மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

பள்ளிவாசல்களை நிறுவுவதினால் அல்லாஹ்வைத் தொழுவது மட்டும் இலட்சியமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குவதற்கு மசூதிகளைக் கட்டி வந்தார்கள். இப்பள்ளிவாயில்களில் இறைவழிபாடுகளைத் தவிர்த்து வேறு எச்செயலையும் அனுஷ்டானம் என்ற பெயரில் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத் தொழலாம். அவனிடம் தன் நாட்டங்களைக் கேட்டுக் கெஞ்சலாம். இதைத் தவிர படைப்பினங்களில் எவரையும் அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது.

தொழுவதற்காக முஸ்லிம்களுக்கு மசூதிகள் தேவை என்பதற்காக கப்றுகளில் மசூதிகளைக் கட்டி வைத்து இறைவனுக்காகத் தொழுதாலும் அதுவும் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மெய்யாகவே அல்லாஹ்வை மட்டும் வணங்குவதாக இத்தொழுகையால் நாடியபோதிலும் சரியே. (இப்பள்ளிவாசலில் தொழுவது அனுமதிக்கப்பட மாட்டாது). கப்றோடு இணைந்த பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தொழுவதினால் பிற்காலங்களில் இறைவனைத் தொழும்போது கப்றாளியை எண்ணி அவரிடம் தன் தேவைகளை முறையிடலாம். கப்றும், மசூதியும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதனால் பிரார்த்தனைகள் விரைவில் அங்கீகரிக்கப் படலாம் என்பன போன்ற தப்பான எண்ணங்களினால் மனிதன் உந்தப்பட்டுத் தொழுவதற்கு இப்பள்ளியை நாடுவான். இது அவனை ஷிர்க்கின் பக்கம் (இறைவனுக்கு இணை வைப்பதின்) பால் கொண்டு சேர்த்து விடும். எனவே தான் பெருமானார் (ஸல்) அவர்கள் சமாதிகளில் பள்ளி கட்டுவதை கண்டிப்பாகத் தடுத்திருக்கிறார்கள்.

ஒரு செய்கை (அது எத்தகைய செய்கையானாலும் சரியே) அதைப் புரிவதினால் மனிதன் தன்னை அறியாமலே தவறின்பால் திரும்பி விடுவான் என்றும், அதில் எந்த பலாபலன்களுமில்லை என்றும் தெரிய வந்தால் அதைச் செய்யக்கூடாதென்று அவசியம் மனிதனை தடுக்க வேண்டும். இது சட்டக்கலை அறிஞர்களின் பொதுவான தீர்ப்பாகும். நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கும் நேரம், சூரியன் பூமத்திய ரேகையில் நடமாடிக் கொண்டிருக்கும் நேரம், அது அஸ்தமிக்கிற நேரம்-ஆக இம்மூன்று நேரங்களிலும் தொழக்கூடாதென விலக்கியிருக்கிறார்கள். தொழுகை என்பது இறைவனின் திருப்தியைப் பெறுவதற்குரிய ஒரு தூய்மையான வழிப்பாடாகும். அதை மிக விரும்பத்தகுந்த வழிப்பாடுகளில் சேர்க்க வேண்டும்.

ஆனால் மேற்கூறப்பட்ட இம்மூன்று நேரங்களிலும் இந்த வழிப்பாட்டை (தொழுகையை) நிறைவேற்றும்போது தீமையான செயலாக அத்தொழுகை நிரூபிக்கப் படுகிறது. ஏனெனில் இந்நேரம் முஸ்லிம்களால் நிறைவேற்றப்படும் தொழுகை இணைவைக்கும் ஷிர்க்குக்காரர்களின் தொழுகையோடு ஒப்பாகிவிடும். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், கோளங்கள் இவற்றை வணங்கி வழிபடுகின்ற முஷ்ரிக்குகள் இவற்றிற்கு தலைசாய்த்து ஸுஜுது செய்து இந்நேரங்களில் தம் வணக்கங்களை செலுத்துகின்றனர். நட்சத்திரங்களிடமும், சூரிய சந்திரன்களிடமும் தம் தேவையை வேண்டுகின்றனர். இப்படியுள்ள நேரத்தில் இம்முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து தொழுதால் (நாமும் முஷ்ரிக்குகளுடன் வணங்கும் நேரத்தில் ஒத்திருந்தால்) நம்மையும் அந்த வணக்கங்கள் சில நேரங்களில் ஷிர்க்கின் பக்கமாக இழுத்து விடுகிறது.

