச் செவிதாழ்த்திக் கேட்டு, அவற்றை அங்கீகரித்து கேட்பவனுக்காகத் தக்க பதில் கொடுக்க வேண்டுமென்று பணிக்கப் பட்டுள்ளான். “கேட்பவனை யாசிப்பவனை வெருட்டாதீர்” (93:10). “அவர்களுடைய பொருட்களில் கேட்பவர்களுக்கும், வெட்கத்தால் கேட்காதோருக்கும் குறிப்பிட்ட பாத்தியதை உண்டு”. (70:24-25) “…ஆகவே (அவ்வொட்டகைகளை) நிறுத்தி வைத்து அல்லாஹ்வுடைய பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து உயிர் விட்டால் அதிலிருந்து நீங்கள் புசியுங்கள். அதிலிருந்து கேட்டவர்களையும், கேட்காதவர்களையும் உண்ணச் செய்யுங்கள்” (22:36) என்று திருமறை கூறுகிறது. ‘என்னிடம் ஒன்றும் கேட்காமல் இருப்பதற்காக இவருடைய நாவை அறுத்துத் துண்டாக்கி விடுங்கள்’ என்று ஓரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சிலவேளைகளில் கேட்பது (ஹறாமான) விலக்கப்பட்ட செய்கையாகத் திரும்பி விடுவதுண்டு. இந்நிலையில் கேட்கப்பட்டவனைப் பொறுத்தவரையில் கேட்பதற்கொப்ப பதில் கொடுத்து தீர வேண்டுமென்றும் பணிக்கப்பட்டுள்ளான். நபியவர்களின் பூரணத் தன்மைகளில் ஒன்று: கேட்பவனுக்குப் பதில் கொடுத்து விடுவது, அது விலக்கப்பட்ட கேள்வியாயினும் சரியே. அவன் யாரென்றும் பார்க்க மாட்டார்கள். இது நபியைப் பொறுத்தமட்டில் பெருந்தன்மையாகக் கணிக்கப்படும். அவர்களுக்கு இது வாஜிப் என்றும் கூறப்படுகிறது. ஸஹாபாக்களில் பிரபலமான அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் போன்ற பெரும் ஸஹாபாக்களில் யாருமே தடுக்கப்பட்ட ஏது கேள்விகளையும் நபியவர்களிடம் வந்து கேட்க மாட்டார்கள். தமக்கு வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கூட இப்பெரும் ஸஹாபிகள் நபிகளிடம் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்காக பிரார்த்திக்க வேண்டுமென்று இப்பெரிய ஸஹாபிகள் நபிகளாரிடம் வேண்டியிருக்கிறார்கள். சில புனிதப் போர்களில் அவற்றில் பங்கு பெற்ற சிலர் நபியிடம் தம் ஒட்டகைகளை அனுமதி வேண்டிய நேரத்தில் உமர் (ரலி) அவர்கள்நபியிடம் கூறினார்கள்: ‘நாயகமே! நாளைய தினம் பசியோடு நடந்து சென்றே எதிரிகளோடு போராடும் போது நமது நிலைமை என்ன? ஆகவே மக்களை அழைத்து அவர்களிடம் மிஞ்சியிருக்கும் உணவுகளைச் சேர்த்து பின்பு பரக்கத்துக்காகத் தாங்கள் பிரார்த்தித்தால் தாங்களின் பிரார்த்தனையால் அல்லாஹ் எங்களுக்குப் பரக்கத்துச் செய்வான்’. இன்னும் ஓர் அறிவிப்பில் ‘தாங்கள் துஆவின் காரணத்தினால் அல்லாஹ் எங்களுக்கு உதவி புரிவான்’ என்று காணப்படுகிறது.

