காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் தம் தாயார் ஆமினாவின் கப்றில் வந்து நின்று அழுதார்கள். இந்த வேதனையான காட்சியைக் கண்ட தோழர்களும் கண்ணீர் வடித்தார்கள். பின் நபியவர்கள் தம் தோழர்களைக் கூப்பிட்டு, ‘மக்களே! என் இரட்சகனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புத் தேட அனுமதி கோரினேன். அதற்கு அல்லாஹ் அனுமதிக்கவில்லை. கடைசியாக தாயாரின் கப்றையாவது ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அதற்கு மட்டும் அனுமதித்தான். எனவே கப்றுகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் இந்த ஸியாரத் மறுமையைப்பற்றி ஞாபகப்படுத்துகிறது.

எனவே கப்றாளி காஃபிராகட்டும் முஸ்லிமாகட்டும் மௌத்தை ஞாபகப் படுத்தும் விஷயத்தில் கண்டிப்பாக ஸியாரத் பலனளிக்கிறது. ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். கப்றாளி காஃபிராக (நிராகரிப்பவனாக) இருப்பானென்றால் இவன் கப்றை ஸியாரத் செய்யும் போது இந்த காஃபிருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோ, இவனுக்குரிய ஏதேனும் தேவைகளை இறைவனிடம் கேட்பதையோ ஒருபோதும் நினைக்கக் கூடாது. இறைவனிடம் பிரார்த்திப்பதைக் கருதி ஸியாரத்திற்கு வரவேண்டுமானால் கப்றாளி மூமினாக இருக்க வேண்டும். (காஃபிரின் சமாதியையும் ஸியாரத் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறதென்றால் அதன் காரணம் ஸியாரத்தினால் முஸ்லிம் படிப்பினை பெற வேண்டுமென்பதுதான்).

இஸ்லாம் அனுமதி வழங்காத நூதன அமைப்பில் செய்யப்படும் ஸியாரத்திற்கு வருவோம். கப்றில் அடக்கப்பட்டுள்ளவரிடம் தனக்குரிய தேவைகளை முறையிடல், கப்றாளியிடம் சென்று உதவித் தேடிப் பிரார்த்தித்தல், சிபாரிசுகளைக் கேட்டல் இவற்றை நாடிச் செய்யப்படும் ஸியாரத்துகள் அனைத்தும் பித்அத்தான நூதனரீதியில் செய்யப்படும் ஸியாரத்துகளாகும். சமாதியின் அருகில் நின்று வேண்டினால் சீக்கிரம் விடை கிடைத்து விடும் என நினைத்துக் கொண்டு அந்த சமாதியில் சென்று பிரார்த்திப்பதும், நூதனமான (பித்அத்தான) ஸியாரத் என்றே இஸ்லாம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த அமைப்பிலான அனைத்து ஸியாரத்துகளும் நூதன அனுஷ்டானங்களாகும். இவற்றை நபியவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். நபித்தோழர்கள் எவரும் இதைச் செய்ததில்லை. நபியவர்களின் கப்றில் கூட இதைச் செய்ய அவர்கள் அன்று முன்வரவில்லை. மற்றெந்தப் பெரியாரின் சமாதியிலும் இம்மாதிரியான ஸியாரத்துகள் நடைபெற்றதில்லை. ஏனெனில் இது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும். இன்னும் அதிகமாக இணைவைப்பதின் காரணங்களோடு மனிதனை இது திருப்பி விடுகிறது.