அன்றியும் இவ்வேளைகளில் தொழுவதில் பிரத்தியேகமான சிறப்போ, மேன்மையோ, விசேஷமோ ஒன்றுமில்லை. பொதுவாக தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன் திருப்தியைப் பெறலாம் என மனிதன் எண்ணினால் கூட அவ்வெண்ணம் வீணாகி விடாது. ஏனெனில் (இது அல்லாத) எந்த நேரமும் தொழமுடியும். அதற்கு அனுமதியும் உண்டல்லவா? எனவே இக்குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் தொழாவிட்டாலும் வேறு எல்லா நேரங்களிலும் தொழலாம். தொழுகையினால் கிடைக்கும் பிரதிபலன்களும் இந்த விலக்களினால் துண்டிக்கப்பட்டு விடாது. மனிதன் தீமையிலிருந்தும் காப்பாற்றப்படுகிறான்.

ஆக இந்நேரங்களில் தொழவேண்டாமென தடுக்கப் பட்டிருப்பதெல்லாம் அத்தொழுகையைத் தொழுகிறவன் முஷ்ரிக்குகளைப் போன்று சூரியனை வணங்கி, சூரியனிடம் தன் தேவைகளுக்காகப் பிரார்த்தித்து, அதற்கு வழிபட்டு அதனால் ஷிர்க்கின்பால் சென்று விடலாகாது என்பதை பயப்படுவதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு இந்நேரங்களைத் தடுத்திருக்கிறார்கள்.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு வருவோம். நபிமார்கள், அவ்லியாக்கள், நாதாக்கள் இவர்களின் சமாதிகளை மசூதிகளாகக் கட்டுவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஏனெனில் குறிப்பாக இத்தகைய மசூதிகளில் தொழவருகிறவன் அவன்தொழுகை அவனை ஷிர்க்கின் பக்கமாக இழுத்துக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. காரணம் என்னவென்றால் இப்பள்ளிவாசலை மட்டும் கருதித் தொழ வருகிற மனிதன் பிற்காலத்தில் ஒருமுறை கப்றாளியை மட்டும் நாடி வரக்கூடும். கப்றிலிருப்பவருக்கு மதிப்பையளித்து தாம் செய்கிற ஸுஜுதில் அவருக்கொரு சிறு பங்கைச் சமர்ப்பிக்க இடம்பாடு உண்டல்லவா? இதனால் அவன் விரைவில் முஷ்ரிக்காகி விடுகிறான். இத்தகைய நிலைமைகள் மனிதனை இனைவைப்பதின் பக்கம் சாட்டி விடக்கூடாது என்பதனால் தான் நபியவர்கள் கப்றுகளில் மசூதிகள் கட்ட வேண்டாம் என்று விலக்கியிருக்கிறார்கள்.

கப்றில் இறைவனுக்கு இல்லம் நிறுவுதலும் ஹறாம். அவ்விறையில்லத்தில் சென்று கப்றாளியைப் பிரார்த்திப்பதும் ஹறாம். இவ்விரு ஹறாம்களையும் ஒன்றோடொன்று இணைத்து சீர்தூக்கிப் பார்த்தால் கப்றில் பள்ளிவாசல் கட்டுதலிலுள்ள ஹறாம் சற்று இலேசான விலக்கலா (ஹறாமா)கத் தெரிய வருகிறது. ஆனால் அதைக் கட்டி முடித்த பிறகு அதில் வணக்கம் என்ற பெயரில் எதிர்காலத்தில் நடக்கப் போகிற வன்மைச் செய்கைகளோடு (ஷிர்க்குகளோடு) ஒத்துப் பார்க்கும் வேளையில்தான் இந்தச் செயல்கள் மிகப் பெரிய ஹறாமாகவும், இறைவன் மன்னிக்காத துரோகமாகவும் புலனாகும். எனவே இப்படியொரு நிலை உருவெடுப்பதை வேரோடு பிடுங்கி வீச வேண்டும் என்பதை நாடிய நபிகள் (ஸல்) அவர்கள் கப்றில் மசூதிகள் அமைப்பதை ஹறாமாக்கினார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

This entry was posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.