நம்பிக்கை கொண்டவர்களே!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஈமான் கொண்டவர்களே! இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்தனை புரியுங்கள் (அல்லாஹ் அவன் வேதத்தின் மூலம் கற்று கொடுத்தவாறு)

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தார் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (3:8)

எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!” (3:147)

“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளை கைப்பற்றிக் கொள்வாயாக!” (7:126)

“எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!” (10:85)

“(எங்கள் இறைவனே!) இந்த நம்பிக்கை கொள்ளாத மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (10:86)

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கபடுத்துவதையும் நிச்சயமாக நீயே அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை” (14:38)

“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” (18:10)

“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்” (23:28)

“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (23:97,98)

“எங்கள் இறைவா!நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” (23:109)

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!” (25:74)

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக; மேலும் ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” (26:83)

“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (26:169)

“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” (27:19)

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” (46:15)

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்.” (59:10)

யா அல்லாஹ்! இன்ப ,நிலையிலும் துன்ப நிலையிலும் உன் பக்கமே முகம் திருப்பக்கூடிய உண்மை முஸ்லிம்களாக எங்களை வாழ வைப்பாயாக!

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.