கப்றில் அடக்கப் பட்டிருப்பவரிடம் பிரார்த்திப்பதையோ அல்லது அவரின் சமாதி அருகிலிருந்து இறைவனை அழைத்தால் விரைவில் விடை கிடைக்கும் என்பன போன்ற நாட்டங்கள் ஒன்றுமில்லாது அல்லாஹ்வை மட்டும் தனியாக வணங்குவதற்கென்று நபிமார்கள், வலிமார்கள், நாதாக்கள் இவர்களின் சமாதிகளை மசூதிகளாக்குவது கூட தடுக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) இதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எந்த ஒரு சமூகத்தார் இதை மீறி செயல்படுகிறார்களோ அவர்கள் எல்லோரும் அல்லாஹ், ரஸுலுடைய கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவார்கள். நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘தம் நபிமார்களின் சமாதிகளில் மசூதிகளைக் கட்டி உயர்த்திய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’. மற்றொரு ஹதீஸில் வருகிறது: ‘யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழித்தொழித்து விடுவானாக! ஏனெனில் இவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை இறையில்லங்களாக ஆக்கிக் கொண்டனர்’. மேலும் றாவி கூறுகிறார்: இவர்களின் இத்தீவினைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அச்சுறுத்தினார்கள். இன்னுமொரு ஹதீஸில் ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்திருந்தவர்கள் சமாதிகளை மசூதிகளாக்கிக் கொண்டனர். நீங்கள் அதைச் செய்யாதீர்கள். இது விஷயத்தில் நான் உங்களை எச்சரிக்கிறேன். கடுமையாக உங்களை இதைவிட்டும் தடுக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடும் எண்ணத்துடன் சமாதிகளில் பள்ளிவாசல்கள் நிறுவுவதைப் பற்றி நபிகள் இந்த மாதிரி கடும் எதிர்ப்புகளைக் காட்டி விளக்கியிருக்கிறார்களென்றால் அதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கும், கடும் வேதனைக்கும் மனிதன் இலக்காகி விடுவானென்றால், கப்றில் அடங்கியிருப்பவர்களிடம் தம் தேவைகளைக் கேட்க வேண்டும், பிரார்த்தனைகளை கப்றருகில் நின்று பிரார்த்திக்க வேண்டும், நேர்ச்சைகளை கப்றாளிக்காக நேர வேண்டும், அங்கு சென்று உதவி தேடிப்பிரார்த்திக்க வேண்டும், அடக்கப்பட்டிருக்கும் பெரியாரைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திக்க வேண்டும், அங்கே தம் தேவைகளை வேண்டினால் சிரமப்படாமல் விரைவில் அவை கிடைத்து விடும், எல்லா நாட்டங்களையும் கப்றாளியின் பொருட்டால் எளிதில் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணங்களை மனதில் பதிய வைத்து ஒருவன் கப்றைக் கட்டினால் அல்லது கப்றில் மசூதியை நிறுவினால் அல்லது கப்றையே பள்ளியாக மாற்றினால் அவன் நிலை என்னவாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டும்.

நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ‘ஷிர்க்’ தலை தூக்க ஆரம்பித்தது. மேற்கூறப்பட்ட செய்கைகள் தாம் ஷிர்க் உண்டாகவும் ஏதுவாக இருந்தன. இதனால் சிலை வணக்கமும் உலகில் தலைகாட்ட துவங்கியது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நபி ஆதம், நூஹ் (அலை) இவ்விருவர்களுக்கு மத்தியில் பத்து நூற்றாண்டுகள் இடைவெளியுண்டு. இவ்விடை வெளியில் தோன்றிய அனைத்து மக்களும் முஸ்லிம்களாக வாழ்ந்திருந்தனர். என்றிலிருந்து சமூகத்திலுள்ள நன்மக்கள், ஸாலிஹீன்கள், பெரியோர்கள் இவர்களின் சமாதிகளை மக்கள் அளவு கடந்து மரியாதை செலுத்த ஆரம்பித்தனரோ அன்று முதல் இணைவைப்பும் (ஷிர்க்கும்) தலைதூக்கியது. அதனால் முஷ்ரிக்குகள் என்று ஒரு சாராரும் வெளிப்பட்டனர்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தமது ஹதீஸ் தொகுப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாகவும், மற்றும் வேறு அறிஞர்களின் வழியாகவும் மேலும் திருமறை வியாக்கியானிகள் தம் தப்ஸீர் நூற்களிலும் கீழ்வரும் திருவசனத்தில் காணப்படுகின்ற “அன்றி அவர்கள் கூறினர். நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். வத்து, ஸுவாஉ, யகூஸ், யஊக், நஸ்ர் ஆகிய விக்ரஹங்களில் எதையும் விட்டு விடாதீர்கள்” (71:23). இந்த சாமிகள் அடங்களும் நூஹ் நபியவர்களின் சமூகத்தில் தோன்றிய பெரியார்களேயாவர். இவர்கள் காலஞ் சென்ற பின்னர் இவர்களுடைய சமாதிகளில் மக்கள் மண்டியிட்டுக் கிடந்து தம் காலத்தைக் கழித்ததோடு இவர்களுக்குப் பிம்பங்களையும் அமைத்து அவற்றிற்கு வழிபாடுகள் செய்தும் வரலாயினர் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு அறபிக் குலங்களில் இச்சிலைகள் அனந்தரச் சொத்தாக வந்து சேர்ந்தது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.