மேலும் ஸஹாபிகளில் நடுத்தரமான பதவிக்குரிய சிலர் மட்டும் நபியை அணுகித் தம் தேவைகளைக் கூறி முறையிட்டிருக்கிறார்கள். கண் பார்வையிழந்த ஒரு ஸஹாபி வந்து தமக்குப் பார்வை மீட்டிக் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்படி நபியிடம் வேண்டிக் கொண்டார்கள். அனஸ் (ரலி) அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் என்ற பெண்மணி நபியிடம் வருகை தந்து நபியின் சிப்பந்தியான தன் மகன் அனஸுக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டார். அபூஹுரைரா (ரலி) தம்மையும், தம் தாயாரையும் மூமின்கள் நேசிப்பதற்காக நபிகள் (ஸல்) அவர்கள் பிரார்த்திக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். நட்பிலும், அள்ளி வழங்குவதிலும் நம்மீது ரொம்பப் பேருபகாரியாக இருந்தவர் அபூபக்கர் ஸித்தீக் அவர்களே. ஆனால் அபூபக்கர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரையில் இத்தகைய கேள்விகளை அவர்கள் நபியிடம் கேட்கவேயில்லை. அவர்களைப் பற்றியும், மேன்மை தாங்கிய ஸஹாபிகளைப் பற்றியும் திருமறை கீழ்வருமாறு கூறிக் கொண்டிருக்கிறது:

“பயபக்தியுடையவர் அந்த நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வார். பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காகத் தம்பொருளைத் தானமாக அளிப்பார். அவர் பதில் செய்யக் கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும் மிக்க மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தான தர்மம் கொடுப்பார்) இறைவன் அவருக்களிக்கும் கொடையைக் கொண்டு பின்னர் அவரும் திருப்தியடைவார்”. (92:17-21)

ஸஹீஹான ஹதீஸில் கீழ்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: ‘நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நட்பிலும், அள்ளி வழ்ங்குவதிலும் நம்மீது பேருபகாரியாக இருந்தவர் அபூபக்கர் அவர்களே! பூமியில் ஒருவரை நான் கூட்டாளியாக அமைத்துக் கொள்ள விரும்பினால் அபூபக்கரைத் தவிர வேறெவரையும் தேர்வு செய்யமாட்டேன்’.

உடலாலும், செல்வத்தாலும் ஸித்தீக்கைக் காட்டிலும் பெரிய பரோபகாரி ஒருவருமில்லை. ஸஹாபாக்களில் அபூபக்கரைப் போன்று நல்மனம் படைத்தவர்கள் எவருமில்லை என்று சொன்னாலும் மிகையாகாது. எத்தனையோ தான்-தர்மங்களையெல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே செய்திருக்கிறார்கள். உலக மக்களின் எவருடைய கூலியையும், நன்றியையும் அவர்கள் எதிர் பார்க்கவில்லை.

திருமறையில் இறைவனும் அப்படித்தான் அவர்களைப் பற்றிக் கூறுகிறான். தமக்கு இறைவன் வழங்கிய செல்வத்தையும் தம் சொந்த உழைப்பையும் கொண்டு திருப்திப்பட்டுப் பிறரிடம் எதையும் கேட்காமல் தம்மைக் காப்பாற்றி பிறரிடம் தேவையற்றிருந்தார்கள். மற்றவர்களின் உதவி ஒத்தாசைகளைப் பெற்று அதற்குப் பதிலாக நன்றி செலுத்த வேண்டிய நிலையிலாகாது, மனிதர்களின் எவருடைய நன்றிக்கும் கடமைப் படாதவாறு தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். நபிகளை நம்பி, அவர்களை மெய்ப்பித்து, அவர்களிடமிருந்து கல்வியையும் கற்றுக் கொண்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அளித்த பேருதவிகளுக்கும், அவர்களுக்கு நபிகள் கற்றுக் கொடுத்ததற்கும், நேர்வழி காட்டியதற்கும் எல்லாம் உரிய பொருத்தமான கூலிகளை அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் வழங்கவிருக்கிறான்.

பொதுவாக நபிமார்கள் மக்களுக்கு வழங்கும் ஈடிணையற்ற ஒழுக்க சீலங்களுக்கும், நற்பண்புகளுக்கும், ஹிதாயத்துக்கும் உரிய பலாபலன்களை மறுமையில்தான் பெறுவார்களே தவிர அவற்றில் எதையும் இவ்வுலகத்தில் இருக்கையில் மக்களிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார்கள். திருமறையில் இறைவனும் இதைக் குறிப்பிடுகிறான்: “இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் யாவரையும் படைத்துப் போஷிப்பவனிடமே இருக்கிறது”. (26:127)

