அழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா?

நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக் கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது…? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைதண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர! (18:54-55).

நற்செய்தி அறிவிப்பதற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் தூதர்களை அனுப்புவது இல்லை. ஆயினும் இறை நிராகரிப்பாளர்கள், அசத்தியத்தின் ஆயுதங்களைக் கொண்டு சத்தியத்தை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்னுடைய வசனங்களையும், தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் பரிகாசமாக்கினார்கள். தன்னுடைய இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்ட போது அவற்றைப் புறக்கணித்து தன் கரங்களே செய்த தீவினைகளின் கதியை மறந்து விட்டவனைவிட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? (எவர்கள் இத்தகைய நடத்தையை மேற்கொண்டார்களோ) அவர்கள் குர்ஆனை உணர்ந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்களின் மீது நாம் திரையிட்டு வைத்திருக்கிறோம். மேலும், அவர்களின் செவிகளில் மந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம். நேர்வழியின் பக்கம் அவர்களை நீர் எவ்வளவுதான் அழைத்தாலும், இந்நிலையில் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறமாட்டார்கள். (18:56-57)

உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பான். ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். (18:58)

அழிவுக்குள்ளான இந்த ஊர்கள் உங்கள் கண் முன் இருக்கின்றன. அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்து விட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்டதொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம். (18:59)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.