நபிகளாரின் வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் பின் ஹாரிதா அல்-கஃபீ மேலும் அலீ பின் அபீதாலிப் போன்ற சில ஸஹாபிகள் ஒருசில குறிப்பிட்ட உதவி ஒத்தாசைகளை அதிகமாக நபிகளாரிடம் இருந்து பெற்றிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் நன்றி செலுத்துவதற்குரிய சில பல உதவிகளை நபிகளாரிடமிருந்து பெற்றார்கள் என்று கூறலாம். ஆனால் இந்நிலை ஒருபோதும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. இது விஷயத்திலும் இவர்கள் பாராட்டுக்குரியவர்களாவர். கீழ்வரும் சம்பவம் நாம் கூறியதை மேலும் தெளிவு படுத்துகிறது. ஸைது (ரலி) அவர்கள் நபியவர்களின் அடிமையாக இருந்தவர்கள். நபியவர்கள் ஸைது (ரலி) அவர்களுக்கு உரிமையளித்து அவர்களை சுதந்திரமாக்கினார்கள். இது ஸைது (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த பெரும் பேருதவி என்பதை எவராலும் மறுப்பதற்கில்லை. திருமறையும் இதைச் சுட்டிக் காட்டுகிறது: “எவருக்கு அல்லாஹ் அருள் செய்து நீரும் அவர் மீது அருள் புரிந்து கருணை காட்டியிருந்தீரோ அவரிடத்தில் ‘ந்நிர் அல்லாஹ்வுக்கு பயந்து உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து முறிக்காமல்) உம்மிடமே வைத்துக் கொள்ளும்’ எனக்கூறிய போது……’ (33:37)

அலி (ரலி) அவர்களின் சம்பவத்திற்கு வருவோம். மக்காவாசிகளை ஒருமுறை பயங்கரமான பஞ்சம் வாட்டியது. இந்தப் பஞ்ச காலத்தில் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் அபூதாலிபின் குடும்பத்திற்கு நபி (ஸல்) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் உதவினார்கள். அலி (ரலி) அவர்களை நபியவர்களும், அலீயின் சகோதரர் ஜஃபரை அப்பாஸும் சேர்த்துத் தத்தம் குடும்பங்களில் வைத்துக் காப்பாற்றினார்கள். இந்த வகையில் அலி (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்குத் தனியாக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருந்தார்கள். ஆனால் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களோ நாயகத்திடம் யாதொரு உதவியும் வேண்டி நின்றதில்லை. எல்லாவற்றையும் அவர்கள் தம் சொந்த செலவிலேயே முடித்துக் கொள்வார்கள். எனவே அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது: ‘நபியுடன் நட்பு வைத்ததிலும், அள்ளி வழங்குவதிலும், எதையும் சொந்தமாக தம் செலவிலேயே ஆற்றல் படைத்தவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் மட்டுமே’ என பாராட்டிக் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல தன் செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார்கள். கொடுமைக்காளான அடிமை ஸஹாபிகளை தம் சொந்தப் பணம் கொடுத்து வாங்கி உரிமை விட்டார்கள்.

நபிகள் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் தம் சொந்தத் தேவைகளுக்காக அபூபக்கருடையவோ, மற்ற தோழர்களுடையவோ உதவியும், ஒத்தாசைகளும் தேவை இல்லை. அவர்களுடைய சுயதேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். எனினும் மக்காவிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்யப் புறப்படும் தருணத்தில் நபிகளை நோக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நாயகமே! என்னிடம் இப்பொழுது இரு வாகனங்கள் (ஒட்டகங்கள்) இருக்கின்றன. அதில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’. அதற்கு நபியவர்கள் ‘விலைக்குத் தருவதென்றால் சரி’ எனக்கூறி ஒத்துக் கொண்டனர். சுருங்கக் கூறின் அபூபக்கர் (ரலி) அவர்கள் சிறந்த நபிக்குறிய சிறந்த ஸித்தீக்காவார்கள். அபூபக்கர் அவர்கள் எவருக்கு எந்த பேருதவிகள் புரிந்தாலும் அவற்றின் கூலியையும், நன்றியையும் மக்களிடம் எதிர்பார்க்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், அவனிடமிருந்து நல்ல பல கூலிகளையும், மறுமையில் பெற்று அல்லாஹ்வின் திருப்தியை அடைவது மாத்திரமே அவர்களுடைய நடவடிக்கையின் இலட்சியமாக இருந்தது. நபியிடமோ மலக்குகளிடமோ யாரிடம் எந்த நன்றியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். “நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வுக்காக-அவனுடைய முகத்தை நாடியே-தவிர உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது உங்கள் நன்றியறிதலையோ கருதியல்ல என்று அவர்கள் கூறுவார்கள்” என இறைவன் அவர்களை பாராட்டுகின்றான். (76:9)

ஒரு மனிதன் மற்றொருவருக்கு ஏதேனுமொரு உதவி செய்து கொடுத்து விட்டுத் தனக்காகப் பிரார்த்திக்கும்படி சொல்வானென்றால் தான் செய்த உதவிக்குக் கூலி கேட்கிறானென்றுதான் அது பொருள்படும். இங்கே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அம்மனிதன் உதவி செய்துள்ளான் என்று கருத முடியாது. இறைவன் கூறினான்: “நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வுக்காக-அவனுடைய முகத்தை நாடியே-தவிர உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது உங்கள் நன்றியறிதலையோ கருதியல்ல என்று அவர்கள் கூறுவார்கள்” (76:9) என்று விளக்குகிறான். இது நல்ல மூமின்களின் பண்பாடு. பிறருக்கு உதவினால் அவ்வுதவியின் பலாபலனை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டுமேயல்லாது உதவியைப் பெற்றவர்களிடம் எந்தக் கூலியையும் கேட்க கூடாது. அவர்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று பணிப்பதும் கூலி கேட்பதற்குச் சமமாகும். துஆக்கள் கூலியைப் போன்றவை என ஹதீஸில் காணப்படுகிறது. ‘உங்களுக்கு எவரேனும் உதவினால் அதற்கு நீங்கள் பதில் செய்யுங்கள். அதற்குப் பொருத்தமான பிரதிபலன் நல்க உங்களால் முடியாவிட்டால் அல்லது அதற்குரிய பொருத்தமான கூலியை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அவருக்காகப் பிரார்த்தியுங்கள். அப்படிப் பிரார்த்தித்தால் நிச்சயமாக அவருக்குப் பதிலுதவி செய்து விட்டீர்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் யாருக்காவது தான-தர்மங்களை கொடுத்தனுப்பினால் ‘நபியே! இந்த ஸதகாவை ஒப்புக் கொள்கிறவர்கள் நமக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறார்களென்றால் அது எவ்வாறான பிரார்த்தனை என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது போல நாமும் அவர்களுக்காக பிரார்த்திக்கலாம். இதனால் நாம் செய்த தர்மத்தின் பலாபலனை முழுக்க முழுக்க அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று நாயகத்திடம் கூறி அனுப்புவார்களாம்.

உம்மிடமிருந்து உதவியைப் பெற்ற யாசகர் ‘அல்லாஹ் உமக்கு நல்ல அபிவிருத்தியைத் தருவானாக (பாரகல்லாஹு ஃபீக்க)’ என்று கூறி உமக்குப் பிரார்த்தித்தால் ‘உமக்கும் அல்லாஹ் நல்ல அபிவிருத்தியைத் தரட்டும்’ என நீரும் அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்று சில ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே நன்மைகள் செய்கிறவன் இறைவனின் முகத்தை நாடியே செய்ய வேண்டுமென்று பணிக்கப் பட்டுள்ளான். சிருஷ்டிகளுடம் இரக்கம் காட்டி அறச் செய்கைகள் புரிகிறவன் அவற்றை இறைவன் ஒருவனுக்காகச் செய்ய வேண்டும். மறுமையில் கிடைக்கின்ற இறை திருப்தியே இவனது இலட்சியமாக அமைய வேண்டும். நன்மை செய்து விட்டு மனிதர்களிட நன்மைக்கு பகரமாக எந்தக் கூலியையும் கேட்க கூடாது. அம்மனிதர் எத்தனை பெரிய அந்தஸ்துக்கு உரியவராக இருந்தாலும் சரியே. நபியானாலும் சரியே. நாம் புரிந்த இந்த நன்மைக்கு வேண்டி தமக்காகப் பிரார்த்திக்க வேண்டுமென்று சொல்லவே கூடாது. ஏனென்றால் அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தன்னை ஒருவனை மட்டும் வணங்குங்கள் என்றும், அறச் செயல்களைத் தன் ஒருவனை மட்டும் கருதியே செய்யுங்கள் என்றும் பணித்திருக்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.